விழலுக்கு நீர் பாய்ச்சி ஓய்ந்து போனவர்களின் மூதுரை ! – சால் ஒன்று.

This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue

புதுவை ஞானம்


அன்புடையீர்,
வணக்கம். தமிழில் எழுதி வரும் ‘ஒரிஜினல் நாகப்படினம் நெய்மிட்டாய் கடை’ எழுத்தாளர்கள் உங்களுக்கு விருந்து படைத்து மகிழ்வூட்டும் பணியில் மும்முரமாய் ஈடுபட்டிருக்கும் வேளையில் ஏராளமாய் இனிப்பு தின்று வாசகர் எனும் குழந்தை வயிறு மந்தமாகி விடுமே என்ற கவலையில் அவ்வப்போது கசப்பு மருந்து கொடுக்கும் _ பாட்டி வைத்தியம் பார்க்கும் எனக்கு சுயமாக எதுவுமே எழுதத்தெரியாது. அதனால் தான், நான் ஆங்கிலத்தில் படித்து சுவைத்தவற்றை மொழி பெயர்த்தும் , சிலவற்றை அப்படியே தமிழ் மூலங்களிலிருந்தும் உங்களுக்குப் படைத்து வருகிறேன். ஒரு ஓட்டல் சர்வர் மாதிரியோ அல்லது தான் வேட்டையாடிய மிருகங்களின் இறைச்சியை சுவைத்துப்பார்த்து ருசியானதை மட்டும் காளத்தீஸ்வரனுக்கு ஊட்டிய வேடன் கண்ணப்பன் போலவோ. ஒரிஜினல் நெய் மிட்டாய்க்கடைகள் பல இருந்தால் நாட்டு மருந்துக் கடையும் ஒன்று இருந்து விட்டுப் போகட்டுமே. இந்தக் கசப்பான உணர்வுந்துதல் காரணமாகவே முன்னோர்கள் நமக்காகப் பாடுபட்டு படைத்ததெல்லாம் விழலுக்குப் பாய்ச்சிய நீர் தானா ? என்ற கேள்வியைக் கடந்த கட்டுரையில் எழுப்பியிருந்தேன்.

இப்போது “ வெகு நாகரீகமாகவே வெகுண்டெழுந்து போலி விமர்சகர்களை வெளுத்துக்கட்டிய” _ உண்மைத் தமிழ் நேயத்தால், ‘வி.கோ,சூரிய நாராயண சாஸ்திரி’ எனும் தன் பெற்றோர் இட்டபெயரை ‘பரிதிமாற் கலைஞர்’ என மாற்றிக் கொண்ட மூத்த கலைஞர் , கடந்த நூற்றாண்டில் (பிலவ1902 ஆண்டு) வெளியிட்ட போலியாராய்ச்சியன் என்ற கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிரமத்துக்கு மன்னிக்கவும்.

“ போலியாராய்ச்சியன் ”

{ நூலாராய்ச்சியென்பது நூலிற் குற்றங்கூறுதலேயென்று பொருள் கொண்டும், மெய்யான குற்றங்களைக் காண்டலன்றிப் போலிக்குறை கூறிக்கொண்டும் , நூலின் நயங்கண்டு நுகர்தலின்றி நவை காண்டலே தொழிலெனக்கொண்டும், வாளாதிரிதரும் ஒருவவனைச் சுட்டிப்படியது.}

போலியாராய்ச்சியன் _ False critic
இப்போலியாரய்ச்சியன் டெனிசன் மகாகவி ஆங்கிலத்தில் வரைந்துள்ள “The Poets Mind” என்னுஞ் செய்யுளினைப் பெரிதுந் தழுவி எழுந்தது. அது வருமாறு:
THE POETS MIND
(First published in 1830)
By
Alfred Lord Tennyson

“ Vex not thou the poet’s mind
With thy shallow wit:
Vex not thou the poets mind;
For thou canst fathom it.
Clear and bright it should be ever.
Flowing like a crystal river;
Bright as light, and clear as wind.
Dark-brow’d sophist, come not anear;
All the place is holy ground;
Hollow smile and frozen sneer
Come not here.

Holy water will I pour
In to every spicy flower
Of laurel-shrubs that hedge it around.

The flowers would faint at your cruel cheer.
In your eye there is death,
There is frost in your breath
Which would blight the plants.

Where you stand you cannot hear
From the groves within
The wild-bird’s din.

