மலர் மன்னன்
(டிசம்பர் 6 காலஞ்சென்ற டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம். இந்த நாளை அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சமூகப் பாதுகாப்பு நல்லுறவு நாளாக ஆண்டு தோறும் அனுசரித்து வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 6 அன்று தமிழ் மாநில அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சென்னையில் கடைப்பிடித்த சமூகப் பாதுகாப்பு தினத்தின்போது அம்பேத்கரும் தேசியமும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்த மலர் மன்னன் அழைக்கப் பட்டார். தவிர்க்கவியலாத காரணங்களால் கூட்டத்தை முன்னர் அறிவிக்கப்பட்ட இடத்தில் அல்லாமல், தியகராய நகரில்உள்ள பரிஷத்தின் தலைமையகத்தில் நடத்துவதெனக் கடைசி நேரத்தில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மலர் மன்னன் நிகழ்த்திய சிறப்புரையின் சுருக்கம்)
டிசம்பர் 6 ஆம் தேதி ஹிந்துஸ்தானத்து மக்களுக்கு இருவிதங்களில் மறக்க முடியாத நாளாகிவிட்டிருக்கிறது. முதலில், ஹிந்துக்களுக்கும் சொரணையும் சுயமரியாதையும் உண்டு, பல நூறு ஆண்டுகளாக இருந்துவந்த தேசிய அவமானச் சின்னத்தை அகற்ற வேண்டும் எனச் சாத்வீகமான முறையில் பல தடவைகள் கேட்டும்கூடப் பலன் விளையாததால் இறுதியில் வேறு வழியின்றி அவர்களாகவே அதனை இடித்துத் தகர்த்து அப்புறப்படுத்திவிட்டார்கள் என்கிற செய்தியை உலகுக்கு அறிவித்த நாள் டிசம்பர் 6.
அதேபோல ஹிந்து சமூகத்திற்கு அவமானச் சின்னமாக அமைந்த காலத்திற்கொவ்வாத சாதிய ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்பட வேண்டும் என்பதற்காக ஓர் அதிர்ச்சி வைத்தியம் போல் தமது அந்திம நாள்களில் லட்சக் கணக்கான தொண்டர்களுடன் ஹிந்து மதத்திலிருந்து வெளியேறி ஹிந்து சமயத்திலிருந்து ஓர் ஆட்சேபக் குரலாகக் கிளைத்த பவுத்த சமயத்தைத் தழுவிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளாகவும் டிசம்பர் 6 அமைந்துள்ளது. இயற்கையாகவே அமைந்துவிட்ட இந்த ஒற்றுமை எண்ணி எண்ணிப் போற்றத் தக்கது.
ஹிந்து சமயமும் சரி, சமூகமும் சரி, மிகமிகத் தொன்மையானவை. அதன் விளைவாகவே பல கசடுகள் காலப் போக்கில் சேர் ந்துவிட்டவை. சுத்தமான நீர் நிலையாகவே இருந்தாலும் அவ்வப்போது தூர் வார வேண்டும். தவறினால் நீரின் தூய்மை கெட்டுப்போகும். மிகுந்த அக்கரையுடனும் நல்லெண்ணத்துடனும் ஹிந்து சமய, சமூக அமைப்புகளில் தூர் வாரும் பணியினை மேற்கொண்டவர்கள் பலர். ஸ்ரீ ராமானுஜர், ஆழ்வார்கள், நாயன்மார்கள், நாராயண குரு, வள்ளலார், வைகுண்டசாமி, ஆரிய சமாஜம் கண்ட சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி விவேகானந்தர், டாக்டர் அம்பேத்கர் எனப் பலர் அவரவர் வழியில் தூர் வாரும் பணியில் இறங்கினார்கள். சித்த வைத்தியம், யூனானி, அலோபதி, ஹோமியோபதி, அக்குபங்சர், என ஒரு நோய்க்குப் பலவாறான சிகிச்சை முறைகள் இருப்பது போல் ஹிந்து சமயத்திற்கு வந்த நோய்க்கூறுகளைச் சரி செய்ய அவரவர் அணுகுமுறைக்கு ஏற்ப இவர்கள் சிகிச்சை முறையினைக் கையாண்டார்கள். அம்பேத்கரும் அவருக்குச் சரியெனப் பட்ட, பவுத்தம் தழுவுதல் என்கிற அதிர்ச்சி சிகிச்சையை மேற்கொண்டார்.
