வெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

மலர்மன்னன்



ஸ்ரீ வெங்கட் சாமிநானின் விஜய பாஸ்கரனுக்கு அஞ்சலி ஒரு சம்பிரதாயமான அஞ்சலியாக இல்லாமல் வழக்கமான வெ.சா. முத்திரையுடன் வெளிவந்திருப்பது மிகவும் நிறைவாக இருந்தது.

நண்பர் விஜய பாஸ்கரனை ஏலி, ஏலி, லாமா ஸபக்தானி என்று, மாற்றுக் கருத்தின்றி அனவராலும் கொண்டாடப்படும் தோழர் ஜீவா அவர்கள் பாடவைத்ததற்கு என்ன காரணம்?

தமிழ் நாட்டில் ஈ.வே.ரா. தூவிய துவேஷம் என்கிற விஷ விதை வர்ஜா வர்ஜமின்றி எல்லார் தோட்டங்களிலும் பார்த்தீனியம் மாதிரி துளிர்த்து வளர்ந்துவிட்டதுதான் இதற்குக் காரணமா யிருக்க வேண்டும்.

ஜீவாவின் பூர்வாசிரமம் ஈ.வே.ரா.அவர்களின் சுய மரியாதை இயக்கம் எனபது தெரிந்த விஷயம். ஈ.வே.ரா.வின் சுய மரியாதைக்குத் தோற்றம் அவரது மரியாதைக்குக் காங்கிரசில் ஏற்பட்ட பங்கம். அவரது மரியாதை பங்கப்பட்டதற்கு வேறு காரணங்களும் இருந்திருக்கலாம். ஆனால் ஈ.வே.ரா.வின் கண்களுக்கும் மனசுக்கும்பட்டது ஒரேஒரு காரணம்தான்!

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஐக்கியமான பிறகுங்கூட ஜீவாவால் ஈ.வே.ரா. வின் தாக்கத்திலிருந்து விடுபட இயலவில்லை என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உள்கட்டு விவகாரங்கள் தெரிந்தவர்களுக்கு அது புது விஷயம் இல்லை. ஏன், வெ. சா.வுக்கும் தெரிந்திருக்கும்தான். ஆனால் வேண்டாமே என்று விட்டுவிட்டிருப்பார் என்றே நினைக்கிறேன்.

தமிழ் நாட்டில் பழைய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈ.வே.ரா.வின் தாக்கம் இருந்தமையால் பின்னால் அது பிளவுபட்டபொழுதுகூட அதே அடிப்படையில் பிளவுபட்டதாகக் கூறுவார்கள். இடதானது ‘உள்ள’ கட்சி, வலது ‘அல்லாத’கட்சி!

விஜய பாஸ்கரன் தமது பத்திரிகைக்கு சரஸ்வதி என்று பெயர் வைத்துக் கொண்டிருந்ததையே ‘முற்போக்காளர்’களால் எப்படிப் பொறுத்துக்கொண்டிருக்க முடிந்ததோ!
‘முற்போக்கு’களின் சகிப்புத்தன்மையற்ற நான்செக்யூலர் போக்கு தான் சரஸ்வதியின் அற்ப ஆயுளுக்குக் காரணம் என்றாலும் அதன் பின்னணீயில் ஈ.வே.ரா. வின் நிழலும் படிந்துள்ளது.
விஜய பாஸ்கரன் தம்மைச் சுற்றி இருந்தவர்களாலேயே
கடைசிவரை நம்ப வைத்துக் கழுத்தறுக்கப்பட்டவர். ஆனால்
வெளியே காண்பித்துக் கொள்ளாமல் சமரசம் செய்துகொண்டு
விட்டார்.

தவறான கூட்டத்தில் சிக்கிக்கொண்ட சரியான மனிதர் விஜய பாஸ்கரன். சுந்தர ராமசாமிக்கு நல்லவேளையாக அப்பாவின் ஸுதர்சன் ஜவுளி வியாபாரம் இருந்தது. அவரால் வெளியே வர முடிந்தது. ஜயகாந்தனுக்கு ஆனந்த விகடன் கைகொடுத்தது. அது தவிர வேறு வகையில் நிரந்தர மாத வருமானமும் இருந்தது.
++++

Series Navigation