அநித்தமும் அநாத்மமும் (ஆன்மா குறித்து நாகசேனருக்கும் மினான்டருக்கும் இடையே நடந்த உரையாடல்)

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

எச். பீர் முஹம்மது


தத்துவ உலகில் ஆன்மா குறித்ததான விஷயங்கள் பலவாறாக விவாத தளத்திற்குள் வலம் வருகின்றன. ஆன்மா என்பது நிரந்தரமான ஒன்றா ? கூடு விட்டு கூடு பாயும் தன்மை கொண்டதா ? மறு பிறவி எடுக்கும் சக்தி அதற்கு உண்டா ? ஒருவாின் உடலோடு இணையாக இருக்கிறதா ? சுதந்திரமாக இருக்கிறதா ? இது வெறும் கற்பிதம் மட்டும் தானா ? என்பது போன்ற பலவிதமான கேள்விகள் தத்துவவாதிகளிடையே காலங்காலமாக இருந்து வருகிறது. சிலர் மனிதனுக்குள் நிகழும் உளவியல் நிகழ்வுகளே ஆன்மா என்றனர். வேறு நிலர் ஒரு மனிதனின் உடலில் சுதந்திரமாக இயங்கி அவன் இறந்த பிறகு மீள்உயிர் பெறும் ஒன்று என்றார்கள். ஒருவித நெருக்கடியான சூழலுக்குள் நாம் இயங்கி வருகிறோம். இந்த நெருக்கடிக்குள் நமக்கான மீள் நடவடிக்கைகள் சாத்தியமற்றதாக இருக்கிறது. எல்லாவித சாத்தியங்களும் ஒருவித நெருக்கடிகளே. இதனின் பிரதிபலிப்பாக தான் ஆன்மா பற்றிய கருத்தாக்கமும் இருக்கிறது. நாகசேனாின் வாழ்க்கையை குறித்த விாிவான குறிப்புகள் நமக்கு கிடைக்கவில்லை. பஞ்சாபில் இமயமலைகக்கருகில் உள்ள கஜங்கல் கிராமத்தில் ஸொனுத்தர் பிராமண குடும்பத்தில் அவர் பிறந்தார். வீட்டிலிருந்த படியே அவர் வேதங்களையும், உபநிஷதங்களையும் கற்றார். பிறகு வர்த்தீனிய என்னுமிடத்தில் இருந்த கல்வியாளரான பெளத்த பிட்சு ரோஹணாின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. இதன் காரணமாக நாகசேனர் பவுத்த கருத்துகளில் ஈடுபாடு கொண்டார்.

அசோகாராம் மடத்தில் நாகசேனர் ஆச்சாாிய தர்மரட்சிதாிடம் பெளத்த தத்துவ ஞானத்தையும், பெளத்த நூலான தம்மபிடகத்தையும் நன்கு கற்றார். இதற்கிடையே அவருக்கு பஞ்சாபிலிருந்து அழைப்பு வரவே, ஒரே முறை மீண்டும் ரட்சிதலுக்கு சென்றார். கிரேக்க அரசரான மினான்டாின் எல்லை யமுனையிலிருந்து ஆமு தாியா வரை பரவியிருந்தது. அவருடைய ஒரு தலைநகர் பலக்காக இருந்தாலும் அவரது பிரதான தலைநகர் சியால்கோட் தான். பிலூதர்க் மினான்டரைப் பற்றி பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

