அமெரிக்காவை ஆளுவது யார் ?

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

ஞாநி


எந்த நாட்டையுமே உண்மையில் ஆளுவது யார் என்ற கேள்வி முக்கியமானது. சர்வாதிகார ஆட்சிகளில் இந்தக் கேள்விக்கு எளிமையாக பதில் சொல்லிவிடலாம். ஜனநாயக நாடுகளில்தான் கடினம்.

பொதுவாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் நாட்டை ஆளுவதாக நம்பிக் கொண்டிருக்கிறோம். அல்லது நம்ப வைக்கப்படுகிறோம். அந்தப் பிரதிநிதிகள் அவரவர் சுயநலத்துக்கேற்ப வெவ்வேறு சக்திகளின் கட்டளைப்படி இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். விதவிதமான உள்ளூர் பண முதலைகள், வெளிநாட்டு பண முதலைகள், உலக வங்கி போன்ற அமைப்புகள், வெவ்வேறு வெளிநாட்டு அரசுகள் என்று இந்த சக்திகள் பல ரூபங்களில் உள்ளன.

எந்த அளவு இந்த சக்திகளின் அசல் ரூபங்களை நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்துவிட்டு நம் நலனுக்காகவே எல்லாம் நடப்பதாக நம்மை நம்முடைய ( தேர்ந்தெடுக்கப்பட்ட) பிரதி நிதிகளால் நம்பவைக்க முடிகிறது என்பது மட்டும்தான் அவர்களுக்குக்கு முக்கியமான திறமை.

உலகத்தின் பல நாடுகளின் ஆட்சிகளை ( எல்லாவற்றையும் அல்ல) நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டுப்படுத்தும் வல்லமை உடையதுஅமெரிக்க அரசு என்பது நாம் பொதுவாக அறிந்ததுதான். அப்படிப்பட்ட அமெரிக்க அரசைக் கட்டுப்படுத்துவது, ஆள்வது யார் ?

அந்த நாட்டின் ராணுவ தளவாடத் தொழில்துறைதான். ஆயுத வியாபாரிகளே அமெரிக்காவின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

மாறி மாறி எந்த நாட்டின் மீதாவது யுத்தம் நடத்திக் கொண்டே இருப்பதில் துடிப்பாக இருக்கக்கூடிய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தற்போதைய ஆட்சியில் , மொத்த அமெரிக்க பட்ஜெட்டில் பாதிக்கு மேல் ராணுவத்துறைக்குதான் ஒதுக்கப்படுகிறது. 2001 பட்ஜெட்டில் 343.2 பில்லியன் டாலர்கள். ஒரு பில்லியன் என்பது 10 கோடி. 343 பில்லியன் என்றால் 3,430 கோடி டாலர்கள். ஒரு டாலர் சுமார் ரூ 50 மதிப்பு. ருபாய்க் கணக்கில் பார்த்தால் எண்ணி மாளாது.

இந்த வருடம் 396.1 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு. உலகத்தின் எல்லா நாடுகளுடைய ராணுவ செலவில் ( 839 பில்லியன் டாலர்களில்) இது ஏறத்தாழ சரி பாதி. இந்தக் கணக்கில் ஆப்கனிஸ்தான், இராக் யுத்தச்செலவு , நாசா விண்வெளி ஆய்வு நிலையம், உளவு அமைப்பான சி.ஐ.ஏ முதலியவற்றுக்கு ஒதுக்கும் தொகைகளைச் சேர்க்கவில்லை.

அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு பெரிய நிறுவனத்தையும் விடப் பெரியது அமெரிக்கப் பாதுகாப்புத்துறை. இதில் 51 லட்சம் பேர் வேலை பார்க்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள மொத்த எஞ்சினீயர்கள், விஞ்ஞானிகளில் மூன்றில் ஒருவர் ராணுவத்திலோ, ராணுவத்திற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள தனியாரிடமோ வேலை பார்க்கிறார்கள். அமெரிக்க அரசு ஆராய்ச்சிக்காக ஒதுக்கும் தொகையில் 75 சதவிகிதம் ராணுவம் சார்ந்த அமைப்புகளுக்கே தரப்படுகிறது.

