விடியலை நேரம் உணர்த்தினாலும் ….

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

நளாயினி தாமரைச்செல்வன்.


விடியலை நேரம் உணர்த்தினாலும்
பனிதூறும் காலத்தில்
சூரியன் வருவதில்லை.

வழமையான உடல் நிறையை விட
ஆறு ஏழு கிலோவால்
என் நிறை உடை வடிவில்
என்னைத் துரத்தும்.
தொட்டிலுக்குள் பார்த்தால்
எட்டு மாத செல்ல மகள்
கையால் முகம் போர்த்து
பஞ்சுக்குஞ்சாய் துயிலும் அழகு.

வெளியில் இறங்கும் போது
நற நற என என் காலடியில் உடையும்
பனிக்கண்ணாடித்துண்டங்கள் போல் என் மனசு .

கால்கள் நடுவீதியில் நடக்கும் போது
பூப்பூவாய் தேங்காய்ப்பூ பனித் தூவல்கள்.
தொட்டுப்பார்த்தால்
வாய் நீர் வடித்துக்கொண்டே
தள்ளுவண்டிக்குள் உறங்கும்
குழந்தையின் கன்னத்தின் மென்மை.

சிரித்து நின்ற மரங்கள் எல்லாம்
என் உணர்வைப்போல்
மரத்துத்தான் கிடக்கிறது .
விழியை மறைக்கும்
உப்பு நீரைப்போல்
மரங்களின் கிளை இலைகளை
மறைக்கும் பனித்துளிகள் .

யாரும் ஆறதல் கூறிவிட்டால்
உடைந்து விழுந்து கன்னக்கதுப்பை
ஈரமாக்க துடிக்கும்
உவர்ப்பு நீரைப்போல்
மரக்கிளைகளிலும்
கட்டிட கூரைகளிலும் தொங்கும்
பனிக்கண்டாடிக் கூர்முனைகள்.

ஊசியாய் குளிர் என்னைத்தாக்க
போரில் கண்முன்னே
தாயை இழந்த
குழந்தையின் படபடப்புப்போல்
என் உடல் மெல்ல நடுங்கும்.

மெல்ல அணைத்து
ஓசையின்றி முத்தமிட்டு
காப்பக காறியிடம்
குழந்தையை கொடுத்துவிட்டு
உணவு விடுதியில்
வேலையில் மூழ்கிற போது
நெருப்பு ,கொதி எண்ணெய் எல்லாமே
என் உடல் மேல் பட்ட வேதனை.

இறைச்சி மீன் வெட்டும்
கூரிய கத்தி கொண்டு
என் உடலை யாரோ
அறுப்பது போன்ற உணர்வு
பீறும் இரத்தமாய்
என் உணர்வுகள் எல்லாம்
என்னை கொன்று தின்னும்.
ரணப்படும் என் மனசு.

சொல்லமுடியாத துயரம்
என்னை அப்பும்.
ஓ என் செல்ல மகள்
என்னைத்தேடுவாளோ ?

உடலில் உள்ள
உரோமம் எல்லாம் சேர்ந்து
ஒருவித சிலிர்ப்பைத்தந்து
விழிவழியே உப்பு நீரை வரவழைக்கும்.

—-
nalayiny@hotmail.com

Series Navigation

நளாயினி தாமரைச்செல்வன்.

நளாயினி தாமரைச்செல்வன்.