நாகூர் ரூமி
அன்பான நண்பர்களுக்கு வணக்கம்.
இன்று பகல் (மார்ச் 13, 2007) எனக்கு கூரியரில் ஒரு இன்ப அதிர்ச்சி வந்தது. அதுதான் எனது 17வது நூலின் பிரதிகள். ஆம். ஹோமரின் ‘இலியட்’ காவியத்தின் முழு தமிழாக்கம். எட்டு எட்டரை மாதங்கள் மடிக்கணி உதவியுடன் நான் செய்து முடித்த தமிழாக்கம். தமிழில் முதன் முறையாக — எனக்குத் தெரிந்து — இலியட் முழு காவியமும் வருகிறது. வெளியீடு கிழக்கு பதிப்பகம். முதல் பதிப்பு ஜனவரி 2007.பக்கங்கள் 816. விலை ரூபாய் 350/- நூலுக்கு நான் எழுதிய முன்னுரையை கீழே கொடுக்கிறேன்.
முன்னுரை
===========
நிம்மதியாக ஒரு நீண்ட பெருமூச்சை நான் விட்டுக்கொள்ளும் நேரம் இது. ஆமாம். கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக என் கைவிரல்கள், முதுகெலும்பு, முழங்கை எலும்பு ஆகியவற்றுக்கு சொல்ல முடியாத வலியையும் வேதனையையும் கொடுத்த வேலை முடிந்துவிட்டது. அந்த பெருமை ஹோமருக்கே போய்ச்சேர வேண்டும்!
Classic என்று உலகம் போற்றும் ஹோமரின் ‘இலியட்’ காவியத்தை தமிழ்ப்படுத்தும் காரியத்துக்குத்தான் இந்த எட்டு மாதங்கள். எனது முழு இரவுகளும் பகுதி பகல்களும் இதற்காக செலவிடப்பட்டன.
ஹோமரைத் தமிழில் செய்கிறோம் என்ற ஒரு நினைப்பே லேசான பெருமை தரக்கூடியதாக இருந்தது. ஆங்கில இலக்கியம் படித்த காலத்தில் அடிக்கடி கேள்விப்பட்ட ஒரு பெயர், அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்ட ஒரு பெயர் ஹோமர். மற்றும் அவருடைய காவியங்களான இலியட், ஒடிஸி. ஆனால் காவியங்களின் தந்தை என்று சொல்லப்படுகின்ற ஹோமரிடம் உண்மையில் முழுமையாக என்னதான் இருக்கிறது என்று தெரிந்துகொள்கின்ற வாய்ப்பு இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் கிடைத்தது. முனைவர் பட்டத்துக்காக கம்பனைப் படித்தேன். இப்போது தமிழாக்கத்துக்காக ஹோமர்.
ஆனால் மொழிபெயர்ப்பு ஒரு களைப்பூட்டும், அதே சமயம் நிறைய கற்றுத்தரக் கூடிய பொறுப்பு மிக்க வேலை. இந்த காவியம் எனக்கு பல வேலைகளைக் கொடுத்துவிட்டது.
முதலில் உச்சரிப்பு. ஆங்கிலத்தில் உள்ள சொற்களை நாம் கண்டபடி தமிழில் எழுதிவிட முடியாது. உதாரணமாக Zeus என்ற தலைமைக்கடவுளை ஜீயஸ் என்று சொல்லலாம். ஆனால் மிகச்சரியாக ‘ஜீயூஸ்’ என்றுதான் சொல்ல வேண்டும். இதற்காக நான் பல நூல்களை, கலைக்களஞ்சியங்களை அலசிப் பார்க்க வேண்டியிருந்தது. முடிந்தவரைக்கும் சரியான உச்சரிப்புகளே கொடுக்கப்பட்டிருக்கும்.
அடுத்ததாக, எனக்குக் கொடுக்கப்பட்ட ஈ.வி.ரியூ, பீட்டர் ஜோன்ஸ், டி.சி.ஹெச்.சியூ ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்ட பெங்குவின் பதிப்பான ஆங்கில ‘இலியட்’ காவியத்தில் இல்லாத பல தகவல்களை நான் இறுதிக் குறிப்புகளாகவும் முன்னுரையிலும் சேர்க்க வேண்டியிருந்தது.
உண்மையில் ஹோமர் எனக்கு பல ஆச்சரியங்களைக் கொடுத்திருக்கிறார்.
ஹோமரைப் படிப்பவர்கள் முதலில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியது அவருடைய காலம். கிறிஸ்துவுக்கு கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய ஒரு மனிதனின் கற்பனைக்குள் பயணிக்கிறோம் என்பதுதான் நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது.
அப்படிப் பார்த்தால்தான் எது ஆச்சரியம் என்றும், ஏன் அது ஆச்சரியமாக இருக்கிறது என்பதும் புரியும்.
காதலும் வீரமும்தான் இந்த உலகத்தில் உள்ள எல்லாக் காவியங்களிலும் கொண்டாடப்படும் விஷயமாக இருக்கிறது. ஹோமரும் இதைத்தான் பாடுகிறார். பெண்ணும் அவளுக்காக நடக்கும் போரும்தான் கதை. அதில் அக்கிலிஸின் கோபம் காவிய மையம். ஆனால் இந்தக் கதையினூடாக நமக்குக் கிடைக்கின்ற சில தகவல்களும் கற்பனைகளும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் உள்ளன.
சில உதாரணங்கள்.
எஜமானனுக்கு பணிவிடைகள் செய்ய ஓடிவந்த பணிப்பெண்கள் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தனர். ஆனால் பார்ப்பதற்கு உண்மையான பெண்களைப் போலவே இருந்தனர். அவர்கள் பேசவும், உடல் உறுப்புக்களை அசைக்கவும் செய்தது மட்டுமல்ல, அறிவோடும் இருந்தனர். நித்தியர்களான கடவுளர்களிடமிருந்து அவர்கள் தங்கள் தொழிலைத் திறம்படக் கற்றிருந்தனர்.
இப்படி ஒரு கற்பனை 18-வது காண்டத்தில் வருகிறது. இன்றையை ரொபோடிக்ஸின் முன்னோடி ஹோமர் என்று அறியவரும்போது எப்படி ஆச்சரியப்படாமல் இருக்க முடியும்? ‘கல்யாணப்பாடலை வெகு தூரத்துக்குத் தெளிவாகக் கேட்க முடிந்தது’ என்று அதே காண்டத்தில் ஒரு இடத்தில் வருகிறது. ரேடியோவை கற்பனை செய்து பாடிய பாரதி நினைவுக்கு வருகிறான். மகாகவிகள் எல்லாருக்குமே எதிர்காலத்தை முன்னறியும் திறன் இருக்கும்போல.
அடுத்ததாக என் கவனத்தைக் கவர்ந்தது ஹோமரின் காவியம் காட்டும் சமுதாயமும் அந்த சமுதாய வாழ்க்கையும்.
ஒருவரை அறிமுகப்படுத்தும்போது அரேபியர்கள் தன் பெயரை மட்டும் சொல்லமாட்டார்கள். மூன்று நான்கு தலைமுறைப் பெயர்களையும் சேர்த்துத்தான் சொல்வார்கள். ஒருவருடயை பெயர் ‘அலீ’ என்றிருந்தால் வெறுமனே ‘அலீ’ என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் ‘அலீ இப்னு அபீதாலிப்’ (அபூ தாலிப் உடைய மகன் அலீ) என்று சொல்வார்கள். இதைப்போன்ற ஒரு மரபு ஹோமர் காவியத்திலும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. யாருடைய பெயரையும் ஹோமர் வெறுமனே சொல்வதில்லை. பீலியூஸின் மகனாகிய அக்கிலிஸ், அவனுடைய தந்தை பெர்சியூஸின் மகனாகிய ஸ்தெனெஸ்தியூஸ், அத்ரியூஸின் மகனாகிய அகமெம்னன் – இப்படித்தான் சொல்கிறார்.
கிரேக்கர்களின் சமுதாயமே தந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்த சமுதாயமாகவே இருந்திருக்க வேண்டும். சொந்த நாட்டைக்கூட தாய் நாடு என்று சொல்வதில்லை. எல்லா இடத்திலும் ‘தந்தையர் நாடு’ என்றே குறிப்பிடுகிறார்.
ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகள் மிகவும் வித்தியாசமாக உள்ளன. பிறன் மனை விழைவது நல்லொழுக்கமாக காட்டப்படுகிறது. ஹெலனைக் கடத்திக் கொண்டு போனதைப் பற்றி பாரிஸோ அல்லது ஹெலனோ ஒரு இடத்தில்கூட வருத்தப்பட்டோ, குற்ற உணர்வோடோ பேசுவதில்லை. ஆனால் வாக்கு மீறுவது மரண தண்டனை கொடுக்கக் கூடிய அளவுக்கு ஒழுக்கக் கேடான விஷயமாகப் பார்க்கப் படுகிறது!
உலோகங்களைப் பொறுத்தவரை கிரேக்கர்களும் ட்ரோஜன்களும் மிகவும் ‘மரியாதை’ கொடுப்பது வெண்கலத்துக்குத்தான். கவச உடை வெண்கலம். ஈட்டி வெண்கலம். வாள் வெண்கலம். தேர் வெண்கலம். ஈட்டியின் முனை வெண்கலம். தலைக்கவசம் வெண்கலம். எங்கும் வெண்கலம். எதிலும் வெண்கலம். போனால் போகிறதென்று ஆங்காங்கே கொஞ்சம் தங்கமும் வெள்ளியும்.
இங்கே கம்பனிடம் இருந்த ஒரு ஒற்றுமை என் நினைவுக்கு வந்தது. மலர்களைப் பொறுத்தவரை கம்பனுக்கு எல்லாமே தாமரைதான். சீதை, ராமன் முதலிய எல்லா முக்கியப் பாத்திரங்களின் கை தாமரை, பாதம் தாமரை, விழிகள் தாமரை, தோள் தாமரை — இந்த உலகத்தில் வேறு மலர்களே இல்லாத மாதிரி, எல்லா மலர்களும் தாமரையை நினைத்து பொறாமைப்படும் அளவுக்கு எங்கும் தாமரை எதிலும் தாமரை! அதைப்போல, ஹோமருக்கு எல்லாமே வெண்கலம். ஆனால் கம்பனைப் பொறுத்தவரை தாமரை வெறும் கற்பனை சார்ந்த விஷமாகவே உள்ளது. ஆனால் ஹோமரின் வெண்கலம் சமுதாய வாழ்வு சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கலாம்.
கடவுளுக்கான முதல் மரியாதையாக கொஞ்சம் முடியை வெட்டி எடுத்தல், இறந்து போனால் ஈமச்சடங்குகள் செய்தல், தொழில் முறையில் ஒப்பாரி வைப்பவர்களை அழைத்து அழுது பாடச் சொல்லுதல், நமது பிச்சாண்டி முனியாண்டிகளுக்கு கிடாவெட்டி படைப்பதுபோல கிரேக்கக் கடவுள்களுக்கும் ஆடு மாடு அறுத்து பலியிடுதல், பானங்களை திருப்படையல் செய்தல், சகுனம் பார்த்தல் போன்ற விஷயங்கள் நமது கலாச்சாரத்தை ஒத்திருக்கின்றன!
இறுதிக் காண்டத்தில், கூடிய விரைவில் இறந்து போகப்போகும் தன் மகன் அக்கிலிஸிடம் அவன் தாய் தீட்டிஸ், யாராவது ஒரு பெண்ணோடு படுத்து சுகம் அனுபவித்து உன் நேரத்தைச் செலவழித்துக்கொள், சும்மா உன் நண்பனுக்காக அழுது புலம்பி இருக்கும் கொஞ்ச காலத்தையும் விரயமாக்காதே என்று ஆலோசனை கூறுகிறாள்! உணர்ச்சிவசப்படாத அறிவுப்பூர்வமான ஒரு ஆலோசனைதான் இது என்றாலும், ஒரு தாய் தன் மகனிடம் இப்படிச் சொல்லும் இடம் எனக்கு ஆச்சரியமளித்தது. காரணம், ஒரு மகனிடம் இப்படி ஒரு தாய் சொல்வாளா என்பதனால் அல்ல. எனக்கு மறுபடியும் கம்பராமாயணம் நினைவு வந்ததுதான். காணாமல் போன தன் மனைவியின் அடையாளங்களை அனுமனிடம் சொல்லியனுப்பும் ராமன், சீதைக்கு ‘தேர்த்தட்டு போன்ற அல்குல்’ இருக்கும் என்று சொல்லியனுப்புகிறான்!
இப்படிப் பேசுவது காவிய மனிதர்களுக்கே உரிய குணம் போலும். இந்த ஒற்றுமைதான் என்னை ஆச்சரியப்பட வைத்தது.
தமிழாக்கம் உரைநடையில் கொடுக்கப்பட்டிருந்தாலும், காவியம் முழுவதும் கவிதை வடிவில்தான் மூலமொழியாகிய கிரேக்க மொழியில் ஹோமர் எழுதினார் அல்லது பாடினார் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது
தேவைப்படும் இடங்களில் குறிப்புகள் அந்தந்த காண்டத்தின் முடிவில் இறுதிக் குறிப்புகளாக கொடுக்கப்பட்டுள்ளன. ஓரிரு வரிகளுக்குள் அடைபடும் விஷயங்கள் என்னால் ஆங்காங்கே காவியத்துக்குள்ளேயே அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஹோமரின் ‘இலியட்’ காவியத்தை இதுவரை யாரும் தமிழாக்கம் செய்திருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இன்னொரு காவியமான ‘ஒடிஸி’யை சிலர் செய்திருக்கிறார்கள். 1968-ல் அ.சீநிவாசராகவன் என்பவர் ‘ஒடிஸ்ஸி’யை ‘ஒதிஸ்ஸியம்’ என்ற பெயரில் தமிழாக்கம் செய்திருக்கிறார். அவர் பெயரையும் வ.வு.சி.கல்லூரி, தூத்துக்குடி என்பதையும் தவிர வேறு தகவல்கள் கிடைக்கவில்லை. ‘ஒதிஸியம்’ என்ற பெயரிலேயே அ.சிங்காரவேலு என்பவரும் தமிழாக்கம் செய்திருக்கிறார். இந்திரா பதிப்பகத்தாரால் அதன் 1997-ல் முதல் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்கும், அழகாக வெளியிட்டதற்கும் கிழக்கு பதிப்பக உரிமையாளர்கள் பத்ரிக்கும், பிரதான ஆசிரியர் பா.ராகவனுக்கும், அழகாக இதை வெளியிடுவதில் பாடுபட்ட கிழக்கு பதிப்பக நண்பர்கள், பேராசிரியர் ஏ. மீரா மொஹிதீன், என் சகோதரி ஹமீதா, சகோதரி மகன் சர்புதீன், சமயங்களில் ஹோமாரை எனக்குப் படித்துச் சொல்லி, என் தமிழாக்கத்துக்கு உதவிய என் மகள் ஷாயிஸ்தா — அனைவருக்கும் என் நன்றிகள்.
அன்புடன்
நாகூர் ரூமி
ஆம்பூர்
12 மார்ச், 2006
email : ruminagore@gmail.com
website: www.tamiloviam.com/rumi
- மருத்துமலை எங்கே இருந்தது (பாகம் 2)
- ஹோமரின் ‘இலியட்’ காவியத்தின் முழு தமிழாக்கம்
- காரைக்காலில் ஒரு தனித்துவமான சுனாமி நிவாரணக் கட்டுமானப் பணி
- உயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு
- இலை போட்டாச்சு ! -20 அடை – இரண்டாம் வகை
- தண்ணீரை தனியார் மயமாக்காதே – பசுமை தாயகம் பிரசாரம்
- நான்கு சங்கர மடங்களையும் அலங்கரித்த ஞானியர் பரம்பரை
- கடிதம்
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 10
- சுக்கிர நீதியை – அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
- தூர்மண(¡) குச்சு
- கடித இலக்கியம் – 48
- சிங்கப்பூர் வாசகர் வட்டம் – கதை விவாத நிகழ்வு
- பெண் எழுத்து
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:4
- இலை போட்டாச்சு ! – 19 – சிற்றுண்டிகள் அடை – ஒரு வகை
- வால்மீனில் தடம் வைக்கப் போகும் ரோஸெட்டா விண்ணுளவியின் நுட்பக் கருவிகள் -3
- காதல் நாற்பது (13) – காதலை அழைத்தது காதல் !
- தைத்திருநாள் விழா கவியரங்கம்—–3
- கவிதை வடிக்கலாம் – தமிழிசைப் பாடல்
- நீலக்கண்கள் சூடிய வினோத பட்சி
- என் பெயரை நான் மறந்து/பெயர் அழகு/போதி மரம்
- அறிவுசார் சொத்து எனும் அபத்தம்!
- தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் இரண்டு: நள்ளிரவில்…
- மடியில் நெருப்பு – 29
- நீர்வலை – (15)
- மறை வாள் வீச்சு