அந்த அக்கினியை ருசிபாருங்கள்

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

ருத்ரா


படைப்பு பற்றி
ரிக்வேதம் இப்படி சொல்கிறது:
‘கோ அத்தா வேத ? ‘
‘யார் அறிவார் இதை ? ‘
‘க இஹ ப்ரவோச்சத் ? ‘
‘யார் இதை முழக்கமிட்டு சொல்வது ? ‘
‘குத ஆஜாதா ? குத இயம் விசிருஷ்டி ? ‘
‘எப்போது இந்த மகாப்பிறப்பு ? ‘
‘எப்போது இந்த உயர்படைப்பு ? ‘
கேள்வி அமுக்கங்களில்
வேதங்களின் விழி பிதுங்குகிறது.

புலன்களுக்கு எட்டாததை
புலன்களைக்கொண்டு
புளகாங்கிதப்படுத்திக்கொள்வதில்
என்ன பயன் ?

‘விஷ்ணுசஹஸ்ரநாமங்களை ‘க்கொண்டு
வார்த்தை ஆடைகள்
உடுத்தி அவிழ்த்து
உடுத்தி அவிழ்த்தா
அந்த மகாநிர்வாணத்தை
தரிசிக்க முடியும் ?

இருப்பதும் (ஆஸ்திகம்)
இல்லாததும் (நாஸ்திகம்)
ஒருநாள்
கல்யாணம் செய்து கொண்டன.

ஆத்திகத்தை
ஜ ‘ரணம் செயத நாத்திகமும்
நாத்திகத்தையே
ஆத்திகம் ஆக்கிக்கொண்ட
ஒரு கூட்டுக் குடும்பம் தான்
அந்த கல்யாணம்.

ஆஸ்திகம் பற்றி
ஆறுமதங்கள் (ஷண்மதம்)
சித்திரங்கள் தீட்டிய போதும்
ஒன்றுமே புலப்படாத போது
முத்தாய்ப்பு வைக்க வந்த
ஏழாவது மதமே
இங்கு நாஸ்திகம்.

இது புரிந்து விட்டால்
பெரியார் கையில் ரிக் வேதமும்
ராஜாஜி கையில்
பிள்ளையார் சிலையை
உடைக்க சம்மட்டியும்
இடம் மாறும்
அபூர்வங்கள் கூட அரங்கேறலாம்.

பெரியார் ராஜாஜி ஆனால்
வாலிகளுக்கு மகிழ்ச்சி.

ராஜாஜி பெரியார் ஆனால்
வைரமுத்துகளுக்கு மகிழ்ச்சி.

‘பாபாக்களின் ‘
செல்லுலோஸ் வனத்து
மத்தாப்பு வெளிச்சங்களுக்கு
நெருப்பு கூட்டுவது
இப்போது
இந்த ‘சிக்கி முக்கி ‘ கற்கள் தான்.

ஆத்மாவுக்கு
ஆசை துடிக்கும்
ரத்தநாளங்கள் கிடையாது.
தசைப்புடைப்புகள் இல்லை.

இருப்பினும்
கனவுகளை
கிள்ளிப்பார்க்கும்
நனவுகளின்
புகைமூட்டங்கள்
ஊஞ்சல் ஆட்டுகின்ற
அந்த மெல்லிய கயிற்றை
உற்று நோக்குங்கள்.

அது
புதிது புதிதாய்
குமிழிகளை பூத்தது.

கல்லுக்குள்
சதை திரண்டது.

நரம்பு
நடுநிசியை யாழ் மீட்டியது.

பகவான்கள்
தோன்றிக்கொண்டேயிருக்கிறார்கள்…

மனிதத்தின் பரிணாமம்
முழுமை அடையும் வரை.

அது வரை
இந்த
மூளிலிங்கங்கள்
மூலைக்கு மூலை
முளைத்துக்கொண்டேயிருக்கின்றன.

இதில்
மொழியென்ன ?
வழியென்ன ?

ஹ ‘ப்ருவில்
மும்முரமாய் தும்முகின்றேன்.

அரபியில்
அழுது விம்முகின்றேன்.

ரிக்வேதத்தின் மூலவடிவத்தை
பாரசீகத்து
பாறைவடிவங்களில்…
அந்த ‘அவெஸ்தாவில் ‘
அர்ச்சித்து அரற்றுகின்றேன்.

