ஹிந்து சமய-சமூக தளங்களில் பெண்

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

மலர்மன்னன்


ஹிந்து சமயத் தத்துவங்கள், கோட்பாடுகள், கலாசாரக் கூறுகள் ஆகியவை குறித்து எவ்வித அடிப்படை அறிவும் இல்லாமலேயே ஹிந்து சம்யத்தை விமர்சிக்கத் துணிபவர்களின் பட்டியலில் என் அபிமான எழுத்தாளர் அம்பையும் இடம் பெற்றிருப்பதை திண்ணையில் வெளியாகியுள்ள மும்பை புதிய மாதவியின் தகவல் கட்டுரையிலிருந்து அறியலானேன். ஹிந்து சமயத்தைச் சகட்டு மேனிக்கு விமர்சிப்பதே அறிவுஜீவி அங்கீகாரத்திற்கு அவசியமான தகுதியாகிவிட்டிருப்பதால் பலரும் இவ்வாறான எளிய சூத்திரத்தை மேற்கொள்வதுதானே வழக்கமாயிருந்து வருகிறது!

எல்லா புராதன கலாசாரங்களையும் போலவே நமது ஹிந்து கலாசாரமும் தாய் தெய்வ வழிபாட்டையே பிரதானமாகக் கொண்டு இறைச் சக்தியை உணரத் தொடங்கியது. ஆதி பராசக்தியே முத்தொழில் செய்யும் ஆற்றல்களைத் தோற்றுவித்ததாக ஒரு கருதுகோளும் நமது ஹிந்து சமயத்தில் பரவலாகவும் பிரதானமாகவும் வேர்பிடித்துள்ளது. இன்றும் பெண்மையைத் தாய் வடிவில் வணங்கும் சம்பிரதாயம் ஹிந்து சமயத்திலும் கத்தோலிக்கத்திலும் மட்டுமே காணப் பெறுகிறது. சொல்லப்போனால் பெருமளவு ஹிந்துக்களை எளிதில் கத்தோலிக்கத்திற்கு மாற்ற முடிந்தமைக்கு அவர்களின் தாய் தெய்வ வழிபாடே காரணமாக இருந்துள்ளது.

வேத கால முதலே பெண்கள் ஆண்களுக்குச் சரி சமமாக தத்துவ விசாரங்களில் ஈடுபடுவதும் சபைகளில் தர்க்கம் செய்து ஆண்களை வெல்வதும்கூடப் பதிவாகியுள்ளளது.

புராணங்கள் ஹிந்து சமயத்தின் அடிப்படையல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காகப் புராணங்களைப் புறந் தள்ளிவிடலாகாது. அவற்றின் பயன் வேறு. அதைக் கண்டறிய முயற்சி செய்ய வேண்டுமேயல்லாது வெறும் புரட்டு என்றும், தனது வாதத்திற்குச் சாதகமாக உள்ளவற்றை மட்டும் எடுத்தாள்வதும் சரியாகாது. அப்படிப் பார்த்தால் உமையொரு பாகனையும், திருமால் மஹா லட்சுமியின் பாதங்களைப் பற்றிச் சரணடைந்த கதைகளையுங்கூடப் பதிலுக்குச் சொல்லிக் கொண்டிருக்க முடியும்.

பெண்ணடிமை என்பது ஹிந்து சமயத்தின் அங்கீகரம் பெறாத ஒரு சமூகப் பிரத்தியட்சமும் பிரச்சினையும் ஆகும். மேற்கிலிருந்து பலாத்காரமாக ஊடுருவிய மாற்றுச் சமயத்தின் கோட்பாடுகளாலும் கலாசாரத் தாக்கத்தாலுமே ஹிந்து சமூகத்தில் பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைக்கிற சம்பிரதாயம் நடைமுறைக்கு வந்தது. பெண்களைக் காபந்து செய்ய வேண்டிய கட்டாயத்தாலும் இப்படியொரு வழக்கம் அவசியப்பட்டது. அவ்வளவு ஏன், உடன்கட்டை ஏறுகிற வழக்கமேகூட மாற்றுச் சமய வெறியர்களின் பிடியில் சிக்கிவிடலாகாது என்பதற்காக சுய விருப்பத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவே இருந்திருக்கக்கூடும். ரஜபுத்திரர்களிடையே இது அதிக அளவில் இருந்திருக்கிறது. காலப் போக்கில் அது ஒரு பெண்களுக்கு எதிரான கொடுமையாகி விட்டிருக்கிறது. எந்தவொரு நடைமுறையையும் காலப்போக்கில் ஆதிக்க சக்திகள் தமக்குச் சாதகமாக்கிக் கொள்வது எங்குமே உள்ளதுதான். இளம் பருவத்திலேயே பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கிற பழக்கம் கூட மாற்றுச் சமய வெறியர் பற்றிய அச்சங் காரணாமாகத்தான் நடைமுறைக்கு வந்துள்ளது.

முற்றிலும் மத ரீதியான சட்டமாகவும் கட்டுப்பாடாகவும் பெண்ணின் பெறுமானம் ஆணில் பாதிதான் என்றோ, ஆணின் விலா எலும்பிலிருந்துதான் பெண் படைக்கப்பட்டாள் என்றோ மத ரீதியாக பிரகடனம் செய்யும் புனித ஆவணம் எதுவும் ஹிந்து சமயத்தில் இல்லை.

ஹிந்துக்களிடையே சமய வழிபாடுகளிலும், குடும்ப விசேஷங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது. விதவைப் பட்டங் கட்டப்படும் பெண்கள் ஒதுக்கிவைக்கப் பட்டிருக்கிறார்களே என்று நினைக்கலாம். கணவனை இழந்த மகளிர் வேற்று ஆண்களின் பார்வையில்பட்டு அவர்களைச் சலனப்படுத்தவேண்டாம் என்றும், தாமே சலனப் பட்டுவிடலாகாது என்பதற்காகவும் அவர்களாகவே ஒதுங்கிக்கொள்ளத்தொடங்கி, அது பின்னர் ஒரு சம்பிரதாயமாகி விட்டிருக்கக் கூடும்.

ஹிந்து சமய, கலசாரத்தின் அங்கமேயான தமிழ்ச் சமுதாயத் திலுங் கூட ஏராளமான கற்றறிந்த பெண்டிர் பொது வாழ்க்கை யிலும் இலக்கிய தளத்திலும் எவ்விதத் தடங்கலும் கட்டுப்பாடு மின்றி பங்காற்றியிருப்பதற்குச் சங்க கால இலக்கியங்களும் பக்தி இலக்கியங்களுங்கூடச் சான்றுகளாக உள்ளன.

பெண்களைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டிய கடமை ஆண்களுக்கு எப்போதும் உள்ளது என நமது சாஸ்திரங்கள் விதிக்கின்றன. இதனை எதிர்மறையாக, பெண்ணானவள் எப்போதுமே ஆண்களுக்குக் கீழ்ப்படிந்து இருக்க வேண்டியவள் என்று அர்த்தப் படுத்திக் கொள்ளலாகாது. இன்றும் ஆண்-பெண் சம உரிமை உள்ள மேற்கத்திய சமுதாயங்களிலேயே பெண்கள் மிக எளிதாகப் பலவாறான வன்முறைகளுக்கு இலக்காகி விடுவதைப் பார்க்கிறோம். ஆகவேதான் பொதுவாகவே பெண்களுக்குப் பாதுகாப்புத் தேவைப்படுகிறது. தற்காப்புக் கலையில் தேர்ச்சிபெற்று அவர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும் தகுதியும் துணிவும் பெறும்வரை! நம்முடைய ஹிந்து சமுதாயத்தில் பெண்களும் போர்க் கலை பயின்று ஆண்களுடன் பொருதியமைக்க்கும் ஆதாரங்கள் உண்டு!

மாற்றுச் சமயங்களின் ஊடுருவலால் ஹிந்து சமுதாயத்திற்கு நேர்ந்த பல பாதிப்புகளில் பெண் அடிமையாகிப் போனதும் ஒன்று என்பதைக் கண்டுணர்வது அப்படியொன்றும் சிரமமான காரியமல்ல..
+++

Series Navigation