சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
பேரழிவுப் போராயுதம்
உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து
விழுதுகள் அற்றுப் போக,
விதைகளும் பழுதாக
ஹிரோஷிமா நகரைத் தாக்கி
நரக மாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
நாச மாக்கப் பட்டது !
இப்போது தோன்றின
புதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !
கதிரியக்கம் பொழியும்
புழுதிக் குண்டுகள் !
அணு ஆயுத வெடிப்பில்
புகை மண்டலம்
சூழ்வெளியில் பரவிப்
பரிதி ஒளியை மறைத்து
குளிர் உலகம் உண்டாகும் !
புத்தர் பிறந்த நாட்டிலே
புனிதர் காந்தி வீட்டிலே
புது யுகச் சூட்டிலே
மனித நேயம்
வரண்டு போன
வல்லரசுகள் பின் சென்று
பாரத அன்னைக்குப்
பேரழிவுப்
போரா யுதத்தை
ஆரமாய்
Fig. 1
Atomic Weapons Produce
Nuclear Winter
அணிவிக்க லாமா ?
உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !
கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)
விஞ்ஞானிகள் உலக தேச நலனை முன்வைத்து அதிர்ச்சியான இந்தக் கோரப் பிரச்சனையில் (அணு ஆயுத வெடிப்பு) தெளிந்த சிந்தனையோடு நடந்து கொண்டனரா என்று ஒருவர் கேட்க வரலாம் ! உண்மையாக அப்படி ஒரு விருப்பத் தேர்வுக்கு (Choice) இடமில்லை ! அடிப்படை ஆய்வறிவு கிடைத்ததும் அது கனியாகப் பழுப்பதை நிறுத்த எந்த ஓர் எதிர்ப்புத் தடையும் வந்தால் பரிதியைச் சுற்றிவரும் பூமியை நிறுத்த முனைவது போல் முறிந்து போகும் !
சிகாகோவில் முதல் அணுப்பிளவு தொடரியக்கம் நிகழ்த்திய என்ரிக்கோ ·பெர்மி,
விஞ்ஞானம் அணுசக்தி மூலம் பயனடைய நமக்குக் கல்வி புகட்டியுள்ளது. மனிதத் தீங்குகளுக்குப் பதிலாக மானிட நலத்துக்கு அணுசக்தியைப் பயன்படுத்த முயல்வது மனிதக் கடமை நெறியில் பின்னியுள்ளது. இப்போது நாம் எதிர்நோக்கும் பிரச்சனை பௌதிக விஞ்ஞானம் அல்ல; மனித ஒழுக்க நெறி !
பெர்னார்டு மான்னஸ் பரூச் (Bernard Mannes Baruch)
Fig. 1A
Atmospheric Sun Blockage
“முஸ்லீம்களாகிய நாம் வல்லவராகவும், நம் நாடு மற்ற நாடுகளுக்கு இணையாகவும் இருக்க வேண்டும். அதனால்தான் சில நாடுகள் வல்லமையோடு இருக்க நான் உதவி செய்ய விரும்புகிறேன்,”
அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan, Maker of Pakistan Atomic Bomb)
“இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ இலைகளைத் தின்றோ பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்.”
ஸ¤ல்·பிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர்.
“அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்.”
டாக்டர் ஹோமி ஜெ. பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)
Fig. 1B
India Vs Pakistan
அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி நியதி !
ஜப்பான் ஹிரோஷிமா நாகசாக்கி நகரங்களில் போட்ட அணு ஆயுத வெடிப்புகள் போல மூன்றாம் உலகப் போர் நிகழ்ந்தாலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுப் போர் மூட்டிவரும் பாகிஸ்தானும் பாரதமும் தமது அணு ஆயுதங்களை ஏவி இரு நாடுகளும் மனித இனத்தை அழித்துக் கதிரியக்கப் பொழிவுகளைப் பரிமாறிக் கொண்டாலும் சரி, இறுதியில் கோடான கோடி டன் புகை மூட்டம் சூழ்வெளி மண்டலத்தில் சேர்ந்து இருள் மண்டிப் பரிதியின் ஒளி குன்றிப் பூமியில் பெருங்குளிர்ச்சி ஏற்பட்டு விடும் என்று ஒரு கோட்பாடு கூறப்பட்டு வருகிறது ! இந்த கோர விளைவைத்தான் 1983 இல் அணுவியல் /வானியல் பௌதிக விஞ்ஞானி கார்ல் சேகன் (1934 -1999) “அணு ஆயுத வெடிக் குளிர்ச்சி” (Nuclear Winter) என்று முதன்முதல் ஓர் எதிர்பார்ப்புக் கோட்பாடாக அறிவித்தார். போரில் பல்லாயிரம் கிலோ டன் டியென்டி ஆற்றல் கொண்ட பல்வேறு அணு ஆயுதக் குண்டுகள் வெடிப்பதால் ஏற்பாடும் பேரளவு புகை மண்டலம் பூமியின் மேல் நிலைச் சூழ்வெளி வாயு மண்டலத்தைச் (Earth’s Upper Atmosphere) சேர்ந்து சூரிய ஒளி விழுங்கப் பட்டுத் தட்ப வெப்ப நிலையைச் சீர்குலைக்கும் என்பதுதான் கார்ல் சேகன் கோட்பாடு !
Fig. 1C
Global Cooling & Warming
அணு ஆயுத வெடிப்புத் தூசி மண்டலம் பரிதி வெளிச்சத்தை மறைத்துக் கொண்டு பூமியை ஓர் இருண்ட கண்டமாக்கி வரண்டு போகும் குளிர்க் கோளமாய் மாற்றிப் பல்லாண்டுகள் தங்கியிருக்கும் என்று சொல்லப் படுகிறது ! அதனால் பெருமளவு வேளாண்மைப் பயிர்கள் சேதம் அடைந்து பல நாடுகளில் பட்டினியும் பஞ்சமும் படிப்படியாகப் பரவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது ! அமெரிக்க ரஷ்ய நாடுகள் அல்லது பாகிஸ்தான் பாரத தேசத்துக்கு இடையே எதிர்காலத்தில் நேரக் கூடிய அணு ஆயுதப் போர்களால் “பூகோளக் குளிர்ச்சி” (Global Cooling) ஏற்படும் என்று சில விஞ்ஞானிகள் இப்போது கருதுகிறார். அந்த விஞ்ஞானிகளின் பௌதிகக் குரு காலஞ் சென்ற அணுவியல் / வானியல் நிபுணர் கார்ல் சேகன் (1934 -1999). கார்ல் சேகனின் முக்கியச் சீடர்கள் இருவர் : அலன் ரோபோக் & ஓவன் பிரையன் டூன் (Alan Robock & Owen Brian Toon).
Fig. 1D
Nuclear Arsenals of the World Nations
அலன் ரோபோக், ஓவன் பிரையன் டூன் இருவரது அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சிக் கோட்பாடு பூகோளக் குளிர்ச்சிக் காட்சிகளைக் (Global Cooling Scenerios) கணினி மாடல்கள் மூலமாகக் (Computer Models) கண்டு முடிவு செய்தவை. கடந்த காலங்களில் பூமியில் நேர்ந்த எரிமலைப் புகை மூட்டங்கள், கானகத் தீயெரிப்புகள், மற்ற பூதள வெளியேற்றங்கள் ஆகியவை அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சிக்கு ஆதாரமாகச் சான்றுகள் கூறுகின்றன. அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சிக் கோட்பாடு என்ன சொல்கிறது ? அணு ஆயுதப் போரில் அணுக்குண்டுகள் வெடித்த பிறகு கதிரியக்கப் பொழிவுகள் பூமியில் படிகின்றன. அதே சமயத்தில் எழும் புகை மண்டலம், கரித்தூள்கள், மற்ற பூமியின் சேதாரத் தூசிகள் யாவும் மேலேறிச் சூழ்வெளியில் கலக்கின்றன. அவை பரிதியின் ஒளியை மங்க வைத்து வான் வெளியை இருளடையச் செய்கின்றன. இறுதியாகச் சில மாதங்களில் பூமியின் உஷ்ணம் 1 முதல் 5 டிகிரி சென்டிகிரேட் வரைக் குறைந்து போகலாம். கணினி மாடல்கள் இந்த உளவு ஆராய்ச்சிகளில் கண்ட முடிவு என்ன வென்றால் ஒரு டிகிரி சென்டிகிரேட் உஷ்ண மிகையால் கூட “உயிரின ஏற்பு அமைப்பில் நிலைகேடு” (Ecosystem Unbalance) விளைந்து பூமியில் உயிரினப் பயிரினப் பாதிப்புகள் ஏற்படும் என்று அறியப்படுகிறது.
