வியாக்கியான இலக்கியம்

This entry is part [part not set] of 34 in the series 20051223_Issue

இந்திரா பார்த்தசாரதி


ஆழ்வார் பாடல்களுக்கு உரை எழுதிய வியாக்கியானகாரர்களைப் பற்றித் தமிழிலக்கிய

வரலாற்று நூல்களில் மிகவும் அருகியே குறிப்புக்கள் காணப்படுகின்றன. காரணம், இவர்கள் ஆக்கங்கள் அனைத்தும் சமயத்தோடு மட்டும் வைத்து எண்ணப்படுவதால்தான். இவர்களுடைய தமிழ்ப் பற்றுப் பற்றியோ, உரைகளில் காணும் அற்புதமான இலக்கிய நயங்கள் பற்றியோ அதிகம் தெரியாமல் போய் விட்டது.

நஷ்டம், தமிழ் ஆர்வலர்களுக்குத்தான்.

வைணவ அறிஞர்கள் ‘உபய வேதந்திகள் ‘ என்று அழைக்கப்படுகின்றனர். சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சிப் பெற்று, வேத, உபநிஷதங்களையும், ஆழ்வார் பாடல்களையும் தெளிவாகக் கற்றவர்கள்தாம் ‘உபய வேதாந்திகள் ‘

இந்திய தத்துவ வரலாற்றில், முதன் முறையாக, சம்ஸ்கிருதத்துக்கு இணையான சமய மொழியாக ஒரு வட்டார மொழிக்கு (தமிழுக்கு) ஏற்றம் தந்தவர்கள் தமிழகத்து வைணவர்கள்தாம். ஆழ்வார் பாடல்கள் வேதங்களுக்குச் சமமாகவோ அல்லது அவற்றைவிட உயர்ந்தனவாகவோ கருதப்பட்டன.

வங்கிபுரத்துநம்பி(ஆந்திரப்பூரணர்) ஒருசமயம் ஏழை எளிய இடைக்குலத்துப் பெண்களுடன் உரையாடிக்கொண்டிருந்தாராம். அவர் சம்ஸ்கிருத விற்பன்னர். ‘அவர்களுடன் என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள் ? ‘ என்றாராம் முதலியாண்டான். இவர் ராமாநுஜர் உறவினர், சிஷ்யர். ‘சில சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லி ஆசிர்வதித்தேன் ‘ என்றார் வங்கிபுரத்துநம்பி. ‘அவர்கள் ஈரத்தமிழ் பேச, நீங்கள் முரட்டு சம்ஸ்கிருதத்தில் ஆசிர்வதித்தீரோ ? ‘ என்றாராம் முதலியாண்டான். இது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் வரும் செய்தி.

‘திருப்பாவை ஜீயர் ‘ என்று அழைக்கப்பட்ட ராமாநுஜர், ஆழ்வார் பாடல்களுக்கு உரை எழுதும்படித் தம் தலைமை சிஷ்யர் திருக்குருகைப்பிள்ளானைப் பணித்தார். சம்ஸ்கிருதத்திலிருந்த பிரமசூத்திரங்களுக்கு சம்ஸ்கிருதத்தில் வியாக்கியானம் அருளிய ராமாநுஜர் ஆழ்வார்பாடல்களுக்கு ஏன் உரை எழுதவில்லை ?

குருபரம்பரைச் செய்தி கூறுகின்றது: “பிள்ளான், உடையவரிடம்(ராமாநுஜரிடம்) ‘ வேத வியாஸர் அருளிய பிரம சூத்திரத்தின் உண்மைப்பொருளை உலகம் எல்லாம் அறிந்து உய்வு பெறுமாறு அச்சூத்திரங்கட்குத் தேவரீர் பாஷ்யம் அருளிச்செய்ததுபோன்று,

