“கிராமம்”

This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue

நவநீ


சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமமான தன் சொந்த ஊரில் இருக்கும் அம்மாவுக்கு பாலு அமெரிக்காவிலிருந்து போன் செய்தான். ஐந்து பிள்ளைகளைப்பெற்றும் தான் தனிமையில் இருப்பதை பெரிதுபடுத்தாமல், உத்யோக காரணங்களுக்காக எல்லோருமே வெளியூரில் இருப்பதை நினைத்தும், சமீபத்தில் மறைந்துபோன தன் கணவரை நினைத்தும் கவலைப்படும் அம்மா, எப்போது பிள்ளைகள் போனில் பேசினாலும் அவர்கள் கவலைப்படக் கூடாதென்பதற்காக சந்தோசமாகத்தான் பேசுவாள். அந்தப் பகுதியில் யாருக்கு என்ன குறை நேர்ந்தாலும் தான் முன்னின்று தீர்த்துவைத்து நல்லது செய்யும் ஒரு உன்னதமான நல்ல மனிதர்தான் பாலுவின் அப்பா சீத்தாராமன். அவர் மறைவின்போது அந்தப்பகுதி மக்களே கண்ணீர் விட்டுத் துடித்துக் கதறிய காட்சி இன்னும் கண்ணைவிட்டு நீங்கவில்லை. மரணம் யாரைத்தான் விட்டுவைத்தது?

அம்மா குரலில் ஏதோ ஒரு வித்யாசம், “என்னம்மா! என்னாச்சும்மா! ஒடம்பு கிடம்புக்கு முடியலையாம்மா? பணம் வந்து சேந்துச்சாம்மா?” பாலு கேட்டான். “இல்லைய்யா! நான் நல்லாருக்கேன்! பணமெல்லாம் வந்துருச்சு, நீ எப்படிய்யா இருக்கெ?” அம்மா நலம் விசாரிக்க ஆரம்பித்தாள். பாலுவுக்கு மனதுக்குள் ஏதோ ஒரு நெருடல். அம்மாவைத் திரும்பத் திரும்பக் கேட்டான். இனி அம்மா மறைக்க விரும்பவில்லை. “அய்யா! நீ மனசு சங்கடப்படாத! நம்ம முருகையா மாமா இல்லைய்யா! அவெம்பொண்டாட்டி இருளாயி ராத்திரி மருந்தக் குடிச்சிட்டு செத்துப்போய்ட்டாய்யா….ஏதோ மாமியா மருமவக்குள்ள சண்டையாம், அத புருசன் கேக்கலேன்னு…இந்தச் சண்டாளி இப்படிப் பண்ணிப்புட்டா….ய்…யா…. ” அம்மாவின் தொண்டையில் துக்கம் வார்த்தைகளை வரவிடவில்லை. பாலு பதறிப்போனான், அவனால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, தொடர்ந்து அவனால் போனில் பேச முடியவில்லை. பாலுவின் தந்தை மறைவுக்குப்பின் அந்த ஊரில் எல்லாமே துரதிஷ்டவசமாகத்தான் நடக்கிறது. அவர் உயிரோடிருந்தபோது தன் பிரச்சினைகளை யார் வந்து சொன்னாலும் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பக்குவமாகப் பேசி, பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துவைத்துவிடுவார். இன்னும் என்னென்னவெல்லாம் நடக்கக் காத்திருக்கிறதோ என்று வேதனையுடன் பாலு சோபாவில் சாய்ந்தான்…..

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு முருகையா கையில் எட்டு மாத கைக்குழந்தையோடு தன் மனைவி இருளாயியை அழைத்துக்கொண்டு, கொட்டும் மழையில், இடி மின்னலோடு கூடிய அந்த கும்மிருட்டில் தன் வீட்டுக்கதவைத் தட்டியது தன் கண் முன்னே வந்தது, இவையெல்லாம் ஏதோ நேற்று நடந்தது போல இருந்தது பாலுவுக்கு.

“கதவத்தெறந்து, யாருன்னு பாருய்யா, ரசம் அடுப்புல கெடக்கு, கொதிச்சுப்போய்ட்டா ரசம் வாய்க்கி வெளங்காது” என்ற அம்மாவின் குரலையடுத்து, பாலு கதவைக் கஷ்டப்பட்டுத் திறந்தான், அப்போது பாலுவுக்கு ஒரு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். இருட்டில் யாரோ நிற்பது தெரிந்தது, பாலுவைப் பார்த்தவுடன், “மச்சான் இல்லையா? மருமயனே!” முருகையா. “இல்ல மாமா” பாலு. “யாருடாது இந்த அடமழையில?” அம்மா குரல் அடுப்படியிலிருந்து ஒலித்தது. “நாந்தாக்கா முருகையா, அக்கோவ்! செத்த இங்குட்டு வந்துட்டு போக்கோவ்! அம்மா வெளியே வந்தாள்.

முருகையா, ஒரு கிழிந்த சாக்கை மடித்து தன் எட்டுமாதப்பெண் குழந்தை நனையாமல் இருக்க மேலே கொங்கானியாகப் போட்டுக்கொண்டு மனைவியோடு நனைந்து நடுங்கிக்கொண்டு நின்றதைப் பார்த்த அம்மா, “அடப்படுபாவி, ஏன்டா! புத்தியா கெட்டுப்போச்சு ஒனக்கு? பச்சப்புள்ளய நனையவிட்டுக்குட்டு அங்கன நிக்கிற, உள்ள வாடா மொதல்ல, இந்தா தலைய தொவட்டுறா” என்று தன் முந்தானையை எடுத்துக்கொடுத்த தன் கூடப்பிறக்காத அக்காவைப் பார்த்த உடன் முருகையா கதறி அழுதே விட்டான். “அக்கா ஙப்பன் என்னயும் எம்பொண்டாட்டி புள்ளையும் வீட்ட விட்டு வெளில போடான்னு அடிச்சு வெரட்டிட்டாருக்கா, இருளாயிக்கும் அவருக்கும் என்னமோ பெரச்சனைக்கா, நான் எங்கக்கா போவேன், எனக்கு யாருக்கா இருக்கா?” மச்சான் வந்த ஒடனே ஒரு முடிவு பண்ணனும்க்கா, அதுக்குத்தாங்க்கா இங்க வந்தேன்” என்று புலம்பிக்கொண்டிருந்தான்.

“சரி சரி நீ உள்ள வா மொதல்ல, மச்சான் வெள்ளெனதேண்டா வருவாரு, நீ ஒன்னும் கவலப்படாமெ இரு! இந்தாடி இருளாயி அங்கன கொடில யாம்புட்டு பழய சீலை கெடக்குடி எடுத்துக் கட்டிகிட்டு இந்த ஈரத்துணிய மாத்துடி சட்டுனு, பச்சப்புள்ளக்காரி ஒடம்புக்கு எதுகும் வந்துறப்போகுது”.

பொழுது விடிந்தது, அடைமழை விட்டு வானம் வெளுத்திருந்தது, “ஏலே! பாண்டி நம்ம பனமரத்துல கொஞ்சம் ஓலை வெட்டியாடோவ்! டேய்! முருகையா! இங்கன கெழக்குப் பக்கத்துல எரவாரத்துல ஓலைய மோஞ்சு குடிசயப் போட்டுக்கடா!” சீத்தாராமன் சொல்லி முடித்தார். முருகையாவுக்கு மேலும் இரண்டு ஆண்குழந்தை பிறந்து இன்று நிம்மதியாக அந்த ஓலைக்குடிசையில் வாழ்ந்துகொண்டிருந்தான். சீதாராமனின் கைக்குழந்தைகளைக்கூட தன் குழந்தைகளைப்போலவே கைகளுக்குள்ளேயே போட்டு பாசத்தோடு வளர்த்தான்.

முருகையாவின் தந்தை ராமச்சந்திரவேளார் கோயில் பூசாரியாதலால் மிகவும் கட்டுப்பாடு மிக்கவர். தன்னை ஒரு வார்த்தைகூடக் கேட்காமல் சீதாராமன் முருகையாவுக்குத் தஞ்சம் கொடுத்தது இன்றுவரை அவருக்குக் கொஞ்சம் மனவருத்தம்தான். ஆனாலும் நல்ல மரியாதைக்குரிய மனிதர் என்பதாலும், அவர் செய்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற அவ்வட்டார மக்களின் அபார நம்பிக்கையின் காரணமாகவோ என்னவோ ராமச்சந்திரவேளார் சீத்தாராமனிடம் இதுவரை அந்த விஷயம் பற்றிப் பேசியதே இல்லை. அந்தக் கிராமத்தில் இவர்கள் வேறு வேறு சமூகத்தினர் என்றாலும், அனைவருமே மாமன், மருமகன் என்று முறைவைத்து ரத்த சம்பந்த உறவுகளைப்போலவே உறவு கொண்டாடும் அந்த கிராமங்களுக்கே உரிய பண்பாடு இருந்தது. எந்த விசயத்தையும் சீத்தாராமனின் ஆலோசனைப்படியே நடத்துவார்கள். எத்தனையோ பிரச்சினைகள் நடந்த போதிலும் அந்தப்பகுதிக்குப் போலீஸ் இதுவரை வந்ததில்லை, கிராமக்கட்டுப்பாடு, உறவுமுறை, வரம்பு, ஒழுக்கம் எல்லாமே இன்றுவரை சிறப்பாகத்தான் இருக்கிறது.

அக்காவின் அதிகாலை டீயை உறிஞ்சிக்கொண்டே “மச்சான் எனக்கும் குடும்பம் கொஞ்சம் பெரிசாயிருச்சு, இந்தக்குடிசையில கொஞ்சம் செரமமா இருக்கு, நம்ம கம்மாக்கரையில் இருக்கற வரகாம்புஞ்சயில ஒரு குடிசையப் போட்டுக்கிறேன், கூடவே புஞ்சயப் பாத்துக்கிறேன் மச்சான்” என்றான் முருகையா. பதிலுக்கு சீத்தாராமன் சிரித்துக்கொண்டே, “கேட்டியா சங்கதிய, ஒந்தம்பி வரகாம்புஞ்சய பாத்துக்கறேன்னு சொல்றாம் பாத்தியா?” என்று கொட்டத்தில் பசுவுக்குத் தவிடு வைத்துக்கொண்டிருந்த தன் மனைவியிடம் சொன்னார். “சரி அவெஞ்சொல்றது நாயந்தானே! கையில எட்டுமாசக்கொழந்தையோட வந்தான், இப்ப கூடவே ரெண்டு பயலுகளாயிப்போயிட்டாங்கெ, நம்ம புஞ்சையும் பூதிலதானே கெடக்கு, அவந்தான் பாத்துக்கிறேன்னு சொல்றானே, பாத்துக்கட்டும்” என்றாள் பதிலுக்கு.

“முருகையா மாமா முன்னாடி மாதிரி ஏம்மா நம்ம வீட்டுக்கு வர்றதில்ல?” பாலு, எப்போது விடுமுறைக்குத் தன் சொந்த ஊருக்குச் சென்றாலும் கேட்பதுண்டு. “அவனுக்குப் பேரன் பேத்தி ஆயிப்போச்சுய்யா, மூத்தவ பாண்டியம்மாளுக்கு இது மூணாவது பெரசவமாம், இருளாயி அங்கெ பொய்ட்டா, இவன் மயம்புட்டு புள்ளயல வச்சுகிட்டு அல்லாடறான் பாவம், இதுல எங்கெ இங்கெ வர்றது?” என்றாள் அம்மா பதிலுக்கு.

பாலுவுக்கு விடிந்ததே தெரியவில்லை, அப்படியே சோபாவில் சாய்ந்தவன் கண்ணயர்ந்துவிட்டான். மனசு கேட்கவில்லை, மறுபடியும் போனை எடுத்தான், இப்போது இந்தியாவில் பொழுது சாயும் நேரம்தான், அம்மா தூங்கியிருக்கமாட்டாள். எதிர்முனையில் அம்மா அரசல்புரசலாக, பதட்டத்துடன் போனை எடுத்து “யாரு பேசறது”, “நாந்தாம்மா! பாலு” சொல்லி முடிப்பதற்குள், “அய்யோ! அந்த வகுத்தெரிச்சலெ ஏய்யா கேக்குறே! அந்தப் பாதகத்தி மருந்தக்குடிச்சது தாங்காமெ, ஊர ஒன்னுகூடி அங்கனெ நிக்கையில, இந்தப்பய முருகையா, எல்லாரு கண்ணுலயிம் மண்ணெத்தூவிப்புட்டு சுடுகாட்டு ஊரணி வேம்புல கயத்துல தொங்கிட்டான்யா.. நான் என்ன செய்யிவேன், இந்தா ஊரே அலறியடிச்சு ஓடுதே!” என்று அலறி அம்மா போனை வைத்தாள்.
பாலு உறைந்துபோய் நின்றான்.

– நவநீ

Series Navigation