Fig. 1E
Agricultural Collapses
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அசுர அணுக்குண்டு பூமியில் விழுந்தது போல், மெக்ஸிகோ அருகில் விழுந்த ஒரு பெரும் முரண் கோளால் (Asteroid) நேர்ந்த அதிர்ச்சியும் தூசி மண்டல எழுச்சியும் பரிதி ஒளியை விழுங்கி உஷ்ணம் தணிந்து போனதால் அக்காலத்தில் வாழ்ந்த டைனோஸார்ஸ் அனைத்தும் மாண்டு போனது இதற்கோர் தகுந்த உதாரணம்.
அணு ஆயுத வெடிப்புப் போர்களால் விளையும் புகை மூட்டக் குளிர்ச்சி!
கார்ல் சேகன் அணு ஆயுத ஆக்கத்தையும், அவற்றின் மேற்தள வெடிப்பையும் அறவே எதிர்த்தவர் ! 1980 ஆண்டுகளில் ‘அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி’ [Nuclear Winter] என்னும் புதிய ‘அணு ஆயுதப் புகை மூட்ட’ எச்சரிக்கையை முதன் முதலில் உலகெங்கும் பறைசாற்றியவர், விஞ்ஞானி கார்ல் சேகன் (1934 -1999) ! அதன் விளக்கம் என்ன வென்றால், அணு ஆயுத வெடிப்புகளில் கிளம்பும் புகையும், தூசியும், கரிவாயுக் கோளமும் பூமியின் சூழ்வெளி மண்டலத்தைப் பேரளவில் பாதித்துப் பரிதியின் தட்ப வெப்ப அளவுகளைக் கூட்டிக் குறைத்துக் கால நிலையைக் கரைப்படுத்திப் பூமியைப் பல நாட்களுக்கு ஒரு குளிர்க்கோளமாய் ஆக்கிவிடும் என்று கூக்குரல் இட்டார் !
Fig. 1F
Ozone Depletion due to Nuclear Winter
அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி வேளாண்மைத் தானியங்களைச் சரிவர வளர விடாமல் பாதித்து மனிதர் மற்றும் விலங்கினங்கள் ஆகாரம் இல்லாமல் பஞ்சம், பட்டினியில் துன்பப்படும் என்று உலக வல்லரசுகளையும், அணு ஆயுதப் போர்வைக்குள் ஒளிந்து பின்புறமாய் தயாரித்துக் கொண்டிருக்கும் மெல்லரசுகளையும் கார்ல் சேகன் எச்சரிக்கை செய்தார் ! ஹைடிரஜன் குண்டு ஆயுதப் பிதா, டாக்டர் எட்வெர்டு டெல்லர் போன்ற தீவிரவாத விஞ்ஞானிகள் கார்ல் சேகனின் அணு ஆயுதக் குளிர்ச்சிக் கோட்பாடை ஒப்புக் கொள்ளாது தப்பென ஒதுக்கித் தள்ளினார்கள்!
