இளமுருகு
இந்தியாவின் ஜனாதிபதி பதவிக்கு அப்துல் கலாம் பெயர் முடிவாகிவிட்டது. எல்லாக் கட்சிகளும் ஒன்றன் பின்னால் ஒன்றாய் கலாமை ஆதரித்து அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றன. கருணாநிதி, கலாம் குடியரசுத் தலைவரானால் காலம் மாறுகிறது என்று கவிதையே பாடிவிட்டார். ஜெயலலிதாவும் கலாமுக்கு ஓட்டுப் போடுவதாய் வாக்களித்துவிட்டார். பா ஜ க-வை ஓயாமல் திட்டிக் கொண்டிருந்த லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் என்று எல்லோரும் ஓர் அணியில் அப்துல் கலாம் புகழ் பாடி நிற்கின்றனர். மார்க்சிஸ்ட் கட்சி ஒன்று தான் எதிர்க்கிறது ஆனால் என்ன காரணம் சொல்லலாம் என்று தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இன்றையப் போர்ப் பின்னணியில், அப்துல் கலாமை எதிர்ப்பது, இந்தியாவை கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்து ‘அவர் சிறந்த விஞ்ஞானி தான் ஆனால் அரசியல் வாதியல்ல ‘ என்று ஏதோ ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அப்துல் கலாம் பாரதீய ஜனதா கட்சிக்குச் செல்லப் பிள்ளை என்பதை ஒரு காரணமாய் முன்வைக்க முடியாத ஒரு சூழ்நிலை.
ஒரு விதத்தில் பா ஜ க-விற்கு இது ஒரு உத்தியளவில் வெற்றி என்று சொல்லலாம். அப்துல் கலாம் முஸ்லீம், பார்த்தீர்களா முஸ்லீம்களுக்கு பா ஜ க எதிரியல்ல, என்று காண்பித்துக் கொண்டு குஜராத்தை மறக்கடிக்க அப்துல் கலாமின் பெயருக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளலாம். ஆர் எஸ் எஸ், விஸ்வ இந்து பரிஷத் அப்துல் கலாம் ஜனாதிபதியாவதை வரவேற்றிருக்கின்றன. ஏன் ? ஒரு பக்கம் குஜராத்தில் முஸ்லீம்களைக் கொன்று குவித்து விட்டு, இன்னொரு பக்கம் முஸ்லீம் ஜனாதிபதியாவதை ஏன் விஷ்வ இந்து பரிஷத் வரவேற்க வேண்டும் ? திடாரென்று முஸ்லீம்களின் மீது அன்பும் பாசமும் பொத்துக் கொண்டு வந்து விட்டதா என்ன ஆர் எஸ் எஸ்-இற்கு ? இமாம் புகாரி , அல்லது ஷபனா ஆஸ்மி அல்லது சையத் ஷகாபுதீன் ஜனாதிபதியானால் ஆர் எஸ் எஸ் வரவேற்குமா ? நிச்சயமாய் இல்லை. ஆக அப்துல் கலாமை ஆர் எஸ் எஸ் வரவேற்கக் காரணம் அவர் இந்திய ராணுவத் தொழில் நுட்பத்துடன் மிகவும் இனங்காணப் பட்டவர். அணுகுண்டு தயாரித்தவர். ஏவுகணைகளைத் தயாரித்தவர். இது தான் அப்துல் கலாம் பற்றி ஆர் எஸ் எஸ்-இன் புரிவு. இந்தப் புரிவும் மிக மிகச் சரியானதே. பா ஜ க-வின் தேர்விற்குக் காரணம் இதுவே.
அப்துல் கலாமை ஜனாதிபதி பதவிக்குக் கொண்டுவருவதற்கு மூன்று காரணங்கள் என பரவலாகப் பேசப்படுகின்றன.