ஹிந்து தத்துவ ஞான மரபை நன்கு அறிந்தவர்கள் பவுத்த சிந்தனையும் அதன் ஆறு தரிசனங்களுள் ஒன்றே என்பதை அறிவார்கள். அதன் பெயர் சார்வாகம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆகவே அம்பேத்கர் ஓர் அதிர்ச்சி வைத்தியமாகத் தமது இறுதி நாள்களின்போது பவுத்தத்தைத்தான் தழுவினார். பலவாறு ஆøசாட்டப்பட்ட போதிலும் ஆபிரகாமிய மதம் எதனையும் நெருங்கவிடவில்லை.
குறிப்பாக முகமதிய மதத்தில் சேர்ந்தால் ஏராளமாக நிதி உதவி செய்வதாகப் படுகஞ்சனான ஹைதராபாத் நிஜாம் ஆசைகாட்டியபோது, தலித்துகள் முகமதியராய் மதம் மாறினால் ஹிந்து கலாசாரத்திலிருந்து அந்நியப்பட்டு, வேறு தேசியமாக மாறிப்போய்விடுவார்கள் என்று சொல்லி அந்த அழைப்பை நிராகரித்தார்.
1935லேயே ஹிந்து சமயத்திலேயிருந்து வெளியேறிவிடப் போவதாக எச்சரித்த அம்பேத்கர் 1956 செப்டம்பர் மாதம் வரை பொறுத்திருந்து, அந்த ஆண்டின் அக்டோபர் மாதம்தான் ஹிந்து மதத்திலேயிருந்து வெளியேறி, பவுத்தரானார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி மறைந்தும்விட்டார். ஆக, டாக்டர் அம்பேத்கர் தம் வாழ்நாளில் காலம் பூராவும் ஒரு சீர்திருத்த ஹிந்துவாகவே இருந்துவிட்டு, இரண்டே இரண்டு மாதங்கள் மட்டுமே பவுத்தராக இருந்தார்.
அம்பேத்கர் ஹிந்து சமய, சமூக நடைமுறைகளைக் காலத்திற்கு ஏற்பச் சீர்திருத்தி அமைக்க முற்பட்ட மேன்மக்களுள் ஒருவர் என்பதை மறைத்துவிட்டு, அவர் ஹிந்து மதத்தின் பரம வைரி என்பதுபோல் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு அவரைப் பற்றி தவறான எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கிறார்கள்.
ஹிந்துக்கள் புனித நூலாக மதிக்கும் பகவத் கீதையில் வலியுறுத்தப்படும் வர்ணாசிரம தர்மம் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிக்கவில்லை என மிகத் தெளிவாகவே கூறியிருக்கிறார், அம்பேத்கர். தந்தையின் தொழில் மகனுக்கு என்று அது வகுக்கவில்லை என அறுதியிட்டுக் கூறுகிறார். தந்தையின் குணாம்சத்திற்கு இணங்க அவருக்கு ஒரு தொழிலும் அவருடைய மகனேயானாலும் அவனது குணாம்சத்திற்கு ஏற்ப அவனது தொழிலும் மாறுபடும் என எமக்கு ஞானாசிரியனாகவும் உற்ற சகாவாகவும் உள்ள கண்ணபிரான் தனது கீதையில் தெளிவுபடுத்தியிருப்பதாக அம்பேத்கர் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் கீதையை காந்திஜி தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார் என்று கூட அம்பேத்கர் சொல்லியிருக்கிறார்!
இவரையா, இப்படி வர்ணாசிரம தர்மத்திற்குச் சரியான பொருளுரைத்துப் பாராட்டிய அம்பேத்கரையா, ஹிந்து சமய விரோதியெனச் சித்திரிப்பது?
