வெட்சி (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை கருத்தரங்க கட்டுரைகளை முன்வைத்து…)

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue

புதியமாதவி, மும்பை


வெட்சி… தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
வெட்சி – தமிழகத் தலித் ஆக்கங்கள் – என்ற தன்விவரம் என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது.
வெட்சி… என்றால் என்ன?

வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல்
கரந்தையாம்.. (வெட்சி குறித்த பழமையான பாடல் வரி)

வெட்சிதானே குறிஞ்சியது புறனே –
தொல்காப்பியர் எழுதி வைத்திருப்பது.

தொல்காப்பியர் நிரை கவர்தலையும் மீட்டலான கரந்தை இரண்டையும் சேர்த்துதான் வெட்சி என்று சொல்லி வைத்திருக்கிறார்.. இம்மாதிரி நிறைய வெட்சி குறித்து எப்போதோ.. 30 வருடங்களுக்கு முன் கல்லூரியில் படித்த வரிகள் (மனப்பாடம் செய்த வரிகள்தான்!) நினைவுக்கு வந்தன. எப்படி எந்த வகையில் வெட்சி திணையையும் தலித் ஆக்கங்களையும் இணைக்கிறார்கள் என்று இந்தப் புத்தகம் என் கைக்கு வந்த ஒரு மாதமாக யோசித்து யோசித்து என்னால் எதுவுமே ஊகிக்க முடியாமல் போனதற்காக வருத்தப்பட்டு கழிவிரக்கம் கொண்டது தான் மிச்சம். தலைப்பும் கட்டுரைகள் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் பல்கலைக் கழக கருத்தரங்கில் வாசித்தவை
என்ற அறிவிப்பும் கொஞ்சம் நேரம் எடுத்து வாசிக்க வேண்டியவை இக்கட்டுரைகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
இத்தியாதியான சகல முன்னேற்பாடுகளுடன் ஒரு வழியாக அயோத்தி அலகாபாத் தீர்ப்பு வந்தப்பின் மும்பை சகஜ நிலைக்கு வந்தவிட்டது என்ற பதற்றம் நீங்கி வாசிக்க உட்கார்ந்தேன்.
புத்தகத்தின் க டைசிப் பக்கம் வரை வாசித்தப் பின்னும் எதற்காக வெட்சி? என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் என் அறிவுக்கு எட்டவில்லை!

ஓரளவு நான் முழுமையாக வாசித்திருக்கும் சில தலித் எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகள் குறித்த கருத்தரங்க வாசிப்புகளை இங்கே குறிப்பிடுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அபிமானி, அழகிய பெரியவன், அயோத்திதாசர், இமையம், குணசேகரன், சந்ரு, சாணக்யா, சிவகாமி, யாழன் ஆதி, ரவிக்குமார், ராஜ்கவுதமன் ஆக்கங்கள் குறித்தக் கட்டுரைகள் மிகவும் தெளிவான மதிப்பீடுகளை முன்வைக்கின்றன.

* ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினர் ஆனபிறகு தலித்துகள் அவலநிலை, பிரச்சனைகள்
ஆகியவற்றைப் பற்றி தீவிரமாக எழுதுவதைக் குறைத்துக் கொண்டுள்ளார்.

*ஜே.பி.சாணக்யாவின் மொழியாளுமை குறிப்பிடத்தக்கது. சூழல்களை நுட்பமாக விவரித்தலின் மூலம் நிகழ்வுகளைப் படிமங்களாகச் செறிவான கவித்துவமான சொற்களில் உருவாக்கி காட்டுகிறார்.

*இமையத்தின் எழுத்துகளில் இருக்கும் தலித் உள்முரண்பாடுகளைக் கட்டுரையாளர் அலசி வெவ்வேறு விதமான இமையத்தின் புனைவுகள் தலித் இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பவை என்ற மதிப்பீடு.

*சிவகாமியின் படைப்புகள் அனைத்தும் குடும்பக்கட்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் தலித் பெண்கள் மீதான வன்முறைப் பற்றியதாகவும் குடும்பவெளியைக் கடந்து செல்ல நினைக்கும் பெண்களின் சிந்தனைக் களமாகவும் இருக்கின்றன இக்கட்டுரையாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

* அன்பாதவன் குறித்த கருத்தரங்க கட்டுரையில் அந்திமழையில் அவர் அவ்வப்போது எழுதிவரும் கவிதைகளை எடுத்துக் கொண்டு கட்டுரையாளர் ஆய்வு செய்கிறார். அன்பாதவன் என்ற தலித் எழுத்தாளரை அறிமுகம் செய்த “நெருப்பில் காய்ச்சிய பறை” கவிதைகள் குறித்து கட்டுரை கள்ள மவுனம் சாதிக்கிறது.
இருக்கட்டும்.

தலித் எழுத்தாளர்கள் என்றால் தலித்தியம் மட்டும் தான் எழுத வேண்டுமா? என்றால் இல்லை. எந்த ஒரு தலித் எழுத்தாளரும் தலித்தியம் என்று இதுவரை சொல்லப்பட்டிருக்கும் எந்த ஒரு வரையறை எல்லைகளுக்குள் நிற்பதில்லை. தலித்தியத்தின் அடிநாதமான சமத்துவமும் உரிமையும் சாதியத்தை கட்டமைத்திருக்கும் மரபுகள், தொன்மக்கதைகள், புராண இதிகாசங்கள் , மதங்கள் , நம்பிக்கைகள் அனைத்துக்கும் எதிராக தன்னையும் தன் எழுத்துகளையும் நிறுத்தும் கலகக்குரலாக இருந்தாலும் அந்த உணர்வுகளின் பின்னணியில் பெண்ணியமும் பெருநகர மனிதப் பெருமூச்சின் வேதனையும் எப்படி பார்க்கப்படுகின்றன என்பதற்கு அன்பாதவனின் தலித்தியம் அல்லாத பிற படைப்புகளை அணுகி இருக்கலாம். ஹைபுன் மாயவரமும் தனிமைக் கவிந்த அறையும் மட்டுமே கட்டுரையாளரின் கட்டுரை தொட்டுச் சென்றிருக்க தலித்திய ஆக்கத்தில் அன்பாதவனின் பங்கு கட்டுரையில் வெற்றிடமாக்கப்பட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை.

* ஆதவன் தீட்சண்யாவின் சில சிறுகதைகளில் கட்டுரைப்பாங்கான நடை இருக்கும்.. அதற்காகவே இப்படியா..? அவருடைய கட்டுரை ஒன்றைக் கருத்தரங்க கட்டுரையாளர் சிறுகதை என்று சொல்வது! ‘இட ஒதுக்கீடு யாசகமல்ல, உரிமை” என்ற தலைப்பில் நானறிந்து ஆதவன் தீட்சண்பா கதை எதுவும் எழுதவில்லை! ஆதவன் தீட்சண்யாவும் அப்படித்தான் சொல்லுகிறார்! ஆனால் இக்கருத்தரங்கம் அவர் கட்டுரையை சிறுகதை என்று எழுதி மேலும் மேலும் அந்தக் கட்டுரைச் செய்திகளைச் சிறுகதையின் சமூகச் சிந்தனைகளாக வெகுவாக சிலாகித்து எழுதி இருக்கிறது. கட்டுரையாளருக்கு இன்னொரு உபதகவல்: ஆதவண் தீட்சண்யாவின் கவிதைகள் மூன்று தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன.

* இந்திரனின் பன்முகத்தன்மைப் பாராட்டுதலுக்குரியதுதான்.
ஆனால் தலித் ஆக்கங்கள் குறித்த கருத்தரங்கில் இந்திரனின் பன்முகத்தன்மையைவிட பேசப்பட்டிருக்க வேண்டியது அவருடைய மொழியாக்கங்கள் – அதிலும் குறிப்பாக அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம், கடவுளுக்கு முன் பிறந்தவர்கள், பிணத்தை எரித்தே வெளிச்சம், பசித்த தலைமுறை ஆகிய தொகுப்புகள் தமிழ் தலித்திய இலக்கியத்தில் எற்படுத்திய தாக்கம் மிகவும் வீரியமானது. இந்திரன் தலித் இலக்கியத்திற்கு செய்த மிகப்பெரிய பங்களிப்பு.
ஓர் ஆய்வு நூல் வெளியிடும் அளவுக்கு இந்திரனின் மொழியாக்க தாக்கங்களை எடுத்துரைக்க வேண்டிய காலமிது. ஆனால் கட்டுரையாளர் இந்திரன் சார்ந்த பிற செய்திகளை முன்னிலைப் படுத்தி சொல்ல வேண்டியவைகளைச் சொல்லாமல் அலட்சிய போக்கை காட்டியிருப்பது வேதனை அளிக்கிறது.

* விழி.பா.இதயவேந்தன் அவர்களின் தலித் அழகியல் நூல் குறித்த கட்டுரையாளரின் நியாயமான கோபத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தலித் அழகியல் என்ற நூலினை விழி. பா.இதயவேந்தனின் கட்டுரைகள் அல்லது ‘விழி.பா. இதயவேந்தன் பார்வையில் பிற தலித் படைப்பாளிகள்’ என்று கூட வந்திருக்கலாம் என்று கட்டுரையாளர் சொல்வது சரிதான். அந்நூலை வாசித்தவுடன் இதே கருத்தை விழி.பா.இதயவேந்தனிடமும் சொல்லியது நினைவுக்கு வருகிறது.

ஆனால் கட்டுரையாளர் இந்த விமர்சனங்களின் அடுத்தக் கட்டமாக சில வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார். அவை: ‘தலித் அழகியல் எனும் இந்நூலினைப் பொருத்தமட்டில் அழகியல் குறித்தான பதிவே தொனிக்காமல், தலித் என்கிற சொல்லாடலைக் குறித்தே இது முதன்மைப்படுத்தப்பட்டதும் தலித் என்கிற சொல்லிற்கு நல்ல விலையை நிர்ணயிக்க முடியும் என்கிற வியாபார யுத்தியுமே வெளிப்பட்டதனைக் காணமுடிகிறது ” என்றும் ‘தலித் என்பதனை எப்படி எல்லாம் காசாக்க/அரசியலாக்க முடியுமென்று தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள் இவ்வம்பானிகள்” என்றும் சொல்லியிருப்பது கட்டுரையாளரின் நோக்கம் என்ன என்பதை வெளிப்படையாக காட்டிவிட்டது!
என்னவோ தலித் என்று தலைப்பில் போட்டுவிட்டால் புத்தகம் ஆகா ஓகோ என்று விற்பனை ஆவது போலவும் அப்படிப் புத்தகம் போட்டு தலித் எழுத்தாளர்களும் புத்தகம் போட்ட பதிப்பாளர்களும் செல்வந்தர்கள் ஆகிவிட்டது போலவும் தலித் அரசியல் கொடி கட்டிப் பறக்கிறது, அதனால் தலித் என்ற சொல்லுக்கு நல்ல விலை இருக்கிறது என்றும் சொல்வதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன? ஆய்வு கட்டுரைகளில் கருத்துகளை எழுதுவதற்கு முன் அதற்கான ஆதாரங்களையும் கட்டாயம் முன்வைக்க வேண்டும். இம்மாதிரியான பொறுப்பில்லாத கருத்துகளை உதிர்ப்பதை இனியாவது ஆய்வு செய்யும் அறிவுஜீவிகள் தவிர்ப்பது அவசியம்.

வெட்சி என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கும் தமிழகத் தலித் ஆக்கங்கள் என்ற ஆய்வுக்கட்டுரைகள் எந்த அளவுக்கு தலித் ஆக்கங்கள் குறித்து ஆய்வு செய்திருக்கின்றன? ஏன் இந்த அலட்சியப் போக்கு? ஆய்வுகள் என்பது வெறும் மேற்கோள்கள் காட்டுவது மட்டும் தானா? சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்…

Series Navigation