அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

அ.முத்துலிங்கம்


வாரத்தில் ஏழு நாட்கள் இருப்பதில்தான் முதல் பிரச்சினை ஆரம்பமானது. இதை மாற்றுவது அவனுடைய ஆற்றலுக்கு அப்பால் பட்டது. வாரத்தில் ஆறு நாட்கள் இருந்திருக்கலாம்; எட்டு நாட்கள் கூட பரவாயில்லை. ஒற்றைப் படையாக ஏழு நாட்கள் வந்ததில்தான் விவகாரம். 1700 வருடங்களுக்கு முன்பு ரோமாபுரி பெரும் சக்கரவர்த்தி கொன்ஸ்டன்ரைன் வாரத்தில் ஏழு நாட்கள் என்று தீர்மானித்ததை அவன் எப்படி மாற்ற முடியும்.

இதனால் மண முடித்த ஆரம்பத்தில் சில தொந்திரவுகள் ஏற்பட்டு தீர்க்கப்பட்டன. அவன் மனைவி கருவுற்றபோது அவை இன்னும் தீவிரமடைந்தன. லவங்கி பிறந்தபோது கனவிலும் அவன் நினைத்திராத பல பிரச்சனைகள் உருவாயின.

ஆனால் அவன் மனைவி பட்டியல் போடுவதில் திறமைசாலி. எந்தப் பிரச்சனையையும் பட்டியல் போட்டு தீர்த்துவிடுவாள். லவங்கி பிறந்தபோது ஏற்பட்ட மேலதிக வேலைகளுக்கும் பட்டியல் தயாரித்து அவற்றை சமமாகப் பங்கிட்டுக் கொண்டார்கள். குழந்தைக்கு உடை மாற்றுவது, குளிக்க வார்ப்பது, மழலைக் கீதம் பாடுவது, நித்திரையாக்குவது, உணவு/ பால் கொடுப்பது, விளையாட்டுக் காட்டுவது, நாப்பி மாற்றுவது எல்லாம் பட்டியலில் இருந்தன. எவ்வளவு எளிய வேலை என்றாலும் அது பட்டியலின் பிரகாரம் சரி சமமாக பிரிக்கப்பட்டது.

அப்போதுதான் புதன்கிழமை பிரச்சனை உருவானது. ஞாயிறு, திங்கள், செவ்வாய் அவனுடைய முறை. வியாழன், வெள்ளி, சனி அவளுடைய முறை. புதன் கிழமை நடுவே வந்தது. அதை யார் செய்வது. அதற்கும் அவள் ஒரு வழி கண்டுபிடித்து சுமுகமாகத் தீர்த்துவைத்தாள். ஒரு மாதம் புதன்கிழமை அவன் வசம்; அடுத்த மாதம் அவள் வசம்.

பிறந்து பத்து மாதங்களில் லவங்கியின் எடை 14 றாத்தல் கூடியிருந்தது. அதில் ஏழு றாத்தல் அவனுக்கு சொந்தம்; மீதி ஏழு றாத்தல் அவளுக்கு சொந்தம். திங்கள் காலை ஏழு மணிக்கு அவன் லவங்கிக்கு பால் கொடுத்து, ஆடையணிந்து காரின் பின் இருக்கையில் வைத்து கட்டி அவளை குழந்தைகள் காப்பகத்துக்கு எடுத்து செல்வான். மாலையில் அவள் லவங்கியை அழைத்து வருவாள். இந்த வேலைப் பங்கீடு கறாரான ஒழுங்குடன் நடைபெற்றது.

தவழத் தொடங்கியபோது லவங்கிக்கு பெரிய குழப்பம் உண்டானது. அவளுடைய பொம்மை ஒன்றை நெடுநேரம் கூர்ந்து பார்ப்பாள். தவழும் நிலைக்கு வந்து தயாராவாள். பிறகு தலையை கீழே போட்டுக்கொண்டு உந்தி உந்தி பின்பக்கம் போய்விடுவாள். அந்தப் பொம்மை இன்னும் தூரமாகிவிடும். தன் இயக்கத்தில் ஏதோ தவறு இருப்பது லவங்கிக்கு வெகு காலமாகத் தெரியவில்லை. இறுதியில் எப்படியோ முன்னுக்கு தவழப் பழகிவிட்டாள்.

