அநங்கம் இதழ்-கலந்துரையாடல் நிகழ்வு

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

கே.பாலமுருகன்



கெடா மாநில எழுத்தாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில் “அநங்கம்” இலக்கிய இதழ் குழுவின் கலந்துரையாடல் அங்கம் சுப்ரமன்ய ஆலயத்தின் நூல் நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. அநங்கம் இதழாசிரியர் கே.பாலமுருகன் அவர்கள் அநங்கம் இரண்டாவது இதழை அறிமுகப்படுத்தி பேசினார். அந்த அறிமுக உரையில் மலேசிய இலக்கியத்தின் தீவிரத்தன்மையை மேலும் சிறப்பிக்கவும் இளம் எழுத்தாளர்களுக்கும் மூத்த எழுத்தாளருக்கும் தரமான களமாக அமையவும் அநங்கம் இதழ் புதியதாக மலர்ந்து நமது வாசகர்களின் வாசிப்பு தளத்தை உயர்த்த தொடர்ந்து செயல்படும் என்று கூறினார்.
கலந்துரையாடல் அங்கத்தில் மூத்த எழுத்தாளர் திரு.கோ.புண்ணியவான் அவர்கள் தமது “அநங்கம் பொதுவான பார்வையில்” எனும் தலைப்பில் உரையாற்றினார். அவர் குறிப்பிடுகையில் அநங்கம் இதழ் மலேசிய படைப்பிலக்கியத்தின் தரத்தை உயர்த்த ஒரு நல்ல களமாக அமையக்கூடிய எல்லாம் வளர்ச்சி நிலைகளையும் கொண்டுள்ளது என்று கூறினார். மேலும் அநங்கம் இரண்டாவது இதழில் பிரசுரமாகிய எல்லாம் படைப்புகளையும் குறித்து தமது வாசகப் பார்வையில் விமர்சனம் செய்து பேசினார். குறிப்பாக மூத்த தலைமுறை எழுத்தாளர் மா.இராமையா அவர்கள் எழுதிய “ஊம்” சிறுகதை குறித்து பேசியபோது, அவரின் அந்தச் சிறுகதை புதுமைப்பித்தனை போன்ற சமூக விமர்சனத்தை உள்ளடக்கியுள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து நாட்டின் மூத்த பெண் எழுத்தாளரான திருமதி பாக்கியம் முத்து அவர்கள் “அநங்கம் பொதுவான ஆய்வில்” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை படைத்தார். அக்கட்டுரையில் அநங்கம் இதழின் நோக்கம் குறித்து பாராட்டுத் தெரிவித்தத்துடன், மூத்த எழுத்தாளர்களையும் இளம் எழுத்தாளர்களையும் ஒரே களத்தில் இணைக்கும் அநங்கத்தின் நோக்கம் நாளைய இலக்கிய கட்டமைப்பிற்கு நம்பிக்கையை அளிக்கிறது என்றும் கூறினார். அநங்கம் தொடர்ந்து விவேகத்துடனும் யாரையும் புறக்கணிக்காத நிலையில் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆக்கம்
கே.பாலமுருகன்
அநங்கம் இதழாசிரியர்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்