அயோத்தி -அகழ்வாராய்ச்சி -அமெரிக்கா இராக் மற்றும் சில கக்கூஸ்கள்

This entry is part [part not set] of 28 in the series 20030323_Issue

ஞாநி


அமெரிக்க அதிபர் புஷ்ஷும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் சேர்ந்து தமிழ் சினிமாவில் டான்ஸ் ஆட நேரிட்டால் அந்தப் பாட்டின் பல்லவி ‘ தோண்டறாங்க தோண்டறாங்க ‘ என்றுதான் இருக்க முடியும்.

புஷ்ஷின் சார்பாக இராக்கில் நிபுணர்கள் தோண்டித் துருவித் தேடிக் கொண்டேயிருக்கிறார்கள் — பேரழிவு ஆயுதங்கள் (weapons of mass destruction ) ஏதாவது சதாம் ஹூசேன் ஒளித்து வைத்திருக்கிறாரா என்று. இதுவரை ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை கண்ணுக்குத் தெரிந்த ஒரே weapon of mass destruction அமெரிக்காவும் ஐ.நா.சபையும் சேர்ந்து போட்ட பொருளாதாரத் தடைதான்.12 ஆண்டுகளாக இருந்துவரும் பொருளாதாரத் தடையினால் அத்யாவசியப் பொருட்கள், மருந்துகள் இல்லாமல், 50 லட்சம் குழந்தைகள் செத்துப் போனார்கள்.1991ல் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளுமாக ஆறே வாரங்களில் 88 ஆயிரம் டன் குண்டுகளை இராக் மீது வீசியதில், குண்டு வீச்சுப் பகுதிகளில் புற்று நோய் பெருகி விட்டது. பஸ்ரா, மிசான், டெக்கார் பகுதிகளில் புற்று நோய் ஏற்படுவது சுமார் நான்கு மடங்கு வரை அதிகரித்திருக்கிறது. சிகிச்சைக்கான மருத்துவமனை தேசத்திலேயே ஒன்றே ஒன்றுதான் இருக்கிரது. நோயாளிகள் கியூவில் நிற்கிறார்கள்.

இப்போது இராக் வசம் உள்ள எல்லா வகை மருந்துகளும் இன்னும் நான்கு மாதம்தான் வரும். 2002ல் விளைந்த கோதுமை இன்னும் சில மாதங்களில் தீர்ந்துவிடும். தற்போது உணவை ரேஷனாக தினசரி 10லட்சம் பேருக்கு தொண்டு நிறுவனங்களும் இராக் அரசும் மாதத்தில்21 நாட்கள் விநியோகிக்கின்றன. குடிநீர், கழிவு அகற்றுதல் நிலைமைகள் சொல்லமுடியாத அளவுக்கு மோசம்.

இராக் மீதான பொருளாதாரத் தடைகள் அந்த தேசத்தையே அழிக்கின்றன என்று கண்டித்து ஐ.நா.சபையின் மூன்று உயர் அதிகாரிகள் ராஜினாமா செய்தார்கள். 1998ல் ஐ.நா துணைச் செயலாளர் டெனிஸ் ஹாலிடேவும் 2000த்தில் இன்னொரு துணைச் செயலாளர் ஹான்ஸ் வான் ஸ்போனெக், உலக உணவு திட்டத்தின் இராக் பிரிவுத் தலைவர் ஜுட்டா பர்கார்ட் என்பவரும் பொருளாதாரத் தடைகள் இராக் மக்களை அழிப்பதாகக் கண்டித்தார்கள். ஐ.நா செய்லாளர் கோஃபி அன்னான் கூட 1999ல் அமெரிக்கா மீது குற்றம் சாட்டினார். 70 கோடி டாலர் பெறுமானமுள்ள அத்யாவசியப் பொருட்களை இராக் வாங்க விடாமல் அமெரிக்கா தடுப்பதாக அவர் சொன்னார்.

ஆனால் அமெரிக்கா நிச்சயம் இராக் மீது யுத்தம் நடத்தியே தீருவது என்று பிடிவாதமாக இருக்கிறது. பரவலான உலக நாடுகளின் எதிர்ப்பால் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது என்றாலும் அடுத்த தீம்தரிகிட இதழ் வருவதற்கு முன்னால் யுத்தம் நடந்து முடிந்துவிடலாம் என்ற அளவுக்கு அமெரிக்கா யுத்த வெறியோடு அலைகிறது.