அணு ஆயுதப் போர் வெடிப்புக் குளிர்ச்சியால் நேரும் சீர்கேடுகள்
2000 இல் சோவியத் தலைவர் மிக்கேல் கார்பச்செவ் (Mikhail Gorbachev) ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானிகள் செய்த கணினி மாடல்கள் எதிர்காலத்தில் அணு ஆயுத யுத்தம் ஒன்று வருமானால் அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி (Nuclear Winter) உண்டாகும் என்றும் அதனால் பூமியில் அனைத்து உயிரினங்களுக்கும் அழிவு நேரும் என்றும் எச்சரிக்கை செய்தார். அந்த அறிவுரை புத்துணர்ச்சி ஊட்டும் போதனையாக நன்னெறியைப் பின்பற்றும் நபருக்கு விழிப்புணர்ச்சி தரும் என்றும் குறிப்பிட்டார். அதனால் அணு ஆயுத வெடிக் குளிர்ச்சிப் பயமானது உலக நாடுகளின் அணு ஆயுதப் பெருக்கப் பந்தயத்தை நிறுத்த அது ஒரு முக்கிய காரணமாக வலியுறுத்தப்பட வேண்டும்..
Fig. 2
Environmental Damage
உலக வல்லரசுகளுக்கு இடையே ஊர்ந்து வந்த ஊமைப்போர் (Cold War) 1990 ஆண்டுகளில் முடிந்த பிறகும் நாம் ஏன் அணு ஆயுத அடுக்குகளுக்கு அஞ்ச வேண்டும் என்ற ஒரு கேள்வி எழலாம். காரணம் மெல்லரசுகள் பல இப்போது தம் கைவசம் அணு ஆயுதங்களை இரகசியமாய்த் தயாரித்து ஒளித்து வைத்திருப்பதுதான் ! உதாரணமாக இப்போது பாகிஸ்தான் மூர்க்கப் படைத் தாக்குதலை நிறுத்த, பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்து போரில் பல அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டு நூற்றுக் கணக்கான அணுக்குண்டுகள் இருபுறமும் வீசப்பட்டால் அதன் கோர முடிவு பூகோள வேளாண்மை விளைச்சலைப் பேரளவில் முடக்கி விடும். ஒரு பிராந்தியப் போரால் உலகளாவியச் சேதாரங்களும் உயிரின இழப்புகளும் நேரிடும் ! நீண்ட கால அணு ஆயுதப்போரில் உள்நாட்டு மக்கள் பேரளவில் மடிவதோடு உலக நாட்டு மாந்தரும் பாதிப்படைவார். நேரடித் தாக்குதலிலும், தீக்காயங்களிலும் பின்னர் கதிரியக்கத்திலும் பாதிக்கப் பட்டு உள்நாட்டு மக்கள் சுமார் 20 மில்லியன் பேர் மரிப்பார் ! இரு நாடுகளைக் கடந்து அப்பால் உலக நாடுகளிலும் சூழ்வெளி பாழ்பட்டு வேளாண்மை சீர்கேடாவதால் ஒரு பில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையிலும் பட்டினியாலும் சாகலாம்டென்று யூகிக்கப் படுகிறது !
Fig. 3
Ruined Crops
உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய பாடம் !
அணு ஆயுத யுகம் ஒளிமறைவாக உதயமானது. ஹிரோஷிமா, நாகசாக்கியில் ஈரணுக் குண்டுகளைப் போட்ட பிறகு இருபதாண்டுகளாக அணு ஆயுத ஏகாதிபதிகள் கதிரியக்கத்தால் நேரக்கூடிய மனித உடற் கேடுகளைக் கூறாமல் மறைத்து வைத்திருந்தனர். பிடிவாதத்துடன் மருத்துவ ஆராய்ச்சி செய்யும் டாக்டர் அலிஸ் ஸ்டீவர்ட் (Dr. (Mrs) Alice Stewart) என்னும் பெண்மணிதான் முதன்முதலில் தணிவு நிலைக் கதிர்வீச்சால் (Low Level Radiation) விளையும் உடற் பாதிப்புக்களைக் கூறி உலகுக்கு அணு ஆயுதங்களைப் பற்றி எச்சரிக்கைகள் செய்தார்.
இன்னும் இரண்டு பிறப்பாண்டுகளில் (Generations) மனித இனத்தின் எதிர்கால விதி தீர்மானிக்கப்படப் போகிறது ! அதற்கு இரு மிக முக்கியத் தேவைப்பாடுகள் என்ன ? மனித இனவிருத்திக் கட்டுப்பாட்டுக்குள் நாம் ஒரு நிலையான சமூக வளர்ச்சிக்குக் குறிவைக்க வேண்டும். அடுத்து உலகிலுள்ள அணு ஆயுத அடுக்குகளை முடக்கி அனைத்தையும் முறிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் 2050 ஆண்டுக்கு மேல் எப்படி உயிர் பிழைத்து வாழ முடியும் என்பது எனக்குத் தெரியாது என்று ஜேக்ஸ் மோனாடு 1971 இல் கூறினார்.
Fig. 4
Massive Extinction Event of Asteroid
(கட்டுரை தொடரும்)
*****************************
தகவல் :
Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007) 2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)
1. Scientific American Magazine : India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)
2 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210273&format=html (Robert Oppenheimer)
3 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203245&format=html (First Atomic Bombs Dropped on Japan)
3. (a) http://jayabarathan.wordpress.com/2009/08/06/dr-raja-ramanna-2/ (ராஜா ராமண்ணா இந்திய அணு ஆயுதச் சோதனை)
4. The Making of the Atomic Bomb, By: Richard Rhodes
5. Oppenheimer, By: James Kunetka
6. Hand Book of World War II, Abbeydale Press
7. The Deadly Element, By: Lennard Bickel
8. Canadian Nuclear Society Bulletin, June 1997
9. Grolier Online : Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)
10. Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)
11. National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)
12. Scientific American Magazine : Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads, By : David Biello (November 2007)
13. The Dirty Bombs (Radiological Dispersion Bombs) MSN Broadcasting -Dirty Bombs Biggest Hazard : Panic Experts Say Radiation Would Play on Public Fears (June 10, 2002)
14. Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)
15. Neutron Bombs – Wikipedia Report (December 15, 2009)
16 Wikipedia Report on Dr. Abdus Salam – http://en.wikipedia.org/wiki/Abdus_Salam (Dec 18, 2009)
17. Wikipedia Report on Abdul Qadeer Khan – http://en.wikipedia.org/wiki/Abdul_Qadeer_Khan (December 26, 2009)
18. Wikipedia Report on http://www.armscontrol.org/documents/sort Strategic Offensive Reductions Treaty (SORT) (May 24, 2002)
19 http://jayabarathan.wordpress.com/2008/05/02/katturai27/ (பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது ?) (May 1, 2008)
20 What is NuclearWinter ? By : Charles Mallery Dept of Biology, University of Miami, Florida, USA (May 16, 2006)
21 Nuclear Winter By : Carl Sagan
22 Scientific American : Local Nuclear War, Global Suffering By: Alan Robak & Owen Brian Toon (January 2010)
******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) January 7, 2010
- செவி மட்டும் செயல் படட்டும் .
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது -2009
- புதுவகை நோய்: இமி-4
- ‘‘பண்டிதமணியின் திருவெம்பாவை உரைத்திறன்’’
- முறிந்த பனை: சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம்
- இது பெரிய எழுத்து மற்றும் மலையாளக் கதைகள்
- அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 5)
- யாவரும் அறிவர்.
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-6 மதுக்குடி அங்காடி (The Tavern)
- வேத வனம் விருட்சம் 67
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) < ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -3
- நீ விட்டுச் சென்ற மழை
- முள்பாதை 12
- ஒற்றைக் காலுடன் நிற்கிறது கடவுள்
- வயிறு
- தூண்டிற்புழு
- பட்டாம்பூச்சிகள் சுதந்திரமானவை
- நினைவுகளின் தடத்தில் – (41)
- ஆலமரம்
- வேதக்கோவில் (முடிவு)
- வேதக்கோவில்
- நெனச்சது ஒண்ணு
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -5
- எக்கியின் குடும்பம்