வஹ்ஹாபி
கடந்த மாத இறுதியில் வெளியான திண்ணை (28.05.2009) இதழில் வெ.சா, ‘பேராசிரியர் ஏ.எஸ். முகம்மது ரஃபி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்’ வைத்திருந்தார்.
அங்கதம் என்று நினைத்துக் கொண்டு சே குவேரா, ஹோஸி மின், லெனின், சுபாஷ் சந்திர போஸ், வ.வே.சு ஐயர், ஆகியோரெல்லாம் நாகூர் ரூமியைப் போல் தைரியசாலிகள் அல்லர் என்று என்னென்னவோ எழுதியிருந்தார் வெ.சா. [சுட்டி-1].
அவற்றுக்கு பதில் சொல்வது என் வேலையல்ல. நாகூர் ரூமி என்ற தனிமனிதரைப் பற்றி எழுதிய வெ.சாவாச்சு; ரூமியாச்சு.
கடந்த வாரத் திண்ணை இதழில், குர் ஆன் வசனம் 023:006க்கான விளக்கத்தை வெ.சாவுக்குத் தருவதாக உறுதியளித்திருந்தேன். அதை இங்குக் காண்போம்.
“இறைவணக்கத்தை உள்ளச்சத்தோடு நிறைவேற்றுகின்ற,
வீணான பேச்சு/செயல்களை விட்டு ஒதுங்கி விடுகின்ற,
தவறாது வளவரி செலுத்துகின்ற,
தங்கள் மனைவியர் அல்லது தங்கள் வலக்கரம் உரிமையுடைய பெண்களைத் தவிர வேறெவரிடமும் உறவு கொள்ளாமல் கற்பொழுக்கம் பேணிக்கொள்கின்ற
இறைநம்பிக்கையாளர்கள் வெற்றியடைந்து விட்டனர்” – குர்ஆன் 023:001-006.
மேற்காணும் வசனத்தில் உள்ள ‘வலக்கரம் உரிமையுடைய பெண்கள்’ என்றால் போரில் கைது செய்யப் பட்ட அடுத்த வினாடி படுக்கையில் கிடத்தப் படுகின்ற பெண்கள் என்ற மிகத் தவறான கருத்துருவாக்கம் பரவலாக விதைக்கப் படுகிறது.
அந்தக் கருத்துருவாக்கம் எப்படித் தவறானது என்பதைப் பார்ப்போம். அதற்கு முன்னர் “வலக்கரம் உரிமையுடைய” என்ற இலக்கியச் சொல்லாக்கத்தை “பொறுப்பிலுள்ள” என்று நமது வசதிக்காக எளிமைப் படுத்திக் கொள்வோம். ஏனெனில், அரபியர் ஒருவர் ஒரு பெண்ணைப் பற்றி, “அவள் என் மடியில் தவழ்ந்து கொண்டிருப்பவள்” என்று அவரது மொழியில் குறிப்பிட்டால் அவரது மடியைத் தேடிப் பார்த்தலாகாது. அவரது கூற்றுக்கு, “அவள் என் வளர்ப்பு மகள்” என்பது எளிய பொருளாகும். போலவே, வலக்கரம் உரிமையுடைய = பொறுப்பிலுள்ள. இனிமேல் இங்கு எழுதப் படும் ‘வலக்கரம் உரிமையுடைய’ என்பதற்கு, ‘பொறுப்பிலுள்ள’ என்பது பொருளாம்.
போரில் கைது செய்யப் படும் பெண்கள் அனைவரையும் ‘வலக்கரம் உரிமை’ ஆக்கியே தீர வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது. மேலும், போரில் கைது செய்யப் படுபவர்களுள் பெண்களைவிட ஆண்கள்தாம் அதிகமிருப்பர். ஆண்களும் ‘வலக்கரம்தான்’ அதாவது வெற்றி பெற்ற போர்வீரர்களுடைய பொறுப்பின்கீழ் வருபவர்தாம்.
குவாண்டனாமோ, அபூகுரைப் போன்ற சிறைக்கூடங்களும் சித்திரவதைகளும் இஸ்லாத்தில் இல்லை. போர்க்கைதிகளைப் பொருத்த மட்டில் இஸ்லாத்தில் கீழ்க்காணும் மிக எளிய தீர்வுகளே பின்பற்றப் பட்டன:
1. ஈட்டுத் தொகை எதுவுமின்றி விடுதலை செய்யலாம்.
2. ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டு விடுதலை செய்யலாம்.
3. கல்வி கற்றுக் கொடுப்பவரைக் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு விடுதலை செய்யலாம்.
4. மீந்திருப்போரை முஸ்லிம் வீரர்களுடைய கட்டுப்பாட்டுப் பொறுப்பளித்துப் பகிர்ந்தளிக்கலாம்.
இஸ்லாமிய வரலாற்றின் முதல் போரான பத்ருப் போரில் முஸ்லிம் வீரர்களால் கைது செய்யப் பட்டவர்களுள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள் ஜைனப் (ரலி) உடைய கணவரும் நபிகளாரின் மருமகனுமான அபுல்ஆஸ் என்பவரும் இருந்தார். அவரை விடுவிப்பதற்காக நபியவர்களின் மனைவி கதீஜா (ரலி) அணிந்திருந்து, பின்னர் மகள் ஜைனபுக்கு அன்பளிப்புச் செய்த தங்கமாலை, பத்ருக்கைதி அபுல்ஆஸுடைய விடுதலைக்கான ஈட்டுப் பொருளாக வந்தது. அந்தத் தங்கமாலையைப் பார்த்த நபிகளாரின் உள்ளம் உருகியது. தங்கள் தோழர்களிடம் அபுல்ஆஸை ஈட்டுத் தொகையின்றி விடுதலை செய்ய அனுமதி கேட்டார்கள். தோழர்களும் அனுமதி தர, “மகள் ஜைனப் (ரலி) அவர்களை மதீனாவிற்கு வர அனுமதிக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் அவரை விடுதலை செய்தார்கள். முழுதும் படிக்க [சுட்டி-2].
ஹுனைன் போர்க்கைதிகளிடம் நபிகளார் கருணை காட்டி மக்காவில் வைத்து அவர்களை விடுதலை செய்தார்கள். கைதிகள் சுதந்திரமாக மக்காவின் தெருக்களில் சுற்றித் திரிவதைக் கண்ட நபித்தோழர் உமர் (ரலி), தமக்கு ஹுனைன் போரில் கிடைத்த இரு அடிமைப் பெண்களையும் விடுதலை செய்துவிடுமாறு தம் மகன் அப்துல்லாஹ்வுக்கு உத்தரவிட்டார் (புகாரீ – பாகம் 3, அத்தியாயம் 57, ஹதீஸ் எண் 3144) [சுட்டி-3].
தாயிஃப் போரில் முஸ்லிம்களால் சிறைப் பிடிக்கப்பட்டவர்களுள் ஷீமா பின்த் ஹாரிஸ் அல் ஸஃதியா என்ற பெயருடைய பெண்ணும் இருந்தார். அவர் நபிகளாரின் பால்குடிச் சகோதரியாவார். அவர் நபிகளாரிடம் அழைத்து வரப்பட்டார். அப்பெண்மணி நபிகளாரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஓர் அடையாளத்தின் மூலம் அப்பெண்மணியை நபிகளார் அறிந்து கொண்டார்கள். அவருக்கு மரியாதை செய்யும் வண்ணம் தமது போர்வையை விரித்து அவரை அமர வைத்தார்கள். அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து அவரது கூட்டத்தாரிடமே திருப்பி அனுப்பி வைத்தார்கள் [சுட்டி-4].
ஆண்களும் பெண்களும் அடங்கிய அவ்தாஸ் போர்க்கைதிகளை ஈட்டுத் தொகையின்றி முஸ்லிம் வீரரகள் விடுவித்தது பற்றிய வரலாற்றுச் சுருக்கம்:
“எனக்கும் அப்துல் முத்தலிப் குடும்பத்தாருக்கும் சொந்தமான கைதிகளை நான் உங்களுக்கு வழங்கி விடுகிறேன். மேலும், உங்களுக்காக மக்களிடமும் கேட்கிறேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள். அதைக் கேட்ட முஹாஜிர்களும் அன்சாரிகளும் “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சொந்தமானது உங்களுக்குச் சொந்தமானதுதான்” என்று கூறினார்கள். ஆனால், அக்ரா இப்னு ஹாபிஸ் “நானும் தமீம் கிளையினரும் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்று கூறிவிட்டார். உயைனா இப்னு ஹிஸ்ன், “நானும் ஃபஸாரா கிளையினரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்று கூறிவிட்டார். இவ்வாறே அப்பாஸ் இப்னு மிர்தாஸ் என்பவரும் எழுந்து, “நானும் ஸுலைம் கோத்திரத்தாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்று கூறினார். ஆனால், ஸுலைம் கூட்டத்தார் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குரியதை உங்களுக்குத் தந்துவிடுகிறோம்” என்று கூறி தங்கள் தலைவன் பேச்சை மறுத்து விட்டனர். இவ்வாறாக அவ்தாஸ் போர்க்கைதிகளுள் பெரும்பாலோர் எவ்வித ஈட்டுத் தொகையுமின்றி விடுதலை செய்யப் பட்டனர். முழுதும் படிக்க [சுட்டி-5].
***
இஸ்லாத்தில் மரபுவழித் திருமணங்கள் என்பன மணமகனுக்கு அதிகச் செலவுக்குரியதாகும். மரபுவழித் திருமணங்களுக்கென்று நான்கு முக்கிய நிபந்தனைகள் இருக்கின்றன.
1. மணமக்களின் ஒப்புதல்
2. மணமகளுக்கு மணமகன் செலுத்த வேண்டிய மஹர் எனும் பரிசத் தொகை
3. மணமளைத் திருமணம் செய்து தரும் பொறுப்பாளர்
4. (குறைந்தது) இரு சாட்சிகள்
இவற்றுள் இரண்டாவதான மஹர்த்தொகை என்பது, சுதந்திரமான மணமகள் முடிவு செய்யும் தொகையாகும். மஹர் கொடுத்து மணம் புரிந்து கொள்ளும் வசதி இல்லாத இளைஞர்கள், தவறான வழிகளைத் தேடலாகாது என்று இஸ்லாம் கட்டுப்பாடு விதிக்கிறது. கூடவே, ஒழுக்க வாழ்விற்கு வழிவகையும் செய்கிறது:
“அல்லாஹ் தன் அருளினால் வளமாக்கும்வரை (மரபுவழித்) திருமணம் செய்து கொள்ள(ப் பொருளாதார) வசதியற்றோர் ஒழுக்க வாழ்வு வாழட்டும் …” – குர்ஆன் 024:033.
அல்லது,
“… உங்கள் வலக்கரம் உரிமையுடைய பெண்ணை (மணந்து) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும் …” (குர்ஆன் 004:003).
சுதந்திரமான பெண்களைப் போன்றே ‘வலக்கர’ப் பெண்களை மணப்பதிலும் உறவு முறைகள் பார்க்கப்படும். காட்டாக, தாயும் மகளும் ஒருவருடைய பொறுப்பில் இருந்தால், தாயை மட்டும் மணந்து கொள்ளலாம். அந்தத்தாயின் மகள் சொந்த மகள் போலாவார். எனவே, அவரை(யும்) மணக்க முடியாது. மகளை மணந்தால், அவளின் தாய் மாமியாராகி விடுவார். இஸ்லாத்தின் பார்வையில் மாமியாருக்குத் தாயின் நிகர்நிலை உண்டு. சுதந்திரமான இரு சகோதரிகளை ஏக காலத்தில் மணக்க முடியாது. போலவே, தம் பொறுப்பிலுள்ள ‘வலக்கர’ சகோதரிகள் இருவரை ஏக காலத்தில் மணக்க முடியாது (குர்ஆன் 004:023).
சின்னத்திரையின் சீரியல்கள் ஏற்படுத்தும் சீரழிவுகளால், அண்மைக் காலத்தில் திருமணமான பெண்கள் வேறொருவனோடு உடன்போக்குக் கொள்வது மிகப் பரவலாகி வருகின்றது. ஆனால் திருமணமாகி, கணவன் உயிருடனிக்கும் சுதந்திரமான பெண்களை மணப்பதற்கு இஸ்லாத்தில் தடை இருக்கிறது. ஆனால், ‘வலக்கர’ப் பெண்களின் கணவன் போரில் கொல்லப் பட்டிருந்தாலும் தப்பியோடி இருந்தாலும் விடுதலையாகி சொந்த நாட்டுக்குத் திரும்பி உயிருடன் இருந்தாலும் ‘வலக்கர’ப் பெண்ணுக்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர் அவளைத் திருமணம் செய்து கொள்வது அனுமதிக்கப் பட்டுள்ளது – இன்னொருமுறை – அனுமதிக்கப் பட்டுள்ளது. அதாவது, சூழலைக் கருத்தில் கொண்ட அனுமதிதான்; கட்டாயமன்று (குர்ஆன் 004:024).
மணந்து கொள்ள விருப்பமில்லாத அல்லது காலம் முழுக்க உரிய முறையில் பராமரிக்க இயலாத ‘வலக்கர’ப் பொறுப்பாளருக்கும் இறைவசனம் தீர்வு சொல்கிறது:
” … உங்கள் வலக்கரம் உரிமையுடைய பெண்களிடம் உரிமை விடுவதற்குரிய தகுதியைக் கண்டறிவீர்களாயின் அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்து விடுங்கள். அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் செல்வத்திலிருந்து (இயன்றதை) அவர்களுக்குக் கொடு(த்து அனுப்பிவிடு)ங்கள் …” – குர்ஆன் 024:033.
பொறுப்பாளர் விரும்பினால் ‘வலக்கர’ப் பெண்ணின் கணவன் உயிரோடு இருந்தாலும் அவளைச் சில நிபந்தனைகளின் அடிப்படையில் மணந்து கொள்ளலாம்; இதுவும் கட்டாயமில்லை.
“இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது தடுக்கப்பட்டுள்ளது … (குர்ஆன் 004:024). இந்த இறைவசனம் ‘மணமுடிப்பது’ என்று தெளிவாகப் பேசுவது இங்குக் குறிப்பிடத் தக்கது.
சிலர் நினப்பதுபோல் பெண்களைக் கைதியாகப் பிடித்தவுடன் படுக்கப் போடவெல்லாம் இஸ்லாத்தில் அனுமதி இல்லை. பெண் கைதியின் மாதவிடாய் அறியப்பட வேண்டும்; அவள் திருமணமானவளாக இருப்பின் அவளது கருவில் அவளின் கணவனது வாரிசு இருக்கிறதா என்பதை, அவளுடைய மாதவிலக்குத் தடைபட்டிருப்பது/தொடர்வதன் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்; அவள் கருவுற்று இருந்தால், குழந்தை பெற்று, தூய்மையடைந்த பிறகே அவள் இன்னொரு திருமணத்துக்குத் தகுதி பெறுவாள். இவ்வாறாக, சுதந்திரமான பெண்ணை மணந்து கொள்ள வசதி இல்லாதோர் இத்தனை சோதனைகளுப் பின்னரே தம் பொறுப்பிலுள்ள ‘வலக்கர’ப் பெண்ணை மணந்து கொள்ளலாம் என்று இஸ்லாம் கூறுகிறது.
சுந்திரமான பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும் பொறுப்பாளர்/காப்பாளர் வரிசையில் அவளின் தந்தை/மாமன்/அண்ணன் ஆகியோர் வருவர். ஆனால், ‘வலக்கர’ப் பெண்ணுக்கு எல்லாமே அவளது பொறுப்பாளர்தான்.
‘வலக்கர’ப் பெண்ணுக்கு வழக்கிலுள்ளப் பரிசப் பணத்தில் (மஹர்) பாதி கொடுத்தால் போதும்.
“ஒருவரிடம் அடிமைப் பெண்ணொருத்தி இருந்து, அவளுக்கு அவர் நன்கு கல்வி கற்பித்து, அவளுக்குச் சிறந்த முறையில் ஒழுக்கம் கற்பித்து, பிறகு அவளை விடுதலை செய்து, திருமணமும் செய்து கொண்டால் அவருக்கு இரண்டுவகை நன்மைகள் உண்டு …” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். இன்னோர் அறிவிப்பில்,
“அவளை அவர் விடுதலை செய்து, பின்னர் அவளுக்கு மஹ்ரும் கொடுத்(து மணமுடித்)தால் அவருக்கு இரண்டுவகை நன்மைகள் உண்டு” என்று காணப்படுகிறது. (புகாரீ – பாகம் 5, அத்தியாயம் 67, ஹதீஸ் எண் 5083; பாகம் 4, அத்தியாயம் 60, ஹதீஸ் எண் 3446) [சுட்டி-3].
‘வலக்கர’ப் பெண்ணைத் தானே திருமணம் செய்து கொள்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதே தவிர அது கட்டாயம் என்ற சட்டமெல்லாம் இல்லை. அப்பெண்ணுக்கு அவர் முழுப் பொறுப்பாளர்; அவ்வளவே. ஒரு பொறுப்பாளர்/காப்பாளர்/தந்தை ஒரு பெண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தும் ‘வலக்கரம்’ சொந்தமாக்கிக் கொண்டவருக்கு உண்டு.
“உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாத(பெண்டிர், ஆட)வர்களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) நல்லொழுக்கமுள்ள உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் மணம் செய்து வையுங்கள் …” (குர்ஆன் 024:032).
“… உங்களில் எவரும் ‘என் அடிமை; என் அடிமைப் பெண்’ என்று கூற வேண்டாம்; ‘என் பணியாள்; என் பணிப்பெண்; என் பையன்’ என்று கூறட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ – பாகம் 3, அத்தியாயம் 49, ஹதீஸ் எண் 2552) சுட்டி-3].
“தன்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்றுக் கொடுத்து, அவளை நல்ல முறையில் நடத்தி, பிறகு அவளை விடுதலை செய்து திருமணமும் முடித்து வைப்பவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரீ – பாகம் 3, அத்தியாயம் 29, ஹதீஸ் எண் 2544) [சுட்டி-3].
இவ்வாறெல்லாம் அறிவுறுத்திய எங்கள் தலைவர், போரில் தமக்குக் கிடைத்த பெண் கைதியை என்னதான் செய்தார்?
யூத இனத் தலைவன் ஹுயையின் மகள் ஸஃபிய்யா, கைபர் போரின்போது போர்க்கைதியானார். எல்லாக் கைதிகளும் ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்பட்டனர். திஹ்யா இப்னு கலீஃபா (ரலி) என்ற தோழர் நபிகளாரிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் இருந்து எனக்கு ஒரு பெண்ணைத் தாருங்கள்” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “உனக்கு விருப்பமான ஒரு பெண்ணை அழைத்துச் செல்!” என்று கூறினார்கள். அவர் கைதிகளிலிருந்த ஸஃபிய்யாவை அழைத்துச் சென்றார்.
அதைப் பார்த்த மற்றொரு தோழர் நபியவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! குரைளா, நளீர் ஆகிய இரண்டு கிளையினருக்கும் தலைவியான ஸஃபிய்யாவை நீங்கள் திஹ்யாவிற்கு கொடுத்தீர்களா? அப்பெண் உங்களைத் தவிர வேறு யாருக்கும் தகுதியானவரல்லர்” என்று கூறினார். அதற்கு நபியவர்கள், “அவரை ஸஃபிய்யாவுடன் திரும்ப அழைத்து வாருங்கள்” என்றார்கள். திஹ்யா ஸஃபிய்யாவுடன் வரவே நபிகளார் ஸஃபிய்யாவைப் பார்த்தார்கள். பின்பு திஹ்யாவிடம் “கைதிகளில் வேறொரு பெண்ணை நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அதற்குப்பின் ஸஃபிய்யாவுக்கு இஸ்லாத்தைப் பற்றி எடுத்துக் கூற, அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். நபியவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களை உரிமைவிட்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவரை உரிமைவிட்டதையே அவருக்குரிய மஹராக (பரிசப் பணம்) ஆக்கினார்கள்.
நபிகளார் மதீனா திரும்பும் வழியில் ‘ஸத்துஸ்ஸஹ்பா’ என்ற இடத்தில் ஸஃபிய்யா (ரலி) மாதவிலக்கின்பின் தூய்மையடைந்தார். உம்மு ஸுலைம் (ரலி) என்ற நபித்தோழி, ஸஃபிய்யாவை அலங்கரித்து இரவில் நபியவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். மறுநாள் பேரீத்தம் பழம், நெய் மற்றும் சத்துமாவினால் செய்யப்பட்ட ஒருவகை பாயாசத்தைக் கொண்டு நபிகளார் வலிமா (மணவிருந்து) அளித்தார்கள். மூன்று நாட்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களுடன் நபிகளார் தங்கினார்கள். முழுதும் படிக்க [சுட்டி-6].
***
இருநூறு ஆண்டுகளுக்கு முன்வரை உலகின் எல்லாப் பகுதிகளிலும் அடிமைச் சந்தைகள் சக்கைப் போடு போட்டதாக விக்கி சொல்கிறது. கி.பி. 1806 வரைக்கும் அடிமைக் கொள்முதலும் அவர்களைக் கொத்தடிமைகளாக நடத்தியதும் ஆங்கிலேயர்களிடம் வழக்கில் இருந்திருக்கிறது. கி.பி. 1807இல் அடிமை முறையை நீக்குவதாக இங்கிலாந்து அரசு அறிவித்து அதன் நினைவாக இரண்டு பவுண்டு நாணயமும் வெளியிட்டது [சுட்டி-7].
கருப்பின அடிமைப் பெண்களின் நிறவேறுபாட்டையும் மறந்து, “வெள்ளையர்கள் தங்களது காதல் பசியைத் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்தினர். அக்காலத்து வெள்ளையர்களின் காமவெறியைத் தணிப்பது கருப்பின அடிமைப் பெண்களின் தீராப் பொறுப்பாக இருந்தது. வெள்ளையர்களின் இரத்தம் ஓடாத கருப்பினப் பெண்களைப் பார்ப்பது அரிதாக இருந்தது” என்று அண்மைக்கால வரலாற்றை அபூமுஹை என்பார் பதிவு செய்திருக்கிறார் [சுட்டி-8].
அடிமைப் படுத்துவதற்கு மனிதர்கள் விலை கொடுத்து வாங்கப் பட்ட காலத்துக்கு ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அடிமைகளாக இருந்தவர்களை விடுதலை செய்வதற்கு முஸ்லிம்கள் விலை கொடுத்து வாங்கினர். ஏனெனில்,அடிமைகளை விடுதலை செய்வதற்கு ஊக்கமளிக்கும் அல்லாஹ்வின் வசனங்கள் அருளப் பட்டன.
திண்ணை இதழில் ‘சாகாத கருப்பு யானை’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையின் நாயகர் [சுட்டி-9] பிலால் (ரலி) என்பார் நபித்தோழர் அபூபக்ரு (ரலி) அவர்களால் விலை கொடுத்து வாங்கி விடுதலை செய்யப் பட்டவர்தாம். முழுதும் படிக்க [சுட்டி-10].
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பரீரா என்ற அடிமைப் பெண்ணை அவளது உரிமையாளர்களிடமிருந்து விலைக்கு வாங்கி விடுதலையளித்தார் (புகாரீ – பாகம் 2, அத்தியாயம் 34, ஹதீஸ் எண் 2168) [சுட்டி-3].
பிரபலமான ஹதீஸ் அறிவிப்பாளர் நாஃபிஉ என்பார் நபித்தோழர் இபுனு உமரால் விடுதலை செய்யப் பட்ட முன்னாள் அடிமையாவார். இபுனு அப்பாஸ் (ரலி) என்ற நபித்தோழர் விடுதலை செய்தவரது பெயர் இக்ரிமா என்பதாகும்.
இறைவசனம் 009:060இன்படி முஸ்லிம்களின் ஸக்காத் எனும் வளவரிக்கு உரியோரான எட்டு வகையினருள் அடிமைகளும் அடங்குவர். அடிமைகளை விடுதலை செய்ய வேண்டிய முஸ்லிம்களின் கடமை, இன்றும் வேறு வகையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வாகன விபத்து ஏற்படுத்தி, அதில் உயிரிழந்தவர்களுக்கு ஈட்டுப் பணம் கொடுக்க முடியாமல் சிறையில் அடைக்கப் பட்ட ஆண்/பெண் கைதிகளை முஸ்லிம் செல்வந்தர்கள், தங்கள் வளவரிப் பணத்தின் மூலம் விடுவிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாக வளைகுடா நாடுகளில் வசிக்கும் சில நண்பர்கள் கூறினர்.
இவை எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமாக, இஸ்லாத்தின் மீளெழுச்சிக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது முஹம்மது அவர்கள் நபியாக ஆவதற்கு முன்னர், தமக்குத் தம் துணைவி கதீஜா (ரலி) திருமணப் பரிசாக அளித்த ஜைத் என்ற அடிமையை உடனடியாக விடுதலை செய்து, உலகம் முழுதும் அப்போது வழக்கிலிருந்த அடிமை முறையின் சவப் பெட்டிக்கு முதல் ஆணியை அடித்தார். ஜைதை முஹம்மதின் மகன் என்றே மக்கா வாழ் அரபியர்கள் குறிக்கும் அளவுக்கு ஜைத் நபிகளாரிடம் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தார்.
இனி, பேசு பொருளுக்கு வருவோம்.
//கைது செய்யப்பட்ட பெண் ஏலத்திற்கு விடப்படலாம், பெண்டாடப்படலாம் அதை குரானே அனுமதிகிறது என்று நேசகுமார் சொல்கிறார். சு.ரா. 23.06 என்று ஆதாரமும் காட்டுகிறார்// என்று வெ.சா. குறிப்பிட்டு, நான் மேலே எழுதியுள்ள இறைவசனம் 023:006இல் ஏலம் போடுவதற்கும் பெண்டாடுவதற்கும் ஆதாரம் ஏதும் இருக்கிறதா அல்லது நாகூர் ரூமி குறிப்பிட்ட, “நேசகுமார்களைப்போல பொய் பேசும், வெறுப்புமிழும் குழுவில் இப்போது வெ.சா” இருக்கிறாரா என்பதை முடிவு செய்ய வேண்டியது திண்ணை வாசகர்களின் பொறுப்பாகும்.
இன்னொன்று.
சான்றுகள் எதையும் தராமல் ஒற்றைச் சொல்லில் ‘அவதூறு’ என்று எதையும் வெறுமனே நான் சொல்வதில்லை. இது வெ.சாவுக்குத் தெரியா விட்டாலும் திண்ணை வாசகர்களுக்கு நன்கு தெரியும்.
இல்லாததைச் சொல்வது/எழுதுவது என்பதை ‘அவதூறு’ என்று நான் விளங்கி வைத்திருக்கிறேன். அவதூறுக்கு வேறு சொல்லை வெ.சா எனக்கு அறியத் தந்தால் நன்றியுடையவனாவேன்.
கொசுறு:
லிங்கம், யோனி, கம்பம் எல்லாம் பலமுறை விளக்கம் சொல்லப் பட்டுள்ள பழஞ்சங்கதி. இன்னொரு முறையும் சொல்வதில் தவறில்லை. அதற்கு முன்னர் திண்ணையின் 13.07.2006 இதழில் வெளியான ஹமீது ஜஃபர் என்பவரின் கட்டுரையோடு படங்களையும் வெ.சா பார்த்து வைத்துக் கொள்ளவும் [சுட்டி-11]. முடிந்தால், “கஅபா என்ற அந்த கட்டிடம் இருந்தாலும் அல்லது அழிந்தாலும் அல்லது இடிக்கப்பட்டாலும் அல்லது சேதப்படுத்தப்பட்டாலும் அல்லது வெறும் நிலமாக இருந்தாலும் கஅபா என்று சொல்லப்படும் அந்த இடத்தை நோக்கியே முஸ்லிம்கள் தொழவேண்டும் என்பது இறைக் கட்டளை” என்று ஹமீது ஜஃபர் எழுதியிருப்பதன் உட்பொருளையும் சிந்தித்துப் பார்க்கவும்.
மீண்டும் சந்திப்போம், நன்றி!
ஃஃஃ
to.wahhabi@gmail.com
http://wahhabipage.blogspot.com
சுட்டிகள் :
1 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=80905283&edition_id=20090528&format=html
2 – http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#52
3 – http://chittarkottai.com/bukhari/tamil/
4 – http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_third_phase.htm#11
5 – http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_third_phase.htm#15
6 – http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_second_phase.htm#34
7 – http://en.wikipedia.org/wiki/Slave_trade
8 – http://abumuhai.blogspot.com/2007/04/1.html
9 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=308092510&format=html
10- http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/second_stage.htm#6
11- http://www.thinnai.com/?module=displaystory&story_id=80607146&format=html.
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -6
- கவிஞர் ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம்
- கவிஞர் ராஜ மார்த்தாண்டனுக்கு ஓர் நினைவஞ்சலி
- நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்
- விமர்சனக் கடிதம் – 3 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(3)
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(2)
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(1)
- இதயத்தை நிறைத்த இரு இலக்கிய நிகழ்வுகள்
- கடல் விழுங்கும் ஆறுகள்….
- துரோகம்
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! 2012 ஆம் ஆண்டில் பரிதியின் துருவம் திசைமாறும் போது பூமிக்கு என்ன நேரிடும் ?
- ஆன் ஃப்ராங்க் – யூத அழிப்பின் போது ஒளிந்திருந்து டயரிக் குறிப்புகள் எழுதிய சிறுமி
- சங்கச் சுரங்கம் – 18 : பட்டினப்பாலை
- வேத வனம் விருட்சம் 37
- உதிரும் இலைக்கு பதில் பயனளிக்காது
- கவிதை ஒன்றுகூடல்: உரையாடல்
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா.
- பேருண்மை…
- துரோகத்தின் தருணம்
- கே.பாலமுருகன் கவிதைகள்
- எம் மண்
- அறிவியல் புனைகதை-: அரசு நின்று சொல்லும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மனிதனின் கானம் >> கவிதை -11 பாகம் -1
- கோபங்கள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -40 << யுத்த வீரன் காதலி >>
- ஆணாதிக்க உலகில் பெண்ணாய் வாழ்தல்
- வெ.சாவுக்கு வலக்கர விளக்கம்
- வார்த்தை ஜூன் 2009 இதழில்
- பெண்ணியக்கத்தின் முன்னோடி: நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார்
- முஸ்லிம் உலகிற்கு ஒபாமா சொல்ல மறந்தவை
- துப்பாக்கிகள் குறி பார்கையில் ..
- தேவதைகள் காணாமல் போயின
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஏழாவது அத்தியாயம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தொன்பது
- வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரங்கள்