யுத்தம் என்றால் இரண்டு பேரும் சண்டை போட வேண்டும். ஆனால் இராக் இருக்கும் நிலையில் இது யுத்தமே அல்ல.இராக் மீது அமெரிக்கா குண்டுகளைப் பொழிவதற்கு நாள் குறிப்பதுதான் நடக்கிறது.

நாளைத் தள்ளிப் போடுவதற்குக் காரணம் உலக நாடுகளின் எதிர்ப்பு மட்டும் அல்ல. யுத்தம் நடத்த அமெரிக்கா துடிப்பதற்கு என்ன காரணமோ அதே காரணம்தான் – பெட் ரோல். தற்போது அமெரிக்கா தன் பெட்ரோல் தேவையில் 15 சதவிகிதத்தை வெனிசுலா நாட்டிலிருந்து இறக்குமதி செய்துவருகிறது. வெனிசுலாவிலே தொழிலாளர்கள் டிசம்பரிலிருந்து வேலை நிறுத்தம் செய்துவருகிறார்கள். அங்குள்ள பெட் ரோலிய கம்பெனி நிர்வாகத்தின் ஊழல்களை எதிர்த்து.

இதனால் அமெரிக்காவுக்கு பெட் ரோல் வரத்து குறைந்து விட்டது. தினசரி ஒரு கோடி பீப்பாய் பெட்ரோலிய குரூட் தேவை. ஆனால் கிடைப்பது 75 லட்சம் பீப்பாய்கள்தான். கையிருப்பும் 70 கோடி பீப்பாயிலிருந்து 59 கோடியாகிவிட்டது.

அமெரிக்காவுக்கு பெட் ரோல் அனுப்பும் இன்னொரு நாடு நைஜீரியா. இன்னொரு 15 சதவிகிதம் அங்கிருந்துதான். நைஜீரியாவில் கலவர நிலைமை. இது முற்றினால் அந்த பெட் ரோல் வருவதும் தடைப்படும்.

இப்போதைக்கு அதிகமான பெட் ரோல் வந்து கொண்டிருப்பது இராக்கிலிருந்துதான் ! தினசரி 26 லட்சம் பீப்பாய்கள் உற்பத்தி. இதில் பெரும்பாலும் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும்தான் செல்கின்றன. அமெரிக்க டெக்சாஸ் மாநிலத்தில் உற்பத்தியாகும் பெட் ரோலியத்தை விட இராக் பெட் ரோலியம் விலை குறைவு. பீப்பாய்க்கு மூன்று டாலர் கம்மி.

வெனிசுலா பிரச்சினை தீரும் முன்பாக புஷ் இராக் மீது குண்டு வீசினால் அமெரிக்க எண்ணெய் கம்பெனிகளுக்கு நஷ்டம் ஏற்படும். வெனிசுலா எண்ணெய் வந்தபிறகுதான் புஷ் யுத்தம் நடத்த முடியும்.

யுத்தத்தின் நோக்கமும் சதாம் ஹுசேனிடமிருந்து இராக்கை விடுவிப்பதோ, பயங்கரவாதத்தை ஒழிப்பதோ அல்ல. பெட் ரோல்தான். இராக்கில் உள்ள மொத்தம் 73 எண்ணெய்க் கிணறுகளில் இதுவரை 15 மட்டுமே உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது மொத்த எண்ணெயில் 20 சதவிகிதம்தான். சவுதி அராபியாவுக்குஅடுத்தபடி அதிக எண்ணெய் வைத்திருப்பது இராக். இந்த எண்ணெய் தன் கைக்கு வரவேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா இராக்கிலிருந்து சதாம ஹுசேனைத் துரத்தி விட்டு தன் பொம்மை ஆட்சியை ஏற்படுத்த த் துடிக்கிறது. ரஷ்யாவும் பிரான்சும் ஜெர்மனியும், இந்தியாவும் யுத்தம் வேண்டாம் என்றுசொல்லுவதில் அமைதிக்கான பாசம் தவிர ஆயிலுக்கான ஆசையும் அடங்கியிருக்கிறது. ஏற்கனவே இந்த நாடுகள் சதாம் அரசுடன் தமக்கு சாதகமான எண்ணெய் ஒப்பந்தங்கள் போட்டு வைத்திருக்கின்றன.