1) அவர் அறிவியலறிஞராக இருப்பதால், முதன் முதலாக ஒரு விஞ்ஞானியை ஜனாதிபதி ஆக்குகிறோம் என்ற பேச்சை உருவாக்குவது
2) அவர் முஸ்லீமாக இருப்பதால், பாஜக எல்லா முஸ்லீம்களுக்கும் விரோதி அல்ல என்று உறுதிப்படுத்துவது
3) அவர் இந்திய வல்லரசுக்கு ஆதரவாளராக இருப்பதால், இந்திய வல்லரசு என்ற கருத்தாக்கத்தை உறுதிப்படுத்துவது.
விஞ்ஞான வளர்ச்சி என்பது என்ன ? மக்களுக்கு நன்மை செய்வது. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது.நோய்களை விரட்டுவது. விவசாயம் மேம்படப் பாடுபடுவது. கிருமிகளை விரட்டும் உத்திகளைக் கண்டுபிடிப்பது. துரதிர்ஷ்டவசமாக, கோடிக் கணக்கில் மக்கள் உயிர் பிழைக்கக் காரணமாய் இருந்த லூயிஸ் பாஸ்டரைக் காட்டிலும், கோதுமைப் பயிரில் மாற்றம் ஏற்படுத்தி பசுமைப் புரட்டிக்கு வழி காட்டிய நார்மன் போர்லாக்கைக் காட்டிலும், அணுகுண்டுக்கு வித்திட்ட நீல்ஸ் போர் , ஐன்ஸ்டான் போன்றவர்கள் தான் மிகவும் பிரபலமாய் இருக்கிறார்கள்.
மேலும் அப்துல்கலாம் ஒரு அறிவியலாளர் அல்ல. அவர் எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் செய்ததில்லை. அவர் ஒரு திறம்பட்ட பொறியியலாளர். ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் தேற்றங்களை உபயோகப்படுத்தி அவற்றை நடைமுறை உபயோகங்களாக மாற்றும் ஒரு என்ஜினீயர்.
விஞ்ஞானியை ஜனாதிபதி ஆக்கலாம் என்றால் அதற்கு மிகப் பொருத்தமானவர் சென்னையிலேயே இருக்கிறார். எம் எஸ் சுவாமிநாதன் அரிசி ஆராய்ச்சி நிபுணர். உலக உணவுப் பரிசு பெற்றவர். மக்கள் பஞ்சங்களில் சாகாமல் இருக்க, காய்ந்த நிலங்களில் பயிருடுவது பற்றிய மரபணு ஆய்வு மேற்கொண்டவர். ‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் ‘ என்பது நம் லட்சியம் என்றால் பா ஜ க, எம் எஸ் சுவாமிநாதனை அல்லவா தேர்ந்தெடுத்திருக்கும் ? ஆனால் பா ஜ க-விற்குத் தேவை, யுத்தத்தளவாடங்களுடம் சம்பந்தப்பட்ட ஒரு பொறியியலாளர். அதனால் தான் அப்துல் கலாம் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார். இந்த அடிப்படை உண்மையை உணராமல் எல்லோரும் பா ஜ க-விற்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லீமை ஜனாதிபதி ஆக்கினால், முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை நின்றுவிடுமா ? கே ஆர் நாராயணன் ஜனாதிபதியான பிறகு தாழ்த்தப் பட்ட மக்கள் மீது வன்முறை குறைந்து விட்டதா ? இது வெறும் Tokenism. சும்மாவேனும் வெற்றுப் பதவியளிப்பு. உயர் பதவிகளில் முஸ்லீம்களை, பெண்களை, தலித்துகளை உட்கார வைப்பதன் மூலம் மட்டும் எந்தப் பயனும் விளையாது. வெறும் பம்மாத்து தான். மக்களை ஏமாற்றும் வழி தான் இந்தப் பதவியளிப்பு வேலை. இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக வெகுகாலம் இருந்தும் பெண்கள் நிலை இந்தியாவில் முன்னேறிவிடவில்லை. இதுவரை இரண்டு முஸ்லீம்கள் இந்தியாவின் ஜனாதிபதிகளாக இருந்தும், முஸ்லீம்களுக்கு பொருளாதார ரீதியிலும், கல்வி ரீதியிலும் பெரிய மாறுதல்கள் விளைந்துவிடவில்லை. டோக்கனிஸம் ஆபத்தானது. அவர்கள் பொருளாதாரத்திலும் கல்வியிலும் மேம்பட்டது போலவோ, அல்லது அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு இருக்கிறது போலவோ பம்மாத்து ஒருபக்கமும், அந்த பம்மாத்தால் ஏமாறப்பட்டு தன் உரிமைகளுக்குப் போராடாமல் மந்தமடிக்கப்படுவது மறுபுறமும் இதனால் நடக்கிறது.