திருவாய்மொழி முதலான திவ்வியப் பிரபந்தங்கட்கும் வியாக்கியானம் அருளிச் செய்து காத்தருள வேண்டும் ‘ என்று விண்ணப்பஞ்செய்ய, உடையவரும் உள்ளத்தில் ஆய்ந்தோந்து உணர்ந்து, ‘ அப்படியாம்; நாம் அருளிச்செயல்களுக்கு( நாலாயிரப் பிரபந்தப் பாடல்கள்) வியாக்கியானம் செய்தால், மந்தமதிகட்கு, இப்பாடல்களுக்கு இத்துணையே பொருள் உள்ளது என்று நினைக்கத் தோன்றும்; அவ்வாறு தோன்றுமிடத்து அபசாரமாம்; ஆழ்வார்களுடைய அருளிச் செயல்கட்குப் பொருள் அவரவர் அறிவுக்கும் பக்திக்கும் ஈடாகப் பலவாறு சுரக்கும்; ஆகையால், நாம் செய்யின் அருள்செயல்கட்குப் பொருள் வரம்பு கட்டிவிட்டாற்போல் ஆகிவிடும்: நீ ஒருபடி, திருவாய்மொழிக்கு வியாக்கியானம் எழுதும் ‘ என்றாராம்”.

சம்ஸ்கிருத பிரம்சூத்திரங்கட்கு, அவர் எழுதிய அளவில்தான் பொருள் எல்லை என்று மக்கள் எண்ணுவதைப் பற்றி ராமாநுஜர் கவலைப்படவில்லை. ஆனால் ஆழ்வார் பாடல்கள் படிக்கப் படிக்க அவற்றின் அர்த்தப் பரிமாணம் விரிந்துகொண்டே போகவேண்டுமென்றுதான் அவர் விரும்பினார்.

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை வேதங்களுக்கு நிகராக, வியாக்கியானகாரர்கள் நிறுவியதற்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை.

நஞ்சீயர்(1182-1287 A.C.E) இவ்வெதிர்ப்பைப்பற்றிப்பற்றித் தம் வியாக்கியானமாகிய ஒன்பதினாயிரப்படியில் குறிப்பிடுகிறார். (ஒன்பதைனாயிரப்படி என்றால், ஒன்பதினாயிர கிரந்தங்கள் என்று பொருள். ஒற்று ஒழிந்து உயிரும் உயிர்மெய்யுமான முப்பத்திரண்டு

எழுத்துக்களையுடயது ஒரு கிரந்தம். ‘படி ‘ என்பது அளவு)

எதிரணியின் முதல் கருத்து:,

‘சம்ஸ்கிருதந்தான் தேவ பாஷை, தமிழ் தேவ பாஷை இல்லை. ‘

நஞ்சீயர் மறுப்பு::

‘இறைவனை வழிபடும் மொழி எதுவாயினும் அது தேவ பாஷைதான். மத்ஸய புராணத்தில் ஒரு கதை வருகிறது. சம்ஸ்கிருதம் அல்லாத வேறொரு மொழியில் இறைவனைப் பற்றிப் பாடிய ஒருவனை கைசிகன் என்ற அரசன் தன் நாட்டைவிட்டுப் போகும்படிக் கட்டளையிடுகின்றான். மரண தேவதையாகிய யமன், இறைவனைப் பாடுவதற்கு எல்லா மொழிககளுக்குமே உரிமை உண்டு, அவை அனைத்துமே தேவ பாஷைகள் என்று அரசனிடம் கூறுகின்றான். ‘

எதிரணியின் இரண்டாம் கருத்து:

‘ தமிழ் கீழ்ச்சாதியினராலும் பேசப்படுகிறது. ஆகவே, அது தீட்டுப் பட்ட மொழி ‘

நஞ்சீயர் மறுப்பு:

‘ தீட்டுப் பட்ட மொழி என்று வரையறுப்பது போன்ற அபத்தம் எதுவும் இருக்க முடியாது. இது நாம் இறைவனுக்குச் செய்யும் துரோகம். நல்ல கருத்துக்கள் பரவலாக மக்களைப் போய்ச் சேர வேண்டுமென்றுதான் இறைவன் விரும்புவார். ‘