பெட் ரோலியத்தை அபகரிக்கும் வெறியை மறைக்கவே, அமெரிக்கா பயங்கரவாத ஒழிப்பு என்ற வேஷம் கட்டியிருக்கிறது. உண்மை என்னவென்றால் இராக்குக்கும் தீவிரவாதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பின் லேடன் மத அடிப்படை வாதி. சதாம் ஹுசேன் மத அடிப்படைவாதியே அல்ல. மதச்சார்பின்மையை ஆதரிக்கிற சர்வாதிகாரி என்று வேண்டுமானால் சொல்லலாம். சதாமுக்கு எதிராக பின் லேடன் அறிக்கை விட்டதும் கவனிக்கத்தக்கது.

இராக்குக்கு எதிராக அமெரிக்காவின் புஷ், போவெல், இதர அதிகாரிகள் சொல்லி வரும் பொய்களுக்கு அளவே கிடையாது. இன்னும் ஆறு மாதத்தில் அணு ஆயுதம் தயாரித்துவிடும் நிலையில் இராக் இருப்பதாக சர்வதேச அணு சக்தி ஏஜன்சியின் அறிக்கை தெரிவிப்பதாக புஷ் அறிவித்தார். அப்படி ஒரு அறிக்கையே கிடையாது என்று அந்த ஏஜன்சி தெரிவித்தது.

ஐ.நா சபையில் தன் யுத்த வெறியை ஆதரிப்பதற்காக லஞ்சம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது அமெரிக்கா.துருக்கிக்கு 260 கோடி டாலர் உதவி. ஜோர்டானுக்கும் பல கோடி டாலர் உதவி. அங்கோலாவுக்கு சில லட்சம் டாலர்கள். பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வது சம்பந்தமான எல்லா தடைகளையும் நீக்கிவிட்டது.

யுத்தம் நடத்தி பெட் ரோலியத்தைக் கைப்பற்ற முயற்சிப்பது மட்டுமல்ல. எங்கே எப்போது யுத்தம் நடத்தினாலும் அமெரிக்காவுக்கு லாபம்தான். யுத்தம் என்பது அமெரிக்காவுக்கு ஒரு வியாபாரம்.

1991ல் இராக் மீது அமெரிக்கா நடத்திய யுத்தத்தின் மொத்த செலவு 61 பில்லியன் டாலர்கள்.( சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்கள்). இதில் 31 பில்லியன் டாலர் செலவை சவுதி அராபியா முதலிய வளை குடா நாடுகள் தலையில் கட்டியாயிற்று. இன்னொரு 16 பில்லியன் டாலர் செலவை ஜெர்மனியும் ஜப்பானும் சந்தித்தன. இதர நாடுகளிடமிருந்து 2 பில்லியன் டாலர்கள். அமெரிக்காவுக்கு ஆன நிகர செலவு வெறும் 7 பில்லியன் டாலர்தான் ( 12 சதவிகிதம்). இதுவும் செலவு அல்ல என்பதைப் பிறகு பார்ப்போம்.

ஆனால் ஐந்து லட்சம் அமெரிக்க ராணுவத்தினர் வளைகுடாவில் இருந்தார்கள். மற்ற நாட்டு வீரர்கள் வெறும் ஒரு லட்சத்து அறுபது ஆயிரம்தான். அதனால் ஏதோஅமெரிக்காதான் பெரும் செலவு செய்து யுத்தத்தில் ஈடுபடுவது போன்ற தோற்றம் கிடைத்தது.

அமெரிக்கா செலவு செய்த 7 பில்லியன் டாலரிலும் பெரும்பகுதி பத்தாண்டுகளுக்கு ஒரு முறை உபயோகித்துத் தீர்த்தாக வேண்டிய ஆயுதங்களேயாகும். மருந்து, ரொட்டிக்கெல்லாம் காலாவதியாகும் தேதி இருப்பது போல ஆயுதங்கள், வெடிமருந்துகளுக்கும் உண்டு. எப்படியும் பத்தாண்டுகளுக்குள் தீர்த்தாக வேண்டும். யுத்தம் இல்லாவிட்டால், பயிற்சி என்ற பெயரில் இவற்றை பாலைவனங்களிலோ ஆளில்லா பிரதேசங்களிலோ ராணுவங்கள் வெடித்துத் தீர்ப்பது வழக்கம்.

அமெரிக்கா இப்படியாக தனக்கு சொந்தச் செலவு இல்லாமல் நடத்திய யுத்தத்தால் அடைந்த லாபம் அதிகம். அதுவரை அமெரிக்காவுக்கு உலக ஆயுத மார்க்கெட்டில் 30 சதவிகிதம் மட்டுமே வியாபாரப் பங்கு இருந்தது. 1991 யுத்தத்துக்குப் பின் இந்தப் பங்கு 59 சதமாயிற்று. யுத்தம் நடந்து கொண்டிருந்தபோதே, பேட் ரியட் ஏவுகணைகள், F-16 விமானங்களுக்கு ஆர்டர்கள் மூன்றாம் உலக முட்டாள் ஏழை நாடுகளிடமிருந்து வந்து குவிந்தன.

1991 போர் முடிந்த நான்கு வருடங்களுக்குள் அமெரிக்கா மொத்தம் 114 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஆயுதங்கள் விற்றுவிட்டது. ( போர் செலவு வெறும் 7 பில்லியன் டாலர்தானே.) இந்த வியாபாரம் படுதந்திரமானது. ருமேனியா அமெரிக்க கம்பெனிகளிடம் போர் விமானங்கள் வாங்குவதற்கு அந்த அரசுக்கு கடன் கொடுத்ததும் அமெரிக்க அரசுதான். ஒரு பக்கம் வியாபாரம். மறுபக்கம் வட்டி வேறு.

வளரும் நாடுகளைப் பொறுத்த மட்டில் இந்தியாதான் வழிகாட்டி. இந்தியா ஒரு ஆயுதத்தை வாங்கினால், இதர குட்டி நாடுகள் உடனே ஆர்டர் கொடுத்துவிடும். இந்தியா இன்னமும் ரஷ்யா, பிரான்சு போன்ற நாடுகளிடமே அதிக ஆயுத வியாபாரம் செய்து வருகிறது. இந்த வியாபாரத்தை இன்னும் முழுக்க அமெரிக்காவால் கைப்பற்ற முடியவில்லை.

ஆப்கானிஸ்தான் யுத்தத்துக்குப் பின் அமெரிக்காவின் ஆயுத விற்பனை எதிர்பார்த்த அளவு கணிசமாக உயரவில்லை. எனவே அமெரிக்க ஆயுத வியாபாரத்துக்கு இன்னொரு யுத்தம் தேவைப்படுகிறது. இராக் வசதியாக மாட்டிக் கொண்டிருக்கிறது. இதிலே இரட்டை லாபம்.ஆயுத வியாபாரப் பெருக்கம். பெட் ரோலிய வளம்.

அதனால்தான் எந்தப் பொய் சொல்லியாவது ஒரு யுத்தத்தை நடத்த அமெரிக்கா துடித்துக் கொண்டிருக்கிறது. ஏதாவது உண்மை சாட்சியமும் கிடைக்குமா என்று தோண்டித் தோண்டிப் பார்க்கிறது. கிடைக்காவிட்டால் பொய் சாட்சியங்களை அவிழ்த்துவிடுகிறது.

***

அயோத்தியில் ராமரின் தங்கக் கோவணத்தைத் தேடிக் கொண்டிருப்பவர்களும் அமெரிக்காவைப் போலத்தான்.