காந்தியம் (காந்தியிசம்) என்ற தமது நூலில் அதுபற்றிய தமது கடுமையான விமர்சனத்தில் இவ்வாறு எழுதுகிறார், அம்பேத்கர்:
பகவத் கீதை, வர்ணாசிரமமானது பிறப்பை அடிப்படையாகக் கொண்டது என்று கூறவேயில்லை. ஒவ்வொரு நபரின் வர்ணமும் அவரவரிடம் இயல்பாகப் பொருந்தியுள்ள தராதரம், தகுதி ஆகியவற்றைப் பொருத்தே முடிவுசெய்யப்படுகிறது என குணாம்சத்தின் பிரகாரம் அமையும் வர்ணத்தையே சிறப்பான அம்சம் என்று பகவத் கீதை வலியுறுத்துகிறது. தகப்பணின் தொழில் எதுவாக உள்ளதோ அதுவேதான் மகனுக்கும் உரியது என்று அது கூறவில்லை. இயற்கையாக அமைந்த குணாம்சங்களைப் பொருத்துத்தான் எவனொருவனுக்கும் தொழிலானது அமையும். தந்தையானவன் தனது இயல்பிற்கு ஏற்ப ஒரு தொழிலைச் செய்கையில், அவனுடைய மகன் அவனது இயல்பான குணாம்சங்களுக்கு ஏற்பத் தனது தொழிலை அமைத்துக்கொள்வான் என்றுதான் கீதை சொல்லுகிறது. பழமைக் கண்ணோட்டப்படித்தான், ஜாதியின் அடிப்படையில் பாரம்பரியமான தொழில் ஒருவனுக்கு அமைவதாக விளக்கம் சொல்லப்படுகிறது. கீதையில் விவரிக்கப்படும் வர்ணம் அவ்வாறு சொல்லவில்லை.
காந்திஜியோ வர்ணம் பிறப்பால் தீர்மானிக்கப் படுவதாகவும் ஒரு வர்ணத்தின் தொழில் மரபுவழி வருவதாகவும் பொருள்கொண்டுவிட்டார். காந்திஜியைப் பொருத்தவரை, வர்ணம் என்பது ஜாதியின் மறுபெயராகிவிட்டது! ஜாதியை வர்ணமாக மாற்றிவிட்ட காந்திஜியின் கருத்து, புரட்சிகரமான புதிய கோட்பாடு எதையும் வளர்ப்பதற்கு மாறாக, பழமைக் கண்ணோட்டத்தின் உச்சகட்டமாக உள்ளது.
மேற்கண்ட வரிகள், அம்பேத்கர் மூலமாக ஆங்கிலத்தில் வெளிப்பட்டு, எனது அறிவுக்கு எட்டிய பிரகாரம் தமிழில் தரப்பட்டுள்ளது.
தற்போதுள்ள ஹிந்து சமய, சமூக நடைமுறைகள் குறித்த தமது கடுமையான விமர்சனங்களுக்காக ஹிந்துக்கள் தம்மீது எவ்வித எதிர்ப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள மாட்டார்கள் என்று இதே நூலின் முன்னுரையில் நம்பிக்கையும் தெரிவிக்கிறார்,அம்பேத்கர். ஹிந்துக்கள் தமது சமய, சமூக நம்பிக்கைகள் மீதான விமர்சனம் எவ்வளவு கடுமையாக இருப்பினும் அதனை அனுமதிக்கும் சகிப்புத்தனமை உள்ளவர்கள் என்ற தமது நம்பிக்கையினை இதன் மூலம் அம்பேத்கர் தெரிவிக்கிறார் என்பது புலப்படவில்லையா?
ஆக, ஹிந்துஸ்தானத்தின் அடிப்படை ஆதார சுருதியான ஹிந்து சமய, சமூகக் கூறுகளை ஏற்றுக் கொண்டு, காலப் போக்கில் அவற்றில் சேர்ந்துவிட்ட கசடுகளை நீக்குவதில் உறுதியாக இருந்து, அதன் மூலம் இவ்விரு கூறுகளின் மீதும் தமக்கு உள்ள ஈடுபாட்டையும் அக்கரையினயும் வெளிப்படுதிய அம்பேத்கரை ஒரு தலை சிறந்த ஹிந்து தேசியவாதி என அடையாளங் கண்டுகொள்ள வேண்டும்.