எதிரணியின் மூன்றாவது கருத்து:

‘ நம்மழ்வார் நாலாவது வருணத்தில் பிறந்தவர். அவர் பாடல்களை வேதங்களுக்குச் சமமாக வைத்துக் கூறுவது அதர்மம். ‘

நஞ்சீயர் மறுப்பு:

‘ ஒருவர் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்ததற்கு அவர் பொறுப்பாக மாட்டார். மேன்மை, சாதியினால் வருவதன்று, அறிவினாலும், ஒழுக்கத்தினாலும் வருவது. வேதங்களைக் காட்டிலும், இறைவன், நம்மாழ்வார் பாடல்களைத்தாம் விரும்பிக்

கேட்கிறார். ‘

எதிரணியின் நான்காவது கருத்து:

‘தமிழ் ஒரு வட்டார மொழி. மற்றைய வட்டாரங்களில் இது, சம்ஸ்கிருதம் போல் வழக்காற்றில் இல்லை.

நஞ்சீயர் மறுப்பு:

‘ இதற்கு மற்றைய வட்டாரங்களில் உள்ளவர்கள், ஆழ்வார் பாடல்களைப் பெற்றுள்ள இந்த அருமையான மொழி நமக்குத் தெரியவில்லையே என்று வருத்தப்படவேண்டும். வேங்கடத்துக்குத் தெற்கே உள்ள அனைவருக்கும் இம்மொழி தெரியும். ‘

நஞ்சீயர் மேல்கோட்டை(மைசூர்) யைச் சார்ந்தவர். வேங்கடத்துக்குத் தெற்கே அனைவருக்கும் தமிழ் தெரியும் என்ற அவர் கூற்றை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

எதிரணியின் கருத்து:

‘ அவைதிக மதங்களைச் சார்ந்த பெளத்தர்களும் சமணர்களும் தமிழில் எழுதுகிறார்கள். ‘

நஞ்சீயர் மறுப்பு:

‘தமிழுக்கு இது பெருமைதானேவொழிய, இழுக்கன்று ‘.

எதிரணியின் கருத்து:

‘ புருஷார்த்தங்கள் நான்கையும்( அறம், பொருள், இன்பம், வீடு) நாலாயிரப் பிரபந்தம் சொல்லவில்லை ‘

நஞ்சீயர் மறுப்பு:

‘பக்தியைச் சொல்வதே நான்கையும் சொல்வதற்கு ஈடாகும் ‘.

எதிரணியின் கருத்து:

‘ஆழ்வார் பாடல்களில் வரும் நாயகி-நாயக பாவம் சிற்றின்பக் கிளர்ச்சியைத் தூண்டுவதாகும். ‘

நஞ்சீயர் மறுப்பு:

‘ ஆழ்வார்கள் கூறுவது பகவத் காமம் ,ஆன்மீகப் புணர்ச்சி. ரஸம் மிகுந்த இப்பாக்களை பக்தி இருந்தால்தான் அநுபவிக்க முடியும்.

நஞ்சீயர் எதிரணியினர் யாரென்று குறிப்பிட்டுக் கூறவில்லை. ராமானுஜர் கொண்டு வர முயன்ற பல சீர்ததிருத்தங்களை எதிர்த்த அடிப்படைவாத வைதிகர்களாக இருக்ககூடுமெண்று யூகிக்கலாம்.