மசூதிகள் இடிக்கப்பட வேண்டும். மேலும் மேலும் கோவில்கள் கட்டப்பட வேண்டும். முடிந்தால் முஸ்லீம்கள் எல்லாரையும் மறுபடியும் இந்துக்களாக்கிவிடலாம். இல்லாவிட்டால், அவர்கள் எல்லாரும் இந்துத்துவாவின் கலாசார தேசியத்தை ஏற்றுக் கொண்டு முக்கால் இந்து- கால் முஸ்லீமாக அப்துல் கலாம் போலாகிவிட வேண்டும். இதுதான் ஆர்.எஸ்.எஸ் வகையறாக்களின் நோக்கமாக இருக்கிறது. இந்த இறுதி நோக்கத்தை நோக்கிச் செல்லும் பயணத்தில் என்ன பொய்கள் வேண்டுமானாலும் சொல்லவும், எந்த விதமாக வரலாற்றைத் திரிக்கவும் பயன்படுத்தவும் தயங்குவதே இல்லை. காந்தியைக் கொன்றவர்கள் காந்தியப் பொருளாதாரம் பற்றிப் பேசுவார்கள். பேசிக் கொண்டே பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்தியாவைத் திறந்துவிடுவார்கள். கேட்டால் அது பி.ஜே.பி அரசின் வேலை, நாங்கள் சுதேசிப் -பாருளாதாரத்தை ஆதரிக்கிறோம் என்பார்கள். ராமன் வரலாற்றில் வாழ்ந்த ஒரு யுக புருஷன் என்று சொல்லுபவர்கள் ராவணன் இருந்ததாகவும் ஏற்றுக் கொண்டுதானே ஆகவேண்டும்.அந்த ராவணனின் நவீன உதாரணம்தான் ஆர்.எஸ்.எஸ். பத்து தலைகள் ஒரே உடல். உடல் ஆர்.எஸ்.எஸ். தலைகள் பி.ஜே.பி, விஸ்வ ஹிந்து பரிஷத்,இந்துமுன்னணி, பஜ்ரங் தள் என்று பட்டியலிடலாம். ஒவ்வொரு தலையும் ஒவ்வொரு விதமாகப் பேசும். அது ஒரு உத்தி.அவ்வளவுதான்.

இப்போது அவர்களுக்கு அயோத்தியில் மசூதியை இடித்தாயிற்று. அங்கே ராமர் கோவில் கட்ட வேண்டும். ஆனால் அநியாயத்துக்கு நிலத்தைக் கொடுக்காமல் உச்ச நீதிமன்றம் தொல்லை செய்கிறது. எப்பாடு பட்டேனும் ஏது செய்தாகிலும் நிலத்தைப் பெற்றாகவேண்டும்.

ஆட்சியிலும் அதிகாரத்திலும் தங்களுக்கு சாதகமானவர்களைப் பயன்படுத்துவது மட்டும் ஆர்.எஸ்.எஸ்சின் உத்தி அல்ல. தம்மவர்களையே அதிகார பீடங்களில் அமரவைத்துவிட்டு, பல்லாண்டுகள் கழித்து உரிய தருணங்களில் அவர்களைப் பயன்படுத்துவதும் அதன் உத்தி. பாபர் மசூதி வளாகத்துக்குள் ராமர் சிலையைக் கொண்டு போய் வைத்த 1948-49ல் சிலை தொடர்ந்து அங்கேயே நீடிக்க சாதகமான உத்தரவு பிறப்பித்த மாவட்ட மாஜிஸ்டிரேட் சில வருடங்கள் கழித்து பதவி விலகிய பிறகு நேரடி தேர்தல் அரசியலில் ஜனசங்கத்தவராகக் குதிக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலக் காவல் துறை தலைவராக இருந்தவர் ஓய்வு பெற்றபின் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவராகிறார்.

அயோத்தியில் லக்னோ பெஞ்சின் உத்தரவின் பேரில் அகழ்வாராய்ச்சி நடக்கிறது. மசூதி இடிக்கப்பட இடத்துக்குக் கீழே ராமர் கோவில் இருக்கிறதா என்று ஆராயப்படுகிறது. ராமர் கோவில் இருந்தால் போதாது. தோண்டும்போது கிடைக்கும் பொருட்களில் குழந்தை ராமருக்குக் கட்டிய தங்கக் கோவணத்தின் துண்டு துகள்களும் கிடைக்கிறதா என்று பார்த்தால் தேவலை. அப்போதுதானே ராமஜன்ம பூமி என்று நிரூபிக்க முடியும். நிரூபித்தாலும் நிரூபிப்பார்கள்.

இந்த அகழ்வாராய்ச்சியில் உண்மையில் என்ன கண்டுபிடிக்கப்படமுடியும் ? கீழே ஏதோ கட்டடம் இருந்த சான்றுகள் கிடைக்கலாம். அந்தக் கட்டடம் என்ன என்று ஆராயலாம். ராமர் கோவில் என்றே வைத்துக் கொள்வோம். இந்தக் கட்டம் வரை சான்றுகளுடன் நிரூபிப்பதற்கு நீதி மன்றம் தரும் மூன்று மாத கால அவகாசங்கள் போதாது. அகழ்வாராய்ச்சியின் சான்றுகள் சோதனை செய்யப்பட்டு, அதை நிரூபிக்கும் இதர வரலாற்றுச் சான்றுகளுடன் இணைத்து ஆராயப்பட்டு ஒரு முடிவுக்கு வர, ( இந்த மண் பாண்டம் குஷானர் காலத்தியதாக இருக்கலாம் என்பது போன்ற முடிவுக்கு வர) நியாயப்படி பல ஆண்டுகள் தேவைப்படும்.

