ஹிந்து சமூகப் பிளவும், வகுப்பு வாரி பிரதிநிதித்துவமும்

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

கற்பக விநாயகம்


****

வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் ஹிந்து சமூகத்தைப் பிளவுபடுத்தி விடும் என்ற குரல் இன்று மட்டுமல்ல,சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சனாதனிகளிடம் இருந்து ஒலித்து வந்துள்ளது.

(பால கங்காதர திலகர் ‘சட்டசபைகளுக்குப் போய் எண்ணெய் ஆட்டுபவனும் துணிவெளுப்பவனும் என்ன செய்யப் போகிறார்கள் ? ‘ என்று எதிர்த்தவர்.

தென்னிந்திய மக்கள் நலச்சங்கம் தோன்றி, தனது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைப் பிரகடனப்படுத்தியதும் பாரதியார் ஊரூராய்ச் சென்று பிராமணர் சங்கக் கூட்டங்களில் இதை எதிர்த்து வீர கர்ச்சனை செய்துள்ளார் )

இக்கூற்றின் நம்பகத்தன்மை என்ன ? வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்தான் உண்மையில் இந்த தர்மத்தைப் பிளவுபடுத்தியதா ?

இட ஒதுக்கீட்டை இந்தியாவில் முதன்முதலில் நடைமுறைப்படுத்தியவர்கள் ஜஸ்டிஸ் கட்சியினர் அல்ல. முதலில் பரோடா சமஸ்தானத்திலும் இரண்டாவதாக மைசூர் சமஸ்தானத்திலும் அமுலாக்கப்பட்டன. அதன் பிறகே சென்னை மாகாணத்தில் நடைமுறைக்கு வந்தது.

சிலர் நினைப்பது போல வகுப்பு வாரி பிரதி நிதித்துவ உரிமை இந்து சமூகத்தினைப் பிளந்து விட்டது போன்றும் அதற்கு முன்பெல்லாம் ஒரே சமூகமாய் ஒற்றுமையாய் இருந்தது என்பதும் கலப்படமில்லாத பொய்.

முதலில் இந்து சமூகம் எனும் பதத்தினையே எடுத்துக்கொள்வோம். இவ்வார்த்தையை எந்தப் பண்டைய இலக்கியங்களிலோ கல்வெட்டுக்களிலோ காணமுடியாது. ஒரே சமூகமாய் அது இல்லை. வேதத்தை ஓதுபவர்கள் தனி;சிவனை வணங்குபவர்கள் தனி; விஷ்ணுவை வணங்குபவர்கள் தனி; லட்சக்கணக்கான கிராம தேவதைகளை வழிபடுபவர்கள் தனித்தனி. இவர்களுக்கும் வேதத்துக்கும் ஸ்னானப்பிராப்தி கிடையாது.

தெய்வத்தின் குரல் எனும் நூலில் மறைந்த சங்கராச்சாரி சந்திரசேகரேந்திரர் ‘வெள்ளைக்காரன் நமக்கெல்லாம் ஹிந்துன்னு பேர் கொடுத்ததாலே தப்பிச்சோம். சனாதன தர்மம் ஒன்னா இருந்ததென்பது ஆதியிலே இருந்தே கிடையாது.. நம் தேசத்திலே கணக்கிலடங்காத பிரிவுகள் இருந்தன ‘ என்கிறார்.

இந்து சட்டத்திலே கூட இந்து எனும் சொல்லுக்குறிய வரையறையைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. யாரொருவர், சீக்கியர் இல்லையோ,கிறித்துவர் இல்லையோ, மகமதியர் இல்லையோ, பார்சி இல்லையோ, ஜைனர் இல்லையோ, புத்தர் இல்லையோ அவரெல்லாம் இந்துக்கள் என்றுதான் வரையறுக்க முடிந்தது.

இறையிலி நிலங்களையும், மங்கலங்களையும் தந்து சாதிப்பயிர் வளர்த்த சோழர்கள் காலத்திலிருந்து வலங்கை இடங்கை எனப் பிரிந்து கிடந்த சமூகத்தை எந்த கம்யூனல் ஜி ஓ பிளவுபடுத்தியது ?

சைவ வெறி மிகுந்து வைணவக் கோவில் மூலவர்களைப் பெயர்த்தெரிந்த மன்னர்களின் வரலாறு தமிழ் நாட்டில் உண்டு.

அம்மன்னர்கட்குப் பயந்து மைசூர் நாட்டுக்கு ஓடிய ராமானுஜாச்சாரியாரும் நமக்குத் தெரியும்.

வைணவ மதத்துப் பெயர்களே காதில் விழக்கூடாது எனக் காதில் மணி கட்டி இருந்த சைவர்கள் அநேகம்.

(வைணவப் பெயர்களான பெருமாள்/கிருஷ்ணன் என இவர்கள் பக்கத்தில் போய் உரக்க சொல்லும்போது அச்சொல்கள் காதில் விழாமலிருக்க காதில் கட்டிய மணியை ஆட்டிக்கொண்டிருந்தார்கள். மலர்மன்னனின் மூதாதையர் காசியிலே போய்க் குதிக்கும் முன் மணியைக் கழற்றினார்களா என்பது ஆய்வுக்குரியது). கி.ராஜ நாராயணனிடம் இது குறித்து வண்டி வண்டியாய் நாட்டார் கதைகளுள்ளன.

கோவில் யானைக்கு வடகலை நாமமா தென் கலை நாமமா என லண்டன் வரை போய் சண்டை போட்ட வரலாறும் உண்டு.

திருவிதாங்கூரில் இந்து தர்மம் தழைத்தோங்கியது. அங்குதான் இச்சமூகத்தில் நாடார் பெண்கள் மாரை மறைக்க தோள்சீலைப்போர் நடத்த வேண்டி வந்தது. அந்நாட்டின் குற்றவியல் சட்டம் கொலைக்குற்றம் செய்த பார்ப்பனர்களை மரணதண்டனையிலிருந்து விடுவித்து அதே குற்றம் புரிந்த ஏனைய மக்களுக்கு மரணதண்டனை விதித்தது. மேலோர் தெருக்களில் ஈழவர்/புலையரை நடமாடிடத் தடை செய்தது. ஈழவர் படித்துப் பட்டம் பெற்றாலும் அவர்களை அரசுப்பணியில் அமர்த்திடத் தடையாய் இருந்தது. மருத்துவத்துறையில் பட்டம் பெற்ற டாக்டர் பல்ப்புவிற்கு திருவாங்கூர் திவான் வேலை தரவில்லை. மைசூர் ராஜாதான் கதவைத் திறந்தார். மறைந்த ஜனாதிபதி கே ஆர் நாராயணனுக்கு வேலை கிடைக்க விடாமல் சர் சி பி ராமசாமி அய்யர் திருவாங்கூரில் தடையாய் இருந்தார்.

கம்யூனல் ஜி.ஓ தமிழகத்தில் வந்த பிறகும் கூட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைய நாடார், வாணியர், பள்ளர், பறையர் உள்ளிட்ட 18 சாதியினருக்கு தடை இருந்தது.

1899ல் கமுதியிலும் சிவகாசியிலும் நாடார்கள் கோவில் நுழைவை நடத்தினர்..

சனாதனம் காக்கப் பிறந்த ராமநாதபுரம் மன்னர் இந்நிகழ்வை எதிர்த்து வழக்கு நடத்தினார். அதே மன்னர் விவேகானந்தருக்கு அமெரிக்கா செல்லப் பணம் தந்தார். இந்த வழக்கு குறித்து விவேகானந்தர் என்ன கருதினார் எனத் தெரியவில்லை.

கோவிலில் நுழைய நாடாருக்கு உரிமை இல்லை என பிரிவியு கவுன்சிலில் தீர்ப்பு வாங்கினார்.

சிவகாசியில் கோவிலில் நாடார் நுழைந்தவுடன் பொறுக்க இயலாத மறவர்கள் சிவகாசியைப் படையெடுத்து அழிக்க வந்தனர். இருதரப்பும் மோதி நூற்றுவர் மாண்டனர். அதன்பின் மாதக்கணக்கில் தண்டக்காவல் படையால் சிவகாசி காக்கப்பட்டது. இந்த அளவிற்கு இந்து சமூகம் பிளவுபடாமல் ஒற்றுமை காத்தது.

மதுரை மீனாட்சி கோயிலில் நுழைய 1901 ல் சேனையரும் வாணியரும் உரிமை கோரி வழக்குத்தொடுத்தனர்.

நீதி கிடைத்தது சேனையருக்கு. ஆனால் வாணியர் ‘உயிருள்ள வித்துக்களைக் கொன்று எண்ணெய் பிழிந்தெடுக்கும் கேவல வேலை செய்வதால் உரிமையில்லை ‘ எனத்தீர்த்தனர் மனு நீதியை நிலை நாட்டிய இந்து நீதிபதிகள்.

பின்னர் கோவில் நுழைவை ராஜாஜி சட்டமாக்கும் முன் 1937ல் மற்றொரு கோவில் நுழைவை நடத்தினர் நாடார்களும் பள்ளர்களும்.

உடனே மீனாட்சி கோவில் பட்டர்கள் மதுரைக்கோவிலைக் கதவடைத்து மீனாட்சி கோவிலை விட்டுப் போய்விட்டாள் என்று சேதி பரப்பி, மதுரை தமிழ்சங்கம் அருகிலே குடிசை ஒன்று போட்டு இதுதான் உண்மையான மீனாட்சி என்று பூசை செய்ய ஆரம்பித்தனர்.

பார்ப்பனப் பெண்கள் இருவர் ‘கோவில் நுழைவு எதிர்ப்புச் சிந்து ‘ பாடி நூல்கள் வெளியிட்டனர்.

அரசு, கலகம் செய்த பட்டர்களின் வேலைக்கு ஆப்படிக்க முனைந்தபோது பழையபடிக்கு மீனாட்சி கோவிலுடன் பட்டர்கள் சமரசம் செய்தனர். (ஆதாரம்:- fபுல்லரின் ‘தேவியின் திருப்பணியாளர்கள் ‘ & முனைவர் தொ.பரமசிவம் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள்)

கோவில்களுக்கு நான்கு வாயில்கள் வைத்ததே நான்கு வர்ணமும் தனித்தனியே இறைவனைக் காணத்தான். இம்முறையில் அவர்ணமான தலித்களை கோவிலுக்குள் நுழையாது தனிமைப்படுத்தினர்.

சித்தர்பாடல்களில் பதிவான ‘பணத்தியாவதேடடா பறத்தியாவதேடடா ‘ என்ற கலகக்குரலும் சொல்லும் நமது தர்மத்தின் லட்சணத்தை.

அவ்வளவு பின்னால் போவானேன் ?

1993ல் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் சிறீரங்கம் கோவில் கருவறையில் நுழைந்தபோது இந்து தர்மக் காவலர்கள் அவர்களை இரும்புத்தடிகளால் வரவேற்கவில்லையா ? மறுநாள் தீட்டுக் கழிப்பு சடங்கு நடத்தவில்லையா ?

இவைதான் நாமறிந்த பிளவுபடாத இந்து சமூகத்தின் யோக்கியதை.

கடந்த 25 ஆண்டுகளாய் ஒவ்வொரு மாநாட்டிலும் ‘இடஒதுக்கீட்டுல படிச்சுட்டு வந்த டாக்டருங்க பண்ற ஆப்பரேசனால நோயாளி செத்துடறான்; இன்ஞினியர் கட்டுற பாலம் ஒடஞ்சுருது ‘ எனப் பீதியூட்டி வந்த தமிழ்நாடு பிராமணர் சங்கம் சமீபத்தில் தங்களுக்கு 15% இட ஒதுக்கீடு வெண்டும் எனத்தீர்மானம் நிறைவேற்றி உள்ளதை மலர்மன்னன் அறிவாரா ?

ஒவ்வொரு நாட்டார் கோவிலுக்கும் வரலாறும் தனித்தனிப் பண்பாடும் உண்டு. அவை எல்லாம் அசைவப் படையலை வேண்டி நிற்கும் தெய்வங்கள். (இந்தத் தெய்வங்களை வணங்கும் உழைக்கும் மக்களை இழிவுபடுத்தித்தான் பாரதியார் ‘மாடனைக் காடனை வணங்கும் மதியிலிகாள் ‘ என ‘காள் ‘ ‘காள் ‘ எனப் பாடினார்)

அவற்றிற்கும் கற்பிதமான இந்து மதத்திற்கும் சம்பந்தம் ஏதுமில்லை. எனவேதான் திட்டமிட்ட சமஸ்கிருதமயமாக்கல் மூலம் (விளக்கு பூஜை/லலிதா சகஸ்ர நாமம் பாடுதல்/ கெடா வெட்டை நிறுத்தி சைவப்படைப்பு போடுதல் / பூசாரிகளுக்கெல்லாம் சமஸ்கிருத மந்திரம் கற்பித்தல்) அக்கோவில்களையும் அம்மக்களையும் இந்துமயமாக்கும் செயல்கள் மூலம் போலியாய் இந்துமதம் கற்பிக்கப்படுகின்றது.

இச்சதிவேலைக்கு ஏற்கெனவெ பலியான சாமிதான் முருகன். கொற்றவையின் மகனாய் இருந்து கறிச்சோறு தின்ற முருகனையும் இவர்கள் விட்டு வைக்காமல் பார்வதிக்கு மகனாக்கி, வாதாபியில் இருந்து கொண்டு வந்த கணபதி (இனக்குழுக்களான ‘கணங்களின் ‘ தலைவன்)யை அண்ணனாக்கி, மனைவி வள்ளியை ரெண்டாந்தாரமாய் ஆக்கி இறுதியில் பருப்பும் பொங்கலும் தின்னவைத்து ஸூப்ரமண்யனாக்கிய (ஸு ப்ராமணியன் .. உயர்வான பிராமணன்) சதியே இன்னும் தொடர்கிறது.

பேச்சியம்மனுக்கும் வெக்காளி அம்மனுக்கும் கூட கும்பாபிசேஹம் செய்யும் நிலையை உண்டுபண்ணியிருக்கிறது இச்சமஸ்கிருதமயமாக்கல்.( இவ்வம்மன்களின் கோயில்கள் ஆகமத்தில் உள்ளனவா ? ? ?)

இவ்வாறெல்லாம் செய்தும் இந்து மதம் திண்ணியத்திலும், கொடியங்குளத்திலும், முதுகுளத்தூரிலும் பல்லை இளித்து விடுகிறதே!! என்ன செய்ய!!

மனம் திறந்து சொல்லுங்கள் மலர்மன்னன்.. கம்யூனல் ஜி.ஓ. தான் இந்த தர்மத்தைப் பிளக்கிறதா ?

இந்து சமூகம் என்பதே சாதிகளின் படி வரிசையும் சாதி ஆதிக்க வெறியும்தான்.. சாதிகள் ஒழிந்து விட்டால் தெரியும் இந்த தர்மம் எங்கே இருக்கும் என்று ? (மியூசியத்தில் ? ?)

பத்தொன்பது உயிர்களை போலீஸ் துணையுடன் கோவை பீளமேட்டில் கொன்று குவித்த ஹிந்து முன்னணியினருக்காகவும்,

இக்கும்பலால் வெட்டுப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர்களை பெட்ரோல் ஊற்றி மருத்துவமனை வளாகத்துள்ளே எரித்துக்கொன்ற ஹிந்து முன்னணியினருக்காகவும் ஆவேசத்துடன் அவர்கள் சிறையில் வாடுகிறார்களே என காலச்சுவடுகளில் மலர்மன்னன் எழுதி வருந்துவதன் மூலம் எல்லாம் ஹிந்து தர்மத்தைக் காப்பாற்ற முடியுமா எனத்தெரியவில்லை.

வேண்டுமானால் என்னால் சில தகவல்களைத்தரமுடியும்.. முன்னோர்கள் வகுத்த பாதையில் அவர் முன்னேறிச் செல்லட்டும்.

சென்னைசென்ட்ரலில் இருந்து செல்லும் வாரணாசி எக்ஸ்பிரசில் இம்மாதம் 23,28,30 தேதிகளில் இடமிருக்கின்றது.

****

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்