அமெரிக்க ராணுவத்துக்க்காக தளவாடங்கள் தயாரிக்கும் கம்பெனிகளின் பங்குகள்தான் ஷேர் மார்க்கெட்டில் அபாரமாக விற்கின்றன. செப்டம்பர் 11, 2001ல் இரட்டை கோபுரத்தாக்குதலுக்குப் பிறகு பங்குச்சந்தையில் 20 முதல் 40 சதவிகிதம் வரை விலை ஏறிய பங்குகள் எல்லாம் ராணுவத் தயாரிப்பு கம்பெனிகள். (ரேய்த்தான், அலையண்ட் டெக் சிஸ்டம்ஸ், நார்த்ரப் க்ரம்மன் )

பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய யுத்தம் நடத்துவதாக அமெரிக்கா அறிவித்ததிலிருந்து அதிக லாபம் இந்த ஆயுத கம்பெனிகளுக்குத்தான். கடந்த மூன்றாண்டுகளில் மற்ற கம்பெனிகளின் தலைவர் பதவியிலிருப்பவரின் சம்பளம் ஆறு சதவிகிதம் வரை உயர்ந்தபோது ஆயுதக் கம்பெனி தலைவர்களின் சம்பளம் 79 சதவிகிதம்

அதிகரித்திருக்கிறது.

உலகத்திலேயே முதல் மூன்று பெரும் ஆயுத வியாபாரக் கம்பெனிகள் லாக்ஹீட், போயிங், ரெய்தான் ஆகியவை. இவற்றுக்கு அமெரிக்க அரசு தரும் மான்யங்கள் முறையே 15 பில்லியன் டாலர்,12 பில்லியன் டாலர், 6.3 பில்லியன் டாலர்.

மற்ற நாடுகள் தமது விவசாயிகளுக்கோ, தொழிற்சாலைகளுக்கோ எந்த மான்யமும் தரக்கூடாது என்று உலக வர்த்தக அமைப்பின் மூலம் கட்டாயப்படுத்தி வரும் அமெரிக்க அரசு இந்த ஆயுத வியாபாரிகளுக்கு மட்டும் எப்படி மான்யம் தருகிறது ?

ஒரு நாடு தன் பாதுகாப்புக் காரணங்களுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இன்னொரு நாடு கேள்வி கேட்க முடியாது என்று காட் ஒப்பந்தத்தின் 12வது ஷரத்தில் குறித்திருப்பதை அமெரிக்கா தன்னுடைய ஆயுதக் கம்பெனிகளுக்கு ஆராய்ச்சியின் பெயரால் மான்யம் கொடுக்கப் பயன்படுத்திக் கொள்கிறது.

தற்போது புஷ்ஷின் ஆட்சியில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் பலரும் ஆயுத வியாபாரத்தோடு தொடர்பு உள்ளவர்கள்தான். துணை ஜனாதிபதி டிக் ஷேனியின் மனைவி லின் ஆயுத கம்பெனி லாக்ஹீடின் இயக்குநராக இருந்தவர். தேசியப் பாதுகாப்புக்கான துணை ஆலோசகர் ஸ்டாபன் ஹேட்லி, லாக்ஹீட் கம்பெனியின் சட்ட ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றியவர். புஷ்ஷின் மூத்த ஆலோசகர் கார்ல் ரோவ், போயிங் கம்பெனியில் பங்குகள் வைத்திருப்பவர். துணை ஜனாதிபதி டிக் சேனியின் அலுவ்லகத்தலைவர் நார்த்ரப் க்ரம்மன் ஆயுதக் கம்பெனியின் ஆலோசகராக இருந்தவர்.பாதுகாப்புத்துறையின் துணைச் செயலாளர் டவ் ஸகீம், க்ரம்மன் கம்பெனிக்கு ஆலோசனை தரும் ஆயுத நிறுவனமான சிஸ்டம்ஸ் ப்ளானிங் கார்ப்பரேஷனில் பணியாற்றியவர். கிரம்மனின் சட்ட ஆலோசனை நிறுவனத்தில் வேலை செய்த டக்ளஸ் ஃபெயித் என்பவர்தான் தற்போது புஷ் அரசின் கொள்கைத் துறை துணைச் செயலாளர். ஊழியர் இலாகாவின் துனைச் செயலாளர் டேவிட் சூ பாதுகாப்புத்துறையின் ஆலோசகர்களான ரேண்ட் கார்ப்பரேஷனில் வேலை பார்த்தவர்..அமெரிக்க விமானப்படையின் செயலாளர் ஜேம்ஸ் ரோச் ஆயுதக் கம்பெனியான க்ரம்மனில் ஒரு பிரிவின் தலைவராக இருந்தவர்.விமானப்படைத் துணைச் செயலாளர் பீட்டர் டாட்ஸ், லாக்ஹீட் மார்ர்ட்டின் கம்பெனியின் நிர்வாகியாக இருந்தவர். அரசின் உள்துறைச் செய்லாளர் ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் பல ஆயுத கம்பெனிகளுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வந்தவர்.

