அம்ச்சி மும்பை.

This entry is part [part not set] of 25 in the series 20050812_Issue

புதியமாதவி.


++++

இந்தியாவின் வணிகத் தலைநகரம்.. இந்திய பொருளாதரத்தின் முதுகெலும்பு.. பொன்முட்டையிடும்

வாத்து .. கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குப் பிறகு ஸ்தம்பித்து நின்றது.

மும்பை வாழ் மக்கள் எவரும் மும்பையின் இந்த நிலைமையை இதுவரைக் கண்டதில்லை. கேட்டதில்லை.

மும்பையின் கனமழையும் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் ஒரு நாளாவது மும்பையின்

வண்டிகள் காலவரையின்றி தாமதம் ஆவதும் மும்பையில் வாழும் ஒவ்வொருவரும் இந்த கனமழை

அனுபவத்திலிருந்து தப்பிக்கவே முடியாது என்பதும் மும்பையின் விதி.

அப்படித்தான் அன்றும் மக்கள் நினைத்தார்கள்.. விடாது மழை.. மும்பையிலும் மும்பையைச் சார்ந்த

புறநகர்ப் பகுதிகளிலும். அரசும் மும்பை மாநகராட்சியும் கூட அப்படித்தான் நினைத்தார்கள்..

ஆனால்.. தண்ணீரின் அளவு சாலைகளில், தண்டவாளங்களில் குறைந்தது 5 அடியிலிருந்து அதிகப்பட்சம்

பள்ளமான இடங்களில் 15 அடிவரை.. தண்ணீர் மட்டம் ஏற ஏற.. இது மும்பையின் வழக்கமான

கனமழை அல்ல.. என்பதை உணர முடிந்தது.

தண்டவாளங்கள் எல்லாம் 5 அடி தண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறது. பெஸ்ட் (BEST) பேருந்துகள்

நகர முடியாமல்.. கார்கள் சாலைகளில்.. மிதக்கின்றன. பள்ளி சென்ற குழந்தைகள் பற்றி

பெற்றோர்கள் பதறுகிறார்கள். ஊடகங்கள் செய்வதறியாது திகைக்கின்றன. கை பேசிகள் அலறுகின்றன.

ஒவ்வொரு ரயில்வே ஸ்டேசன்களிலும் குறைந்தது 10000.. பேராவது நின்று கொண்டிருக்கிறார்கள்.

அன்று மும்பையின் பழைய வி.டி இன்றைய சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும்

அதிகமானவர்கள் இரவு தங்கி இருக்கிறார்கள்.. !

பீஸ்கட் பாக்கெட்டிலிருந்து சாய், காபி வரை..ஏன் வாடா பாவ் விற்பவனும் ஓடி வந்து தங்களிடமிருப்பதைக்

காத்துக் கிடக்கும் மக்களுக்கு கொடுக்கிறார்கள். கை பேசிகளின் அலறல் நின்று விடுகிறது.

பல வீடுகளில் தொலைபேசி மவுனமாகி நிலைமையை அதிகமாகப் பயமுறுத்துகிறது.

உள்நாட்டு. வெளிநாட்டு விமான நிலையங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.

தேச்ய நெடுஞ்சாலைகளில் 7 முதல் 8 அடி வரை தண்ணீர்.. கார்கள் மிதக்கின்றன.

10 இலட்சம், 12 இலட்சம் மதிப்புள்ள கார்களை அப்படி அப்படியே நிறுத்திவிட்டு.. மக்கள் தங்களின்

உயிர்ப் பிழைத்தால் போதும் என்று இறங்கி மக்கள் கூட்டமே மனிதச் சங்கிலியாகி.. ஒருவரின்

கைப்பிடியில் ஒருவர் நின்று கொண்டு விசையுடன் இழுத்துச் செல்லும் மழை வெள்ளத்தை எதிர்த்து

நகருகிறார்கள்…!!!

எத்தனை எத்தனைச் செய்திகள்.. நெஞ்சை உருக்கும் நினைவுகள்..மனித நேயம் இன்னும் நம் மண்ணில்

மறைந்துவிட வில்லை என்ற நம்பிக்கையை இந்த மழைவெள்ளம் எங்களுக்குத் தந்திருக்கிறது.

கலினா விமானப் போக்குவரத்து ஏர்-இந்தியாவில் பணிபுரியும் மக்கள் குடியிருப்பு.. தண்ணீர் 15 அடிக்கும்

மேல்.. முதல் மாடியிலும் தண்ணீர்ப் புகுந்துவிட்டது. இரண்டாவது மாடியில் மக்கள் தஞ்சம் புகுந்தார்கள்.