மினான்டர் நீதிமான், மக்கள் விரும்பிய அரசர். அவர் இறந்த பின்னர் அவரது எலும்புகளுக்காக மக்களிடையே சச்சரவு எழுந்தது. அவரது எலும்புகளுக்கு மேல் மக்கள் பொிய பொிய ஸ்தூபுகளை அமைத்தனர். மினான்டர் தர்க்க ஆற்றல் மிகுந்தவர். ‘மினான்டர் அரசர் கேள்விகளை தொடுத்து பெளத்த பிட்சுகளை திக்குமுக்காடச் செய்து அவர்களை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார். நீ சென்று அரசனை அடக்கு என்று துறவிகள் நாகசேனரை கேட்டுக் கொண்டனர். பின்னர் நாகசேனர் சங்கத்தின் ஆணையை ஏற்றுக் கொண்டு மினான்டருடன் வாதத்திற்கு தயாரானார். மினான்டர் நாகசேனாிடம் பல்வேறு விதமான கேள்விகளை கேட்டார். அதற்கு நாகசேனர் நிதானமாகவும், நுட்பமாகவும், தெளிவான முறையிலும் பதிலளித்தார்.

நாகசேனர் அரசன் மினான்டருக்கு அளித்த பதில்களில் புத்தாின் தத்துவங்களான ஆன்மாவை மறுத்தல், மறுபிறப்பு, பெயர் -உருவம், நிர்வாணம் போன்றவற்றை விளக்க முயற்சி செய்தார். மினான்டர் முதலில் பெளத்தர்களின் அநாத்ம வாதத்தைப் பற்றி கேட்டார். ‘துறவியே நீங்கள் எந்த பெயாில்; அறியப்படுகிறீர்கள் ? ‘

என்னை நாகசேனர் என்றழைக்கிறார்கள். ஆனால் இது ஒரு பெயரளவு தானே தவிர ‘நாகசேனர் ‘ என்ற ஆன்மா எதுவுமில்லை. பிட்சுவே! ஆன்மா ஒன்று இல்லையென்றால் உங்களுக்கு உணவும், உடையும் யார் தருகிறார்கள் ? அவற்றை பயன்படுத்துபவர்கள் யார் ? தியானப் பயிற்சியை செய்வது யார் ? கடைசியில் நிர்வாணம் அடைவது யார் ? ஆன்மா என்பது ஒன்றில்லை என்றால் பாவமும் இல்லை, புண்ணியமும் இல்லை. அவற்றை செய்கிறவனும் எவனுமில்லை. செய்விப்பவனும் எவனுமில்லை. உங்களை யாராவது கொன்றுவிட்டால் கூட, அது யாரையும் கொன்றதாகாது. அப்படியென்றால் நாகசேனர் என்பது யாாது ?

அரசரே! நீங்கள் இந்த இடத்திற்கு நடந்து வந்தீர்களா ? அல்லது ஏதாவது வாகனம் ஏறி வந்தீர்களா ?

நான் தேர் ஏறி வந்தேன். ‘தேர் என்றால் எது ? சக்கரங்களா ? கடையாணியா ? கயிறுகளா ? லகானா ?

அவையல்ல

பின் அவைகள் இல்லாமல் தேர் இருக்கிறதா ?

இல்லை.

அரசரே! தேர் எதுவென்று உங்களை கேட்டு நான் அலுத்து விட்டேன். ஆனால் நீங்கள் தேர் எதுவென்று சொல்லவில்லை. தேர் இல்லையென்று நீங்கள் பொய் சொல்கிறீர்களா ? நாகசேனரே! நான் பொய் சொல்லவில்லை. சக்கரங்கள் போன்ற தோின் பகுதிகள் ஒன்று சேர்க்கப்பட்டு நடைமுறையாக தேர் எனப்படுகிறது.

அரசே! மிகச் சாியாக கூறினீர்கள். தேர் என்பது என்னவென்று நீங்கள் தொிந்து கொண்டார்கள். அதுமாதிாி என் உடலுறுப்புக்களை எல்லாம் ஒன்று சேர்த்து நடைமுறைக்காகவே நாகசேனர் என்று அறியப்படுகிறேன். ஆனால் நாகசேனர் என்ற ஆன்மா எதுவுமில்லை. அரசரே! அறிந்து கொள்வது ஞானத்திற்கு அறிகுறி. சாியாக புாிந்து கொள்வது அறிவுக்கு அறிகுறி. ஆனால் ஜீவாத்மா என்னும் பொருள் எதுவுமில்லை.

துறவியே! ஜீவாத்மா என்று ஒன்றில்லையென்றால் நம்முள்ளே இருந்து கொண்டு கண்ணால் பார்ப்பதும், காதால் ஒன்றை கேட்பதும், மூக்கால் வாசனையை நுகர்வதும், உடலால் ஸ்பாிசிப்பதும் எது ? அரசே! நமது உடலிலிருந்து வேறுபட்ட ஜீவன் என்று ஏதாவது இருந்தால் அது நம்முள் இருந்து கண்ணால் பார்ப்பதாக இருந்தால் கண்ணை பறித்து விட்ட பிறகு அங்குள்ள பொிய துளையால் இன்னும் நன்றாக பார்க்க வேண்டுமல்லவா ? காதை அறுத்து விட்ட பிறகு காதால் கேட்க வேண்டுமல்லவா ? நாக்கை அறுத்துவிட்ட பிறகு இன்னும் சுவைக்க வேண்டுமல்லவா ? உடலை அழித்து விட்ட பிறகு இன்னும் நன்றாக தொட வேண்டுமல்லவா ? துறவியே! அப்படியெல்லாம் முடியாது அரசே! அப்படியானால் நம்முள் எந்த ஜீவாத்மாவும் கிடையாது. ஆன்மாவை ஒப்புக் கொள்ளாத நிலையில் நல்ல செயல்களுக்கும், கெட்ட செயல்களுக்குமான பொறுப்பும் அதை அனுசாித்து மற உலகத்தில் இன்ப துன்பங்களை அனுபவிப்பதும் பற்றி மினான்டர் வாதத்தை தொடர்கிறார்.

துறவியே! பிறப்பது எது ?

அரசே! அறிவும், பொருளும்

இந்த அறிவும் , பொருளும் பிறப்பை அடைவதில்லை. மனிதன் இந்த அறிவாலும், பொருளாலும் பாவம் அல்லது புண்ணியம் செய்கின்றான். அதன் காரணமாக மறு அறிவு, மறு பிறப்பு அடைகின்றான். அப்படியென்றால் முதல் அறிவும், பொருளும் தமது செயல்களால் முக்தி பெற்று விடுகின்றனவா ? அரசே! மீண்டும் பிறப்பை அடைய வில்லையென்றால் முக்தி பெற்று விடுகின்றன. ஆனால் அவை மீண்டும் பிறப்பதால் முக்தி பெறுவதில்லை. உதாரணங்களால் பதியவையுங்கள்.

ஒருவன் மற்றொருவனின் மாம்பழங்களை திருடி விடுகிறான். மாம்பழ சொந்தக்காரன் அவனை அரசனிடம் பிடித்துக் கொண்டு போய் ‘இவன் என் மாம்பழங்களைத் திருடி விட்டான் என்று அரசனிடம் குற்றம் சாட்டுகிறான். ‘இல்லை, நான் இவனுடைய மாம்பழங்களை திருடவில்லை. இவன் நட்டு வித்த மாங்கொட்டை வேறு, நான் பறித்த மாம்பழங்கள் வேறு ‘ என்று திருடியவன் கூறினால் மகாராஜா! அவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டுமா, வேண்டாமா ?

அவனுக்கு அவசியம் தண்டனை கிடைக்க வேண்டும்.

ஏன் ?

துறவியே! திருடியவன் அப்படி பதிலளித்தாலும், முதல் மாம்பழத்தை திருடாவிட்டாலும், வேறு மாம்பழத்தை திருடிய குற்றத்திற்காக அவனை தண்டிக்க வேண்டும்.

அரசரே! இது மாதிாி மனிதனும் இந்த அறிவாலும், பொருளாலும் பாவம் மற்றும் புண்ணியம் செய்கிறான். அச்செயல்களினால் அவன் வேறு அறிவாகவும், பொருளாகவும் பிறக்கிறான். ஆகவே அவன் தன் செய்வினைகளிலிருந்து விடுதலை அடைவதில்லை.

துறவியே! இதனால் நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் ?

அரசரே! நான் சிறு வயதில் வேறாக இருந்தேன். இப்பொழுது வளர்ந்து பொியவனாகி இருக்கிறேன். ஆனால் அந்த வெவ்வேறு நிலைகளெல்லாம் ஒரே உடலில் நிகழ்ந்திருப்பதால் அவற்றையெல்லாம் ஒன்றாகவே கருத வேண்டும்.

ஒரு விளக்கை எாித்தால், அது இரவு பூராவும் எாிந்து கொண்டே இருக்குமல்லவா ?

ஆமாம்.

அரசரே! இரவின் முதல் ஜாமத்தில் அவ்விளக்கின் ஒளி இருப்பது போல் இரண்டாம் ஜாமத்திலும், மூன்றாம் ஜாமத்திலும் அப்படியே இருக்குமா ?

இருக்காது.

அப்படியானால் மகாராஜா! அந்த விளக்கு முதல் ஜாமத்தில் வேறாகவும், இரண்டாம் மூன்றாம் ஜாமத்தில் வேறு ஒன்றாகவும் இருக்குமா ?

இல்லை துறவியே! இரவு முழுவதும் எாிந்து கொண்டிருப்பது ஒரே விளக்கு தான்.

அரசே! அது போல் ஒரு பொருளில் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நிலை தோன்றுகிறது. மறைகிறது. இது போல் ஒரு பிரவாகம் தொடர்ந்து இருந்து வருகிறது. ஒரு பிரவாகத்தின் இரண்டு நிலைகளுக்கிடையே ஒரு விநாடி கூட இடைவெளி இல்லை. ஏனெனில் முதலாவது மறைந்ததுமே இரண்டாவது தோன்றி விடுகிறது. இக்காரணத்தால் தான் அது பழைய ஜீவனாகவும் இருப்பதில்லை. புதியதாகவும் ஆகி விடுவதில்லை. ஒரு பிறவியின் கடைசி பகுத்தறிவு மறைந்ததுமே அடுத்த பிறவியின் முதல் பகுத்தறிவு தோன்றி விடுகிறது.

இவ்வாறாக, அறிவும், பொருளும் நம்மிடையே அநித்தமாக இருக்கிறது. நிரந்தரமானது, சாசுவதமானது என எதுவும் இல்லை என்பதற்கு இது ஒரு மேற்கோளாகும். பெளத்தத்தின் இம்மாதிாியான கோட்பாடுகள் குறியியலோடும், இன்றைய பின்றவீனத்துவத்தின் சில கருத்தாக்கங்களோடும் ஒத்து போகிறது.

நாகசேனர் மினான்டருடன் நடந்த விவாதத்தின் போது புதிய விஷயங்கள் எதையும் சேர்க்கவில்லை. ஆனால் அவர் எப்படி தெளிவுபடுத்தினார் என்பது மேற்கண்டவற்றிலிருந்து தொிந்து கொள்ளலாம். நாகசேனர் இந்திய கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராகமாவும், நாகாீகத்தின் கேந்திரமாகவும் விளங்கிய சியால் கோட்டில் பிறந்தவர் என்பதும், இந்திய தத்துவ ஞானத்தோடு கிரேக்க தத்துவ ஞானத்தையும் அறிந்ததால் தான் மினான்டர் போன்றோர்களை எதிர்கொள்ள முடிந்தது. இந்திய கிரேக்க தத்துவவாதிகள் சேர்ந்து இந்தியாவில் புதிய சிந்தனையை தொடங்கினார்கள் என்பதற்கு இது ஒரு வரலாற்றுக் குறிப்பாகும்.

peer13 @asean-mail.com

Series Navigation

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது