ஸி. செளாிராஜன் கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

ஸி. செளாிராஜன்


1. ஆடு

ஆடு
நடமாடும் ஆயிரம் ரூபா நோட்டு
மார்கழிமாதக் காலைப் பொழுதின்
இளவெயிலில்
கண்மூடித் தவம் செய்து கொண்டிருந்தது

மெளன ஜீவிதம் குறித்துக்
கடவுளிடம் புகாரா ? நன்றி தொிவிக்கிறதா ?
அதைப் பார்த்த என்னை
அதுவும் உற்றுப் பார்த்தது

கரையும் மெளனத்தில்
‘இறந்தும் நான்குபேர் பசி போக்குவேன்’
என்ற பெருமிதம்

சொல்லால்
செயலால்
யாருக்கும் தீங்கு செய்யாத
தூய்மையை ஊருக்குச் சொல்கிறதோ
மெல்லிய வால் ஆட்டுதல் ?

விட்டமாய் அமைந்த கோடு
இருவிழிகளிலும் எத்தனை கேள்விகளை முன்வைக்கிறது ?

மனிதர்கள் தந்த முட்டாள் பட்டத்தை
அலட்சியம் செய்து விட்டு
மெல்ல நகா;ந்தது அந்த ஞானப் பொக்கிஷம்.!

2. நாளை

நாளை நம் அருகில்தான் இருக்கிறது
அது முற்றிலும் திறந்து கிடக்கவில்லை
மூடிய பகுதியை
நாம் அறிய செய்யும் முயற்சிகள் சில
எஃகுச் சுவாில் முட்டி மோதி
உடைந்து போகின்றன.
ஆனாலும் நாளை
நம் அருகில்தான் இருக்கிறது

காலை நண்பகல்
மாலை இரவு என
அதன் கரணைகளின்
இடைக் கோடுகள்
இயல்பாய் நழுவுகின்றன

இன்று போலவே நாளையும்
தெளிவும் மர்மமும் ஆன
இந்தப் பின்னல்
ஒவ்வொருவருக்கும் ஒன்றை
வித்தியாசமாய்ச் சொல்லிக் கரையும்

வழக்கம் போல்
தாவரங்களும் விலங்குகளும்
மனிதனின் ஆறாவது அறிவை
எண்ணிச் சிாிக்கும் – அழும்

வெளிச்சத்தைத் துரத்தும் இருளும்
இருளைத் துரத்தும் வெளிச்சமுமாக
நாளையும் இருக்கும்
அடுத்த நாளைப் போலவே….

—-
srirangamsourirajan@yahoo.co.in

Series Navigation