துரதிருஷ்ட வசமாக நமது வரலாறு நமக்குச் சரிவரப் புகட்டப் படுவதில்லை. பல வரலாற்று உண்மைகள் நமக்கு மறைத்து வைக்கப்பட்டிருப்பதோடு, முற்றிலும் மாற்றியும் கற்பிக்கப் பட்டிருக்கின்றன. ஒரு சாராரின் மனம் புண்படும், மத நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்றெல்லாம் நமக்கு நாமே கற்பித்துக்கொண்டு நமக்கு பாதகமாக இருந்தாலும் பரவாயில்லை என இவ்வாறாக வரலாற்று உண்மைகளை மறைத்தும் திரித்தும் பதிவு செய்துவருகிறோம். தனது வரலாற்றைச் சரியாக அறிய வாய்ப்பு மறுக்கப் படும் சமுதாயத்திற்கு கதிமோட்சம் இல்லை என்பதை மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
இப்படித்தான் அம்பேத்கர் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்ததாகவும் உண்மைக்குப் புறம்பான தகவல் வலிந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் அல்லது பாரதத்தைத் துண்டாடுதல் என்கிற தலைப்பில் ஓர் ஆய்வு நூலை 1941 லேயே எழுதியிருக்கிறார், அம்பேத்கர். பிறகு 1945 ல் அப்போதைய நிலவரங்களுக்கு ஏற்பத் தகவல்களைச் சேர்த்தும் சில மாற்றங்களைச் செய்தும் அதன் இரண்டாம் பதிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்த ஆய்வு நூலைப் படிக்கிற எவருக்கும் அம்பேத்கருக்கு உள்ள அசாத்தியமான வாதத் திறமையையும் நுண்ணறிவையும் உணர்ந்து வியக்கத் தோன்றும்.
மேலும், ஆங்கிலத்தில் எழுதும்போதும் சரி, தமது தாய்மொழியான மராத்தியில் எழுதுகையிலும் சரி, மிகப் பெரும்பாலான சமயங்களில் வெகு இயல்பாகவும் நியாயமாகவும் நமது தேசத்தை ஹிந்துஸ்தான் என்றுதான் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். ஆங்கிலத்தில் எழுதுகையில் மிக மிக அபூர்வமாகவே இந்தியா என அவர் எழுதுகிறார். ஹிந்து
தேசியம் முகமதிய தேசியம் என இருவேறு தேசியங்கள் இருப்பதாகவும் அவை ஹிந்துஸ்தானத்தில் ஒன்றுபட்டு வாழமுடியாது என்றும் ஜின்னாவும் அவரது முஸ்லிம் லீகும் வாதிட்டது எவ்வளவு அபத்தமானது என்பதை இந்த நூலில் ஏராளமான ஆதாரங்களுடன் நிறுவுகிறார், அம்பேத்கர் (அம்பேத்கரின் நூலிலிருந்து அத்தகைய ஆதாரங்கள் சிலவற்றைப் படித்துக் காட்டுகிறார், மலர் மன்னன்).
ஹிந்துஸ்தானம் அரசியல் ரீதியாக ஒரே தேசமாக நீடித்து, ஆனால் முஸ்லிம் லீகின் பிரசார பலத்தால் முகமதியர் மனதில் நாம் வேறு, முகமதியர் அல்லாதோரும் வேறு என்கிற எண்ணம் வேரூன்றிவிடுமானால், அது ஹிந்துஸ்தானத்தின் பாதுகாப்பிற்கே ஆபத்தானது, அப்படியொரு நிலை உருவாகிவிடும் பட்சத்தில் பாகிஸ்தான் தோற்றுவிக்கப்படுவதே மேல் என அம்பேத்கர் கூறுகிறார். மத அடிப்படையில் அந்நிய தேசத்தவருடன் தம்மை ஒற்றுமைப் படுத்திக்கொள்ளும் இயல்பு முகமதியருக்கு இருப்பதால் அவர்களை வலுக்கட்டாயமாக ஹிந்துஸ்தானத்தின் பிரஜைகளாகவைத்திருப்பது ஹிந்துஸ்தானத்தின் நலனுக்கு உகந்தது அல்ல என மிகத் தெளிவாகவே அறிவுறுத்துகிறார், அம்பேத்கர்.