(அமெரிக்காவில் அமைச்சர்களை செயலாளர் என்று அழைப்பது வழக்கம். இவர்கள் எல்லாரும் அமைச்சர்கள்.)

எனவே ஆயுத வியாபாரிகள்தான் அமெரிக்காவை ஆளுகிறார்கள்.

இப்படி ஆளுபவர்களுக்கு ஒரு கொள்கை, சித்தாந்தம், கருத்தியல் இருக்கும் அல்லவா ? அது என்ன ? உலகம் முழுவதும் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற மாதிரி ஏதாவது மனிதாபிமானக் கொள்கை அடிப்படையில் இவர்கள் ஆயுதத் தொழிலில் இருப்பவர்களா ? இல்லை. இல்லவே இல்லை.

கடைந்தெடுத்த பிற்போக்குத்தனமான கொள்கையுடையவர்கள்.

அமெரிக்க சமூகத்தில் நீண்ட காலப் போராட்டத்துக்குப் பிறகுதான் பெண்களுக்கு பல துறைகளில் சமத்துவ நிலை ஏற்பட்டது. புஷ் கூட்டத்தின் கொள்கை பெரும்பாலும் பெண் சமத்துவத்துக்கு எதிரானது. பெண்களின் வேலை குடும்பத்தை கவனித்துக் கொண்டு குழந்தைகளை நல்ல கிறித்துவர்களாக வளர்த்தெடுப்பதுதான் என்ற பார்வையுடைய மத அடிப்படைவாதிகளின் ஆதரவு ஒவ்வொரு தேர்தலிலும் புஷ்ஷுக்கு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் இந்து மத அடிப்படைவாதிகளான பி.ஜே.பி ஆட்சியில் இருப்பது போலவே, அமெரிக்காவிலும் தற்போது கிறித்துவ மத அடிப்படைவாதிகள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள். அதில் முதன்மையானவர் ஜார்ஜ் புஷ்.

நேரடியாகவே தீவிர மதப் பிரசார்கர்களை முக்கியப் பொறுப்புகளில் புஷ் அரசு நியமித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின் லேடனைத்தேடுவதற்கான அமெரிக்கப் படையின் தலைவராக புஷ் நியமித்த லெப்டினண்ட் ஜெனரல் வில்லியம் பாய்கின், மத போதகராக இருந்தவர். தன மனைவி தன்னை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்தபோது தன்னைப் பார்த்து “ நீ ஒரு மத வெறியன். உன்னை என்னால் இனிமேல் நேசிக்கவே முடியாது” என்று சொல்லிவிட்டுச் சென்றதாக பாய்கின்னே (பெருமையாக ?) சொல்லியிருக்கிறார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் முதல் பெண்ணான காண்டொலெசா ரைஸ், மத போதகரின் மகள். புஷ்ஷின் ஆட்சியில்தான் மத அடிப்படையிலான ஒழுக்கம் மீண்டும் அரசாங்க நிர்வாகத்தில் ஏற்பட்டிருப்பதாக ரைஸ் கூறியிருக்கிறார். இராக் யுத்த நேரத்தில் புஷ்ஷின் அலுவலகத்தில் நள்ளிரவு வரை முக்கியமான ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், எல்லா அலுவலர்களும் விடிய விடிய மதப் பிரார்த்தனை கீதங்களை பாடிக் கொண்டிருந்தார்களாம்.

