பாவண்ணன்
ஆண்டுக்கொரு முறை வீடு மாற்றும் நண்பரொருவர் இருக்கிறார். அவரால் எந்த வீட்டிலும் ஓராண்டுக்கு மேல் இருக்க முடிவதில்லை. வீட்டுச் சொந்தக் காரர்களுக்கும் அவருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து மாற்றும்படி ஆகி விடும். பத்தாண்டுகளுக்கும் மேல் ஒரே வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் என்னை அதிசயமாகப் பார்க்காத நாளே கிடையாது. வீட்டுச் சாமான்களையெல்லாம் அடுக்கி மூட்டைகளாகக் கட்டி வாகனத்தில் ஏற்றும் தருணத்தில் எல்லாம் இந்த அதிசய உணர்வு அதிகரித்தபடியே இருக்கும்.
வீட்டுச் சாமான்களுக்கு இணையாக நாலைந்து சாக்குகள் கொள்ளும் அளவுக்குக் குழந்தையின் விளையாட்டுச் சாமான்கள் இருக்கும். ஒவ்வொரு முறையும் இம்மூட்டைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போதும் வேலையின் பொருட்டு வெளிநாடு சென்று திரும்பும் போதும் பொழுதுபோக்காக கடைத்தெரு, திரைப்படம் என்று போய்விட்டுத் திரும்பும் போது என்று எங்கே போய் வந்தாலும் குழந்தை கேட்டும் கேட்காமலும் வாங்கிக் குவித்தவை அவை. ஏதோ ஒரு கடையில் எதைக்காட்டிக் குழந்தை கேட்டாலும் கேள்வி முறை இல்லாமல் வாங்கிக் கொடுத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். ‘குழந்தையின் ஆசையைத் தீர்த்து வைப்பதை விட வாழ்வில் வேறு என்ன சந்தோஷம் இருக்கிறது ? ‘ என்று சொல்வார்கள் அவர்கள். ‘இதற்குச் செலவிடாமல் வேறு என்ன முக்கியமான செலவு ? ‘ என்பார்கள்.
குழந்தையின் மனம் மிகவும் நுட்பமானது. தன் பெற்றோர்களின் அன்பும் கவனமும் தன் மீதே இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு குழந்தையும் விரும்புகிறது. ஒரு புதிய பொருளைப் பார்த்ததும் குழந்தை தன் விருப்பத்தைத் தெரிவிப்பது, அது தேவை என்பதால் மட்டுமல்ல. அதைப் பற்றிய அறிவை வெளிப்படுத்தும் விதமாகவும் அக்கோரிக்கை அமைகிறது. பெற்றோர்கள் அந்தத் தருணத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. பழகும் முறையை ஒரு விதியாக எப்போதும் முன்வைக்க முடியாது.
குழந்தைகளைப் பற்றி எண்ணுந்தோறும் ஞாபகத்தில் மிதக்கும் ஒரு கதை முல்க்ராஜ் ஆனந்தின் ‘குழந்தைமனம் ‘ என்னும் கதை. இக்கதையிலும் ஒரு குழந்தை இடம்பெறுகிறது. ஏழைப் பெற்றோர்களின் குழந்தை. ஏதோ உற்சவம் பார்த்துவிட்டுத் திரும்புகிறார்கள். அவர்கள் பின்னாலேயே குழந்தை நடந்து வருகிறது. வழியோரமாவுள்ள கடைகளிலிருந்த விளையாட்டுச் சாமான்களால் கவரப்பட்டு பின்னால் தயங்கித் தயங்கி வரும் குழந்தையை அடிக்கடி நின்று கூப்பிட்டுக்கொண்டு செல்கிறார்கள் பெற்றோர்கள். ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் அவனுக்கு எதிரே உள்ள வயல்வெளியைக் காட்டிக் கவனத்தைத் திசை திருப்புகிறார்கள். அது பூத்துக்குலுங்கும் கடுகுவயல். எங்கெங்கும் மலர்கள். வண்ணத்துப் பூச்சிகள். பூச்சிகளின் பின்னால் அலைந்து மகிழ்கிறான் குழந்தை. வயல்வெளியைத் தாண்டி தோப்பு வருகிறது. அங்கே உள்ள மரங்களிடையே புகுந்து புகுந்து ஆனந்தமாக ஆடுகிறான் குழந்தை. தோப்பைத் தாண்டியதும் நெருங்கிய கிராமத்தின் தொடக்கத்திலேயே சந்தை அமைந்திருக்கிறது. பல திசைகளிலிருந்தும் பல பாதைகள் வழியாக மக்கள் வெள்ளம் வந்து சேர்ந்த அந்தச் சந்தை குழந்தையை வசீகரிக்கிறது.
குழந்தையின் பார்வை முதலில் குலாப்ஜாமுன், ரஸகுல்லா விற்கும் மிட்டாய்க்காரன் மீது படிகிறது. அவனுக்கு மிகவும் பிடித்த பர்பி அக்கடையில் இருக்கிறது. ‘அம்மா பர்பி ‘ என்று முணுமுணுக்கிறது குழந்தை. பெற்றோர்கள் காதில் வாங்கிக் கொள்ளாமலேயே ‘வாப்பா வாப்பா போவலாம் ‘ என்று முன்னே நடந்தபடி இருக்கின்றனர். பிறகு ஒரு பூக்கடை தென்படுகிறது. உடனே மாலை கேட்டுக் கெஞ்சுகிறது குழந்தை. அடுத்தாற்போல பலுான்காரன் ஒருவன் பார்வையில் படுகிறான். வண்ணவண்ண பலுான்களைப் பார்த்ததும் குழந்தையின் ஆசை கிளர்ந்தெழுகிறது. பக்கத்தில் பாம்புப் பிடாரனின் மகுடியோசை கேட்கிறது. அடுத்து குடை ராட்டினம் ஒன்று எதிர்படுகிறது. உடனே ‘அப்பா, அம்மா ராட்டினத்தில் சுற்றணும் ‘ என்று கேட்கிறான். அதற்கும் பதிலே இல்லை. மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பிப் பார்த்த போதுதான் பெற்றோர்கள் காணவில்லை என்பது புரிகிறது. பயத்தில் ‘அம்மா அம்மா ‘ என்று அழுதுகொண்டே ஓடுகிறான். எங்கும் காணவில்லை. பிறகு கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருந்த கோயிலை நோக்கி வேகமாக ஓடுகிறான். அங்கும் அக்குழந்தையால் அவர்களைப் பார்க்க முடியவில்லை. யாரோ ஒரு பெரியவர் அக்குழந்தையை வாரியெடுத்து விசாரிக்கிறார். அவர் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியாமல் அக்குழந்தை தொடர்ந்து அழுதபடி இருக்கிறது. அழுகையை நிறுத்தினால் ஏதாவது தகவலைக் கேட்டுப் பெற முடியும் என்றெண்ணி குடை ராட்டினத்தின் அருகில் சென்று ‘குதிரைச்சவாரி செல்லலாமா ? ‘ என்று கேட்கிறார். குழந்தை விம்மியபடி ஏஅம்மா அப்பாஏ என்று அழுகிறது. பிறகு மகுடி வாசிக்கிறவனிடம் அழைத்துச் சென்று வேடிக்கை காட்டுகிறார். ஆனால் குழந்தையோ மீண்டும் மீண்டும் ‘அம்மா அப்பா வேணும் ‘ என்றே அழுகிறது. இப்படியே பலுான்கடைக்கும் பூக்கடைக்கும் மிட்டாய்க்கடைக்கும் அழைத்துச் சென்று வேடிக்கை காட்டுகிறார். அவர் சுட்டிக் காட்டிக்கேட்கும் எல்லாவற்றையும் மறுக்கிற குழந்தை ஏஅம்மா அப்பா வேணும்ஏ என்றே திரும்பத் திரும்பச் சொல்கிறது.
