விடிவைத்தேடி இரவெல்லாம் ஓடி …

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

சக்தி சக்திதாசன்


விளையாட்டல்ல நண்பா
விடிவைத்தேடி
விழியெல்லாம் நீராக
விரைகின்றார் என் தேச மக்கள் !

காலமெலாம் பாவம் அவர் வாழ்வில்
கனவாக
கரைந்திட்ட போதிலும்
கரங்களை இறுகப்பற்றி
கண்களைச் சுருக்கிக்
கருக்கலில் தெரியும் விடியலைக்
காண விரைகின்றார்
கண்ணான என்னீழத் தமிழரவர் !

போர் கொடுத்த சோதனையும்
பெரும் சுனாமி விளைத்த சேதத்தையும்
பொறுத்தே நடக்கும் அம்மண்ணின் மைந்தரவர்
பொன்னான காலமொன்று காணும் வேளை
பொங்கியெழுந்து வரும் நாள் என்றோ ?

புலம் பெயர்ந்தவர் தான் நாம்
புண்ணாண நெஞ்சின் சொந்தக்காரர்
புலரும் பொழுதை
பகரும் காலம் வேண்டிக்
கதறும் நெஞ்சம் உண்டு எமக்கு

தந்தை தவறிவிட
தாயும் தொடர்ந்து விட
தாய்மண் ஒன்றேதான் எமைத்
தாங்கும் நித்திய சொந்தமென
தவித்தே நாளும் நாம்
தத்தளிப்பதை யாரறிவார் ?

இதயத்தின் ஓரத்தில் ஏனோ
ஈரம் கசிவது தானோ ?
ஈழத்தை விட்டு அன்று
இடம்பெயர்ந்தது ஒரு நிகழ்வு
ஈழமே இன்று எமக்கு
இல்லையென்றாகிடுமோ, காலமே !
இயம்பிடு பதில் ஒன்று .

அன்றைய பொழுது
ஆயிரம் வசதி தேடி
அன்னை பூமியை விட்டு நான்
அகன்றதொரு பொழுது
ஆண்டுகள் பல
ஆயினும் மறந்திடு உன் நாட்டை என்றால்
ஆகுமோ இந்த ஈழத் தமிழன்
ஆயுளில் ?

ஒவ்வொரு இரவும் விடியுது
ஒருநாள் விடியுமோ என்னிதயம் ?
ஒவ்வொரு இரவாய் எத்தனை இரவுகள்
ஒரு பொழுதெனும் உறங்க மறுத்த விழிகள்
ஒருநாள் வருமோ என் தாய்நாட்டிற்குத்
திருநாள் அந்நாள் தானே எனக்குப் பெருநாள் !

அன்னை மடியை விட்டு
அடியேன் இறங்கிய மண்ணை
அந்நியர் சொந்தம் கொள்வதும் முறையோ ?
அநீதியானதல்ல நம்
ஆசை
அறிவீர் , இவ்வோசை மெளனமாய்
அழுகின்ற ஈழக்குழந்தையின்
ஈனக்குரலே !

தேடல் ஓயாது தோழனே
தேவைகள் இதயத்திற்கே !
தேய்கின்ற நிலவைப் பிடித்து
தேய்ந்த பகுதிக்கு வர்ணமடித்து
தோன்றும் பெளர்ணமியாய்
தோற்கின்ற இரவுகளை விடியவைக்கும்
தோற்காத வீரமிது !

விடிவுகளைத் தேடி இரவெல்லாம் ஓடி
விழுந்து விட்டேன் களைத்தின்று
விண்ணென்று ஆதவன்
விழிக்கும் நேரம்
வயதாகிப் போனலும் என்னை
வலிந்து கைகொடுத்து தூக்கிடுவாய் தோழா
விழிகளால் என் தேச
விடியலைப் பார்த்து விடுகிறேன்.

அன்புடன்
சக்தி

http://www.thamilpoonga.com

Series Navigation

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்