வேத வனம் -விருட்சம் 59

This entry is part [part not set] of 27 in the series 20091113_Issue

எஸ்ஸார்சி


நல்லவர்களைப் புவி மேல்
கொணர்ந்து
மானிடர்களை ஒற்றுமைப்படுத்தி
விண்ணிற்கு வழி காட்டும்
விசுவான் பெற்ற குமாரன்
எமனே எம் தலைவன்

மரணித்தவனே நீ அறிவாயோ
சரனமையின் வாரிசாகி
நான்கு கண்களுடன்
புள்ளி த்தோலுடைய
இரு நாய்களைக்
கவனமாய்க்கடந்து
எமனொடு வதிபவர்கள்
உமது முன்னோர்கள்
சேருங்களச் சேதி அறிந்தோரை ( ரிக் 10/14 )

அக்கினியே நின்னில்
பக்குவப்படாத பிரேதத்தின்
சருமத்தைச்
சீர் செய்து
எம் பிதாக்களிடம் சேர்க்கவும்
கன்னங்கரு காக்கை
எறும்பொடு பாம்பு
நரி இவை தீண்டிவந்த
பிரேதங்களை
அக்கினியும்
பிராம்ணன் பெற்றச்
சோமனும் குணப்படுத்தட்டும்

அக்கினியே நினது
ஆட்சி ப்பீடத்தை
தண்மை செய்க
அல்லிக்கொடியும் இளம்புல்லும்
செழிக்கட்டுமங்கே

ஈரமாகிய நிலமே
பசும் புல் போர்த்திய
குளிர் தரையே
சுகம் தரு விருட்சங்களால்
பசு மேனி கொண்ட புவித்தாயே
பெண் தவளைகள்
சேர்க நின்னோடு
அக்கினி இன்பம் பெறுக ( ரிக் 10/16 )

கணவனுடைப்பெண்கள்
வாரும்
வந்து மனைக்கேகு உடனே

விதவைப்பெண்ணே
எழுந்திரு
நின் கணவனொடு
நீ சுகித்தகாலம் போயிற்று
புவியோ சுகம் தரு அன்னை
காத்திடுவாள் நின்னை
மரித்தவன் பிடித்த வில்லை
எடுத்துவை
புகழொடு வலிமை சேர்க்கும்
அவ்வில் உனக்கு

நிலமே நின் மீது
கிடத்தப்பட்டது அவன் உடல்
அதனைக்கவனி
நீயே அன்னை
நினது ஆடையின்
முந்தி கொண்டு
குழந்தையாய்ப்போற்றிக்
காத்திடுக அவனை

விட்டுச்சென்ற அவன்
உடல் மேலே
வீழ்ந்து படியும் மண்துகள்
நெய் வழிந்து சிந்திடும்
வள மனையாகிச் சிறக்கட்டும்
அவ்வுடல் விட்டோனுக்கே ( ரிக் 10/18 )
——————————————————————

Series Navigation