புத்தகங்களில் லவங்கிக்கு அளவில்லாத பிரியம். அவன் படித்தால் கேட்டுக்கொண்டே இருப்பாள். சில வேளைகளில் வேண்டுமென்றே புத்தகத்தை அவன் தலைகீழாக வைப்பான். அதை திருப்பி வைக்கலாம் என்பது லவங்கியின் மூளையின் எல்லைக்குள் வராது. எதிர்ப்பக்கம் தவழ்ந்து போய் உட்காருவாள். அவன் மனைவியைப் பார்த்து ‘உன் மூளை உன் மகளுக்கு ‘ என்று சீண்டுவான். பட்டியல்காரி ‘இல்லை, சரி பாதி ‘ என்பாள்.

அவன் ஒரு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர். வேலை கனமில்லாதது. ஆனால் ஒரு சிக்கல் இருந்தது. அவனுடைய வீட்டிலிருந்து பல்கலைக் கழகம் ஒன்றரை மணி நேர கார்ப்பயண தூரத்தில் இருந்தது. இப்படி ஒரு நாளில் அவனுக்கு மூன்று மணி நேரம் பிரயாணத்தில் செலவழிந்துவிடும். வீடு திரும்பும்போது மிகவும் களைத்துப்போய் வந்து சேர்வான்.

ஒரு தனியார் கணக்காய்வு நிறுவனத்தில் அவள் கடுமையாக உழைத்தாள். தன் கைவசம் உள்ள வேலையெல்லாம் முடிவதற்கிடையில் நேரம் தீர்ந்துவிடுகிறது என்று தினமும் முறைப்பாடு வைப்பாள். நாளுக்கு 12 ெ 14 மணி நேர வேலை. இது தவிர ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பு, நெடுந்தூரப் பயணம் எல்லாம் உண்டு.

எந்த விதப் பிரச்சனைகளையும் முன்கூட்டியே அனுமானித்து அவற்றை எதிர்கொள்வது அவர்கள் வழக்கம். அதன்படியே நாளாந்த பட்டியல் தயாரித்து அவனுக்கு ெஅவளுக்கு என்று பிரித்து சமாளிக்க பழகிக்கொண்டனர். மேலதிக வேலையாக கடமைகள் சரிவர நிறைவேற்றப் படுகின்றனவா என்பதையும் அவளே கவனித்துக்கொண்டாள்.

அவனுடைய மனைவி இரண்டு நாள் கருத்தரங்கு ஒன்றுக்கு ஆயிரம் மைல் தூரம் செல்கிறாள். இதுதான் அவள் முதல் தடவை லவங்கியை விட்டு பிரிவது. அவன் இரண்டு இரவுகளும், இரண்டு பகல்களும் லவங்கியை தனியாக கவனிக்கவேண்டும். அது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. அவள் திரும்பிய பிறகு வேலைப் பங்கீடுகளை மீண்டும் சரிப்பண்ணிக் கொள்ளலாம்.

வழக்கம்போல டேகேரில் இருந்து லவங்கியை கூட்டிவந்தான். பால் கொடுத்து, குளிக்க வார்த்து சரியாக ஏழு மணிக்கு படுக்கையில் போட்டான். வழக்கத்திலும் பார்க்க லவங்கி அன்று சோர்வுடன் காணப்பட்டாள். இரவு படுக்கமுன் லவங்கியின் அறைக்கு சென்று பார்த்தான். அவள் அனுங்குவது கேட்டது. தொட்டுப் பார்த்தால் உடம்பு கணகணவென்று கொதித்தது. வீட்டிலே எப்பொழுதும் தயாராக இருக்கும் ரைலனோலை கொடுத்தான். ஒரு மணி நேரம் பொறுத்து பார்த்தபோது காய்ச்சல் கொஞ்சமும் குறையவில்லை. ஆனால் மூச்சு முட்டல் அதிகமாகி சிணுங்கல் அழுகையாக மாறியிருந்தது.