பிரிவினை என்று வந்துவிட்டால் பூகோள அடிப்படையில் மட்டுமின்றி, மத அடிப்படையிலும் மக்கள் பிரிந்துவிடுவதுதான்முறை என்கிறார், அம்பேத்கர். அதாவது, முகமதியர் ஹிந்துஸ்தானத்திலிருந்து பாகிஸ்தானத்திற்கு வெளியேற்றப்பட்டு, பாகிஸ்தான் எனப் பிரிக்கப் படும் பகுதியில் உள்ள முகமதியர் அல்லாதார் அனைவரும் ஹிந்துஸ்தானத்தில் குடியமர்த்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார். பாகிஸ்தான் பிரிவைனைக்குப் பிறகும் ஹிந்துஸ்தானத்தில் முகமதியர் நீடித்தால் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்கிற மனமாச்சரியங்களும் பூசல்களும் நீடித்துக்கொண்டுதான் இருக்கும் என அவர் உணர்த்துகிறார். இவ்வாறு ஹிந்துஸ்தானத்தின் நலன் கருதி மனப்பூர்வமாக அறிவுரை வழங்கும் அம்பேத்கரைவிடவா ஒரு தேசியவாதி இருக்க முடியும்?
ஹிந்துஸ்தானம் பூகோள ரீதியாக மிகவும் இயற்கையாகவே ஒரே தொகுப்பாக, யூனிட்டாக உள்ள தேசம் மட்டுமல்ல, காலத்தையும் வென்று என்று தோன்றியது என்றே அறுதியிட்டுக் கூற இயலாத அளவுக்கு கலாசார ரீதியாகவும் வெகு இயல்பாகவே ஒரு தேசமாக உள்ளது என அறிவுறுத்துகிறார், அம்பேத்கர். முகமதியர் இங்கு இயல்பாக வேறு தேசியத்தவராக இல்லை; அவ்வாறு அவர்களிள் தலைவர்களால் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள், அவ்வளவே என்கிறார், அவர்.
ஹிந்துஸ்தானத்தை மொழிகளின் அடிப்படையில் வெவ்வேறு மாநிலங்களாகப் பிரிப்பதுகூடத் தவறு என்கிறார், அம்பேத்கர். இதனால் வட்டார உணர்வு கிளர்ந்து தேசிய உணர்வுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கிறார். காந்திஜியின் ஆலோசனைபேரில் காங்கிரஸ் மகாசபை மொழிவழி மாநிலப் பிரிவினையைத் தனது கொள்கையாக ஏற்றிருப்பது மிகவும் தவறு, இதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என அவர் அன்றே எச்சரித்தது இன்று உண்மையாகி, அத்தகைய மோசமான பின் விளைவுகளை அனுபவித்து வருகிறோம்.
மொழி வழி மாநிலம் அமைந்தால் ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை, அரசின் வருவாய், நிர்வாக வசதி, இயற்கை வளம், நிலப் பரப்பு எனப் பல்வேறு அம்சங்களிலும் மாநிலத்திற்கு மா நிலம் வேறுபாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் மலிந்து அவற்றால் பல பிரச்சினைகள் வரத் தொடங்கும்; எனவே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நிர்வாக வசதிக்காக வட்டாரங்கள் தோற்றுவிக்கப்படுவதுதான் நல்லது என்கிறார், அம்பேத்கர். இவரைவிடவா ஹிந்துஸ்தானத்தின் நலனை நாடும் தேசியவாதி ஒருவர் இருக்க முடியும்?
மத்திய சட்ட அமைச்சராகப் பொறுப்பு வகிக்கையில் காஷ்மீரத்தில் பாகிஸ்தான் அத்துமீறி நுழைந்தபோது அதை விரட்டியடிக்க வேண்டுமேயன்றி அதை ஒரு விவகாரமாக ஐ நா சபையின் விசாரணைக்குக் கொண்டு செல்வது தவறு என்று நேருவை எச்சரித்தவர் அம்பேத்கர். ஐ நா வால் பிரச்சினை தீராது, அடித்து விரட்டு பாகிஸ்தானை என்று கண்டிப்பாகச் சொன்னார், அவர். மேலும், காஷ்மீர் மாநிலத்திற்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் சாசன விதி 370 ஐ ஏற்க மறுத்தார். சட்ட அமைச்சராக இருந்தபோதிலும் அப்பிரிவை அவையில் முன்மொழிய மறுத்துவிட்டார். அரசின் செயலர்தான் அதனை அவையில் வைக்க நேரிட்டது. காஷ்மீர் சிங்கம் என அனாவசியமாக நேருவால் தூக்கிவிடப்பட்ட ஷேக் அப்துல்லாவின் வாலை ஆரம்பத்திலேயே ஒட்ட நறுக்கச் சொன்னவர், அம்பேத்கர். நேருவின் வெளியுறவுக் கொள்கை ஹிந்துஸ்தானத்தின் நலனுக்கு உகந்ததாக இல்லை எனக் கண்டனம் தெரிவித்து அதன் அடிப்படையில் 1951 அக்டோபர் 21 அன்று மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாகத் தமது ராஜிநாமாக் கடிதத்தைப் பிரதமர் நேருவிடம் கொடுத்துவிட்டு வெளியேறினார்.
1947 ஆகஸ்டில் உலக நாடுகள் அனைத்தும் நம் மீது பரிவு காட்டி அரவணைத்தன. ஆனால் 1951 ல், அதாவது நான்கே ஆண்டுகளில் ஐ நா அவையில் நமது தீர்மானத்தை வழி மொழியக் கூட ஒரு நாடு இல்லாமற் போய்விட்டது. இதுதான் உங்களுடைய வெளியுறவுக் கொள்கையின் சாதனை என்று நேருவிடம் சொன்னார், அம்பேத்கர். நேருவின் சோவியத் ரஷ்ய ஆதரவுப் போக்கை இவ்வாறு அவர் கடுமையாக விமர்சித்தார். இவர் நமக்குக் கிடைத்த தலைசிறந்த தேசியத் தலைவரே அல்லவா?
ஹிந்து சமூகத்தில் தீண்டாமை என்கிற வெட்கக் கேடான நடைமுறை நீடிப்பதும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதும் வாஸ்தவம்தான் என்றாலும், சட்ட ரீதியாக அவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதும் வாஸ்தவந்தான். கொலைக் குற்றம் என்றால்கூட எப்படியாவது ஜாமீனில் வெளியே வந்துவிட முடியும்; ஆனால் ஒரு தாழத்தப்பட்ட சகோதரனை அவனது ஜாதியைச் சொல்லி அழைத்தால், அவ்வாறு தான் அழைக்கப்பட்டதாக அவன் புகார் செய்தால் அது ஜாமீனில் வெளியே வரமுடியாத குற்றம் எனச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதனைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்!
சட்டம் இருந்தாலும் அது பல இடங்களில் செயல்படுத்தப்படுவதில்லை என்பதும் உண்மைதான். தீண்டாமைக் கொடுமைகள் பலவாறு நீடிக்கின்றன. ஆனால் நெஞ்சுரம் இருந்தால் அதனை எதிர்த்துப் போராட வாய்ப்பு உள்ளது. சட்டம் முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என நிர்பந்திக்க வசதியும் உள்ளது.
தாழ்த்தப்பட்டோரை இழிவாக நடத்தும் போக்கும் அவர்களைக் கொடுமைப்படுத்துவதும் அவர்களின் உழைப்பைச் சூறையாடுவதும் மேல்சாதியினரிடையே நீடித்த போதிலும் நீண்ட நெடுங்காலமாகவே தாழ்த்தப்பட்டோரைப் பரிவோடு அணுகி, அவர்களுக்குச் சமவாய்ப்பளித்து ஊக்குவிக்கும் நல்லெண்ணம் மிக்க மனச்சாட்சியுள்ளவர்களும் மேல்சாதியினரில் இல்லாமற்போய்விடவில்லை. அதனால்தான் பீமராவ் என்கிற தாழ்த்தப்பட்ட மஹார் வகுப்பு இளைஞன் அம்பேத்கர் என்கிற பிராமண ஆசிரியரின் ஊக்குவிப்பைப்பெற்று அதற்குப் பிரதியாக அந்த பிராமண அடையாளப் பெயரைத் தானும் வைத்துக்கொள்ள முடிந்தது. பரோடா சமஸ்தான மகராஜா கெய்க்வாடின் உதவியால் மேல்படிப்பும் பெறமுடிந்தது. தொடக்கத்தில் காந்திஜிகூட அம்பேத்கர் ஒரு பிராமணர் என்றுதான் நினைத்திருக்கிறார்!
இந்த வரலாற்று உண்மையினையும் சிந்தித்துப்பார்த்து, அம்பேத்கர் தமது வாழ்நாளில் இறுதி இரு மாதங்கள் மட்டுமே ஹிந்துவாக இல்லை என்பதையும் நினைவில் கொண்டு, ஹிந்துஸ்தனத்தின் நலனில் மிகுந்த கவனம் உள்ள மிகச் சிறந்த தேசியத் தலைவர் என அவரை அடையாளங் காணக் கடமைப் பட்டிருக்கிறோம்.
இன்னொரு உண்மையினையும் நான் சுட்டிக்காட்ட வேண்டும். ஹிந்துஸ்தானத்திற்கு வெளியிலிருந்து வந்த பிற சமயங்கள் ஹிந்து சமயத்திற்கு அண்டை வீட்டார்தான். பவுத்தமோ ஹிந்து சமயம் என்கிற குடும்பத்தின் உறுப்பினனான, ஆனால் கோபம் கொண்டு எதிர்த்து நிற்கிற குழந்தை (ரிபல் சைல்ட் ). அம்பேத்கர் தமது இயல்பிற்கு ஏற்ப பவுத்தம் தழுவியதை இவ்வாறுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
(மலர் மன்னன் பேச்சு இங்கும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. கூட்டத்தினர் மேலும் பேசுமாறு வற்புறுத்திய போதிலும் நேரம் கடந்துவிட்டதால் அவர் தனது பேச்சை வலுக்கட்டாயமாக நிறுத்திக் கொண்டார். அம்பேத்கரும் காஷ்மீர் நிலவரமும் என்ற தனித் தலைப்பில் மலர் மன்னன் மீண்டும் பேச வரவேண்டும் என்று கூட்டத்தினர் வற்புறுத்தினார்கள். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார்).
- அ. வெண்ணிலாவின் கவிதைகளும் பெண் அனுபவமும்
- கடவுளுடன் கவிதையில் பிரார்த்தித்தல் – மனுஷ்ய புத்திரன் கவிதைகளை முன்னிருத்தி
- ஆசை என்றொரு கவிஞர்
- கீதாஞ்சலி (103) உனக்கு வந்தனம் புரிகையில்!
- புற்று நோய்க்கு எதிராக வயாகரா
- மடியில் நெருப்பு – 16
- ஃபிரான்சில் தமிழர் திருநாள்
- அல்லாவின் தெளகீது மீதான கேள்விகள்
- பாரதி பாடல்களில் அறிவியல் படிமங்கள்
- மியாம்மாவில் திருவள்ளுவர் விழா
- கணேச நாடாரா, சாணாரா இல்லை ‘சான்றோரா’?
- குன்றத்து விளக்கு காளிமுத்து
- கண்களை மூடிக் கொண்ட பூனைக்குட்டி
- கடித இலக்கியம் – 36
- ஓடை நகரும் பாதை: தமிழில் நவீனத்துவக் கவிதைகள்
- ஆரவாரமில்லாது வாழ்ந்த அ.மு.ப.
- தொலைநோக்கிகள்!
- இலை போட்டாச்சு: 6. கொள்ளுப் பொடி
- கண் தூங்காமல் நாம் காணும் சொப்பனம்
- காம சக்தி
- சரி
- சின்னண்ணே! பெரியண்ணே!
- பெரியபுராணம் – 116 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- தொலைதூரதேசத்தில் காற்றில் கரைந்துபோன என் சகோதரனுக்காய்
- பாரதி உன்னைப் பாரினில்
- கறுப்பு இஸ்லாம்
- உண்மை வரலாறும் ஆ. சிவசுப்பிரமணியனின் திரித்தல்களும்
- அம்பேத்கர் எனும் தேசியத் தலைவர்
- நீ ர் வ லை (2)
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 15
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:8) ஜூலியஸ் சீஸர் படுகொலைக்குப் பிறகு.