அமெரிக்காவின் சட்டத்துறையின் தலைமைப் பதவியான அட்டார்னி ஜெனரல் பதவியில் இருக்கும் ஜான் ஆஷ்கிராஃப்ட்டும் மத அடிப்படைவாதிதான். கருச்சிதைவை சட்டப்படி அனுமதிப்பதை ரத்து செய்யவேண்டும் என்று நீண்ட காலமாகப் போராடி வரும் கிறித்துவ பழமைவாதிகளில் இவர் ஒருவர்.

மத அடிப்படைவாதிகளை, பழமைவாதிகளை எல்லா துறைகளிலும் முக்கியப் பொறுப்பில் உட்காரவைப்பது என்ற இந்திய பி.ஜே.பியின் அதே அணுகுமுறைதான் அமெரிக்காவிலும் புஷ்ஷால் பின்பற்றப்படுகிறது.

புஷ் அரசின் பல பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள் முழுமையாக நிறைவேறாமல் ஓரளவு தடுக்கப்படுவதற்கு அமெரிக்க நீதித்துறை காரணம்.

அந்த நீதித்துறைக்குள்ளேயே எந்த அளவுக்கு மத அடிப்படைவாதம் வேரூன்றியிருக்கிரது என்பதன் அடையாளம் அலபாமா மாநில உயர் நீதிமன்றத்தலைமை நீதிபதியாக இருந்த ராய் மூர். இவர் சாதாரண நீதிபதியாக இருந்தபோது தன் அறையில் பைபிளிலிருந்து பத்து கட்டலைகளை ஒரு பலகையில் எழுதி மாட்டி வைத்திருந்தார். அப்படிச் செய்வது தவறு என்று வழக்குகள் தொடுக்கப்பட்டு அவற்றில் அவர் முதலில் வென்றார். பின்னர் அவர் தலைமை நீதிபதியானதும், பத்துக்கட்டளைகளை ஒரு கல்லில் பொறித்து நீதி மன்ற வளாகத்தின் நுழைவு வராந்தாவில் (சுமார் 5500 பவுண்ட் எடை ) பீடம் கட்டி வைத்தார்.

இதை எதிர்த்தும் சிவில் உரிமை ஆர்வலர்களால் வழக்கு தொடுக்கப்பட்டது. அமெரிக்காவின் உச்ச நீதி மன்றம் முதல் கட்டத்தில் கல்வெட்டை அகற்றும்படி மூருக்கு உத்தரவிட்டது. அவர் மறுத்தார். மூருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கில் மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கல்வெட்டை அகற்றக்கூடாது என்று நாட்கணக்கில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

உச்ச நீதி மன்றம் இப்படி மத அடிப்படையிலான ஒரு கல்வெட்டு பொது நீதி வளாகத்தில் இருப்பது அரசியல் சட்டத்துகு விரோதமானது என்று உறுதியாக அறிவித்தது. தங்கள் உத்தரவை மதிக்கத் தவறிய நீதிபதி மூரை அந்தப் பதவியிலிருந்தே அகற்றும்படி ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது.

இப்படி நீதித் துறையில் இன்னமும் மதச்சார்பற்ற பார்வை உடையவர்கள் கணிசமாக இருப்பதால், அதில் தங்கள் சார்பு நீதிபதிகளை அதிகரிக்கச் செய்ய புஷ் அரசு தொடர்ந்து முயற்சிக்கிறது.

