விடியும்!: நாவல் – (31)

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


கதைத்துவிட்டுப் போகிற போது, செல்லத்தம்பி மாஸ்றர் வாசலில் நின்று தன்னைப் பார்த்து பல்லுத் தெரியாமல் சிரித்த சிரிப்பு வெற்றிலைக்குள் மடித்துக் கொடுத்த கைவியளம் மாதிரி அவனுக்கு இருந்தது. வெற்றிலைக்குள் மடித்துக் கொடுக்கிற ‘கைவியளம் ‘ பட்டென்று தெரியாது. ஐம்பது அல்லது நூறு இருக்கலாமென அனுமானிக்கலாமே தவிர, தந்த ஆள் பக்கத்தில் நிற்கும் போது விரித்துப் பார்க்கிறதும் அழகில்லை.

விடை பெறுகையில் உதிர்க்கிற சாதாரணச் சிரிப்பல்ல அது. டூ இன் வன் போல் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களை தன்னகத்தே கொண்டிருந்ததாக அவனுக்குப் பட்டது. ஒரு நோக்கில் – நீங்களெல்லாம் பட்டதாரிப் படிப்புப் படித்தென்ன இன்னும் உலகத்தை நிறையப் படிக்க வேண்டியிருக்கிறது, எப்பதான் படிக்கப் போறீங்களோ என்ற ஆதங்கத்தோடு சிரித்தது போலவும், இன்னொரு நோக்கில் – புலி பிடிச்சு பிள்ளை தப்புமா, இது விளங்காமல் கண்காணாத தேசத்திலிருந்து இவ்வளவு தூரம் வேலை மினக்கெட்டு வந்ததை நினைச்சா சிரிக்கிறதா அழுகிறதா என்று தெரியேல்லை என்கிற மாதிரியும் இருந்தது.

கடிதத்தைப் படித்தால் அந்தச் சிரிப்பின் அர்த்தம் பட்டென்று புரியலாம்! அவனுக்கு குமிளி குமிளியாக ஆத்திரம் முகிழ்த்துக் கொண்டு வந்தது. எல்லாம் இந்த நாயால் வந்தது. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று இருக்க, பாலைக் குடித்தது மட்டுமில்லாமல் கோப்பையையும் கழுவி வைச்சிற்றுப் போயிருக்கு. கடிதம் அனுப்பிறாராம் கடிதம்.

கடிதத்தை உடைச்சாத்தான் பாசா பெயிலா தெரியும். தபால் கொண்டு வந்த வாத்தியாரின் ஆர்வக் குறைவைக் கவனித்த வகையில் பெயிலாவதற்கே வாய்ப்புகள் அதிகம். அதனாலேயே, கடிதத்தைப் படிக்கும் விருப்பத்தில் பாதி உருகிப் போய்விட்டது. மிச்சப்பாதி இப்போது வந்த ஆத்திரத்தில் கரைந்து கொண்டிருந்தது.

கிராமத்து இருட்டமைதியில் சில்வண்டுகளின் சூசூசூ சத்தம் காதை வளைத்து நிறைத்தது. வெளிச்சம் உங்களது, இருட்டு எங்களது என்று உரிமை கோரிக் கொண்டு சுற்றி வளைத்த நுளம்புகளை விசுக்கத் தோன்றாமல் பார்த்தான் செல்வம். தம்பியில் வந்த ஆத்திரம் அப்பாவில் தொற்றி சின்னம்மாவில் பாய்ந்து தாயின் முந்தானையைத் தொட்டு நிற்கும் பிள்ளையைப் போல அவனிலும் ஒட்டிற்று. வியர்வை முதுகுப்பக்கச் சட்டையில் ஒட்டிக் குளிர்ந்தது. தான் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுப் போனதை அவன் உணரத் தொடங்கினான். ஆத்திரப்பட்டு என்ன பிரியோசனம்!

பிழை எங்களிலும் இருக்கு. என்னுடைய பிள்ளை தங்கப்பவுண், அல்லை தொல்லைக்குப் போகமாட்டான் என்று பெரிதாக நம்பி விட்டாள் சின்னம்மா. சாப்பாட்டை முறையாகக் கொடுத்தால் காணுமா ? எங்கே போகிறான் ஆரோடு கூடித் திரிகிறான் என்று பார்க்க வேண்டாமா ? வீட்டுக்குள் அப்பிராணி மாதிரி ஒரு முகம், வெளியில் சண்டியன் மாதிரி இன்னொரு முகம். பொடிப்பிள்ளை எல்லாரையும் பேய்க்காட்டியிருக்கு. ஓலெவல் பாஸ் பண்ணிய உடனேயே அங்கு எடுத்திருக்க வேனும். ஏலெவல் பாஸ் பண்ணட்டும் என்று சோரப் போட்டது என்னுடைய பிழை. இப்ப ஒன்றுக்கும் பிரியோசனமில்லாமல் போயிற்றானே!

செல்வம் நேரத்தைப் பார்த்தான். கடிதத்தையும் பார்த்தான். என்னதான் சொல்கிறான் பாப்பம். கொடியில் தொங்கிய சாறனால் நெற்றியில் படர்ந்த வியர்வையைத் துடைத்தான். அது தன்னுடைய சாறன் இல்லையென்று துடைத்தபின் தெரிந்தது. வாசலுக்கு வந்து வெளியே பார்த்தான். போனவர்கள் வருகிற சிலமனைக் காணவில்லை. அவர்கள் திரும்புவதற்குள் வாசிக்க வேண்டும்.

கவரை சரக்கென்று கிழித்தான். மனம் கோணியிருந்தது போலவே கிழித்த இடம் கோணல் மாணலாய்ப் போயிற்று. கிழிந்த துண்டுகளை ஒட்டிப் பிடித்து கடித மேல் மூலையில் சிதைந்து போயிருந்த திகதியைப் பார்த்தான். எழுதி மூன்று நாளாகிறது.

பெரிய கடிதம்! வரியற்ற மூன்று வெள்ளைத்தாள்களில் ஆறு பக்கங்களையும் மிச்சமில்லாமல் நிரப்பியிருந்ததால் நெருக்கமாய்த் தெரிந்தது. எழுதி எழுதிப் பழக்கப்பட்டவர்களின் நேர்த்தி மிளிர்ந்தது. வரிகளில்லாவிடினும் எழுத்தோட்டம் நெளியாமல் நேராயும், தொடுத்து எழுதிய போதும் அதுவே அழகாயும் இருந்தது. தன்னுடையதை விட தம்பியின் எழுத்து உறுப்பாக இருந்ததை போகடிபோக்கில் அவதானிக்கவும் செய்தான்.

திரும்பி வருவதைப் பற்றி எங்காவது ஒரு இடத்தில் ஏதாவது குறிப்பிட்டிருக்கிறானா என்று பார்த்தான். பக்கங்களை சரசரவெனப் புரட்டி பந்திகளில் அவசரமாகத் தத்தித் தத்தி வந்தான். ஆட்டுக்குட்டி வாய் வைத்த மாதிரி சகட்டு மேனிக்கு மேய்ந்தான். அப்படி எதுவும் இல்லை போலவும் இருப்பது போலவும் ஒரு குழப்பம். அவசரப்பட்டதால் அப்படியிருக்குமோ என்று சமாதானம் செய்து கொண்டான். திரும்ப வந்து கதிரையில் குந்தி இந்தத் தடவை ஆறுதலாகப் பார்க்கும் தீர்மானத்துடன் கடவுள் துணையிலிருந்து தொடங்கினான்.

அன்புள்ள அண்ணா,

எனக்குத் தெரியும் நீங்கள் பதறியடித்துக் கொண்டு வந்திருப்பீர்கள். வீட்டில் அம்மா அப்பா அக்காமார் மாமா கவலையோடிருப்பார்கள். இவ்வளவும் தெரிந்திருந்தும் சொல்லாமல் வந்ததையிட்டு கோபமும் அடைந்திருப்பீர்கள். எல்லோரையும் சங்கடப்படுத்தியதற்காக என்னை பொறுத்துக் கொள்ளுங்கள் அண்ணா.

ஏன் வந்தேன் என்று விளக்குவதே எனக்கு முக்கியமாகப் படுகிறது. எங்களுக்காக ஒரு விடுதலைப் போராட்டம் நீண்ட காலமாக நடக்கிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தியாகத்தீயில் மாய்ந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். நமக்காக நடக்கும் இந்தப் போராட்டத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் ? குறிப்பாக, நகரங்களில் வாழும் எங்களின் கண்ணோட்டம் என்ன ?

நாம் வாழுகிற தெருவில் குடிசைகள் பற்றி எரிகின்றன. சிலர் நீர் ஊற்றி அணைக்க முயல்கிறார்கள். இன்னும் சிலர் நெருப்பில் அகப்பட்டவர்களைக் காப்பாற்ற முனைகிறார்கள். ஆனால் பலரோ – சும்மா கைகட்டி நின்று, அனுதாபத்தை உதிர்த்துவிட்டு நகர்கிறார்கள். தங்கள் கூரையில் தீ பிடித்து விடாமலிருக்க முன்னெச்சரிக்கையாய் வேக வேகமாக நீர் இறைக்கிறார்கள். இது கஷ்டங்களை உள்வாங்க விரும்பாத வெறும் பார்வையாளர் மனப்பான்மை. நம்மில் பலர் இப்படித்தான் இருக்கிறோம்.

விடுதலைப்புலிகள் வெற்றி பெற வேண்டும், சுதந்திரக் காற்று விரைவில் வீசவேண்டும் என்று மன்றாடுகிறோம். அறிமுகஅட்டை சோதனைகள், தலையாட்டிகளின் காட்டிக்கொடுப்புகள், படுத்த பாயில் சுற்றிவளைப்புகள், வெள்ளைவாகனத்தில் ஆட்கடத்தல்கள், திடார் ஊரடங்குச்சட்டங்கள், மிரட்டல்கள், கற்பழிப்புகள், சித்திரவதைகள், செல் அடிப்புகள், விமானக்குண்டு வீச்சுகள், பொருளாதாரத் தடைகள் ஆகிய அடக்குமுறைகள் அகன்ற அமைதிச் சூழ்நிலையில், கைகளை விசிறிக் கொண்டு எங்கள் தெருக்களில் நிம்மதியாக நடக்கப் பிரியப்படுகிறோம்.

நம் பிறந்த மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் படையினரின் முகாமை புலிகள் வீழ்த்தினால், நாமே வென்றதாகக் களிப்படைகிறோம். போராளிகள் மரணித்தால் மெளனமான சோகத்தில் சோர்ந்து போகிறோம். பிபிசி, ஐபிசி, வெறிட்டாஸ், விடாமல் கேட்கிறோம். விடிவு வராதா என்ற ஏக்கத்தில் பத்திரிகைகளைத் துருவித் துருவி ஆராய்கிறோம்.

எல்லாம் சரி. அதற்கு மேல் என்ன செய்துவிட்டோம். ? எங்கள் பங்கிற்கு, ஒரு துரும்பையாவது எடுத்துப் போட்டோமா ? மொத்தத்தில், அனுதாபம் நிறைய இருக்கிறது. ஆயினும், போராட்ட விளைவுகள் நம்மை தனிப்பட்ட முறையில் எவ்விதத்திலும் பாதிக்கக் கூடாதென்ற மனநிலையும் நிறைய இருக்கிறது.

இது நியாயமா என்று கேட்கிற தலைப்பில் ஒரு விவாதம் எங்கள் வகுப்பில் நடந்தது. பார்வையாளர் மனப்பான்மை போதும், பங்காளராக மாறுவோம் என உரத்த குரலில் பேசிய ஒரு நண்பனிடம், முதலில் நீ தயாரா என்று கூட்டத்தில் ஒருவன் கேட்கப் போக, அடுத்த சில நாட்களில் யாருக்கும் தெரியாமல் அவன் காணாமல் போனான்.

வன்னியில் பல இரானுவத் தளங்கள் விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதலில் நின்று பிடிக்க முடியாமல் அடுக்கடுக்காக வீழ்ந்த போது இந்த மண்ணில் உருவெடுத்த உணர்ச்சிமயமான சூழ்நிலையில் வீட்டுக்குச் சொல்லாமல் புறப்பட்ட சிலரோடு அவனும் சேர்ந்து கொண்டான். சொல்லும் செயலும் ஒன்றாக இருந்த அவனது நேர்மை என்னை வசீகரித்தது,

அவனுக்குச் சாப்பிட வழியில்லை, படிப்பும் ஏறவில்லை அதுதான் போய்விட்டான் என்று இரண்டொரு நண்பர்கள் தங்கள் இயலாமையை மறைக்க காரணம் சொன்னார்கள். பெற்றதாய் தகப்பனை எடுத்தெறிந்து விட்டு எங்களால் ஓட முடியாது, பெற்று வளர்த்த கடமை செய்ய வேண்டும் என்று சொன்னவர்களின் பக்கம் நானும் மறைந்து கொண்டு நின்றேன்.