தவிர அகழ்வை எந்தக் கட்டத்துடன் நிறுத்திக் கொள்வது ? ராமர் கோவில் அஸ்திவாரம் கிடைத்ததுமா ? அல்லது அதற்கும் கீழே போய் தோண்டி, ஒரு வேளை ஏதேனும் புத்த, சமண விஹார மண்ணாங்கட்டி வந்துவிட்டால் ? அப்படி ஏதேனும் வந்தால், நிலத்தை எங்களிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு சமண அமைப்பு கோரியிருக்கிறது. இன்னும் தோண்டிக் கொண்டு போனால், நிலத்தின் ஆதி சொந்தக்காரர்கள் யார் என்றும் கண்டறியலாமே. அநேகமாக ஆதிவாசிகளாகத்தான் அல்லது குரங்குகளாகத்தான் இருக்க முடியும்.

எங்களுக்கு வேண்டிய அளவுக்குத் தோண்டுவோம் அதற்கு மேல் தோண்ட மாட்டோம். இங்கே தோண்டியதை நீதி மன்றத்தை ஒப்புக் கொள்ள வைத்து விட்டால், நாளைக்கு காசி, மதுரா என்று இன்னும் பல இடங்களில் தோண்டச் சொல்ல வசதியாக இருக்கும். நீதி மன்றத்துக்குக் கட்டுப்படு என்று எங்களை மிரட்டிய போலி செக்குலரிஸ்ட்டுகள் வாயை நிரந்தரமாக அடைத்துவிடலாம்.

அகழ்வாராய்ச்சித்துறை இருப்பது ஆர்.எஸ்.எஸ்.பண்டிதர் முரளி மனோகர் ஜோஷியின் அமைச்சகத்தின் கீழ். ஜோஷியின் அறிவியல் பார்வை எப்படிப்பட்டது ? இந்திய தேசிய விஞ்ஞான அகாதமி கூட்டத்தில் சென்ற ஆண்டு அவர் முழங்கினார் : மாட்டு மூத்திரத்தை நேரடியாக மாட்டிடமிருந்தே மக்கள் குடிப்பதை நான் இளமையில் பார்த்திருக்கிறேன். அப்போது அது எனக்கு அசிங்கமாகத்தான் பட்டது. ஆனால் அதற்கு அறிவியல் காரணங்கள் உண்டு என்று இப்போது உணர்ந்திருக்கிறேன். அமைச்சரின் சங்கப்பரிவாரியான விஸ்வ ஹிந்து பரீஷத் மாட்டு மூத்திரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சிகிச்சைப் பொருட்களை விற்பனை செய்கிறது. பரமானந்த் மிட்டல் என்பவர் இரு பேராசிரியர்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் தெரிவிக்கும் இன்னொரு அறிவியல் உண்மை – நில நடுக்கம் ,பூகம்பத்துக்கெல்லாம் காரணமே பசு வதைதான். இதைக் காணப் பொறுக்காத பூமாதேவி வலியால் அரற்றித் துடிப்பதுதான் பூகம்பம்.

தற்போது பி.ஜே.பி ஆட்சியில் சி.எஸ்.ஐ.ஆர், நீரி, சிடிஆர்.ஐ, சி.பி.ஆர்.ஐ முதலிய அறிவியல் அமைப்புகள் எல்லாம் மாட்டு மூத்திரத்தின் சிறப்பை ஆராய்வதில் விஸ்வ ஹிந்து பரீஷத்துடன் ஒத்துழைத்து வருகின்றன. பசுக் கொலையைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ( மாட்டு இறைச்சி ஏற்றுமதி ஒரே ஆண்டில் 45 சதவிகிதம் அதிகரித்திருப்பது தனிக்கதை. 1999-2000 ல் ஒரு லட்சத்து 67ஆயிரம் டன்கள் 2000-20002ல் 2 லட்சத்து 43 ஆயிரம் டன்கள்.)

****

மூத்திரம், சாணி போன்ற அசிங்கமான விஷயங்களைப் பற்றி அமைச்சர் அளவில் பேசுவதால் நாமும் போலித் தயக்கங்களைக் கைவிட்டுவிட்டு அடுத்தபடியாக கக்கூஸ் பற்றிப் பார்ப்போம்.

மனித வரலாற்றில் கக்கூஸ் கண்டுபிடிக்கப்பட்டது எந்த ஆண்டு என்று தெரியாது.சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்களுக்குச் செல்லும்போது லோகல் டூரிஸ்ட் கைடுகள் ராமர் பிறந்த இடம், பாண்டவர்கள் குளித்த இடம், திரெளபதி குஇயலறை, சீதாதேவியின் சமையலறை என்றெல்லாம் சில இடிந்த சுவர்களைக் காட்டுவதுண்டு. யாரும் இது ராமரின் ககூஸ் என்று எந்த இடத்தையும் காட்டியதில்லை. குளியலறை என்று சொல்லுவது ஒருவேளை இடக்கரடக்கலாக இருக்கலாம். கக்கூஸ்கள் எகிப்தியர் காலத்திலேயே இருந்ததாகச் சொல்லுகிறார்கள். தண்ணீர் ஊற்றி மலத்தை அப்புறப்படுத்தும் கக்கூஸ்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு : 1596. உலகில் இன்னமும் இத்தகைய கக்கூஸ் வசதி பெறாத மக்களின் எண்ணிக்கை பல கோடி.

இன்று இந்தியாவில் எந்த கிராமத்துக்குச் சென்றாலும், காலைக்கடன்களைக் கழிக்க, பெண்கள் படும் அவதி எல்லாருக்கும் தெரியும். யாரும் அதைப் பொருட்படுத்துவதில்லை. விடிவதற்கு முன்பே இருட்டில் இடம் தேடி மைல் கணக்கில் அலையும் கொடுமைகள் கூட உண்டு.பெண்களின் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பெண் கலெக்டர்கள், பெண் முதல்வர்கள் கூட முன்வரவில்லை.

ஒரு சரித்திர சாதனையாக கோவை மாவட்டம் சிங்கய்யம்புதூர் கிராமத்தில் எல்லா வீடுகளிலும் கக்கூஸ் கட்டியிருக்கிறார்கள். பஞ்சாயத்து தலைவர் குயில்சாமியின் முனைப்பால் இது சாத்தியமாகியிருக்கிறது. ஒரு கக்கூஸ் கட்ட 1750 ரூபாய் செலவு. இதில் 1500 ரூபாயை அரசு மான்யமாகத் தருகிறது. தமிழ்நாட்டில் எல்லா கிராமங்களும் மின்சாரமயமாக்கப்பட்டுவிட்டன. கக்கூஸ்மயமாவது எப்போது ?

அயோத்தியில் அகழ்வாராய்ச்சி செய்து ஒரு வேளை ராமரின் குளியலறையை ( இடக்கரடக்கல்தான்) கூடக் கண்டுபிடித்துவிடலாம்.

ஏற்கனவே தேஜோ கார்ப்பரேஷன் என்ற கம்பெனி அயோத்தியில் ரேடார் கருவிகள் கொண்டு செய்த ஆய்வுக்கு ஆன செலவு 20 லட்சம் ரூபாய்கள். அதில் மட்டும் 1333 கக்கூஸ்கள் கட்டியிருக்கலாம்.

புஷ் இராக் மீது வீசத் துடிக்கும் குண்டுகளின் விலையில் லட்சோபலட்சம் கக்கூஸ்கள் கட்டமுடியும்.

ஆனால் ராமனின் குளியலறையைத் தேடுவோருக்கும் ஆயுத வியாபாரத்துக்கு அலைவோருக்கும் மற்ற மனிதர்களே கழிவுப்பொருட்கள்தான். பசுவதைத் தடுப்பு கலவரங்களில் இறந்த ஆயிரக்கணக்கான மனிதர்களும் இராக்கில் செத்த 50

லட்சம் குழந்தைகளும் அவர்களைப் பொறுத்த மட்டில் கழிவுப் பொருட்கள்தான்.

(தீம்தரிகிட மார்ச் 2003)

dheemtharikida@hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி