அன்னை காளி துதி பாடல்கள்

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

நஸ்ரூல் இஸ்லாம்



1. என் அன்னையை கண்டவரால் இயலுமோ வெறுக்க?

எனது அன்னையை கண்டவர் எவரோ
அவரால் இயலுமோ எவரையும் வெறுக்க?
மூவுலகிலும் அனைத்துயிரையும் நேசிக்கும்
அன்னை வடிவினள் என் காளி.

அனைவருக்காகவும் வருந்திடும் இதயம்
கொண்டவளன்றோ என் அன்னை
அவளில் இல்லை சாதியின் பிரிவுகள்
மேலோர் கீழோர் எனும் பகுப்பு

அன்னையின் அன்பு அணைத்திடும் ஒன்றாய்!
அனைவரையும் குழந்தைகளாய்!
சண்டாளனை தன் குழந்தையென்றே
என்றும் தன் மார்போடணைக்கும் தாய் அவள்
அன்று ராமன் குகனை அணைத்தது போல

மகாமாயை என் அன்னை
மகோன்னதமானவள் என் அன்னை
ஜீவாத்மாவினை ஈன்ற தாய் அவள்
நாமனைவருமே அவள் பிள்ளை

மற்றவர் துன்பம் நம் துன்பமாக
துடிக்க செய்யும் காரணம் யார்?
நம் அன்னை அவளவள் குழந்தைகள் அனைத்துயிர்
என்பதே அதன் காரணமாம்.

அவளது சிருஷ்டியில் எவரை வெறுப்பினும்
வெறுப்போர் பூஜை அன்னை ஏற்பாளோ
வேற்றுமை அழிந்து ஒன்றாய் உருகிடும்
நாளதில் அன்றோ அவள் வருவாள்

அன்றே வருவாள் நம் இல்லத்துக்குள்
பத்து கரம் கொண்ட என் அன்னை
அன்றே வருவாள் என் உள்ளத்துக்குள்
அன்றே வருவாள் என் அன்னை.

2. செம்பருத்தி மலர்களே கூறுங்கள்

செம்பருத்தி மலர்களே செம்பருத்தி மலர்களே,
கூறிடுங்கள் என்னிடம் அந்த இரகசியத்தினை
என்ன தவத்தை செய்ததன் மூலம்
என் அன்னை ஷியாமாவின் பாதங்களை அடைந்தீர்கள்

மாயை எனும் செடியின் காம்புகளிலிருந்து கிள்ளி எடுக்கப்பட்டு
அன்னை ஷியாமாவின் பாதங்களைச் சுற்றி சிதறி
னந்தத்தில் மடல் விரிந்துள்ள
முக்தி பெற்ற மலர்கள் நீங்கள்
உங்களிடமிருந்து நான் பாடம் பெற்றால் என் வாழ்வும் கனிந்திடும்.

எத்தனையோ அழகான வாசமுள்ள பூக்கள் இருக்க
அன்னையின் காலடியில் எவ்விதம் நீங்கள் இருக்கும் பாக்கியம் பெற்றீர்கள்?
னால் அந்த மலர்களெல்லாம் அன்னையின் காலடியில் வீழ்ந்திடுமா?
அவள் பாத ஸ்பரிசம் பட்டதும் சிவந்திடுமா

அவையெல்லாம்
சிவந்திடுமா அம்மலர்கள்

என் மன மலரின் மழுங்கிய மடல்கள் கொண்ட அம்மலர்கள்
அன்னையின் பாத ஸ்பரிசம் பட்டதும் சிவந்திடுமா
செம்பருத்தி மலர்களே உங்களைப் போல?

3. படிப்பறிவற்றவன் நான்

என் கைகளில் எழுதும் மை
என் முகத்திலும் மை
எல்லோரும் சிரிக்கின்றனர்.
நான் படிப்பறிவற்றவன் எழுத்தறிவற்றவன் என்று.
அவர்கள் சிரித்துக்கொள்ளட்டும்.
உலகின் கல்வி எதற்கும் பயனற்றது.
மா எனும் எழுத்தில் நான் காண்பதெல்லாம் சியாமாவை
கா எனும் எழுத்தில் நான் காண்பதெல்லாம் காளியை
நான் கையை தட்டி தட்டிநடனமிடுகிறேன்.
அச்சடித்த அந்த வாய்ப்பாட்டு அச்சில்
எனக்கு தெரிவதெல்லாம் உன் கரு நிறம் தான்.
அரிச்சுவடி எழுத்துக்களின் கருநிறங்களில்
உன்னை காண்கிறேன் அம்மா!
னால் எழுத்துக்களின் ஒலி வடிவம் குறித்து எனக்கு அக்கறை இல்லை.
ஏனெனில் உன் கருநிற அழகு அதில் இல்லையே
என்றாலும் என் அம்மா
நீ எழுதுவதையெல்லாம் என்னால் படிக்க முடியும்.
வனங்களின் மரங்களின் இலைகளில் நீ எழுதுவதை
கடல் பரப்பின் நீரில் நீ எழுதுவதை
வானின் அகண்ட விரிப்பில் நீ எழுதுவதை
என்னால் படிக்க முடிகிறது
எல்லோரும் சிரிக்கின்றனர் அம்மா
நான் படிப்பறிவற்றவன் எழுத்தறிவற்றவன் என்று.
அவர்கள் சிரித்துக்கொள்ளட்டும்.

4. சிதை எரியும் காடுகளில்

சிதை எரியும் காடுகளில் நடப்பாள் அன்னை ஷியாமா
அவள் குழந்தையை
அந்த இறுதி கணத்தில் தன் மடியில் அமர்த்திடவென்று.
சிதை அக்னி குண்டத்தில் எழும் ஜூவாலைகளில்
அவள் அன்புருவான டை மறைந்திருக்க
அச்சிதையில் அமர்ந்திருப்பாள்
சாந்தியே வடிவான அன்னை.
தன் குழந்தையை மடியில் ஏந்திட
னந்த உறைவிடமான கைலாசத்தையே விட்டு
அபயமும் சியும் வழங்கும் கைகளுடன்
இந்த சிதை எரியும் காட்டையே
தன் வீடாக்கி கொண்டாள் அன்னை.
இனி இச்சிதைகாட்டில் அச்சமில்லை.
அன்னையின் பாதங்களில் அமைதியாக துயில் கொள்ளலாம்.
உலகின் ஜூவாலைகளில் எரிந்து இறப்பவனிடம்
அன்னை சொல்வாள்
“வா என் மடிக்கு என் அருமை குழந்தாய்!”
வாழ்க்கையில் ஓய்ந்து ஓய்வு தேடிடுவோருக்கும்
தன் மடியில் இடமளிப்பாள் அன்னை
ம் இறப்பின் வடிவிலும் வருவாள்
என் அன்னை ஷியாமா.

(தமிழில்: மண்ணாந்தை)

Series Navigation

நஸ்ரூல் இஸ்லாம்

நஸ்ரூல் இஸ்லாம்