வீடு – மனித நகர்வின் அடையாளம்

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

கே.பாலமுருகன்


ஒரு தனித்த வீடு
திறந்த கதவுகள்
சருகுகள் நுழையும்
பரந்த வெளி
ஆள் நடமாட்டமில்லாத
சூன்யத்தில்
யாரோ சிலர்
பேசிக் கொள்கிறார்கள்
சிரிப்பதும் கேட்கிறது
சிலரின்
இயக்கங்களை என்றுமே
சுமந்தபடியே
தனித்த வீடு

வீடு என்பதை கற்களாலும் பலகையாளும் ஆணியாலும் கட்டப்பட்ட ஜடப்பொருள் என்று சொல்லவே இயலாது. வீடு ஒரு சிலரின் அல்லது மனிதக் கூட்டத்தின் கனவுகளால் நிரம்பிய உயிருள்ள காலத்தின் சாட்சி. வீடு மனிதர்களைச் சுமந்து நிற்கும் சாமி என்றுகூட சிலர் கொண்டாடுகிறார்கள். வீட்டைப் பார்த்து பார்த்து, இடத்திற்கிடம் தனது கற்பனையாலும் உழைப்பாலும் சேகரித்த பணத்தைக் கொண்டு உருவாக்கும் மனிதர்களின் கண்களில் அந்த வீடு பற்றிய கனவுகளை, எண்ணங்களை நுணுக்கமாகப் பார்க்கலாம்.

வீடு வாழ்கிறது. தன் பிள்ளையை வயிற்றில் சுமந்துக் கொண்டு வாழும் கங்காருவைப் போல, வீடு மனிதர்களை விழுங்கிக் கொண்டு காலத்திற்குக் காலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதர்களின் மாபெரும் இயக்கத்தை, இன்ப துன்பங்களை, வெறுப்பை, ஆசைகளை சமாளித்தபடியும், சகித்தபடியும் வீடு நின்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வீடுகளும் ஒவ்வொரு மனிதனின் வாழ்வின் அடையாளம், அவனது அவமானங்களை, தோல்விகளை, வெற்றிகளைப் பாதுகாத்து தன்க்குள்ளே வைத்திருக்கும் வீடு தொடங்கி வாழ்வு முழுவதும் அவனது கதறல்களை, அழுகைகளை, வலிகளை ஏற்றுக் கொண்டு அவனைக் கட்டித் தழுவி அவனது வெறுமைகளை வெறுமையாகவும் இரசனைகளை இரசனையாகவும் சுயம் காக்கும் வீடுவரை, வீடு மனிதர்களின் அகப் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது. எனக்கான வீடுகள்கூட இன்றுவரை என்னுடன் வளர்ந்து, என் நினைவுகளில், என் விரல்களில், உடலில், கால்களில் ஒட்டிக் கொண்டு என்னுடனே அலைந்து கொண்டிருக்கின்றன.

5 வயது நெருங்கிய சமயத்தில்தான் எனக்கு எனது முதல் வீட்டின் பிரக்ஞை தோன்றியது என்று நினைக்கிறேன். அப்பொழுது நாங்கள் இரப்பர் காட்டுப் பகுதியில் ஒர் இரட்டைமாடி பலகை வீட்டில் குடியிருந்தோம். மேல்மாடியில் எனது அறை இருந்திருக்கும். சன்னலின் வழியாக அதன் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு எக்கி எக்கி, இரப்பர் மரங்களின் உச்சியைப் பார்க்க முயற்சி செய்ததைப் போல தோன்றுகிறது.

5 வயதில் நான் உணர்ந்த எனது முதல் வீட்டின் நினைவுகள் மங்களான காட்சிகளாகத்தான் பதிந்து கிடக்கின்றன. படிக்கட்டுகளில் நான் எப்பொழுதும் தூக்கி வீசும் பெங்குயின் விளையாட்டுப் பொம்மைகள் சிதறிக் கிடக்கும். அம்மாவோ அப்பாவோ அதை எடுத்து என் அறையில் வந்து போட, அதை நான் மீண்டும் படிக்கட்டுகளில் தூக்கி எரிந்து சிரித்திருக்க வேண்டும்.

அப்படியென்றால் என் அறையின் வாசலில் நான் வெளியேறாமல் இருக்க தடை கம்பிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். படிக்கட்டுகள் என் அறையின் வாசலில் வந்து சேரும் இடம் எப்பொழுதும் ஒரு இருளைச் சுமந்தபடியே இருப்பதால், யார் எனது அறைக்கு முன்னால் வந்து நின்றாலும் அவர்களின் முகமும் உருவமும் இருட்டாகத்தான் தெரியும்.(பிந்தைய நாட்களில் இருளைப் பார்க்க நேரும் போதெல்லாம், அங்கு ஏதாவது ஒரு உருவத்தைக் கற்பனை செய்து கொள்ளும் பழக்கமும், இதனால்தான் ஏற்பட்டிருக்கும் போல).

ஒரு சில வருடங்களுக்குப் பிறகு, நாங்கள் பத்து டுவா என்கிற மலாய்க்காரர்கள் அதிகம் இருக்கும் இடத்திற்கு வாடகை வீட்டைத் தேடி பிடித்து வந்து சேர்ந்துவிட்டோம். அங்குதான் நான் வளரத் துவங்கி, சுதந்திரம் கிடைத்து வீட்டை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ள துவங்கிய நாட்கள் ஆரம்பித்தன. அதுவும் ஒரு பலகை வீடுதான். வயலைச் சுற்றிய இடம் என்பதால் தட்டாம் பூச்சிக்கு மவுசு அதிகம். எப்பொழுதும் தட்டான் பூச்சி பறந்து கொண்டிருக்கும் இடமாக இருந்தது. சன்னலில் வந்து முட்டிக் கொண்டு மீண்டும் பறக்கும் தட்டான் பூச்சிகளின் வீடாக எனது வீடு மாறியிருந்தது. வயலுக்குச் சென்று தட்டான் பூச்சிகளைச் சேகரிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியிருந்தேன்.

அந்த வீட்டில், எனக்கான அறை, சமையலறையை நெருங்கினாற்போல அமைந்திருந்ததால், இரவில் படுத்துறங்க கொஞ்ச சிரமமாக இருக்கும். அம்மா உறங்கும்வரை சமையலறையில்தான் எதையாவது உருட்டிக் கொண்டும் சுத்தம் செய்து கொண்டும் இருப்பார். அதனால் கொஞ்சம் தைரியமாக இருக்கும். அவர் உறங்கிய பிறகு, சமையலறையிலிருந்து ஏதாவது வினோதமான சத்தம் கேட்பது போலவே பிரமையாக இருக்கும். அந்தச் சத்தங்களினூடே ஏற்பட்ட பீதியுடன் உறங்கிய நாட்கள்தான் அதிகம்.
சமையலறை கதவின் கீழ்ப்பக்கம் சிறிய இடைவெளி இருப்பதால், அந்தத் திறப்பை அடைப்பதற்காக அப்பா எப்பொழுதும் ஏதாவது ஒரு முயற்சியை மேற்கொண்டபடியே இருப்பார். முதலில் பாலித்தீன் பைகளை வைத்து அடைத்து பார்த்தாயிற்று. எலி தொல்லை அதிகப்படியால் அடிக்கடி அந்தப் பைகள் கிழிந்து தொங்கி, இடைவெளியை மீண்டும் உருவாக்கியிருக்கும். அப்பா வேறு பலகையைக் கொண்டு செய்து பார்த்தும், நாளடைவில் அந்தப் பலகையையும் ஆணி பெயர்ந்து கொள்ளும். அம்மாதான் இந்த ஓட்டையால் மிகவும் சிரமப்பட நேர்ந்தது. சமையலறை வீட்டின் வரவேற்பறையிலிருந்து கொஞ்சம் இறக்கமான பகுதியில் இருப்பதால் பக்கத்து கிணறிலிருந்து ஊர்ந்து வெளியேறும் பூரான் பூச்சிகளுக்கு அடிக்கடி பலியாகிவிடுவார். 4 முறை பூரான் கடித்து அம்மா அவதிபட்ட போது வீட்டின் கீழ்த்தளத்தில் ஏற்பட்டிருக்கும் அந்த இடைவெளியின் மீது அதிகமான வெறுப்பு உண்டானது.

அதன் பிறகு எனக்கு 11 வயது நெருங்கியபோது அப்பா எங்களை வேறு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒரு மோட்டார் பட்டறையின் பக்கத்து வீடு அது. கீழே சிவப்பு சிமெண்டு என்பதால் எப்பொழுதும் அந்த வர்ணம் நகர்ந்து கொண்டே இருப்பது போல தோன்றும். அந்த வீட்டில்தான் எனக்குப் முதல்முறை பேய் பயம் ஏற்படத் துவங்கியது. எனக்கென்று ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்துவிட்டார்கள். அங்கிருந்துதான் பேய் என்கிற என் கண்களுக்குப் புலப்படாத ஒரு உலகத்தைப் பற்றி அதிகமாக அக்கறைக் கொள்ளத் துவங்கினேன்.

என் அறை ஜன்னலின் கீழுள்ள மூன்று கண்ணாடிகள் இல்லாததால், இரவில் அந்த இடைவெளியில் தெரியும் வீட்டின் பக்கத்திலுள்ள அடர்ந்து காடு கொஞ்சமாக அகன்று வந்து என் அறையை எட்டிப் பார்ப்பது போலவே பிரமைகள் ஏற்படும். ஏன் இந்த மாதிரி எப்பொழுதும் என் வீட்டிலுள்ள பகுதிகளில் இடைவெளி ஏற்படுகிறதோ என்று வியப்பாக இருக்கும். அந்த இடைவெளியில் தெரியும் காட்டை வெறித்தவாறே தயங்கி தயங்கி கண்களை மூட முயற்சித்து பார்ப்பேன். எனக்கே அறியாத ஒரு தருணத்தில் தூங்கிவிடும்போதுதான் அந்தப் பீதி மறந்து போயிருக்கக்கூடும்.

அந்த வீட்டில்தான் எனக்கு ஒரு நண்பனும் கிடைத்தான். என் வீட்டிலிருந்து 5 வீடுகள் தள்ளி அவன் வீடு இருந்தது. இரவில் கடைக்கு என்னை அனுப்புவார்கள். என் வீட்டையொட்டி இருக்கும் காட்டுப் பகுதியைக் கடந்து சென்றால்தான் கடை வரும். அந்தப் பாதையில் நடக்கும்போதெல்லாம் எல்லாம் வகையான சாமி பாடல்களையும் வேகமாகப் பாடிக் கொண்டே ஓடுவேன். மூச்சு வாங்க கடையில் நுழையும் போது “கண்ணு” அக்கா வேடிக்¨யாக “பயந்தாங்கோளி வந்துட்டான்” என்று கத்துவார். அந்த அக்காவின் கண்கள் பெரியதாக விரிந்து இருப்பதால் அவருக்கு “கண்ணு அக்கா”னு பெயர் இருந்தது.

அந்தச் சமயங்களில் அந்த இருள் பாதையில் பழக்கமானன் என் நண்பன் பார்த்திபன். என்னுடன் அவனும் என் வீடு வரை நடந்து வந்து எனக்கு தைரியத்தைக் கொடுத்தவன் அவன்தான். கொஞ்ச நாட்களில் இரவில் என் வீட்டுக்குள்ளே வந்து என்னுடன் ஓடியாடி விளையாடக்கூடிய அளவிற்கு நெருக்கத்தை உருவாக்கியிருந்தான். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் அவனைப் பிடித்திருந்ததாலும் அவனுக்குள்ளிருக்கும் முதிர்ச்சி நிலையை அறிந்ததனாலும் அவனுடன் எங்கு வேண்டுமென்றாலும் அனுப்புவதற்கு எங்கள் வீட்டில் தயாராக இருந்தார்கள். நானும் பார்த்திபனும் எங்கள் வீட்டின் எதிர்புறமுள்ள பங்களா வீட்டில் விளையாடுவதற்காகக் கிளம்பிவிடுவோம். என் வீட்டிற்கு அடுத்தபடியாக நான் பயந்து அலறியது அந்தப் பங்களா வீட்டுக்குத்தான்.

பாழடைந்த வீடு, அறைக் கதவுகள் திறந்தபடியே அடர் இருளைச் சுமந்து கொண்டு அச்சுறுத்தலாக இருக்கும். பார்த்திபன் என் கைகளைப் பிடித்துக் கொண்டு அந்த வீட்டின் இருளை ஊடுருவி நுழைந்து எதிரொலிக்கும் அந்தக் காலியான பங்களாவிலிருந்து கத்திக் கொண்டே வெளியே ஓடி வருவான். நாங்கள் அந்தப் பங்களாவிலிருந்து வந்த பிறகும் எங்களின் குரலின் எதிரொலி எங்கேயோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்தப் பங்களா அந்தக் காலத்தில் தோட்டக் கங்கானியின் மனைவி வாழ்ந்த வீடு என்று சிலர் சொன்னார்கள்.

எனக்கு 16 வயது வந்தபோது நாங்கள் அங்கிருந்து வேறு வீடு மாறுவதற்கு கட்டாயம் ஏற்பட்டது. அந்த வீட்டைவிட்டு வேளியேறும்போது மனம் வலித்தது. எங்களின் எல்லாம் நகர்விலும் தொற்றிக் கொண்டிருந்த துன்பம் வலி, பகிர்தல், அமைதியான பொழுதுகள், அப்பாவின் சத்தம், அக்காவின் சிரிப்பொலி, அம்மாவின் கதறல், பார்த்திபன் விளையாடிவிட்டு மறந்து விட்டுப்போயிருந்த விளையாட்டுத் துப்பாக்கி. . . எல்லாவற்றையும் வெறும் நினைவுகளாகச் சுமந்து கொண்டு, அந்த வீட்டையும் “உப்பு குட்டி” ஏற்றுக் கொண்டு வேறு வீட்டுக்கு நடந்தேன்.

மனிதர்களின் முதுகில் இந்த மாதிரி எத்தனை வீடுகள் சுமக்கப்படுகிறதோ? எல்லாரின் பருவ நகர்தலிலும் கண்டிப்பாக வீடுகளின் நினைவுகள் பதிந்து கிடக்கும். ஒவ்வொருவரின் வாழ்விலும் வீட்டை நேசித்த கணங்களைப் பற்றி கேட்டுப் பாருங்கள். வீட்டை உருவாக்குவது என்பது தனியொரு கலை. வீடுகள் வெறும் வீடல்ல. மனித உணர்வுகளால் நிரம்பிய கனவு கோட்டை, அவர்களின் நகர்வின் அடையாளம்.

நன்றி : நாம் இதழ் சிங்கப்பூர்

ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
http://bala-balamurugan.blogspot.com/

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்