In the heart of the garden the merry bird chants;
It would fall to the ground if you came in.
In the middle leaps a fountain
Like sheet lightning,
Ever brightening
with a low melodious thunder;
All day and all night it is ever drawn
From the brain of the purple mountain
Which stands in the distance yonder:

It springs on a level of bowery lawn,
And the mountain draws it from Heaven above,
And it Sings a Song of undying love;
And yet, tho’ its voice be so clear and full,
You never would hear it; your ears are so dull;
So keep where you are: You are foul with sin;
It would shrink to the earth if you came in. “

போலி ஆராய்ச்சியன்

“நூலை உள்ளபடி ஆய்வல் எனும் நொய்ய மகனே
போலியாய பல தோமுரைசெய் புன்மை நெறியாய்
சீலமுள்ள புலவோர் மனதின் செவ்வி யுணராய்
வேலை ஒத்த நின் வீண் மொழி விடுத்து ஒழிதி.” (1)

ஆய்வல்: ஆராய்ச்சி செய்வோன்.
நொய்ய : அற்பமான.
போலியாய : மெய் போலத் தோற்றி உள்ளவாறு நோகுமிடத்து
பொய்யான.
தோமுரை : குற்றம் உரைத்தல்
புன்மை நெறி : இழிந்த வழி.
சீலம் : நல்லொழுக்கம்.
செவ்வி : நல்லியல்பு.
வேலையொத்த :வேலாயுதம் போல் வருத்தும் இயல்புள்ள.
நின : நின்னுடைய.
விடுத்தியொழிவாய் :விட்டொழிவாய்.
விடுத்தி : முற்றெச்சம்.

“பாந்தளே பிறிது பாந்தளின் பாதம் உணரும்
வாய்ந்த மாது அறி மகார் அருமை வந்தி உணராள்
ஆய்ந்த செய்யுள் நலம் ஆன்ற கவிவாணர் அறிவார்
ஏய்ந்த ஊறுணறும் ஓர் விழியன் எங்ஙனம் அறிவாய் ?” (2)

பாந்தள் : பாம்பு.
பிறிது : மற்றொரு.
“ பாம்பின் கால் பாம்பறியும்.”
“புலமிக்கவரைப் புலமை தெரிதல்
புலமிக்கவர்க்கே புலனாம் _ நலமிக்க
பூம்புனல லூர பொதுமகட் காகாதே
பாம்பறியும் பாம்பின் கால்.”( பழமொழி )
வாய்ந்த : பெற்ற.
மாது : தாய்.
மகார் : குழந்தைகள்.
வந்தி : மலடி.
“குழந்தை அருமை தாய்க்குத் தெரியும்”
“மகவருமை மலடி அறியாள்”
ஆய்ந்த :ஆராய்ந்த.
செய்யுள் நலம் : செய்யுளின் அழகு.
ஆன்ற : அமைந்த : கல்வி கேள்வி அமைந்த என்ற படி.
கவிவாணர் :பாவலர்.
ஏய்ந்த : பொருந்திய.
ஊறு : குற்றம்.
இவன் குற்றமே உணர்பவன் ஆதலால் ஓர்விழியன் எனப்பட்டனன்.
‘ஓர் விழியன்’ : ஒரே பார்வை உள்ளவன் (onesided view).
ஆசிரியர் குறிப்பித்துள்ள ‘வாளா திரிதரும் போலியாராய்ச்சியனாம் ஒருவனுக்கு ஏகாக்ஷம் போலும்.

“மதுர மிக்கொழுகு மாங்கனி வடித்த சுவையார்
முது தமிழ்க்கவியை முற்றுணர்கிலாது பிசிதத்து
உதிதரும் கனியை ஒத்த குறை ஓரும் முறையாற்
கொதிகண் ஒன்றுறு கொடுங்கொடி நிகர்ப்பை கொடியோய் !” (3)

சுவையார் : சுவை பொருந்திய .
பிசிதம் : வேம்பு .
உதி தரும் : உண்டாகும்.
ஓரும் : ஆராயும்.
கொதி கண் : கொடிய கண்.
கொடும் கொடி : கொடிய காகம்.
கொடுமை வாய்ந்திருப்பதோடு கொடியையும் (காக்கையையும்) நிகர்ப்பையாதலின் ,
கொடியோய் என்ற பெயர் நினக்கே தகும் என்றது குறிப்பு. காக்கைக்கு கண் மணி ஒன்று என்பது காகாக்ஷ கோள நியாயத்தாலும் , “காகத்திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர்” (திருக்கொவையார் – 71 ) என்பதாலும் அறிக.

“களி நறைக்கினிய வைப்புறழ் கவீசன் மனமிக்
கொளி படைத்து முறுவின்று தெளிவுற்று உலவுமா
றெளி பளிங்குற்றனைய தெள்ளறலின் ஊறலெனவான்
வளியெனக்கு உலவு வான் கண் ஒளி மானும் எனவே.”

களி நறை : களிப்பினை உண்டாக்கும் தேன்.
வைப்பு : வைக்குமிடம்.
உறழ் : போன்ற. உவமைச்சொல்.
கவீசன் : கவிஞர்களுக்குத் தலைவன்.
வைப்புறழ் மனம் எனச் சேர்க்க.
மறுவின்று : குற்றமின்றி.
தெளிவுற்று : தெளிவு பொருந்தி.
உலவும் சஞ்சரிக்கும்.
தெளி பளிங்கு : தெளிந்த பளிங்கு ( crystal clear)
தெள் அறலின் ஊறல்: தெளிவான நீரூற்று.
வான் வளி : உயர்ந்த ஆகாயத்தில் ஓடும் காற்று.
ஊறலென வளியென வான்கண் ஒளியென உற்றுலவும் என முடிக்க.
யமிக்குச் சமீபத்திற் சூழ்ந்துள்ள வாயுவில் தூசு பொருந்துயிருக்குமேயன்றி மேலிடத்தில் உள்ல வாயு நிர்மலமாய் இருக்குமாதலின் வான்வளி உவமை ஆயிற்று.

வான் கண் : சூரியன். கண்கள் மூன்றில் விண்ணிற் செல்லும் கண் சூரியனே.
“கண்ணெணப்படுவ மூன்று காவலன் கல்வி காமர்
விண்ணினைச் சுழலவோடும் வெய்யவனென்னும் பேர.” ( சூளாமணி- மந்திர.30)
சூரியனொளியில் அணுக்கள் ஒன்று பட்டுக் கலவா.
மானும் : போலும்.

“கண்ணிலாது உழல் கசடறிவினால் அணுகலை
எண்ணுமிவ்விடமெலாம் இனிய தூய்மையுடைய
உண்ணிலாமல் எழுதந்தது கொலும் உன்ற நகைதான்
மண்ணில் இவ்விடையின் வாரலை மயங்கு பொறியாய் !” (5)

கண் இலாது = கட்பொறியின்றி .
உழல் = உழலும்.
கசடு = குற்றம்.
அணுகலை = நெருங்கலை.
தூய்மையுடைய = பரிசுத்தமான.
உள் நிலாமல் =மனத்தில் அடங்காமல்.
எழு தந்தது = எழுந்தது.
கொல் = அசை.
உன்றன் நகை = உனது இகழ்ச்சி நகை.
மண்ணில் = உலகில்.
இவ்விடையின் =இங்கு.
வாரலை = வாராதே.
தன்மை மயங்கு பொறியாய் = உள்ளதை உள்ளவாறு காணாது
மயங்கும் கண்ணாகிய இந்திரியத்தை உடையவனே.
இச்செய்யுளில் ‘இவ்விடம்’ என்று குறித்தது, ஆசிரியர் தம்பாற்றமிழ் பயிலும் இயற்றமிழ் மாணவர்கட்குப் பாடம் கூறும் இடத்தினை.

“தூய நீர் மலர்கள் தோறும் நனி பெய்து வருவேன்
மாயும் அம்மலர்கண் மாகொடியை நுன்றன் நகையால்
ஏயு நின் விழியில் எய்துறும் இறப்பு மிகவும்
வீயும் மூச்சினுறு வெய்ய பனி மேவியவையே.” (6 )

தூயநீர் = பரிசுத்தமான நீரினை.
நனி = மிக.
மா கொடியை = மிகக் கொடுமை உள்ளாய்.
நுன்றன் = நினது.=உனது.
அம்மலர்கள் நுன்றன் நகையால் மாயும் என்க.
ஏயும் = பொருந்திய.
நின் விழியில் = உந்தன் பார்வையால்.
நினது விழியால் மிகுதியும் இறப்பினை அடையும்.
மூச்சின் உறு வெய்ய பனி = உனது மூச்சில் உண்டாகும் கொடிய பனி.
மேவி = பொருந்தி.
வீயும் = அழியும் .
அவை வெய்ய பனி மேவி வேயும் என்க.
பாடம் பயிலும் மாணாக்கர்களின் மனத்தை மலராகவும்,
தாம் பாடம் கூறலைத் தூய நீர் பெய்தலாகவும் குறித்துள்ளார்.
“ ஞான நன்னீர் நன்கனத் தெளித்துத்
தேனாரோதி செமுதல் வார்த்து” ( மணிமேகலை 23 _ 138)

மன்னி வாணளவு காந்தமலை மாக முறுமா
மின்னு மேக மடை விற்குமுறி வீழ்மழையினா
னன்ன பேரோடை நாற்புறம் விடித்த பரிசே
யென்ன வான் புலவரின்னுள மெழுந்தொளிருமால். ( 7 )

மன்னி = நிலை பெற்று.
வான் அளவு = ஆகாயமளாவிய.
காந்த மலை = காந்தக்கல்லாகிய மலை.
மாகம் = விண்.
உறும் பொருந்திய.
மா மின்னு மேகம் = கரு நிறத்தோடு மின்னலைச் செய்யும் மேகம்.
அடைவில் = முறைமையாக.
குமுறி = இடியொலி செய்து.
வீழ் மழையினால் = பெய்யும் மழையால்.
நன்னர் = செவ்விதாக.
ஓடை = நீரோடை.
ஓடை = ஐ வினை முதற் பொருள் விகுதி. பல ஓடை என்க.
நாற்புறம் விடுத்த = நான்கு புறங்களும் ஒழுக்கிய.
பரிசே யென்ன = விதமே போல.
வான் புலவர் = சிறந்த புலமை வாய்ந்த பாவலர் தம்.
இன் உளம் = இனிய மனம்.
எழுந்து ஒளிரும் = மேலோங்கி விளங்கும்.கேட்போர் நெஞ்சத்தபாவிழுத்துப் பிணிக்கும் வன்மையால் ‘இன்னுளத்துக்கு’ காந்தமலை உவமை ஆயிற்று.

“நீமிருக்குமிட நிற்ற்¢யெனி நேச நிலவு
மாயி ருஞ்சினை படைத்த பொழில் வந்திசை செயுஞ்
சேய வின் குயிலகள் பாடுதல் செவித்தொளயுறாய்
பாய பூம்பொழிலினாப் பணவை பாடியெழுமால்.” ( 8)

நீ இருக்குமிடம் நிற்றியெனின் = நீ இருக்குமிடத்திலேயே இருந்து விடின் நேசம் நிலவும் = அன்பு பொருந்திய
மாயிரும் = மிகப் பெரிய.
சினை = கிளைகள்.
பொழில்= சோலை
இசை செயும் = பாடும்.
சேய = செவ்விய
இன் குயில்கள் = இனிய குயில்கள்
பாடுதல் = கானஞ்செய்தலை.
செவித்தொளை உறாய் = நினது காதிற்கேளாய்.
பாய = பரந்த.
பூம்பொழிலின் நாப்பண். = பூகள் மலர்ந்த சோலை. நடுவே.
அவை பாடி எழும் = அக்குயில்கள் சிறப்பாகப் பாடும்.
நேச நிலவுங்குயில்கல் எனவும் வந்திசை செய்யும் குயில்கள் எனவும் தனித்தனிக் கூட்டுக.
இயற்றமிழ் பயிலும் மாணவர் கல்வி பயிலிடத்தை ஒரு பூஞ்சோலையாகவும்
மாணவரை இன்குயில்களாகவும் குறித்துள்ளார்.

“கிட்டி வந்தையெனி லம்மவை கேயமினையக்
கெட்டழிந்துவிடு மாலிசை கேட்டு ம்கிழன்
மட்டு ம•கறிவினிற் குறுதல் வாய்வதிலையா
னட்டு நல்லறிவு நாளுமுனை நண்ணுகிலதே !” ( 9 )

கிட்டி வந்தையெனில் = நெருங்கி வந்தாயென்றால்.
அம்ம = இரக்கக் குறிப்பு.
அவை = அக்குயில்கள்.
கேயம் = பாட்டு.
டூனைய = வருந்த.
கெட்டு அழிந்து விடும் = சீர் குலைந்து விடும்.
ஆல் = அசை.
இன்னிசை கேட்டு மகிழல் மட்டும் = இனிய கானத்தைக்கேட்டு மகிழ்தல் மட்டும்.
அ•கு அறிவின் நிற்கு = குறைத அறிவினையுடைய நினக்கு.
உறுதல் = பொருந்துதல்.
வாய்வது இலை = பொருந்தாது.
ஆல் = அசை.
நாளும் நல்லறிவு உன்னை விட்டு நண்ணுகிலதே =நல்ல புத்தி உன்னை விரும்பி அடையாது. குற்றமே உணரும் இயல்புடைய நினக்கு குணம் சிறிதும் புலனாகாது.
“ குற்றமே தெரிவார் குறுமாமுனி
சொற்றபாவினு மோர் குறை சொல்வரால் .” (கந்த. 6 )


தகவல் தொகுப்பு : புதுவை ஞானம்

j.p.pandit@gmail.com

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்