லவங்கி இன்னும் இருபது றாத்தல் எடையை எட்டவில்லை. காரில், பின் பக்கம் பார்க்கும் சீட்டில் அவளைப் போட்டு கட்டி, அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு விரைந்தான். மனைவி இருந்தால் குழந்தை பக்கத்தில் இருப்பாள். இன்று யாருமில்லை. பின் சீட்டில் இருந்த அவளைப் பார்க்க முடியாதது பெரிய குறையாகப் பட்டது. லவங்கி மூச்சு விடத் திணறுவதும், முனகுவதும் கேட்டது. புறப்படுமுன் அவளுடைய காய்ச்சல் 103 டிகிரி. வேக எல்லைகளைக் கவனிக்காமலும், மஞ்சள் கோடுகளை மதிக்காமலும், அடிக்கடி மிருதுவான குரலில் ‘லவங்கி, லவங்கி ‘ என்று உச்சரித்தபடியே காரை ஓட்டினான்.

நேற்று லவங்கியிடம் அவன் மிகவும் கடுமையாக நடந்து கொண்டு விட்டான். பாத்திரம் கழுவியில் அவளுக்கு மோகம் அதிகம். அவன் மூடியை திறந்ததும் அவள் தவழ்ந்து வந்து ஏறி உட்கார்ந்து கொள்வாள். இறங்காமல் அடம் பிடிப்பாள். சத்தமாக அவன் ஓர் அதட்டல் போட்டான். அவள் விம்மி விம்மி அழத்தொடங்கினாள். மிகச் சாதாரணமான ஒரு இன்பத்தை தான் அவளுக்கு மறுத்ததை நினைத்தபோது என்னவோ செய்தது.

அவசரப் பிரிவில் லவங்கியை பரிசோதித்த டொக்டருடைய முகத்தை கூர்ந்து கவனித்தான். அவர் எல்லாவித சோதனைகளையும் செய்தார். காய்ச்சலைக் குறைக்க கடுமையான மருந்தொன்றைக் கொடுத்து ஒரு மணி நேரம் காத்திருக்கச் சொன்னார். அப்படியே செய்தான். இருந்தும் உஷ்ணம் குறையவில்லை. லவங்கி அடிக்கடி கண்களை திறந்து பார்த்தாள். அதற்கு கூட போதிய பலம் இல்லாததால் மூடிவிட்டாள். ஒரு இரும்புக் கதவை மூடுவதுபோல பெரிய சத்தத்துடன் சுவாசம் வந்தூகாண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் இந்த சுவாசம்தான் கடைசி சுவாசமாக இருக்குமோ என்ற பயம் எழுதூகாண்டே இருந்தது.

அவசர சிகிச்சை பிரிவுக்கு அம்புலன்ஸ் வாகனங்கள் அடிக்கடி வந்தபடியே இருந்தன. கடைசியாக கை அறுந்து தொங்கியபடி ஒரு சிறுவனை சில்லு வைத்த கட்டிலில் தள்ளிக்கொண்டு வந்தார்கள். பின்னால் பெற்றோர் ரத்தக்கறை உடையுடன் விரைந்தாார்கள். இவனால் தொடர்ந்து மாறிக்கொண்டு வரும் வேதனைக் காட்சிகளை தாங்க முடியவில்லை. லவங்கியை நெருக்கமாக அணைத்தபடி காத்திருந்தான்.

டொக்டர் மறுபடியும் வந்து மேலும் பரிசோதனைகள் செய்யவேண்டும் என்றார். ஒரு தாதி வந்து ரத்தம் எடுப்பதற்காக ஊசியை செலுத்தினாள். ஐந்து நிமிட நேரம் ஐந்து இடங்களில் கிண்டினாள். பல தடவை முயற்சி செய்தும் அவளால் ரத்த நாளத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தலைமை தாதி போல தெரிந்த ஒருத்தி வந்து மீண்டும் முயற்சி செய்தாள். லவங்கி தன் கையைக் கொடுத்துவிட்டு இந்த உலகத்தில் தன்னை காக்க ஒருவருமே இல்லை என்பதுபோல உச்சக்குரலில் கதறினாள். போதிய ரத்தத்தை உறிஞ்சி எடுத்தபிறகு முன் யோசனையாக ஊசியை வெளியே எடுக்காமல் கையுடன் சேர்த்து கட்டுப்போட்டு வைத்தார்கள். இப்பொழுது லவங்கி அவன் கழுத்தை கட்டிப்பிடித்தபடி, கால்கள் இரண்டையும் அவன் இடுப்பில் பாம்புபோல சுற்றிக்கொண்டு, விம்மியபடியே இருந்தாள்.

அவளுடைய சின்ன உடம்பை வதைப்பதற்கு இன்னும் பல தயாரிப்புகள் நடந்தன. இப்பொழுது சிறுநீர் வேண்டும் என்றார்கள். பச்சைக் குழந்தையிடம் சிறுநீர் எடுப்பது எப்படி. அவர்கள் விடுவதாக இல்லை. அதே தாதி வந்தாள். அவளுடைய கெட்டியாக நிற்கும் வெள்ளை கவுனை பார்த்த கணமே லவங்கி கத்தத் தொடங்கினாள். ஒரு மிக மெல்லிய ட்யூபை அவள் உடம்புக்குள் செலுத்தினாள். லவங்கியின் அலறல் எல்லையை அடைந்துவிட்ட காரணத்தினால் உடலை வில்லுப்போல எதிர்ப்பக்கமாக வளைத்து திமிறி தன் எதிர்ப்பை காட்டினாள்.

டொக்டர் இரவு ஆஸ்பத்திரியில் தங்க வேண்டும் என்றார். அவள் கையிலே ஒரு பிளாஸ்டிக் காப்பு மாட்டப்பட்டது. அதிலே லவங்கியின் பேரும், தேதியும், ஒரு நம்பரும் இருந்தது. லவங்கியை பற்றிய எல்லா பதிவுகளும் கம்புயூட்டரில் இந்த நம்பரின் கீழ் பதியப்படும் என்றார்கள். லவங்கியின் வீட்டு ஆடையை களைந்துவிட்டு, பின்னுக்கு முடிச்சுப்போடும் ஒரு தொளதொளத்த நீல கவுனை அணிவித்தார்கள். தடுப்பு போட்ட உயரமான கட்டிலில் அவளைக் கிடத்தி, அந்தச் சின்னக் கையிலே குத்தியிருந்த ஊசியின் மூலம் சேலைன் சொட்டுகளை உடம்பிலே செலுத்த தொடங்கினார்கள். கால் பெருவிரலில் தொடுத்த வயர், அவளுடைய உயிர் விநாடிகளை, கம்புயூட்டர் திரையில் இருதயத் துடிப்பாக காட்டியது. மூக்கிலே பிராண வாயுவும் போனது. இவை எல்லாம் ஆயத்தங்கள்தான். சிகிச்சை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றார்கள். கடுமையான வலியிலிருந்து அவள் மெள்ள மெள்ள விடுபட்டு வருவதுபோல தெரிந்தது. அவன் அவளுடைய முதுகை வருடியபடியே இருந்தான்.

இரவு மணி இரண்டிருக்கும். மறுபடியும் டொக்டர் வந்தார். சோதனையில் கிடைத்த தகவல்கள் சிகிச்சைக்கு போதாது, லவங்கியின் சுவாசப் பைகளை எக்ஸ்ரே எடுக்கவேண்டும் என்றார். இதற்குமுன் எத்தனையோ பேர் படுத்த கட்டிலில் ஒரு பாவப்பட்ட ஜீவனைப்போல சுருண்டுபோய் லவங்கி அப்பொழுதுதான் சற்று அயர்ந்திருந்தாள்.

நூறு பின்னல்கள் செய்து மடித்துக் கட்டிய தலையோடு கறுப்பு இனத்து இளைஞன் ஒருவன் வந்தான். எக்ஸ்ரே எடுப்பதற்கு அவனே வண்டியில் அவளைத் தள்ளிப் போனான். அவள் அணிந்திருந்த நீல நிற சைஸ் பெரிதான ஆஸ்பத்திரி கவுனை அகற்றினார்கள். ஓர் இரவிற்கிடையில் அவளுடைய விலா எலும்புகள் வரிவரியாக தள்ளிக்கொண்டு நின்றன. ஈயக் கவசம் அணிந்த ஊழியர் இருவர் லவங்கியை தூக்கி பிடித்து சதுரமான உலோகத்தில் நெஞ்சை அழுத்தி எக்ஸ்ரே எடுத்தார்கள். லவங்கி யாரோ துப்பாக்கியை காட்டியதுபோல இரண்டு கைகளையும் தூக்கிப் பிடித்தபடி தலையை குனிந்து கதறினாள். ரத்தம் எடுக்கும்போதும், ரப்பர் குழாயை உள்ளே செலுத்தும்போதும் இல்லாத அழுகையாக இந்த அலறல் இருந்தது. அந்நியர்கள் இப்படி அமுக்கிப் பிடிக்க அனுமதித்த தன் அப்பாவை நம்ப முடியாத கண்களினால் கெஞ்சினாள். அந்த பரிதாபமான விழிகள் அவன் நெஞ்சத்தின் ஆழமாக பதிந்தன.

டொக்டர் காலை ஐந்து மணிக்கு வந்தார். மறுபடியும் பரிசோதனைகள். சேலைனுடன் சேர்த்து பொதுப்படையான மருந்து செலுத்தினார்கள். இதுவும் தற்காலிக ஏற்பாடுதான். சுவாசப்பையில் நீர் கட்டியிருக்கிறது, அதை அகற்றவேண்டும். பெரிய டொக்டரையும், ரேடியோலஜிஸ்டையும் கலந்துதான் முடிவுக்கு வரமுடியும் என்றார். அவனுக்கு திக்கென்றது. என்றென்றைக்குமாக அவனைவிட்டு லவங்கி போய்விடுவாளோ என்ற திகில் பிடித்தது. . அந்த நேரம் பார்த்து அவன் மனைவி கைபேசியில் அழைத்தாள். அன்றைய கருத்தரங்கில் அவள் தான் முதல் பேச்சாளர். அவளைக் கலவரப் படுத்த அவன் விரும்பவில்லை. வீட்டிலே எல்லாம் ஒழுங்குமுறையாக நடக்கிறது என்பதுபோல சொல்லி வைத்துவிட்டான்.

அவனுடைய பல்கலைக் கழகத்தை அழைத்து தகவல் விட்டான். அன்று அவனுக்கு மிகப் பிரதானமான ஒரு சந்திப்பு இருந்தது. கடந்த ஆறு மாத காலமாக முயற்சி செய்து கிடைத்தது. அதையும் கான்சல் பண்ணினான். ஒரு இரண்டு அவுன்ஸ் பாலை போத்தலில் ஊற்றி அவளுக்கு புகட்டப் பார்த்தான். லவங்கி மறுபக்கம் திரும்பி படுத்துவிட்டாள்.

லவங்கியின் காய்ச்சல் குறைந்துவிட்டதாக தாதி சொன்னது கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. மூச்சு சிரமப்பட்டு போனது ஆனால் முந்திய மாதிரி திணறல் இல்லை. முனகல் மாத்திரம் இருந்தது. சுவாசப்பை 90 வீதம் வேலைசெய்வதாக மீட்டர் சொன்னது. இருதயத்தின் ஒலியை கம்புயூட்டர் வரைபடமாக காட்டியது. அதில் ஏற்படும் சிறு ஒலி மாற்றமும் இவனுக்கு பகீரென்றது.

கடைசியில் ரேடியோலஜிஸ்ட் வந்த பிற்பாடு சுவாசப்பையில் தண்ணீர் கட்டவில்லை. ஒரு சுவாசப்பை மடிந்து சுருங்கிவிட்டது. லவங்கி 24 மணி நேரமாக ஒரு சுவாசப்பையில்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். சேலைனுடன் சேர்ந்து புதிய மருந்தை உதூசலுத்தினால் சுவாசப்பை பழைய நிலமைக்கு மீண்டுவிடும். பயப்படத்தேவை இல்லை என்றார்.

அவனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. மெல்ல லவங்கியை தடவியபடியே பார்த்தான். பலவித வயர்களும், டியூபுகளும் அவள் உடலில் இருந்து மேலே போயின. கயிற்றிலே வேலை செய்யும் ஒரு பாவையை யாரோ எறிந்துவிட்டதுபோல நடுக் கட்டிலில் அநாதரவாகக் கிடந்தாள்.

பின்னேரம் நாலு மணியளவில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. சுவாசப்பை வேலை 100 வீதம் காட்டியது. முதன்முதலாக அப்பொழுதுதான், இத்தனை மணி நேரத்துக்கு பிறகு வாயை திறந்து லவங்கி புன்னகை செய்தாள். இயக்கமில்லாத நிலையிலும் தன் மெலிந்துபோன வயிற்றை மெத்தையிலிருந்து எம்பி எம்பிக் காட்டியபடியே சிரித்தாள். அவனுக்கு மனதை என்னவோ பிசைந்தது.

ஆறுமணிக்கு முதன்முதலாக பால் இரண்டு அவுன்ஸ் குடித்தாள். தாதி வந்து பார்த்துவிட்டு இனிமேல் பயப்பட ஒன்றுமில்லை, பசிக்கும்போதெல்லாம் பால் கொடுக்கலாம் என்றாள். அவனுக்கு கொஞ்சம் நிம்மதி திரும்பியது. மனைவியை கூப்பிட்டு சொல்லுவோமா என்று நினைத்தான். மறுபடியும் இப்பொழுது சொல்லி என்ன பிரயோசனம் வந்த பிறகு பார்க்கலாம் என்று எண்ணத்தை மாற்றிவிட்டான். அன்று இரவு பார்க்க வந்த டொக்டர் நல்ல முன்னேற்றம் என்றார். எல்லா பரிசோதனைகளையும் மீண்டும் செய்தார். மூச்சு சீராக இயங்குகிறது. இன்று இரவும் இப்படியே தாண்டிவிட்டால் நாளை பெரிய டொக்டர் வீட்டுக்கு போக அனுமதிப்பார் என்றார். வாழ்க்கையில் முன்னெப்போதும் கிடைக்காத ஒரு ஆறுதல் அப்போது கிடைத்தது.

ஆனால் புதிய அதிர்ச்சி ஒன்றை அன்று இரவு அவன் எதிர்பார்க்கவில்லை. மனைவிவியிடம் இருந்து பத்து மணிக்கு தொலைபேசி வந்தது. அவள் கலந்தூகாண்ட கருத்தரங்கைப் பற்றி நிறையப் பேசினாள். மனது நிறைய சந்தோசமாக இருந்தாள். அடுத்த நாள் மாலை வந்துவிடுவதாகக் கூறினாள். அப்போதுகூட சொல்லிவிடலாம் என்று தோன்றியது. அவளுடைய அழகான நித்திரையை கெடுத்து என்ன பிரயோசனம் என்று தவிர்த்து விட்டான்.

இருளூட்டப்பட்ட அறையின் நாற்காலியில் அமர்ந்தபடியே அன்று உறங்கினான். இரவு பன்னிரெண்டு மணியிருக்கும். ஆஸ்பத்திரியில் இவனுடைய இரண்டாவது இரவு. திடாரென்று லவங்கி எழுந்து வீர் என்று அலறினாள். வயர்களும், டியூபுகளும் நாலு பக்கமும் இழுக்க நிலைகொள்ளாமல் துடித்தபடி படுக்கையில் சுருளத் தொடங்கினாள். இவன் அவசர மணியை அழுத்திவிட்டு, தடுப்பை கீழே இறக்கி அவளை வேகமாக அள்ளினான். அவன் கையிலே லவங்கி வழுக்கியபடி துடித்து கொண்டிருந்தாள்.

இரண்டு தாதிமார் ஓடிவந்தார்கள். லைட்டை போட்டார்கள். ஊசி ஏற்றப்பட்ட அவளுடைய கை வீங்கிப்போய் மினுமினுத்தது. தாதி உடனே யோசிக்காமல் ஊசியை நீக்கி கட்டையும் அவிழ்த்துவிட்டாள். லவங்கியின் விரல்கள் பந்துபோல் சுருண்டு, உள்ளங்கை ரேகைகள் மறைந்துவிட்டதை பிரமிப்புடன் பார்த்தான். அது அவளுடையது அல்ல; வேறு யாருக்கோ சொந்தமான தனியுறுப்புபோல அசிங்கமாக ஊதிப்போய் கிடந்தது.

ஊசி நழுவி சேலைன் தசைக்குள் போயிருக்கிறது. தாதிமார் வீக்கத்தை அடக்குவதற்கு சிகிச்சை கொடுத்தார்கள். லவங்கி அப்படியே அழுது அழுது இனிமேல் இயலாது என்ற நிலையில் ஓய்ந்துபோனாள். இருந்தும் அவளுடைய உடல் வெகுநேரமாக நடுங்கிக் கொண்டிருந்தது. இந்த உலகத்தில் யாருமே இல்லை என்பது போன்ற தனிமையில் துயரமும், மெளனமும் அழுத்த அவன் சுவரை வெறித்தபடி உட்கார்ந்திருந்தான். அவனுடைய இருதயத்தைப் போலவே அவனுடைய மடியிலும் ஒரு உயிர் துடித்தது. ஒன்பதாவது மாடியின் அந்த அறைக்குள் சூரியனுடைய முதல் கிரணங்கள் நுழையும் வரை அவன் அசையவில்லை.

காலை டொக்டர் வந்து பார்த்தபோது வீக்கம் குறைந்திருந்தது. அதற்கான சிகிச்சைக்கு மருந்து எழுதினார். பிறகு பின்னேரம் வீட்டுக்கு போகலாம் என்றார். நம்பமுடியாத திகைப்பும், மகிழ்ச்சியும் அவனுக்கு ஏற்பட்டது. ஏதாவது விளையாட்டு காட்டுவதற்கு லவங்கியை ஒரு சிறு தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு அந்த வார்டைச் சுற்றி ரவுண்டு வந்தான். ஒரு மனித உடல் தாங்கக்கூடிய எல்லை மட்டுமான வலியை அவள் அனுபவித்துவிட்டாள். அதை எல்லாம் மறந்து பிரகாசமான ஒரு சிரிப்பு சிரித்தாள். அவள் என்ன கேட்டாலும் அந்த விநாடி அதைச் செய்வதற்கு அவன் சித்தமாயிருந்தான்.

நாலு மணியளவில் தாதி வந்தாள். அவளைக் கண்டதும் லவங்கி கண்களைத் தாழ்த்தி, அவன் தோள்களுக்குள் தலையைப் புதைத்து மறைந்துபோகப் பார்த்தாள். லவங்கி கையிலே மாட்டிய பிளாஸ்டிக் காப்பை வெட்டினாள். அடுத்த இரண்டு நாட்களும் என்ன மருந்து, எப்போது கொடுக்க வேண்டும் போன்ற விவரங்களை அவள் சொல்ல குறித்துக்கொண்டான். லவங்கிக்கு வந்தது நியூமோனியா. ஒரு சுவாசப்பை கொடூரமான கிருமிகளால் தாக்கப்பட்டிருந்தது. அடுத்த சுவாசப்பையும் எந்த நிமிடத்திலும் மடிந்திருக்கலாம். அவன் அவசர சிகிச்சைக்கு வந்ததால் குழந்தை பிழைத்தாள். இனிமேல் கவனமாய் இருக்க வேண்டும் என்றாள்.

கிடைக்க முடியாத பொக்கிஷம் ஒன்று கிடைத்ததுபோல லவங்கியை அள்ளி தூக்கிக்கொண்டான். பிரத்தியேகமான குழந்தை இருக்கையில் அவளை இருத்திக் கட்டி, ‘லவங்கி, லவங்கி ‘ என்று மெல்லிய குரலில் அழைத்தபடி காரைக் கிளப்பினான். அவளுக்கு பிடித்த பாட்டை வைத்தான். அந்த கீதம் காரை நிறைத்தது. லவங்கி மெதுவாக இரண்டு பக்கமும் தலையை ஆட்டியபடி தூங்க ஆரம்பித்தாள்.

வீடு வந்ததும் விழித்துக்கொண்டாள். தனது அறையையும், தனது பொம்மைகளையும் பார்த்து ஆரவாரப் பட்டாள். இதுவரை காணாத ஒரு புது உலகத்துக்குள் வந்தது போல மகிழ்ச்சி அவளை மூழ்கடித்தது. நாலு கால்களிலும் தவழ்ந்து தவழ்ந்து தன் முழு அறையையும் திருப்தி ஏற்படும் வரைக்கும் சோதித்து உறுதி செய்தாள்.

அவளுடைய பாலை சூடாக்கி பருக்கினான். இரவு உடைக்கு அவளை மாற்றினான். நீல மேற்சட்டை, மஞ்சள் காற்சட்டை. அப்பொழுதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது இரண்டு நாட்களாக தான் ஒன்றுமே உண்ணவில்லை என்பது. ஆனால் சமைத்து சாப்பிடும் மூடில் அவன் அப்போது இல்லை. ஏதாவது இலகுவான அயிட்டம் போதும். ஒரு சூப் டின்னை தேடி எடுத்து, ஒரு பாத்திரத்தில் இட்டு, நுண்ணலை அடுப்பில் வைத்து இரண்டு நிமிட பட்டனை அமுக்கினான். அது பாத்திரத்தை சுழலவிட்டது.

லவங்கி அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விளையாட்டை ஆரம்பித்திருந்தாள். பிளாஸ்டிக் பைகளை பிசைந்து தலையிலே கவிழ்த்து விளையாடுவது. தடுக்கப்பட்ட விளையாட்டு என்றபடியால் அவளுக்கு அதிகமான ஆவல் ஏற்பட்டது. இந்தக் கட்டுப்பாடற்ற சுதந்திரம் அவளுக்கு பிடித்திருந்தது. வெகு விரைவிலேயே இதற்கு ஒரு தடை வரும். அதற்கிடையில் அந்த விளையாட்டின் உச்சத்தை அடைந்துவிட எண்ணினாள். முகத்தில் தாங்கமுடியாத கள்ள சந்தோசம்.

அந்த நேரம் பார்த்து வாசல் அழைப்பு மணி கிர்ர்ங் என்று தொடர்ந்து ஒலித்தது. நிற்க அவகாசம் தராமல் அப்படி பொத்தானை அமுக்குவது வேறு யாரும் அல்ல. அவனுடைய மனைவிதான். மறுபடியும் வீட்டு சாவியை மறந்துவிட்டு போயிருக்கிறாள். மணிச்சத்தம் கேட்டு லவங்கி இருந்தபடியே இடுப்புக்கு மேல் திரும்பி கைகள் இரண்டையும் பறவை போல ஆட்டத் தொடங்கினாள். வருவது அம்மா என்பது அவளுக்கு எப்படியோ தெரிந்துவிடும். அவள் குடிக்காமல் விட்ட மீதப் பால் இரண்டு அவுன்ஸ் போத்தலில் அப்படியே பக்கத்தில் கிடந்தது.

அவன் மனைவி உள்ளே வந்ததும் அவன் கன்னத்தில் சிறு முத்தம் கொடுப்பாள். அவனுடைய கன்னத்துக்கும் அவளுடைய உதட்டுக்கும் இடையில் நிறைய காற்று இருக்கும். கைப்பைகளை கீழே உதறும் அதே கணத்தில் ‘லவங்கீ ‘ என்று ஆசையாகத் தாவி அவளை அணைப்பாள். இரண்டு அவுன்ஸ் பால் மிச்சம் விட்டதை சுட்டிக் காட்டுவாள். பிளாஸ்டிக் பைகள் தரும் ஆபத்தை பற்றி மீண்டும் போதனை நடக்கும். இரவு தூக்கம் தள்ளிப்போவதால் ஏற்படும் மோசமான விளைவுகள் பற்றி முறைப்பாடு வைப்பாள். தூக்க ஆடைகள் கீழுக்கு மஞ்சளும், மேலுக்கு நீலமுமாக மாட்ச் பண்ணாமல் இருக்கும் அபத்தத்தை உடனேயே மாற்றியாகவேண்டும் என்பாள். மிகக் கடினமான கணக்குகள் போட்டு அடுத்த நாளைக்கு யார் லவங்கியை டேகேரில் இருந்து அழைத்து வரவேண்டும் என்பதை சரியாகக் கண்டுபிடித்து

சொல்வாள்.

அழைப்பு மணிச்சத்தம் அடிக்கத் தொடங்கி அது நிற்க எடுத்துக் கொண்ட நீண்ட நேரத்தில் அவன் இவ்வளவையும் நினைத்துக் கொண்டான்.

முற்றும்

Appadurai Muttulingam

51, Alexmuir Blvd

Scarborough, Ont

M1V1H3

Canada

Tel/Fax 416 299 1431

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்