ஹெச்.ஜி. ரசூலின் ‘வாகாபிசமும் நவீன முதலாளியமும் ‘ கட்டுரைக்கு எதிர்வினை

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

அருளடியான்


முஸ்லிம்களை முஹமதியர் என்று சொல்லக் கூடாது என்ற புரிதல் உள்ளவர்கள் கூட, ஹனபி, ஷாஃபி என்றோ, வகாபி, சுன்னத் வல் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத் என்றோ சொல்லக் கூடாது என்பதை அறியவில்லை. ஹெச். ஜி. ரசூல் தர்கா வழிபாட்டினர் முஸ்லிம்களில் ஏழைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக எழுதியுள்ளார். இது தவறான தகவல் மட்டுமல்ல. மிகவும் நகைச்சுவையான செய்தியும் கூட. முஹமது நபி(ஸல்) அவர்கள் தானும், தன் குடும்பத்தினரும் இஸ்லாமிய அரசு வசூலித்த ஜகாத் நிதியில் இருந்து எதுவும் எடுக்கக் கூடாது என தடை செய்து கொண்டார்கள். ஆனால் இன்றைய தர்கா நிர்வாகிகள், தர்காவில் வசூலாகும் தொகை தர்கா நிர்வாகிகளின் குடும்பத்தை தவிர யாருக்கும் கிடையாது என விதிமுறை உருவாக்கிக் கொண்டார்கள். இதனால் ஏழை முஸ்லிம்களுக்கு என்ன பயன்ஹ ஓரிறைக் கொள்கையில் உறுதியாய் உள்ள இலட்சக் கணக்கான ஏழை முஸ்லிம்கள் உள்ளனர். த.மு.மு.க, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஜாக் போன்ற அமைப்புகளில் உள்ளவர்களில் மிகப் பெரும்பாலோர் ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினருமே. வளை குடா நாடுகளில் இந்த அமைப்புகளுக்கு உறுப்பினர்களாய் உள்ளவர்களும் ஏழைகளும், நடுத்தரவர்க்கத்தினருமே. செல்வந்த குடும்பத்தினர் மிகச்சிலர் மட்டுமே. தர்கா வழிபாட்டுக்கு இலட்சக்கான ரூபாய் கொட்டித் தருபவர்களில் பணக்காரர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். ஏழைகளும், நடுத்தரவர்க்கத்தினரும் இதைவிட சற்று அதிகமாக தர்காவழிபாட்டில் உள்ளனர் என்பது உண்மை தான். அந்த பகுதிகளில் கல்வியறிவு வளரும் போது, அந்த குடும்பங்களில் இளைய தலைமுறை தர்கா வழிபாட்டில் இருந்து முற்றிலுமாக விடுபடுகிறது.

ஹெச். ஜி. ரசூல் மெக்காவில் நடைபெறும் ஹஜ் சடங்குகளையும், தமிழ் நாட்டின் தர்கா வழிபாடுகளையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார். ஹஜ்ஜில் நிறைவேற்றப்படும் சடங்குகள் குர் ஆன், நபிகளாரின் வழிமுறையான ஹதீஸ் ஆகிய மூல நூல்களின் வழிகாட்டுதலின் படி நிறைவேற்றப்படுபவை. தர்கா வழிபாடு அவ்வாறு அல்ல. இறைவனுக்கு மட்டுமே உரிய பண்புகளை, இறந்த ஒரு மனிதருக்கும் இருப்பதாக நம்புவதும், அவரிடம் நம் தேவைகளை கேட்பதும் இஸ்லாத்தில் இல்லாத புதுமைச் செயல் மட்டுமல்ல. இறைவனுக்கு இணைவைக்கும் பெரும்பாவமாகும். ஒரு பொருளுக்கு ஒரு முறை தான் ஜகாத் என்பது தமிழ் நாட்டின் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞரான பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் கருத்தாகும். அவர் தலைமையிலான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் இக்கொள்கையை ஏற்றுள்ளனர். இதனை பெரும்பாலான முஸ்லிம் அறிஞர்களும், முஸ்லிம் மக்களும் ஏற்கவில்லை. ஹெச்.ஜி. ரசூல் இவ்வாறு பல தவறான தகவல்களை எழுதி தன் தர்கா வழிபாட்டுக் கொள்கைக்கு ஆதரவு தேடியுள்ளார். எனக்குத் தெரிந்தவரை, ஓரிறைக் கொள்கையில் உறுதியாக உள்ளவர்களே தர்கா வழிபாட்டாளர்களை விட ஏழைகளுக்கு ஆதரவாக உள்ளனர்.

– அருளடியான்

aruladiyan@yahoo.co.in

Series Navigation

author

அருளடியான்

அருளடியான்

Similar Posts