கடந்த நவம்பர் மாதத்தில் புஷ் அரசு பல்வேறு மேல் முறையீட்டு நீதி மன்றங்களுக்கு நியமிக்க முற்பட்ட நான்கு நீதிபதிகளின் நியமனத்தை செய்ய விடாமல் அமெரிக்க செனட்டில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றிகரமாக தடுத்தனர். ( அமெரிக்காவில் நீதிபதிகள் நியமனத்துக்கு முன்பு அவர்கள் செனட் குழுவால் விசாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும். பிறகு வாக்கெடுப்பில் நியமனங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.)

செனட்டில் புஷ்ஷின் குடியரசுக் கட்சிக்கு மெஜாரிட்டி இருந்த போதும், தொடர்ந்து 40மணி நேரம் விவாதம் நடத்தி வாக்கெடுப்பே நடக்க விடாமல் ஜனநாயகக்கட்சியினர் தடுத்துவிட்டார்கள். விவாதித்தது போதும், ஓட்டெடுப்பு நடத்தலாம் என்று தீர்மானிப்பதற்குத் தேவையான 40 ஓட்டுகள் கிடைக்கவில்லை.

உடனே புஷ் ஜனாதிபதிக்கு உள்ள விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தி அலபாமாவின் அட்டார்னி ஜெனரலாக இருக்கும் வில்லியம் ப்ரையர் என்பவரை அப்பீல் நீதிபதியாக நியமித்துவிட்டார். மறுபடியும் செனட்டில் நீதிபதினியமன விவாதம் நடக்கும் வரை இவர் நீதிபதியாக இருக்கலாம். அதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். ப்ரையர் எந்தக் காரணத்துக்காகவும் பெண்கள் கருச் சிதைவு செய்வதை எதிர்ப்பவர்.பாலியல் வன்முறையில் ஒரு பெண் கருவுற்றால் கூட அபார்ஷன் செய்யக்கூடாது என்ற மதவாதக் கொள்கை உடையவர் மட்டுமல்ல. புஷ்ஷுக்கு தேர்தல் நிதி திரட்டியவர்.

நீதித் துறையில் புஷ் அரசு விரும்பும் அளவுக்கு பழமைவாதிகள் முழுக்க நிரப்பப்படவில்லை என்றாலும் அரசு நிர்வாகம் முழுவதும் அத்தகையவர்களே தற்போது நிரம்பியிருக்கிறார்கள். கிறித்துவ மத அமைப்புகளுக்கு நேரடியாக அரசு உதவி செய்வதற்கு தற்போது முக்கியத்துவம் கிட்டியுள்ளது. அமெரிக்க அரசின் மான்ய உதவிகளை சர்ச்சுக்கு அளிக்கும் திட்டங்களை புஷ் செயல்படுத்தி வருகிறார். சுமார் 20 பில்லியன் டாலர்கள் இவ்வாறு சமூக சேவைப் பணிகளுக்காக சர்ச்சுக்கு கிடைக்க வகை செய்யப்பட்டிருக்கிறது.

ஆயுத வியாபார லாப வேட்டை, மதப் பழமைவாதம் இரண்டும்தான் இன்று அமெரிக்காவை ஆளுகின்றன.

இதற்கான விலையை, செலவை அளிப்பது இதர உலக நாடுகள்தான். குறிப்பாக நம்மைப் போன்ற ‘வளரும் ‘ நாடுகள்தான். பணக்கார நாடான அமெரிக்காவுக்கு நாம் ஃபைனான்சியர்களாக இருக்கிறோம் என்றால் கேட்க விசித்திரமாகத்தான் இருக்கும்.

அவுட் சோர்சிங் எனப்படும் அமெரிக்காவுக்கான வேலையை நம் நாட்டிலிருந்தே குறைந்த சம்பளத்தில் செய்து தருவது போன்றவை மறைமுகமான நிதி உதவி வகையைச் சேர்ந்தவை.

ஆனால் இப்போது அமெரிக்கா தன்னுடைய பட்ஜெட் பற்றாக்குறைக்காக நேரடியாகவே நம்மைப் போன்ற நாடுகளிலிருந்து கடன் வாங்குகிறது !

