அம்மாவின் ஆசை

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

முருகன் சுப்பராயன்


முதல் மகனுக்கு
ஆடம்பர திருமணம்
செய்து மகிழ்ந்தாள் அம்மா.
குடும்பத்து முதல் நிகழ்ச்சியல்லவா…
குழந்தை பேறுக்கு
போனவளை பார்க்க சென்றவன்
மனைவியின் ஊரிலேயே
தங்கிவிட்டான் ஆசை பிள்ளை.

ரெண்டாம் மகனுக்கு
தேடி அலைந்து
மாந்தோப்பு விற்று
திருமணம் செய்து வைத்த
மூன்றாவது மாசமே
மாமியார் வீட்டிலேயே
வாழ தொடங்கி விட்டான் செல்ல பிள்ளை.

மூன்றாவது மகனுக்கு
திருமணம் தடைப்பட…
பல கோயில் குளம்
ஏறி இறங்கி,
பரிகாரம் நிறைவேற்றி,
விவசாய நிலத்தை விற்று,
ஊரு மெச்ச திருமணம்
செய்து வைத்தாள் அம்மா.
ஒரு வாரத்திலேயே
மாமனார் வாங்கி
கொடுத்த வேலையில் சேர்ந்து,
தலைநகரில்
தனிகுடித்தனம் போனான்.

சாவதற்குள்
கடைசி மகனுக்கு
திருமணம் செய்து
பார்த்திடனும்னு
வீட்டை விற்க முயற்சிக்கிறாள்
ஆசை அம்மா….

Murugan Subbarayan
murugan_ambal@yahoo.com

Series Navigation

முருகன் சுப்பராயன்

முருகன் சுப்பராயன்