குறியீட்டு முறையில் அப்துல் கலாமின் தேர்வு இதைத்தான் செய்கிறது.
அதைவிடவும் முக்கியமாக, இந்தியாவை சமாதான ஜனநாயகப்பாதையிலிருந்து விலக்கி, வன்முறை ராணுவ எதேச்சதிகாரப்பாதைக்கும், அண்டை நாடுகள் மீதான மேலாண்மையையும் மேலதிகாரத்தையும் தன்னுடைய கொள்கைகளாக கொண்ட இந்திய அரசை உருவாக்குவதன் முதல்கட்டமாக இப்படிப்பட்ட ஒரு பாதை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானுடன் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் வேளையில், பாகிஸ்தானின் ராணுவச் சர்வாதிகாரிக்கு எதிராக , ராணுவத் தொழில் நுட்பக்காரர் ஒருவரை ஜனாதிபதியாக்குவதன் மூலம் இந்திய நாட்டை ராணுவப் படுத்தும் முயற்சியின் முதல் கட்டம் இது.
ஆக மூன்று வழிகளிலுமே நடப்பது மோசடித்தனம்.
இந்த உண்மையைச் சொல்ல, இடதுசாரிக்கட்சிகளும், காங்கிரசும், மற்றவைகளும் திணறிக் கொண்டிருக்கின்றன.
***
- கயிலாயக் குடும்பம்
- கெட்ட மானுடம்
- திண்ணை அட்டவணை – சூன் 12 , 2002
- மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் (பகுதி : இரண்டு – மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ?)
- விரிவடையும் பாவண்ணனின் எழுத்துத்தளம் (ஏழு லட்சம் வரிகள் -தொகுப்பை முன்வைத்து ஒரு குறிப்பு)
- மரணம் என்னும் நெருப்பு (எனக்குப் பிடித்தக் கதைகள் – 15 – தாஸ்தாவெஸ்கியின் ‘நாணயமான திருடன் ‘ )
- எஸ்.ராமகிருஷ்ணனின் ‘வெயிலை கொண்டு வாருங்கள் ‘ ஒரு மதிப்பீடு
- தயிர்ப்பச்சடி
- மாங்காய் சட்னி
- ஆட்டுக்கறி குருமா
- மூட்டுவாதத்துக்கு Arthritis அட்டைக்கடிLeeches மருந்து
- பங்களாதேஷ் நாட்டை பசுமை மயமாக்க திட்டம் துவங்கப்பட்டுள்ளது
- வியாழன் பூதக்கோள் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்
- வில்வமரமும் கனத்த தலையும்
- ? ? ?
- வசியம்
- அரிப்பு
- திறவாத தாழ்கள்
- ஆயினும்…
- இன்றைய மது
- ஆசிரியர்
- வாழ்க்கைக் கல்லூாி
- மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் (பகுதி : இரண்டு – மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ?)
- அப்துல் கலாமுக்கு ஜனாதிபதி பதவி கொடுப்பது தவறு.
- பொறுப்புடன் எழுதுவோம்
- இந்த வாரம் இப்படி – சூன் 14 2002
- திண்ணை அட்டவணை – சூன் 12 , 2002
- சடங்குகளும் மாற்றமும் (Ceremonies and conversion)
- தொலைவு