யாருக்கு குடும்பங்கள் இல்லை ? யாருக்குக் கடமைகள் இல்லை ? இதையே சொல்லிச் சொல்லி எம்மைச் சுற்றி நடக்கும் அவலங்களை கண்டும் காணாமல் ஒதுங்கி இருப்பது முறையா ? இருபதாண்டுகளாக சொல்லொனாத அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் சீர்குலையாமல் வளர்ந்து நிற்கும் சுதந்திரப் போராட்டத்தில் சிறிதேனும் பங்கெடுக்காமல் சும்மா கைகட்டிப் பார்த்துக் கொண்டிருப்பது சரியா ? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

யோசித்தேன். நாலைந்து நாட்களாக யோசித்தேன். நீந்துவதற்கு விருப்பம் இருந்தது. இறங்கப் பயம். இறங்கப் பயந்தால் ஒரு நாளும் நீந்த முடியாது என்றான் நண்பன். என் எதிர்காலத்தை பெரிதாக எதிர்பார்த்திருக்கும் அம்மா அப்பாவை அண்ணா அக்காமாரை கவலைக்குள்ளாக்கி விட்டு போவதொன்றே என் தயக்கத்திற்குக் காரணம்.

சிறுபான்மை மக்கள் மீது அரச அடக்குமுறை எத்தனையோ நாடுகளில் இருந்தாலும், தன் சொந்த மக்களின் மேலேயே விமானக் குண்டுமாரி பொழிகிற நாடு வேறு எங்காவது இருக்கிறதா ? பத்து லட்சம் மக்களை அகதிகளாக்கி அந்நிய நாடுகளில் அலைய வைத்த பின்னும் இவர்களின் இனவெறி அடங்கிற்றா ?

நானும் நண்பர்களோடு சேர்ந்து கொண்டேன்!

விடுதலைப் போராட்டத்திற்கு எங்களை விட சற்று வயது கூட. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு தனித்த துவக்கு, நாலைந்து பேர் எனத் தொடங்கிய இயக்கம், இன்று ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான அரச படையினரை, அவர்களின் அளவற்ற ஆயுத பலத்தை, நேருக்கு நேர் சந்தித்து அடித்து விரட்டக்கூடிய மாபெரும் சக்தியாக வளர்ந்திருக்கிறது.

வசதியான சூழ்நிலையில் வளர்வது ஒன்றும் பெரிய விடயமல்ல. கடுமையான எதிர்ப்பும் பலத்த கண்காணிப்புமான நிலைகளினூடே இவர்கள் எப்படி வளர முடிந்தது என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு.

ஒரு மாபெரும் மனிதனின் அசைக்க முடியாத தலைமையில், தன்னலமற்ற தியாகத்தில், யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடாத லட்சியத்தில், மாற்றுக்குறையாத கட்டுப்பாட்டில், ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் சிந்திய இரத்தத்தில் – வளர்ந்த இயக்கம் இது.

இவர்களால் பசி கிடக்க முடிகிறது, விழித்திருக்க முடிகிறது, சுகம் பழகி விடாமலிருக்க பாய்தலையனையின்றிப் படுக்க முடிகிறது, வெறுங்காலோடு கல்லிலும் முள்ளிலும் நடந்து காலைப் பழக்கிக் கொள்ளவும், நாட்கணக்கில் குளிக்காமல் காடுகளில் அலையவும் முடிகிறது. அனைத்துக்கும் மேலாக – இளமைக்கனவுகைளை ஓரம் கட்டிவிட்டு உயிரை எந்நேரத்திலும் கொடுக்க சித்தமாய் இருக்க முடிகிறது.

உடற்பசிகளை வெல்ல முடிந்த இவர்களுக்குள்ளே உயிர்ப்பசியாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் சுதந்திரத்தீயை வந்த சில நாட்களிலேயே நான் கண்டு பிரமிப்புக் கொண்டேன்.

என்னை உலுக்கி எடுத்த சம்பவமொன்று. தாக்குதலொன்றுக்குத் தயாராகும் நேரம். பொதுவாக தாக்குதலுக்கு முன்னர் நிறைய ஆயத்தங்கள் செய்ய வேண்டியிருக்கும். இறக்க நேர்கிற போராளிகளை அடக்கம் பண்ணுகிற சவப்பெட்டிகள் தயார் செய்வதும் இதில் அடக்கம். பெண் போராளிகள் இருவர் பெட்டிகள் அடுக்கி வைத்திருந்த ஒரு கொட்டிலில் தலைக்குக் கொண்டை போட்டுக் கொண்டே ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண் சொன்னாள்:

‘இது என்னுடைய பெட்டி ஆரும் தொடக்கூடாது! ‘

வேடிக்கையாகத்தான் சொன்னாள். அதில் உள்ளீடாயிருந்த அந்தப் பெண்ணின் தியாக உணர்வு என் நெஞ்சை உறையச் செய்தது. உரோமக் கால்கள் சிலிர்த்தெழுந்தன. பட்டு இறக்கை முளைத்துப் பறக்கத் துடிக்கிற வயதில் அவள் போருக்குப் போனாள். நான்கு நாட்களின் பின் அந்தப் பெட்டி அவளுக்கே சாஸ்வதமாயிற்று.

பேருக்கும் பதவிக்கும் பணத்திற்கும் புகழுக்கும் அலைகிற இந்த நாட்டில் யாரோ பெற்ற இந்தப் பிள்ளைகள் பேரும் சொல்லாமல் பதவியும் கேட்காமல் புகழும் பார்க்காமல் தங்கள் உயிரைக் கொடுக்கிறார்கள். தானாடா விட்டாலும் தன் சதையாடும் உணர்வினால், பத்திரிகைகளில் வெறும் இலக்கங்களாக மட்டுமே தோன்றி மறைகிற இந்த மாவீரர்களின் தன்னலமற்ற தியாகத்தை நேரில் கண்டேன்.

தன்னலம் தவறில்லை. ஆனால் தன்னலம் மட்டுந்தான் தவறு. இந்த வீரர்களின் தியாகம் பெற்றுத் தரப் போகிற சுதந்திரத்தை அனுபவிக்கப் போகும் மக்கள் கூட்டம் – அச் சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு தங்களை தகுதியுள்ளவர்களாகச் செய்து கொள்ள வேண்டும் என்பதே என் வேண்டுதல்.

காடுகளில் உறையும் போராளிகளை பராமரிப்பதும் பாதுகாப்பதும் பயிற்சியளிப்பதும் ஆயுத தளபாடங்கள் வழங்குவதும் இலகுவான காரியங்களல்ல. உணவுப் பொருட்களைக் கொண்டு வருவது கூட ரகசியமாகவே செய்யப்பட வேண்டும். நீரிலும் நிலத்திலும் ஆகாயத்திலும் இரைக்காக உன்னிப்பாய் வட்டமிடும் கழுகுகளின் பார்வையிலிருந்து தப்ப வேண்டும்.

இரானுவத்தினருக்கோ அப்படியில்லை. தளபாட வசதிகளும், அது அதற்கென்று தனியாகத் திணைக்களங்களும் அமைப்புகளும் ஆயிரக்கணக்கில் ஆள்அம்பு சேனைகளும், உலக நாடுகளின் அனுசரனையும் இருக்கின்றன. பகிரங்கமாக உலகெங்கும் கையேந்தித் திரிந்து எல்லா வசதிகளையும் பெற்றுக் கொள்ள அரசினால் முடியும். பலதரப்பட்ட நெருக்கடிகளுக்குள்ளும் இயக்கத்தை உடையவிடாமல் பராமரித்துக் கொண்டு, இரானுவத்தினருக்கும் தண்ணீர் காட்ட இந்த விடுதலை வீரர்களால் முடிகிறது. இது எப்படிச் சாத்தியமாகிறது, இதில் உள்ள நடைமுறைக் கஷ்டங்கள் என்ன என்று அறிந்து கொள்ள நாங்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

வன்னியில் பல முகாம்களை வீழ்த்தியவர்கள் ஆனையிறவை ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று எங்கள் ஊரில் வெறும் கதை பேச நாம் பின்னிற்பதில்லை. சொல்வது எளிது. செய்வது! இவர்கள் படுகிற கஷ்டம் பக்கத்திலிருந்து பார்த்தால்தான் தெரியும். உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி – யாரிடம் இவர்கள் உதவி கேட்டுப் போவார்கள் ? எந்த மக்களுக்காகப் போராடுகிறார்களோ அவர்களிடந்தான் உரிமையோடு எதையும் கேட்கமுடியும். நாமோ – வெறும் கையால் முழம் போடப் பார்க்கிறோம்.

அரசு எதையும் தானாக தந்துவிடப் போவதில்லை. ஒருவர் கிள்ளிக் கொடுப்பதாகச் சொல்வார். மற்றவர் குழப்புவார். காலங்காலமாக நடந்து கொண்டிருக்கும் சித்து விளையாட்டு இது. அரசியல்வாதிகளை விடுங்கள் – எங்கள் ஊர் செக் பொயின்ற்களில் நிற்கும் படிப்பறிவற்ற இரானுவச் சிப்பாய் கூட எங்களை அடக்கி அடக்கி ருசி கண்டு விட்டான்.

ஐம்பது வருட காலமாக அஹிம்சை வழியில் முயன்று பார்த்துத் தோற்றுப் போய் விட்டோம். இளைய சமூகம் ஆயுதத்தைத் தூக்கி இருபத்தைந்து வருடங்களாகி விட்டன. ஆயுதம் தூக்கியதற்கான காரணிகள் சூழ்நிலைகள் முற்றாக இல்லாதொழியும் வரை இந்தப் போராட்டம் நில்லாது.

அண்ணா, என் இதய ஆழத்தில் வளர்ந்து கொண்டே வந்த சுதந்திர வேட்கையை தொடர்ந்தும் மூடி வைக்க முடியாமல் போய்விட்டது. என் பெற்றோர் சகோதரங்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் எனத் தெரிந்திருந்தும் கிளம்பிவிட்டேன். வந்த ஆரம்ப நாட்களில் அம்மாவின் அன்பும் அப்பாவின் ஆறுதலும் அக்காமாரின் அரவணைப்பும் மாமா என் மேல் வைத்திருந்த நம்பிக்கையும் என்னை வெகுவாக அலைக்கழித்துவிட்டது. கேள்விப்பட்டவுடன் நீங்கள் கனடாவிலிருந்து பறந்து வருவீர்கள் என்பதும் என்னை உறுத்திக் கொண்டேயிருந்தது.

பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கும் அன்பு காட்டி அரவணைத்த சகோதரங்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் ஓடிவந்து விட்டதை எண்ணியெண்ணிக் குறுகிப் போனேன். ஆனாலும், அடிமைத் தளையிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பது ஒன்றையே தங்கள் வாழ்வின் லட்சியமாகக் கொண்ட இந்த சுத்த வீரர்களின் காற்று என்மேல் படப்பட என் குழப்பங்கள் குறைந்து போயிற்று.

இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதும்போது என் மனதில் சஞ்சலமில்லை. என் தாய்மண்ணின் சுதந்திரத்திற்காக நான் செய்கிற கடமை என் தாய் தந்தையருக்கும் சகோதரங்களுக்கும் செய்கிற கடமையாக உணர்கிறேன். அந்த மனநிறைவு உங்கள் எல்லோரையும் பிரிந்து நிற்கும் துக்கத்தை ஈடு செய்கிறது.

அண்ணா, இதுநாள் வரை கிணற்றுநீராக இருந்தவன் இனி அருவிநீராகப் பாய்ந்து ஓடுவேன். எங்கள் சமுதாயம் முழுமைக்கும் பயன்படுவேன். என்னை எண்ணிக் கவலைப்படாதீர்கள். எங்கள் குடும்பம் என்னால் பெருமையடையும்படியாகவே நான் நடந்து கொள்வேன்.

புத்தொளி வீசி புலரப் போகும் சுதந்திரநாள் வெகு தூரத்திலில்லை. அந்த விடியலின் போது என் அன்புக்குரியவர்களை காண ஓடோடி வருவேன். அப்போது எங்கள் கால்களில் அடிமை விலங்கு இருக்காது!

அன்புத்தம்பி

செ. ஜெயச்சந்திரன்

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்