மிட்டாய்க்கடையிலிருந்து ராட்டினம் வரை உள்ள தெருவின் நீளத்தை எழுத்தின் இடையே தீட்டிக் காட்டுகிறார் முல்க்ராஜ் ஆனந்த். அந்தத் தெருவழியாகத்தான் குழந்தை வந்தது என்று அறியாமல் எதிர்வரிசையில் ஒவ்வொன்றாக அவர் காட்டி ‘வேண்டுமா வேண்டுமா ? ‘ என்று கேட்டுக் கொண்டே பெரியவர் வருவது முக்கியமானது. வேறு எதிர்த்திசையில் சென்றிருந்தால் பெற்றோர்களை அவர் கண்டடைந்திருக்கலாம். ஆனால் குழந்தையின் அழுகையை நிறுத்த வேண்டி வசீகரமான கடைத்தெருவை நோக்கி நடந்து விடுகிறார். அம்மாவும் அப்பாவும் அருகில் இருக்கும் போது ‘வேண்டும் வேண்டும் ‘ என்று கேட்ட அதே பொருட்களைச் சுட்டிக்காட்டி மற்றொருவர் வேண்டுமா என்று விசாரிக்கும் போது குழந்தை பதில் சொல்லாமல் ‘அம்மா அப்பா வேண்டும் ‘ என்று அழுவது குழந்தையின் ஆழ்மனத்தைக் காட்டுகிறது.
மனத்தின் ரகசிய இயக்கம் இதுதான். குழந்தையாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் இதுவே அடிப்படை இயக்கம். ஒரு பொருள் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் போது, அதன் தேவை அல்லது தேவையின்மை என்பது முக்கியமல்ல. அக்கோரிக்கையைச் சார்ந்து மற்றவர்கள் எவ்விதமாக எதிர்வினை புரிகிறார்கள் என்பதுவும் அந்த எதிர்வினை வழியாக எந்த அளவுக்குத் தன்மீதுள்ள அன்பு வெளிப்படுகிறது என்பதுவும்தான் முக்கியம். குழந்தைகளுக்கு இந்த நிரூபணம் மீண்டும் மீண்டும் நிறுவப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நிறுவிக்கொள்ள இயலாத தருணத்தில் அக்குழந்தை தனிமைப்பட்டு விட நேரும். நிறுவுதல்களை அதிகப்படியாகக் கோரும் குழந்தை பிடிவாதம் கொண்டதாக மாறக்கூடும். எது சரியான அளவு என்பதைக் கண்டறிவது எப்போதுமே ஒரு பெரிய சவாலாகும்.
*
ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவர் முல்க்ராஜ் ஆனந்த். 1960 ஆம் ஆண்டில் இமயம் பதிப்பகத்தின் வழியாக வெளிவந்த ‘அஞ்சல் சேவகன் ‘ என்னும் நுாலில் இக்கதை இடம்பெற்றுள்ளது. இக்கதையைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் க.கணபதி.
***
paavannan@hotmail.com
- மின்மினிப் பூச்சிகள்
- சித்தார்த் வெங்கடேசன் கவிதைகள்
- பல வகையான அமீபா
- அன்பும் ஆசையும் (எனக்குப் பிடித்த கதைகள் -23 -முல்க்ராஜ் ஆனந்த்தின் ‘குழந்தை மனம் ‘)
- தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்
- தேவதேவன் கவிதைகள் : 2. மரம்
- சுந்தர ராமசாமிக்கு அன்புடன்
- மு.தவின் மரணம்
- வயதானவர்களுக்கான தொழில்நுட்பக் கருவிகள்
- பூமகளே! மன்னித்துவிடு!
- தேவதேவன் கவிதைகள் : 2. மரம்
- கோபம் எதற்கு ?
- சில முற்றுப் புள்ளிகள்
- ஆர்வம் அபூர்வம்
- நான்காவது கொலை!!! (அத்தியாயம் : மூன்று )
- கனவும் வாழ்வும்
- தாகம்
- மின்னுயர்த்தி
- பாபா :முந்நூறுகோடி மோசடி
- இந்தியாவின் வட கிழக்கில் மற்றொரு அல்-கொய்தா
- பங்களாதேஷின் பாகிஸ்தானிகள்: பாரதப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்
- தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19 2002 (நடிகர்கள், ராமதாஸ், குஜராத் தேர்தல்)
- ஏதோ எனக்குத் தெரிந்தது …..
- கலைகளும் கோடம்பாக்கமும்
- பிறந்த நாள் கொண்டாட்டம்
- சஞ்சிவினி மலைகள்