அட்டைகள்

This entry is part [part not set] of 23 in the series 20021221_Issue

ருத்ரா


காதலர்தின
வாழ்த்து அட்டைகள்.
மலை மலையாய்
குவியல்கள்.
வண்ணாத்துப்பூச்சிச்
சிறகுகளின்
சருகுகளாய்…
இருட்டுக்காக
வெளிச்சத்தை விற்று
விட்ட
விட்டில்பூச்சிகளின்
குப்பைகளாய்….
அஞ்சல் முத்திரைகளால்
குத்தப்பட்டு குத்தப்பட்டு
பட்டுப்போன கனவுகளில்
பட்டுவாடா செய்யப்படும்
பட்டுப்பூச்சிகளாய்….
வருடந்தோறும்…
வருடந்தோறும்…
…………
இந்த
‘காதலர் தின அட்டையில் ‘
காதலும் இல்லை.
தினமும் இல்லை.
உணர்ச்சிகள்
உறிஞ்சும்
‘அட்டை ‘ மட்டுமே இது.

பூக்கள்.
வண்டுகள்.
நிலவுகள்.
வானம் தடவும்
மேகங்கள்.
காதலியின்
ரோமங்களில்
செய்த தூரிகையில்
‘ரோமாபுரி ‘ ஓவியங்கள்.
அந்தி வானச்சிவப்பில்
முத்தமிடும் உதடுகள்.
இன்னும் இன்னும்….
காதோரத்தில்
கிச்சு கிச்சு மூட்டும்
மயிற்பீலிகள்.
ஐஸ் கிரீம் குளிர்ச்சிக்குள்
தீ மூட்டும் புதையல்கள்.
சினிமாத்
தியேட்டரின்
இருட்டு மூலைகள்.
‘வறுத்து வச்ச கோழியும்
குமரிப்பொண்ணும் ‘
ருசி மிக்க
பண்டங்களாகிப் போனதில்
வெறும் எச்சிலை காதல் என்று
ஒழுகவிடும்
சினிமாக்கவிஞர்களின்
நீண்ட நாக்குகள்.
…………………….
…………………….
இவற்றையெல்லாம்
ஒன்றாய் வைத்து
கொத்து பரோட்டா போட்டு
அவற்றொடு
பதினாறு வயதுகளின்
தீப்பிழம்பையும்
சேர்த்து அரைத்து
தயார் செய்த
லேகியம் ….
இந்த கா…..தல்.
அம்பது வயது
அலமு பாட்டிக்கும்
பெப்ஸி குடிக்கும் போது
மாதவன் வந்து
முத்தமிடும் சத்தங்கள்
தொண்டைக்குழியில்.
விளம்பர யுத்திக்கு
பர பரப்பாய்
கத்திச்சண்டை
போட்டுக்காட்ட
காதல் எனும் வீச்சு அறிவாளே
இங்கு பதமான ஆயுதம்.
காதலே !

உனக்கு ‘ஓ ‘ போடுவது
ஒரு பக்கம் இருக்கட்டும்.
நீ வட்டமா ?
சதுரமா ?
கோடா ?
புள்ளியா ?
உன் ‘ஜியாமெட்ரியை ‘
இந்த சினிமா சிற்பிகள்
பெண்ணின்
உதட்டுச் சுழிவிலும்
தொப்பூள் குழியிலும்
வரைந்து
காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
அவள்
மார்பு பிரதேசங்களில்
‘மேண்டல்ப்ராட்டின்
ஃப்ராக்டல் ஜியாமெட்ரியை ‘
அதாவது
மனம் முறிந்த விகாரங்களின்
வண்ண வண்ணத்துண்டுகளை
பூதம் காட்டுகிறார்கள்.
இதற்கு
ஷெல்லியையும் கீட்ஸையும்
மூங்கில்களாக்கி
புல்லாங்குழல் ஊதுகிறார்கள்.
குயில்பாட்டுக் கூடுகளில்
காக்காய் முட்டைளை
அடை காக்கிறார்கள்.
காதலை
எத்தனை விதத்தில் எல்லாம்
கசாப்பு செய்யலாம் என்று
ஐந்து நட்சத்திர ஓட்டல்களில்
ஸ்காட்ச் விஸ்கியினுள்
ஈசல் பூச்சிகளாய்
விழுந்து கிடந்து
விடிய விடிய…..இந்த
இராட்சச வித்துகளை
கர்ப்பம் தரிக்கிறார்கள்
கதைகள் என்ற பெயரில்.
ஏ ஏரியாவிலிருந்து
சி ஏரியா வரைக்கும்
வசூல் வெள்ளம் பாய்ந்து
இந்த மண்ணாங்கட்டிகள் எல்லாம்
கரைந்து போக
கதை பண்ணுகிறார்கள்.
ஃப்ராய்டிசத் தீயில் சிதைமூட்ட
ஃப்ராங்கென்ஸ்டான் எனும்
பிண மனிதனை
தூக்கித் திரிகிறார்கள்
இந்த இருட்டு வியாபாரிகள்.
ஜிகினா நரம்புகளில்
செத்துப்போன சதையை
முறுக்கிக்கட்டிய வெறியில்
முறுகலாய் சுவைகூட்டி
புதுக்கவிதைக் கஞ்சா பொட்டலங்கள்
விற்கிறார்கள்…
இந்த காதல் வியாபாரிகள்.
சிறிசுகளை நோக்கி
ஏக்கத்தையும்
பொறாமையையும்
‘சாணி ‘ எறிந்து
கலவரம் செய்யும்
பெரிசுகளின்
ஆற்றாமை அல்ல இது.
தலைமுறை இடைவெளி
என்று சொல்லிக்கொண்டு…
தலைகளையே
வெட்டிஎறிந்து விட்டு
தலை வாரிக்கொள்ள
சீப்பு தேடும்
இளம்பிஞ்சுகளே !
கொடிது கொடிது
வறுமை கொடிது.
அதனினும் கொடிது
இளமையில் வறுமை.
வறுமை மட்டும் அல்ல..
வெறுமையும் கொடிது.
ஆம்..
சிந்தனையற்ற
வெறுமைக்குள்
வீழ்ந்து போகாதீர்கள்.
வெறும் குப்பையாய்
நம்மை
நூறு கோடிக்கும் மேல்
வாழ்வதாய்
கணக்கு காட்டி என்ன பயன் ?
சென்ஸஸ்
எடுப்பதனால் மட்டுமே
சாக்கடைப்புழுக்கள்
சரித்திரம்
படைத்திட முடியுமா ?

சாய்ங்கால நேரத்து
சாலைக்கடையோர
முட்டைத்தோசை
வியாபாரம் தான்
காதல்.
சுடச்சுட கானாப்பாட்டுகளில்
சுடப்பட்டு கிடக்கும்
இளசுகளே !
மனதை
கூவமாக்கி
அதன் சேற்றுக்குள்ளிருந்தா
உங்கள்
தாஜ்மகால்களைக் கட்டும்
சலவைக்கற்களைத் தேடி
விசில் அடித்துக் கொண்டிருக்கிறீர்கள் ?
விசில் சத்தங்கள்
விடியல் கீதங்கள் ஆகிவிடாது !

***
ருத்ரா

kasthurisivan@eth.net

Series Navigation

ருத்ரா

ருத்ரா