பேருந்தில் தண்ணீர்ப் புகுந்துவிட காவல் நிலையம், தீ அணைப்பு இலகா எல்லோரும் கைவிரித்துவிட்டார்கள்..

பயணிகள் பேருந்தின் கூரையில். அங்கிருந்தப் பயணிகளில் நீச்சல் தெரிந்த மூவர் நீந்தி வெளிச்சம் வந்த

மாடியை நோக்கிப் போன போது அது கலினாவின் ஒரு தமிழ்க்குடும்பம். பள்ளி செல்லும் மாணவி..

புத்திசாலித்தனமாக அவர்கள் நீச்சல் குளத்தில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் வளையங்களில் வாயினால்

காற்றை ஊதி அவர்களிடம் கொடுத்து அவர்கள் இல்லத்தில் இருந்த அனைத்து புடைவைகளையும்

சேர்த்துக் கட்டி அதன் ஒரு நுனியை அவர்கள் குடியிருப்பின் மாடியில் கட்டினார்கள்.

பேருந்தில் இருந்தப் பெண்கள் தங்கள் துப்பட்டாக்களைக் கொடுக்க பேருந்துவரை ஒரு துணிகளால்

ஆன கயிறு அதைப் பிடித்துக் கொண்டு நீச்சல் குளத்து வளையங்களையும் பிடித்துக் கொண்டு

தண்ணீரில் மிதந்து கொண்டு பேருந்தின் கூரையில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை அந்த மூவரும்

ஒரு தடவைக்கு மூன்று நான்கு பேர் வீதம் அனைவரையும் காப்பாற்றி இருக்கிறார்கள்!

வயதான தம்பதிகள் தண்ணீரைக் கண்டு பயத்தில் துணியால் ஆனக் கயிற்றைப் பிடித்து வெளிவர

மறுத்ததால் அவர்கள் இருவரை மட்டும் காப்பாற்ற முடியவில்லை. இந்தப் பணி கிட்டத்தட்ட 5 மணி நேரங்கள்..

நடந்திருக்கிறது..

இன்னொருவர்.. மறுநாள் இல்லத்திற்கு திரும்பியவர்.. வீட்டிற்கு அருகில் வந்தவுடன் டெலிபோன் பூத்தைப்

பார்த்தவுடன் சரி கவலையுடன் இருக்கும் மனைவிக்கு போன் செய்யலாம் என்று போன் செய்திருக்கிறார்.

‘கவலைப் படாதே..வந்துவிட்டேன். இன்னும் 10 நிமிடங்களில் வந்துவிடுவேன் என்று ‘

ஆனால் அன்று முழுவதும் வரவில்லை. மறுநாள் அவருடைய உடல் கழிவுநீர்கள் போய்ச்சேரும்

ஒரு பகுதியில் ஒதுங்கி கிடந்தது.. தன் மனைவி மக்களைக் காப்பாற்ற மழை வெள்ளத்தில் இறங்கியவர்கள்..

..இப்படி எத்தனை எத்தனையோ சோகங்கள் நடந்துவிட்டன.

இது ஒரு பக்கம் என்றால் தீடிரென்று சுனாமி வருவதாகவும். சில இடங்களில் தண்ணீர் அணைக்கட்டுகள்

உடைந்து தண்ணீர் தங்கள் குடியிருப்பை நோக்கி வருவதாகவும் திட்டமிடப்பட்டு பரவிய வதந்திக்கு

குழந்தைகளும் பெண்களுமாக 20 பேர் பலி..

மண்சரிவுகளில் பலியானவர்கள் பலர். உயிரழ்ந்தவர்கள் குரைந்தது ஆயிரம் பேர்கள்.. இதுதவிர

மும்பைக்கு ஏற்பட்ட இழப்ப்ய் 10000 கோடி.

குறிப்பிட்ட சில காவல் நிலையங்களில், வருமான வரி அலுவலகங்களில், மாநகராட்சி அலுவலகங்களில்

மிக முக்கியமான

கடிதங்கள், நகல்கள், சான்றிதழ்கள்.. மழை வெள்ளத்தில் அழிந்துவிட்டன.

1910, ஜூலை 12, மேகாலய மாநிலத்தில் சிரபுஞ்சியில் 83.82 செ.மீ மழை பெய்தது. அதுதான்

இந்தியாவின் பெய்த கனமழை. ஆனால் மும்பையில் 2005, ஜூலை 28ல் ஒரே நாளில் பெய்த

மழையின் அளவு 94.4 செ.மீ.. மும்பையில் 150 வருடத்திற்கு முன்பிருந்த தண்ணிர் வடிகால் திட்டம்

(drainage system)தான் இன்றும் நடைமுறையில் பயன்பாட்டிலிருக்கிறது.