தமிழ்க்கடல் கடந்து, வடமொழிக்கு எல்லை நேர்ந்தவர்களால்தாம் இந்த வியாக்கியானங்களை எழுதியிருக்க முடியும். அவர்கள் காலத்துக்கு முந்திய எல்லா தமிழ் நூல்களையும் இவர்கள் கரை கண்டிருக்கிறார்கள். சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் சம அந்தஸ்துடைய மொழிகளாக இவர்கள் கருதியதினால், இரு மொழிகளும் விரவிய ஒரு நடையில் வியாக்கியானம் எழுதினார்கள். இதற்கு மணிபிரவாள நடை( மணி என்றால் முத்து, பிரவாளம் என்றால் பவளம். முத்தும் பவளமும் சேர்ந்தாற்போல், தமிழும் சம்ஸ்கிருதமும் இணைந்த நடை) இவர்கள் சிருஷ்டித்த பல அருமையான தமிழ்ச் சொற்கள், இன்று வழக்காற்றில் இருந்திருந்தால்,

தமிழில் கலைச் சொற்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டிருக்காது.

அவர்களுடைய விரிந்த தமிழ் அறிவுக்குப் பல சான்றுகள் தர இயலும். வடக்குத் திருவீதிப் பிள்ளை அவர்கள் திருவாய்மொழிக்கு எழுதிய வியாக்கியானமாகிய ‘ ‘ஈட்டில் ‘ வரும் செய்தி.

“ பட்டரை (பராசரப் பட்டர்- இவர் ராமானுஜர் சிஷ்யர், கூரத்தாழ்வான் புதல்வர்) ஒரு தமிழ்ப் புலவர், ‘கேட்டிரங்கி ‘ என்னாது, ‘கண்டிரங்கி ‘ என்னப் பெறுமோ ? என்ன ( இது திருவாய்மொழியிலே வருகிற ஒரு பாசுரத்தில் பயின்று வரும் சொல்லாட்சி )

‘அணைத்த கை நெகிழ்ந்த அளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத்தகாது என்றிருக்க வேண்டாவோ ?” என்றருளிச் செய்தார். கேட்ட புலவர், ‘இவ்வாறு நிகழ்வதுமுளதோ ‘ என்ன, ‘ புல்லிக்கிடந்தேன் ‘, ‘ காதலர் தொடுவுழித் தொடுவுழி ‘ என்பன போன்ற தமிழ்ப் பாக்களை நீ அறியாயோ ? ‘ என்றருளிச் செய்தார்”.

‘புல்லிக்கிடந்தேன் ‘, ‘ காதலர் தொடுவுழித் தொடுவுழி ‘ என்பன குறள் வரிகள்.

தலைவி பிரிவாற்றாமைனால் வருந்துகிறாள் என்பதைக் கேட்டறியலாமே தவிர, கண்டு அறியமுடியுமோ என்பது தமிழ்ப் புலவரின் சந்தேகம். தலைவன் தலைவியைவிட்டுப் பிரிவதற்காகக் கைகளை விலக்கின உடனேயே அவள் உடம்பில் பசலை படர்ந்து, உடம்பு வெளுப்பதைப் பார்த்தாலே தெரியாதா விரகதாபம் என்று கூறிக் குறட்பாக்களைச் சான்றுகள் தருகிறார் பட்டர்

திருவாய்மொழி உரைகளிலே, வடக்குத் திருவீதிப் பிள்ளை அவர்களின், ‘ஈடு ‘ மிகச் சிறந்ததாகக் கருதப்படும். பிள்ளை அவர்களின் குரு நம்பிள்ளை அவர்கள் காலக்ஷேபத்தில் கூறிவற்றை ஏட்டிலே இட்டு எழுதினமையால் ‘ஈடு ‘ என்ற அழைக்கப்பட்டது என்பர். தன்னைப் படிக்கின்றவர்கள் அனவைரையும் இறைவனிடத்து ஈடுபடச் செய்வதால் ‘ஈடு ‘ என்ற பெயர் வந்தது என்றும் கூறலாம்.

ஈட்டின் சிறப்பை விளக்க இரண்டு சான்றுகள்.