குறுந்தொகையிலும்
கலித்தொகையிலும்
ஊழிச் செம்பரிதியின்
முதல் இமைவிரிப்பை
வியந்து மிழற்றுகின்றேன்.
மம்மிகளில் மெளனமாய்
முழக்கமிடும்
அந்த எகிப்திய சப்தங்களில்…
அந்த சித்திர எழுத்துக்கள் வடிவில்
காலத்தின் பீய்ச்சல்களாய்
ஃபாசில்கள் துப்பிய எச்சங்களாய்…
காய்ந்து கிடக்கின்றேன்.

கடவுளர்களை புணர்ந்து கிடக்கிற
சைத்தான்களும்
சைத்தான்களோடு சங்கமமாகிப்போன
கடவுளர்களும்
உருவகமாய் தரிசனம் தரும்

அதோ….

அந்த துப்பாக்கிகளை
அல்லது
அந்த அம்பு ஈட்டிகளைப்
பாருங்கள்.

மனிதனைத் தின்னும் வெறி
மனிதனுக்குள்
எப்படி குமிழியிட்டது ?

போதும்.

இந்த உலகத்தையே
மாமிசப்பிண்டமாய்
பிய்த்து தின்கிற
உங்கள் மாய்மால சூத்திரங்களை
பொசுக்கிப்போடுங்கள்.

அஞ்ஞான நாக்குகளே
விஞ்ஞானத்தை புசிக்க வாருங்கள்.

பிரம்மச்சரியம்
பற்றியெரியும்
தர்ப்பைக்குள்ளும்
காமேஸ்வரியின்
கருப்பப்பை இருக்கும்.

படைப்பின் உருவகம்
பெண் எனக்கொண்டு
அங்குலம் அங்குலமாய்
அதை சமஸ்கிருதத்தில்
புரியாமலேயே
புல்லரித்துக்கொண்டு
அழகிய ‘செளந்தர்ய லஹரியைக்கூட ‘
ஒரு லாஹிரி வஸ்துவாக்கி
சூடம் சாம்பிராணி
கொளுத்திக்கொள்வதில்
நமக்கு எப்படி
‘கெளடபாதரின் ‘
அந்த ‘அஸ்பர்ஸ யோகம் ‘
புரியப்போகிறது ?

அது என்ன ‘அஸ்பர்ஸம் ‘ ?
மாண்டூக்கிய உபநிஷத் காரிகை
எனும் கெளடபாதரின் காரிகையில்
அத்வைதத்தை படம் எழுத வந்த
அந்த தூரிகையில் துலங்குகிறது அது !

‘ஆத்மா இல்லாத ஒரு ஆத்மாவுக்குள்
ஆத்மாவின் ஆலிங்கனம் அது.
பிரக்ஞையில்லாத ஒரு பிரக்ஞையின்
பிரம்மையில் சுவைபடும்
பிரம்மப்பண்டம் அது.
அகரம் உகரம் மகரம் என
முப்பரிமாண பாய்ச்சலுக்குப்பிறகும்
வெறும் நாத்திகமாய்
தெரியும் கடவுள் அது.
அந்த ஓங்காரத்தை விட்டு
வெளியே பாயும்
‘துரீயம் ‘ எனும்
நான்காவது பாய்ச்சலே அது.

அந்த நாத்திக பாய்ச்சலில்
தவளை முனிவன் எனும்
மாண்டூகன் தந்த உபநிஷதம்
ஆத்திகக்குளத்தில் எறிந்ததொரு
மாணிக்கக்கல் அது.

ஆத்திகப் பயணத்தின்
கடைசிமைல்கல்
நாத்திகம்.

வேத ஸ்பரிஸங்களால்
வேதாந்த வியக்கியானங்களால்
தொடாமல் தொட்டுப் பாருங்கள்
அந்த ‘பிரம்மத்தை ‘
என்கிறது ‘அஸ்பர்ஸ யோகம் ‘.

வேதமந்திரங்களால்
எச்சில் படாத
ஒரு ‘பிரம்மத்தை ‘
உங்களால் ருசிபார்க்க முடியுமா ?
நாத்திகத்தால்
அளந்து பாருங்கள்
அந்த ஆத்திகத்தை.

அப்போது புரிந்து கொள்வீர்கள்
அதன் ஆழத்தை.
‘அக்னிமீளேம் ப்ரோகிதம்… ‘
அந்த அக்கினியை ருசிபாருங்கள்.

***
ருத்ரா
epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா