வெளி – விதைத்ததும் விளைந்ததும்

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

பாவண்ணன்



தமிழ் அரங்கியல் ஆவணத்தொகுப்பாக வெளிவந்திருக்கும் வெளி இதழ்த்தொகுப்பு மூன்று பகுதிகளாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் இருபத்திமூன்று கட்டுரைகளும் இரண்டாம் பகுதியில் ஏழு நாடகப்பிரதிகளும் மூன்றாம் பகுதியில் நான்கு நேர்காணல்களும் உள்ளன. இவையனைத்தும் வெளி இதழ்களில் வெவ்வேறு காலகட்டங்களில் இடம்பெற்றிருந்த படைப்புகளiலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

காலம்காலமாக நாடகத்துக்கும் வாழ்க்கைக்கும் இருக்கும் உறவையும் அது பெற்ற பார்வை மாற்றங்களையும் தெளிவாக முன்வைக்கும் எஸ். ஆல்பர்ட்டின் “நாடக வடிவம் : கலை அனுபவமும் மக்கள் பங்கேற்பும்” என்கிற கட்டுரை தொகுப்பின் முக்கியமான கட்டுரைகளில் ஒன்றாகும். “உலகமே ஒரு நாடகமேடை, அதில் நாம் அனைவரும் நடிகர்கள்” என்ற ஷேக்ஸ்பியரின் வரிகளைத் தொடக்கத்திலேயே பதிவு செய்கிறார் ஆல்பர்ட். பின்னர், விளையாட்டுக்கும் நாடகத்துக்கும் உள்ள நுட்பமான நெருக்கங்களை விரிவாகப் பட்டியலிடுகிறார். வீட்டிலோ அல்லது வெளியிலோ சாதாரணமாக நிகழும் நிகழ்ச்சிகளை நாம் பார்வையாளர் என்னும் பிரக்ஞையோடு பார்க்கும்போது நாம் காணும் அந்த வாழ்க்கை நிகழ்ச்சி ஒரு நாடகமாகத் தெரிகிறது. நாம் இருக்கும் தளத்திலிருந்து சற்று உயர்வான தளத்தில் ஒரு மொட்டைமாடியில் நிகழும் வாழ்க்கைக்காட்சி மேடைக்காட்சிக்கு இணையாகிறது. ஒரு ஜன்னலுக்கு அப்பால் நிகழ்வது பார்சினிய தியேட்டரில் பார்க்கும் நாடகமாக நம்மைக் கவர்கிறது. நாம் பார்வையாளர் பாத்திரம் ஏற்கும்போது இவ்வாறு நாம் பார்க்கும் வாழ்க்கை நிகழ்ச்சிகளில் இடம்பெறும் மனிதர்களே நடிகர்களாகத் தோற்றம் கொள்கிறார்கள். வாழ்வுக்கும் நாடகத்துக்கும் உள்ள நெருக்கத்தைப் பல எடுத்துக்காட்டுகள்மூலம் நிறுவுகிறது இக்கட்டுரை.

இன்னும்கூட நாம் கற்பனை செய்து பார்க்கவும் தயங்கும் ஒரு சமூக நிகழ்வைச் சித்தரிக்கும் லிசிஸ்ராட்டா என்னும் கிரேக்க நாடகம் பற்றிய குறிப்புகள் ஆல்பர்ட் கட்டுரையில் காணப்படுகின்றன. லிசிஸ்ராட்டா என்பவன் ஓர் அரசன். அவன் தலைமையில் அணிவகுத்துப் போராடிய வீரர்கள் வெற்றி எக்காளத்துடன் ஊருக்குத் திரும்புகிறார்கள். ஊரில் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. போரிலிருந்து திரும்பும் தம் கணவன்மார்களை எதிர்த்து போர்க்கொடி பிடிக்கிறார்கள் நகரத்துப் பெண்கள். தம் வீட்டுக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி மறுக்கிறார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் குடிமக்களில் பாதி எண்ணிக்கையில் இருக்கும் பெண்களின் அனுமதியின்றி ஆண்களே முடிவெடுத்து போருக்குச் சென்றது ஏன் என்பது அவர்கள் கேள்வி. மிகவும் ஆழமான அரசியல் கேள்வியொன்று நகைச்சுவையோடும் விமர்சனத்தோடும் முன்வைக்கப்பட்டு நாடகம் விரிவு கொள்வதாகக் குறிப்பிடுகிறார் ஆல்பர்ட்.

தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுத்தும் ஆண்கூட்டம், சூழலில் பங்கேற்க இயலாத அப்பாவிப்பெண்கள் என இரு எதிர்முனைப்புள்ளிகளைச் சுட்டிக்காட்டுகிற ஒரு நாடகம் இன்றைய சூழலில்கூட மிகவும் பொருத்தமான ஒன்றாகவே தோன்றுகிறது. இந்த வெளிச்சத்தின் பின்னணியில் கலிங்கத்துப்பரணியின் கடைதிறப்பு முற்பகுதிக்கவிதைகளை வேறுவிதமாக வாசிக்கமுடியும் என்று எண்ணத் தூண்டுகிறது. இத்தனை காலமும் காண இயலாமல் போனதே என பொய்க்கோபத்தில் கதவைச் சாத்திக்கொண்டு அனுமதி மறுக்கிற பெண்களை நோக்கி, கடந்த கால இன்ப அனுபவக் குறிப்புகளை நினைவூட்டியும் இனிய சொற்களைக் கூறியும் கதவைத் திறக்க யாசிக்கிற கணவன்மார்களiன் கூற்றாகவே நாம் இதுவரை கடைதிறப்பை வாசித்துப் பழகியிருக்கிறோம். பொய்க்கோபத்தை ஏக்கமாகவும் தாபமாகவும் ஊடலாகவும் படித்துப்படித்துப் பழகிய நம் மனத்துக்கு அப்பார்வை உகந்ததாகவே இருந்தது. ஆல்பர்ட் தரும் நாடகக்குறிப்பு அப்பார்வையை உடைக்கிறது. பெண்களின் கோபத்தை உண்மையான கோபமென்றும் அவர்கள் கதவடைப்பை ஒரு போராட்ட உத்தியாகவே கருதிக் கடைபிடிக்கின்றனர் என்றும் நினைத்துக்கொண்டு கவிதையை வாசிக்கும்போது ஒரு புதிய பாதையை வகுத்துக்கொள்ள முடிகிறது. அதை ஒரு போர் எதிர்ப்புப் பகுதியாகக் கொள்வது, கலிங்கத்துப்பரணியின் பிற்பகுதியில் நிறைந்துள்ள போர்க்களக்காட்சிகளின் துயரங்களோடு பொருந்திப்போவதாக உள்ளது. தம் குரலை வெளிக்காட்டிக்கொள்ளாமலேயே தம் நெஞ்சில் நிறைந்திருக்கும் உக்கிரமான கோபத்தை பெண்கள் உணர்த்துவதாக நினைக்கவைக்கிறது. சற்றே முயற்சி செய்தால் இதைத் தமிழ்ச்சூழல் சார்ந்த நாடகமாக மாற்றிவிடலாம் என்கிற எண்ணம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

கிரேக்க நாடகங்களிலிருந்து நாடகப்பார்வையைத் தொடங்குகிற ஆல்பர்ட் தன் கட்டுரையில் ஷேக்ஸ்பியர், பெர்னார்ட் ஷா, இப்சன், செகாவ், கார்க்கி, யூஜின் ஓநில் என பல புள்ளிகளைத் தாண்டித்தாண்டி ப்ரெக்ட்வரை கொண்டுவந்து நிறுத்துகிறார். உணர்ச்சிவசப்படுத்துவதல்ல, விமர்சனத்துக்குள்ளாக்குவதே நல்ல நாடகம் என்னும் கோட்பாட்டை முன்வைத்து முடிவுபெறுகிறது அவர் கட்டுரை. தன் பட்டியலில் ஒரு பரிசீலனையாகக்கூட அவர் காளிதாசனையும் பாஸனையும் ஆல்பர்ட் சேர்த்துக்கொள்ளாதது வியப்பாக இருக்கிறது. வாழ்வியல் விமர்சனக்குரலாக பாஸன் நாடகங்களை வகைப்படுத்திப் பார்ப்பதில் எந்தத் தடையுமில்லை. பஸன் எழுதிய “கர்ணாபாரம்” நாடகம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

தொகுப்பின் இன்னொரு முக்கியமான கட்டுரை இந்திரா பார்த்தசாரதியின் முரணியல் நாடக முன்னோடிகள். அபத்த நாடகம் என்னும் மொழிபெயர்ப்பைப் பிழையென சுட்டிக்காட்டும் இந்திரா பார்த்தசாரதி அதற்கு இணையாக முரணியல் நாடகம் என்னும் சொல்லை உருவாக்குகிறார். அவர் சுட்டிக்காட்டும் வேறுபாடுகளை உணரும்போது, இதுவே மிகப் பொருத்தமான சொல்லாகத் தோன்றுகிறது. மேலைநாட்டு ஆய்வாளர்கள் முன்வைத்த கருத்தாக்கங்களை அலசும் வேளையில் அதற்கு இணையாக தமிழ்ச்சூழலில் புழங்கிவந்த கருத்தாக்கங்களையும் சேர்த்து முன்வைப்பதால் வாசகர்களுக்கு அதிகத் தௌiவு கிடைக்கிறது. கலித்தொகையில் இடம்பெறும் ஒரு காட்சியை எடுத்துக்காட்டாக சொல்லி அதில் இயங்கும் முரணியல் நிலையை மிகவும் நுட்பமாக வெளப்படுத்துகிறார் இந்திரா பார்த்தசாரதி. கருங்கூத்து என்னும் சொல்லை கலித்தொகையிலிருந்து மறுகண்டுபிடிப்பு செய்கிறார்.

பாதல் சர்க்காரின் மூன்றாம் அரங்கம் பற்றிய புரிதல்களை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் அம்ஷன்குமார் கட்டுரை, சில விஷயங்களை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. வழிவழியான வடிவமுறை, வசதியான மேடைமுறை இரண்டையும் புறக்கணித்து வெட்டவெளியையே அரங்காகத் தேர்ந்தெடுக்கிற சர்க்கார் நடிகர்களiன் உடலியக்கத்துக்குத் தரும் முக்கியத்துவத்தை நாம் உணரவேண்டும் என்கிறார். வெறும் உரையாடல்களால் மட்டுமின்றி, உடல்மொழியின்மூலம் நாடகம் நிகழ்த்தப்பட வேண்டும் என்பது அவர் கூற்று. மூன்றாம் அரங்கில் சமூகவிமர்சனத்துக்கு இருக்கும் பங்கை வலியுறுத்தும் அதே நேரத்தில் அது மலிவான பிரச்சார உத்திகளாக சுருங்கிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் சர்க்கார்.

நாடகப்பிரதிகளைக்கொண்ட இரண்டாவது பகுதியில் ஐந்து நாடகங்கள் உள்ளன. வேலுசரவணனின் “மழைவீட்டில் பச்சைநிறப் பூனைக்குட்டிகள்” படித்ததுமே மனத்தில் இடம்பிடித்துக்கொள்கிறது. உடனடியாக அதை மனத்துக்குள் ஒரு நாடகமாக நிகழ்fத்திப் பார்க்கமுடிகிறது. “நாணயம் இல்லாத நாட்டில்” என்னும் பாதல் சர்க்காரின் நாடகத்தில் இடம்பெறும் கேனய்யன் மற்றும் கோணய்யனுடைய உரையாடல்கள் நாடகத்தை வாசித்துமுடித்த பின்னரும் காதில் ஒலித்தபடி உள்ளன. தாஸ்தாவெஸ்கியின் மரணவீட்டின் குறிப்புகள் நாவல் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் ரமேஷ் அகிய இரண்டு படைப்பாளiகளiன் முயற்சியால் நல்லதொரு நாடகப் பிரதியாக்கப்பட்டுள்ளது. நாடகப்பிரதிகளாக இவை அச்சில் வெளிவந்து பல ஆண்டுகள் கடந்திருக்கும் இத்தருணத்தில் இவை எங்கேனும் நாடகமாக நிகழ்த்தப்பட்டிருக்குமா இல்லையா என்பது தெரியவில்லை.

மூன்றாவது பகுதியில் உள்ள நேர்காணல்களில் மூன்று நேர்காணல்கள் அயல்மொழி ஆளுமைகளுடன் நிகழ்த்தப்பட்டவை. ஆங்கிலத்தில் வெளிவந்த அந்த நேர்காணல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ந.முத்துசாமியுடன் நிகழ்த்தப்பட்ட ஒரே ஒரு நேர்காணல்மட்டுமே நேரிடையான ஒன்று. ந.முத்துசாமி தன் நாடக அனுபவங்களையும் கூத்துப்பட்டறையின் முயற்சிகள்பற்றியும் இந்த நேர்காணலில் பகிர்ந்துகொள்கிறார். பிறமொழி இந்திய நாடகங்களைப்பற்றியும் தன் அனுபவங்களைக் குறிப்பிடுகிறார். வெவ்வேறு விதமான படிமங்களை ஒன்றிணைத்துக்கொண்டே செல்கிற தம் நாடகக்காட்சியமைப்புகளைப்பற்றி சொல்லவரும்போது பார்வையாளர்களின் கற்பனை விரிவடைந்துகொண்டே போகவேண்டும் என்று அவர் முன்வைக்கும் பதில் முக்கியமானது.

அரங்கியல் ஆவணத்தொகுப்பு என்கிற குறிப்போடு வெளிவந்துள்ள இத்தொகுப்பில் வெளி-யின் முதல் இதழ் எப்போது வெளிவந்தது. எந்தத் தேதியில் இறுதி இதழ் வெளிவந்தது, எத்தனை இதழ்கள் வெளிவந்தன என்கிற தொடக்கநிலைக்குறிப்புகள் கூட இல்லாமல் இருப்பது வருத்தத்துக்கு உரியது. ரங்கராஜன் தன் முன்னுரையை மிகச்சுருக்கமான பதிவாக முன்வைப்பதற்கு மாறாக, வெளி காலகட்டம்பற்றிய விரிவான சித்திரத்தை எழுப்பியிருக்கவேண்டும். அதுவே இந்தத் தொகுப்புக்கான அவசியத்தை ஒரு புதிய வாசகனுக்கு உணர்த்தக்கூடியதாக இருக்கும். தமிழ் நவீன நாடகச்சூழலுக்கும் வெளி இதழுக்கும் இடையிலான உறவை தெளிவான முறையில் விவரித்திருக்கவேண்டும். ஏற்கனவே நாடகங்களோடு தொடர்புடைய தமிழ் ஆளுமைகளுக்கும் முதன்முதலாக நாடகத்துறையின்பால் உருவான ஈர்ப்பில் அடியெடுத்துவைத்த ஆளுமைகளுக்கும் பொதுவான ஒரு முக்கியமான தளமாக வெளி இயங்கிய பின்னணி சுட்டிக்காட்டப்பட்டிருக்கவேண்டும். வெளி இதழ் தொடங்கப்பட்ட சூழலில் சுபமங்களாவழியாக கோமல் சுவாமிநாதன் தமிழகத்தின் முக்கியமான நகரங்களiல் நாடகவிழாக்கள் நடத்தப்பட்டன. பரீக்ஷா ஞாநியின்வழியாக சென்னையிலேயே தொடர்ச்சியாக பல நாடகங்கள் அரங்கேறின. சங்கீத நாடக அகாதமியின் தென்மண்டல விழாக்கள் புதிய நாடக ஆசிரியர்களுக்கும் நடிகர்களுக்கும் புத்துணர்வூட்டின. அவற்றில் பங்கேற்ற தமிழ்நாடக முயற்சிகளுக்கு பரவலான கவனம் கிடைத்தது. நாற்பதுக்கும் மேற்பட்ட நாடகப்பிரதிகள் உருவாயின. கன்னடத்திலிருந்து தமிழில் நான் மொழிபெயர்த்த கிரீஷ் கார்னாடின் பலிபீடம், நாகமண்டலம் ஆகிய நாடகங்களை வெளி தொடக்கத்தில் தன் பிரசுரங்களாகவே வெளியிட்டது. மறைந்த மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத் அவர்களின் மொழிபெயர்ப்பில் வட இந்திய மொழிகளின் நாடகங்கள் தமிழுக்கு அறிமுகமானதும் வெளி இதழின் வழியாகவே. ஆவணப்படுத்துவதற்கான பல சம்பவங்களும் தகவல்களும் இருந்தபோதிலும் அவை குறைந்தபட்சமாகக்கூட இந்த ஆவணத்தொகுப்பில் குறிப்பிடப்படவில்லை என்பது மிகப்பெரிய குறை.

( வெளி இதழ்த்தொகுப்பு – தொகுப்பாசிரியர் ரெங்கராஜன். எனி இந்தியன் பதிப்பகம். 102, எண் 57, பி.எம்.ஜி.காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் சாலை. சென்னை-17. விலை.ரூ 160 )


paavannan@hotmail.com

Series Navigation