திருவாய்மொழிப் பாசுரம் ஒன்று:

‘ஆடிஆடி அகம் கரைந்து இசை

பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி எங்கும்

நாடிநாடி, நரசிங்கா என்று

வாடி வாடும் இவ் வாள்நுதலே. ‘

கூடிப் பிரிந்த தலைவனை( இறைவனை) எண்ணி தலைவி (நம்மாழ்வார், நாயகி பாவத்தில்) வாடுவதை, அவள் தாய் எடுத்துச் சொல்லுவதாக அமைந்த பாட்டு இது.

இதன் பொருள்:

‘ ஒளி பொருந்திய நெற்றியினையுடைய இவள், நின்ற இடத்தில் நில்லாமல், பல இடங்களிலும் உலாவி, மனமும் கரைந்து, இசையோடு பல காலம் பாடிக்கொண்டு, கண்களில் நீர் நிறையப் பெற்று, எல்லா இடங்களிலும் தேடித் தேடி, ‘நரசிங்கனே ‘ என்று மிகவும் வாடுகிறாள்.”

உரையாசிரியர் அவள் ஏன் ‘நரசிங்கா ‘ என்று கூப்பிடவேண்டுமென்பதை முதலில் ஆராய்கிறார்.

‘ ஆபத்தே செப்பேடாக (தாமிர சாசனம்) அடியனான பிரஹ்லாதன் சூளுறவு செய்த அக்கணத்திலே வந்து உதவும் தன்மையினானனைச் சொல்லிக் கூப்பிடா நின்றாள் ‘.

‘ஆடி ‘- ‘ இருத்தல், நடத்தல், கிடத்தல் முதலியவைகளில் ஒரு நியதி இன்றிப் பிரிவுத் துன்பத்தால் படுகிற பாடு திருத்தாயார்க்கு மனத்தைக் கவர்வதாக இருத்தலின், ‘ஆடி ‘ என்கிறாள்….வடிவழகியார் செய்யும் வியாபாரங்கள்( காரியங்கள்) எல்லாம் கண்ணுக்கு

இனியவையாகவே இருக்கும் ‘.

‘ஆடி- முதலில் ‘ஆடி ‘ என்றதற்கருகே ஒரு நிலை. இரண்டாம் ‘ஆடி ‘, முதலில் ‘ஆடி ‘ என்பதனோடு அமையாது, இருகால் மட்டு ‘ஆடி ‘ என்கிறாள். துன்பத்தின் மிகுதியைத் தாளம் கொண்டு அறியுமித்தனை. ‘ ( வெண்கலத்தின் ஒலிபோல் ஒரு காலுக்கு ஒரு கால் ஓய்ந்து வருகிறபடி என்று அர்த்தம்)

‘ முதலில் சஞ்சாரம் அரிதாய் இருக்கவும் ஆற்றாமையால் தூண்டப்பட்டு சஞ்சரிக்கிறாள். என் ? (ஏன்) குணாதிக விஷயம் ஆதலாலாலே (தலைவனுடைய குணநலன்கள்), பரதன் ராஜ்யத்தைத் தொட்டுக்கொண்டு இருந்ததுபோல( ராமனுடைய குணநலன்களை எண்ணி, பாதுகை ஆட்சி நடத்தியது போல) அவள் இருந்தாள்.

(பிரிவாற்றாமையினால் உயிரை இழந்துவிட்டால், அழகு ரூபனான அவனை மறுபடியும் ஒரு தடைவையாவது பிறகு சந்திக்கும் வாய்ப்பை இழந்துவிடுவோமே என்ற கருத்து)

‘இசை பாடிபாடி ‘- ‘ மனம் முன்னர் நினைக்க, பின்னர் வார்த்தை உண்டாகும் என்ற நியதி இல்லை; ஆற்றாமையாலே கூப்பிடுகிற கூப்பீடுதான் பாட்டய்த் தலைகட்டுகிறதித்தனை. ஆயின், கூப்பீட்டைப் பாட்டு என்னலாமோ எனின், ஆற்றாமையிலே துடித்த துடிப்பு ஆடல் ஆனாற்போல, ‘ பண்ணை இன்சொல் மங்கை ‘ ஆதலின், கூப்பிட்ட கூப்பீடு பாட்டாய் விழாநின்றது. ‘பாடிப் பாடி ‘ என்ற

அடுக்கு முதல் கூப்பீடுபோல அன்றி, இரண்டாம் கூப்பீடு தளர்ந்திருத்தலையும் குறிக்கும் ‘

‘கண்ணீர்மல்கி ‘- ‘உருகிய மனம் இசையாய்ப் பெருகி, மிக்கது கண்ணீராய்ப் பெருகிறபடி. ‘

‘மிக்கது ‘ என்ற சொல்லாட்சி எவ்வளவு அற்புதமாக விழுந்திருக்கிறது பாருங்கள். ஆடினாள், பாடினாள், எஞ்சிய உணர்வுகள், மொழியை விஞ்சிய நிலையில், கண்ணீராய்ப் பெருகுகின்றன.

இவ்விடத்தில் பட்டர் கூறிய கருத்தையும், திருக்குருகைப் பிள்ளான் சொன்ன கருத்தையும் குறிப்பிடுகிறார். ‘கண்ணீர் பெருகுகின்றதே, யார் குடி வேர் அற ? ‘ என்றாராம் பட்டர். சீதை பெருக்கிய கண்ணீரால் ராவணனுடைய குடி வேரறுந்தது அல்லவா, அதை நினைவூட்டுகிறார் பட்டர். ‘ யாரைச் சேதநராகக்(இன்பத்தைத் துய்ப்பவன்)கொண்டு ? ‘ என்றாராம் பிள்ளான். ‘ யாருடைய இன்பத்துக்காக ? ‘ என்பது பொருள். தாமரையில் முத்துப் பட்டாற்போன்ற இவ்வழகினை அநுபவிக்க( கண்ணீர் விடும் நிலையில் அவள் அழகு பதின் மடங்கு பொலிவுறுகின்றது) அவள் தலைவன் இங்கு இல்லையே, யாருக்காகக் கண்ணீர் விடுகின்றாள் ?

‘நரசிங்கா என்று வாடி வாடும் ‘: ‘ பிரஹ்லாதனைப் போல ஒரு தம்பம் ( சிலேடை; ஆதாரம், தூண்) இல்லாதபடி இருக்கையாலே கொம்பை இழந்த தளிர் போல வாடும்.

முதல் வாட்டம் ‘தளிர் ‘ என்று கூறத்தக்கதாய் இருக்கிறது, அடுத்த கணத்தில் வாட்டம் என்பாள், ‘வாடி வாடும் ‘ என்கிறாள் ‘.

இரண்டாவது செய்யுள்:

‘அஞ்சிறைய மடநாராய்! அளியத்தாய்! நீயும் நின்

அஞ்சிறைய சேவலுமாய் ஆஆஎன்று எனக்கு அருளி

வெஞ்சிறைப்புள் உயர்ந்தார்க்குஎன் விடுதூதாய்ச் சென்றக்கால்

வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டால் என்செயுமோ. ‘

இது நாயகி-நாயக பாவ செய்யுள். நாயகி பாவத்தில் நாயகனாகிய இறைவனுக்கு ஒரு நாரையைத் தூது விடுவதைச் சொல்வது இப்பாட்டு.இதன் பொருள்:

‘அழகிய சிறகுகளையும் மடப்பத்தையுமுடைய நாரையே! அருளோடு கூடின நீயும், அழகிய சிறகுகளையுமுடைய நினது சேவலும், ‘ ஐயோ பாவம் ‘ என்று இரங்கி எனக்கு அருள் செய்யும் பொருட்டு, கொடிய சிறகுகளையுடைய பறவையாகிய கருடனைக் கொடியிலே உயர்த்திய இறைவனிடத்தில் யான் விடுகின்ற தூதாகிச் சென்றால், உங்களை அவன் முகம்பார்த்து உங்களுடன் பேசாமை என்கிற சிறையிலே வைத்தால், அவன் அவ்வாறு செய்வதற்கு இசைந்து நீங்கள் அங்கேயே இருந்தால், அது உங்களுக்குத் துன்பத்தைத் தருவது ஆகுமோ! ‘ .

இனி ஈட்டின் விளக்கவுரையைப் பார்க்கலாம்:

‘அம் சிறைய- குழந்தை தாயின் உறுப்புகள் எல்லாம்கிடக்க, மார்பிலே வாய் வைக்குமாறு போன்று, பறப்பதற்குச் சாதனமான சிறகிலே முற்படக் கண் வைக்கிறாள்..நீர் பாய்ந்த பயிர் போன்று, ஒன்றற்கு ஒன்று கலவியால் பிறந்த மகிழ்ச்சி வடிவிலே தொடை கொளலாம்படி( அறியலாம்படி) இருக்கின்றதாதலின், ‘ அம் சிறை ‘ என்றார்.

மட நாராய்- ஏவிக் காரியம் கொளலாம்படி பணிவு தோன்ற இருந்தது. அல்லது பிரிவில் தனது துன்பத்தை அறியும் இனமான பேடை.

அளியத்தாய்- அளி-அருள். அவன் (தலைவன் – இறைவன்) போகட்டுப்போன சமயத்திலே என் ஆற்றாமையை அறிவிக்கலாம்படி வந்து முகம் காட்டின அருள்.

நீயும் நின் அஞ்சிறை சேவலுமாய்- சேவலைக் காரியம் கொள்ளுவார் பேடையை முன்னிட்டுப்போல காணும் காரியங்கொள்வது. ( பெடையின் மூலம் சேவலைக் காரியத்துக்கு ஏவுவது). பெண்ணை(பெடையை) அணைந்து பெற்ற அழகு வடிவிலே தோன்றுகின்றதாதலின், அதனை ‘அம்சிறை ‘ என்கிறார்.

இவ்வியாக்கியானாங்களின் தனிச் சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு சொல்லையும், அதன் பின்னணியில் வைத்து, அது பூடகமாகத் தெரிவிக்கும் பல தொனிப் பொருள்கலைச் சொல்வதாகும்.

‘எனக்கு அருளி ‘ என்பதில், ‘எனக்கு ‘ என்ற சொல்லை ஆராய்கிறார். “ முனிவர்கள் இராக்கதர்களால் துன்புறுத்தப்பட்ட சரீரங்களை ராம பிரானுக்குக் காட்டியது போல(வால்மீகி ராமாயணம்-ஆரண்யா காண்டம்) இவளும் ‘எனக்கு ‘ என்று விரகம் (பிரிவு ஏக்கம்) தின்ற தன் வடிவைக் காட்டுகிறாள்.

‘அருளி ‘ – ‘இரப்புக்குச் செய்தது ஆகை அன்றிக்கே, உங்கள் பேறாக அருளி ‘-( நான் இறைஞ்சினேன் என்பதற்காகப் பரிதாபப்பட்டுச் செய்யாமல், இதை உங்கள் பாக்கியமாய் செய்ய வேண்டும். இறைவனைச் சந்திக்கக் கிடைக்கும் பாக்கியம் )

பரம பதத்திலே இருப்பவர்கள் அனைவரும் ஒத்தவர்களாய் இருக்கக்கூடுமென்பதால், அவனைத் தனித்து அடையாளம் காட்ட, ‘ வெஞ்சிறைப் புள் உயர்த்தாற்கு ‘- என்கிறாளாம்.(கருடனைக் கொடியிலே உடையவன்) கருடனுடைய சிறகை ஏன் கொடிய சிறை என்று கூற வேண்டும் ? ‘தன்னைவிட்டு அருள் இன்றிப் பிரித்துக் கொண்டு போகையாலே ‘ (திருமாலின் வாகனம் கருடன்) ‘வெஞ்சிறை ‘ என்கிறாள்.

‘என்விடு தூதாய் ‘- ‘பெருமிடுக்கரான பாண்டவர்களுக்குக் கிருஷ்ணன் தூது சென்றது போன்றதன்றி, அபலையாய் மிக்க துன்பத்தை உடையவளாக இருக்கிற ‘என் ‘ தூதாய்.

தூது போவதினால், எனக்கு முன்னால் உங்களுக்கு அல்லவா பலன் கிதைக்கப் போகிறது என்பதினாள் (அதாவது, பகவானை தரிசிக்கும் பாக்கியம்) ‘சென்றக்கால் ‘ என்று அப்பறவைகளை உற்சாகப்படுத்துகிறாளாம்.

வன்சிறையில் அவன் வைக்கில்- இங்குச் சிறை என்பது அவன் முகம் கொடுத்துப் பேசாமை. அப்படி அவன் பேசாமலிருப்பானோ என்றால் இருக்கமாட்டான் என்பது தோன்ற, ‘ ‘வைக்கில் ‘ (வைத்தால்) என்கிறாளாம். ‘ மனிதர்களுக்குத் துன்பம் வந்தால் அவர்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு துன்பம் அடைகின்ற அவன் ‘ (வால்மீகி ராமாயணம்- அயோக்தியாக் காண்டம்) அப்படி முகம் கொடுத்துப் பேசாமல் இருக்கமாட்டான்.

‘வைப்பு உண்டால் என் செயுமோ ? ‘- ‘அப்படி அவன் செய்தால் அது பொல்லாதோ ? பிறருக்காகச் சிறை இருக்கை கிடைப்பதொன்றோ ? இராவணன் தெய்வப் பெண்களைச் சிறையிட்டு வைக்க, நான் அவர்கள் காலில் விலங்கைத் என் காலிலே கோத்துச் சிறை மீட்கவில்லையோ ? ( இங்கு நாயகி தன்னை சீதையுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டு தன் அநுபவமாகக் கூறுகிறாள்)

இன்னொரு பொருளும் கூறுகிறார். ‘நீங்கள் ஏதேனும் அவனுக்காகவா தூது போகிறீர்கள் ? ( அநுமன் தூது போனது போல). சிறைக் கட்டுதல் (பிரமாஸ்திரத்தால் கட்டுதல்), சிங்கவிளக்கெரிதல் ( காலிலே சீலையைக் கட்டி எரித்தல்- அநுமனுக்கு ஏற்பட்ட துன்பங்கள்) செய்யில், செய்வது என் என்று கூசுகைக்கு ? எனக்காக அல்லவா போகிறீர்கள் அவனிடம் ? நான் ஆசைப்படுகிற மார்பு அன்றோ உங்களுக்குப் பரிசிலாகக் கிடைக்கப்போகிறது, அவன் உங்களை அணைக்கும்போது ? ‘ (எனக்காகத் தூது வந்தீர்கள் என்றறிந்து மகிழ்வுடன் உங்களை அணைத்துக் கொள்ளும்போது)

வியாக்கியான விளக்கவுரையில் ஒரு சிறு துளிதான் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.

சம்ஸ்கிருதமும், தமிழும் விரவிய மணிபிரவாள நடையின் காரணமாக, இவ்வுரைகளைநாம் சமயத்தோடு வைத்து எண்ணியதினால், இலக்கியமாகப் படிக்கத் தவறிவிட்டோம்.நச்சினார்க்கினியர், பரிமேலழகர், சேனாவரையர், இளம்பூரணர் போன்ற உரையாசிரியர்களுக்குரிய இடம், தமிழிலக்கிய வரலாற்றில் இவ்வியாக்கியானகாரர்களுக்கும் உண்டு.

—-

ps0710@yahoo.com

Series Navigation