நடப்பாண்டில் அமெரிக்காவின் பற்றாக்குறை ( fiscal deficit) சுமார் 500 பில்லியன் டாலர்கள். கடந்த சில ஆண்டுகளாகவே சீனா, ஜப்பான், தைவான், இந்தியா முத்லிய ஆசிய நாடுகளிலிருந்து அமெரிக்கா கடன் வாங்கி வருகிறது. ஆசிய நாடுகளின் அந்நியச் செலாவணி இருப்பு கடந்த ஆண்டு சுமார் 200 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதில் பெரும்பகுதி அமெரிக்காவுக்கே கடனாகச் சென்ரது.

தற்போது இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் உள்ளது. இதில் பெரும்பகுதியை இந்தியா அரசின் ரிசர்வ் வங்கி அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

இப்படி தான் கடன் வாங்கும் பணத்துக்குஅமெரிக்க அரசு தரும் வட்டி எவ்வளவு தெரியுமா ? வெறும் ஒரு சதவிகிதம் முதல் ஒன்றரை சதவிகிதம் தான். அதனால் இந்தியப் பொருளாதார நிபுணர் இலா பட்நாயக் இந்திய அரசு இனி ஐரோப்பாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார். எனென்றால் 2003ல் அமெரிக்க டாலரின் மதிப்பு ஐரோப்பாவின் யூரோ நாணயத்திடம் 20 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்திய அரசும் பற்றாக்குறை பட்ஜெட் போட்டுக் கொண்டிருந்தாலும் அதை சரி செய்ய வெளிநாட்டில் கடன் வாங்குவதில்லை. இந்திய மக்களுடைய தனிப்பட்ட சேமிப்புகளே அரசின் fiscal deficitஐ சமாளிக்க உதவுகின்றன. ஆனால் அமெரிக்க சமூகத்தில் குடிமக்களின் சேமிப்பு என்பது இல்லை. அதை அந்த அரசு ஊக்குவிப்பதும் இல்லை. அதனால் அமெரிக்க அரசு உலக நாடுகளிடமிருந்து பெறும் பணத்திலேயே தன் பற்றாக்குறையை சமாளிக்கிறது.

அமெரிக்க அரசின் அணுகுமுறையால் பயனடைவது எல்லா அமெரிக்க மக்களும் அல்ல.

ஆயுத வியாபாரிகளும், பெரும் பன்னாட்டு வணிக நிறுவனங்களும், பழமைவாதிகளும் மட்டும்தான்.

அமெரிக்க மக்களில் 30 மில்லியனுக்கு ( மூன்று கோடி) மேற்பட்டவர்கள் வறுமையில் இருக்கிறார்கள். இவர்களில் அதிகம் பேர் கறுப்பர்கள். குழந்தையுடன் தனித்து வாழும் நிலையில் உள்ள வெள்ளையப் பெண்கள்.( உலகிலேயே மிக அதிகமானவர்களை சிறையில் வைத்திருக்கும் நாடும் அமெரிக்காதான்.) இவர்களைப் பற்றி புலிட்சர் விருது பெற்ற எழுத்தாளரான டேவிட் ஷிப்லர் அண்மையில் The Working Poor: Invisible in America.என்ற நூலை ஏழாண்டு ஆய்வுக்குப் பிறகு விரிவாக எழுதியிருக்கிறார்.

புஷ் அரசு புதிய பட்ஜெட்டில் குழந்தை நலம், வீட்டு வசதி முதலிய ஏழைகளுக்கான 129 நலத் திட்டங்களின் நிதியை சுமார் 5 பில்லியன் டாலர் அளவுக்கு வெட்டியிருக்கிறது. அதே சமயம் பணக்காரர்களுக்கான வரிச் சலுகையாக 45 பில்லியன் டாலர்களை அறிவித்திருக்கிறது.

சுருக்கமாகச் சொல்வதாயிருந்தால் அமெரிக்காவை ஆளுவது ஆயுதமும் மூட நம்பிக்கையும் பணமும்.

அதற்காக செலவு செய்வது நாம்.

தீம்தரிகிட பிப்ரவரி 2004

dheemtharikida@ hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி