அங்கே இப்ப என்ன நேரம் ? (கட்டுரைகள்) : அ.முத்துலிங்கம்

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

சுகுமாரன்


வெளியீடு: தமிழினி

67 பீட்டர்ஸ் சாலை

ராயப்பேட்டை

சென்னை – 600 014.

பக்கங்கள்:344 விலை: ரூ.180/-

—-

கையில் எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது என்று ஒரு புத்தகத்தைப் பற்றிச் சொல்வது உயர்வு நவிற்சியாக இருக்கலாம்.நாற்பத்தி எட்டு கட்டுரைகளடங்கிய இந்த நூலை அப்படிப் பரிந்துரைப்பது மிக இயல்பான செயல் மட்டுமே.

வாழ்வின் கணங்களை மையப் பொருளாகக் கொண்டவை இவை.அன்றாடச் சம்பவங்கள், பிற மனிதர்களுடனான சந்திப்புகள், இலக்கிய வாசிப்பு,திரைப்படம்,தொலைக்காட்சி, நிகழ்கலைகளை ரசித்த சந்தர்ப்பங்கள், நினைவு கூரல்கள், தற்செயலான அதிர்ச்சிகள் என ஒரு மனிதனாகத் தன்னைத் தொட்ட எல்லா நடவடிக்கைகளையும் ஓர் எழுத்தாளராக வாசகனுடன் பகிர்ந்து கொள்ளுகிறார்

முத்துலிங்கம்.எல்லாருக்கும் வாய்க்கக் கூடியதும் வாய்க்க இயலாததுமான தருணங்களை கட்டுரையாளரின் நுட்பமான பார்வையே சுவாரசியமான அனுபவமாக மாற்றுகிறது. எல்லாரும் சுத்தியலை எடுத்து சுவரில் ஒரு ஆணியையாவது அடித்திருப்போம். எல்லாரும் கடன் அட்டைக்காக கெளரவ யாசகம் நடத்தியிருப்போம்.நூற்றி நாற்பதுவிதமான ஆணிகளும் அறுபத்தி நான்கு வகையான சுத்தியல்களும் இருப்பதையும் அவதிப்பட்டுக் கடனாளியாவதன் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதையும் முத்துலிங்கம் கட்டுரையாக்குகிறார்.இந்த எதிர்பாராத கவனப்படுத்தல்கள் ருசிகரமான தகவல்களாகவும் நுட்பமான தூண்டுதல்களாகவும் தொகுப்பு முழுவதும் விரவிக்கிடக்கின்றன.

நாம் அறிந்த மொழியில் நமக்கு அந்நியமான வெவ்வேறு உலகப் பகுதிகளைக் காட்டுகிறார் முத்துலிங்கம். ஈழத்தில் பிறந்தவர்.பணியின் பொருட்டு உலக நாடுகள் பலவற்றிலும் வசித்தவர்.வெவ்வேறு நாடுகளின் பின்னணியிலான அனுபவங்களை முன்வைக்கும்போதும் அவற்றில் முதன்மையாக இருப்பது மனித இயல்பு சார்ந்த அக்கறைகள் மட்டுமே.இந்த அக்கறை அவரது எழுத்துக்குப் புலம் கடந்த விரிவைத் தருகிறது. முகங்களும் மொழியும் கலாச்சாரமும் வேறுபட்டதாக இருந்தாலும் மனித மனத்தின் பொது இயல்புகள் அநேகமாக ஒற்றுமைகொண்டவை என்ற உணர்வு கட்டுரைகளை வாசிக்கையில் தவிர்க்கவியலாமல் எழும்.

எளிமையும் சுவாரசியமும் கலந்த நடை முத்துலிங்கத்தின் தனிச் சிறப்பு.இலக்கியம் கலை சார்ந்த கட்டுரைகள் கெட்டியான நடையில் இருப்பதே சிலாக்கியம் என்ற மூட நம்பிக்கையைத் தகர்ப்பவை இந்தக் கட்டுரைகள்.மெல்லிய அங்கதமும் எதார்த்தமான நகைச்சுவையும் இழைந்தவை. அபாயகரமான சூழலிலும் தர்மசங்கடமான வேளைகளிலும் கூட கட்டுரைகளின் வரிகளிலிருந்து மெல்லிய சிரிப்பு எதிரொலிக்கிறது.

முத்துலிங்கம் நடத்திய நேர்காணல்களும் மேற்கொண்டிருக்கும் மொழிபெயர்ப்புகளும் நூலின் வலுவான பகுதிகள்.ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவின் சிறுகதையொன்றின் நறுவிசான மொழிபெயர்ப்பும் அதைப் பற்றிய விமர்சனமும் நேர்த்தியானவை. ‘ஒரு பென்சிலைச் சீவிச்சீவிக் கூராக்குவதுபோல கதை கடைசி வரிகளை நோக்கி நகர்த்தப் பட்டிருக்கிறது ‘ என்ற விளக்கம் கட்டுரையாளரின் விமர்சன நுட்பத்துக்கு உதாரணம்.

சிவாஜி கணேசனை ஏன் மணந்துகொள்ளவில்லை ? என்ற கேள்விக்கு முத்துலிங்கத்தின் விருந்தினரான நடிகை பத்மினி சொல்லும் பதில் ‘நான் நாயர் பொண்ணு.அவர் கள்ளர். நடக்கிற காரியமா ? ‘ இதே சமூகப் பாகுபாடு மற்றொரு கட்டுரையில் தோலின் நிறம் சார்ந்த பிரச்சனையாக வெளிப்படுகிறது.தன்னுடன் பணியாற்றும் சக டாக்டரை அமெரிக்க டாக்டரொருவர் ‘மூளைசெத்தவன் ‘ என்று அவமதிக்கக் காரணம் முன்னவர் கறுப்பினத்தவர்.

வாசித்த புத்தகங்களைப் பற்றியும் பார்த்த திரைப்படங்களைப் பற்றியும் முத்துலிங்கம் செய்யும் அறிமுகங்கள் ஆர்வமுள்ளவர்களுக்குத் துணைபுரிபவை. ஈரானிய இயக்குநரான அப்பாஸ் கியரோஸ்தமியைக் குறித்து முத்துலிங்கம் செய்த பரிந்துரை அந்த இயக்குநரின் படங்களைத் தேடிப்பிடித்துப் பார்க்கவும் அவை பற்றிப் படித்து அறியவும் பேருதவியாக இருந்தது. அப்பாஸ் கியரோஸ்தமி ஒரு கவிஞர் என்றும் முத்துலிங்கம் குறிப்பிடும் திரைப்படத்தின் தலைப்பு ‘காற்று எங்களைக் காவும் ‘ என்பது ஈரானின் முதல் பெண்ணியக் விஞரான ஃபரூக் ஃபரோக்சாத் எழுதிய கவிதையொன்றின் தலைப்பு வரி என்றும் தேடி அறிந்து கொண்டபோது முத்துலிங்கத்திடம் நன்றி மேலிட்டது. இந்தக் கட்டுரைத் தொகுப்பை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்களது அக்கறைகள் சார்ந்த அனுபவத்தைக் கண்டடைவது சாத்தியம்.

எழுதியவரையும் வாசிப்பவரையும் ஒரே விதத்தில் கெளரவைக்கும் முறையில் நூலை நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறது தமிழினி.

—-

sukumaran@sunnetwork.in

Series Navigation

சுகுமாரன்

சுகுமாரன்