அந்த வடிகால் திட்டத்தின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 2.5 செ.மீ அளவு தண்ணிர்தான் வெளியேற

முடியும். அனா. மும்பையில் அன்று ஒரு நாள் பெய்த மழையின் அளவு 94.4 செ.மீ. !!

மும்பை வெள்ளக்காடானதற்கு இதுவும் ஒரு காரணம்.

இன்னொரு காரணம்.. மும்பையின் இயற்கை காடுகள் அழிக்கப்பட்டு கான்கீரிட் மேடுகள்

அளவுக்கு அதிகமாக உருவாகிவிட்டன. நீண்ட கடற்கரையோரம் இயற்கையான துறைமுகமாக

அமைந்திருக்கும் மும்பையில் கடந்த 2000 வருடம் மட்டுமே 1000 ஹெக்டார் பசுமைநிலமும் அலையாத்திக்

காடுகளும் அழிக்கப்பட்டு அடுக்கு மாடிகள் சொகுசு ஓட்டல்கள் வணிக வளாகங்கள் நிரம்பின.

‘the concrete city has pushed nature to the margins. The mangroves in

particular

which act as the city ‘s sponge have reduced from 235 sq.km -in the mumbai

and

navi mumbai area in 1924 to 160 sq.km in 1994. Nature has its own way of

coming

back ‘ என்று கருத்து தெரிவிக்கிறார்கள் புவியியல் ஆய்வாளர்கள்.

இந்தியாவின் வருமானத்தில் 60% மேல் தருகின்ற ஒரே நகரம் மும்பைதான். நடுவண் அரசுக்கு

மும்பை தன் வருமானத்திலிருந்து ஒவ்வொரு நிதி ஆண்டிலும் வரியாகச் செலுத்தும் தொகை

இந்தியாவின் மற்ற நகரங்களான டெல்லி. பெங்களூர், சென்னை மூன்று நகரங்களின் கூட்டுத்தொகையை

விட அதிகம்.

சென்னை : 11,234 கோடி

பெங்களூர் : 15,194 கோடி

டில்லி : 26,623 கோடி

மும்பை மட்டும் 58,000 கோடி.

ஆனால் நடுவண் அரசு மும்பையின் வளர்ச்சி நிதியாக ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கும் தொகை

வெறும் 100 கோடிதான்.

மும்பை மாநகராட்சியின் வருமானம் 7000 கோடி மாநகராட்சி ஊழியர்களின் மாதச் சம்பளத்திற்கே

பற்றாக்குறையாக இருப்பதால் மும்பையின் வளர்ச்சிக்கு என்று மாநகராட்சி பெருந்தொகையை

ஒதுக்க முடிவதில்லை. இப்படிப் பல காரணங்களால் மும்பைக்கு டெல்லியைப் போல தனி அந்தஸ்த்து,

தனி முதலமைச்சர் , தனிப்பட்ட நிர்வாகம் வேண்டும் என்ற குரல் ஒலிக்கிறது..மீண்டும். ஆனால்

இவர்களின் குரல் இந்த மண்ணின் மைந்தர்களின் உணர்வுகளை காயப்படுத்திவிட்டதால் கட்சி வேறுபாடுகளைக்

களைந்து.. ‘இது எங்கள் மும்பை.. மும்பை மராட்டிய மண்ணின் தலைநகரம் ‘ என்று ஆவேசத்துடன்

குரல் கொடுக்கிறார்கள். இந்த மண்ணின் மைந்தர்களின் குரலும் அவர்களின் உணர்வுகளும்

மதிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மும்பை தனிப்பட்ட கவனத்துடன் கவனிக்கப்பட வேண்டியது

மும்பையின் தேவை மட்டுமல்ல, இந்திய நாட்டின் தேவை என்பதை எல்லோரும் புரிந்து

கொண்டிருக்கிறார்கள். மும்பையை ஷங்கை (shanghai) நகரமாக்குவோம் என்பது நேற்றைய

கனவு. மும்பையை .. இந்தியாவின் வணிகத் தலைநகரை என்றும் எதிலும் இழந்துவிட மாட்டோம்.

மும்பை.. அம்ச்சி மும்பை என்பதுதான் இன்று மும்பையின் ஒவ்வொரு மனிதனின் கனவு.

…. மும்பையிலிருந்து,

புதியமாதவி.

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை