லக்கிலுக்
முருகன் வசித்தது விசாலாட்சி தோட்டம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் இருந்த ஒரு பிளாக்கில். விசாலாட்சி தோட்டத்தை கொஞ்சம் டீசண்டாக சொல்லுவது என்றால் சென்னை-600028 என்று சொல்லலாம். கொஞ்சம் கலீஜாக சொல்லுவதென்றால் சுண்ணாம்புக் கால்வாய் என்றும் சொல்லலாம். சுண்ணாம்புக் கால்வாய் என்று அழைக்கப்படும் பக்கிங்காம் கால்வாய் முருகனின் வீட்டுக்கு பின்னால் தான் ஓடுகிறது.
21 வயதான முருகன் பகவான் கிருஷ்ணனின் நிறம் கொண்டவன். நாகேஷ் உடல்வாகு. முன்தலையில் இந்த வயதிலேயே லைட்டாக சொட்டை. முகம் முழுக்க முகப்பரு. தொளதொளவென்று பிரபுதேவா ஸ்டைலில் பேக்கீஸ் பேண்ட். 42 செ.மீ. சைஸுக்கு சத்யா பஜாரில் கலர் கலராக சட்டை வாங்கி போடுவான். மொத்தத்தில் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் இருப்பான்.
முருகன் வேலை பார்த்தது ஒரு சின்ன ஸ்டுடியோவில். ஸ்டுடியோ என்றால் போட்டோ ஸ்டுடியோ அல்ல. ஸ்க்ரீன் ப்ரிண்டிங் தொழிலுக்கு உபயோகப்படுத்தக் கூடிய நெகட்டிவ், பாசிட்டிவ், போட்டோ பிரிண்ட் எடுக்கும் குட்டி ஸ்டுடியோ. அத்தொழிலுக்கு தேவைப்படும் லோகோக்கள் டிசைன் செய்வது, “கலைஞரே” “அம்மாவே” என்று ஆரம்பிக்கும் அரசியல் பத்திரிகை விளம்பரங்களை லே-அவுட் செய்யும் ஸ்டுடியோவாகவும் அது இருந்தது. தன்னை வெளியில் கேமிராமேன் என்று முருகன் அறிமுகப்படுத்திக் கொள்ளுவான். ஆனாலும் அவன் பயன்படுத்துவது கேமிரா அல்ல, என்லார்ஜர். எப்போதும் டார்க்ரூம் வேலை என்பதால் நண்பர்கள் வட்டத்தில் அவனுக்கு பெயர் கருப்பு ஆந்தை.
நீல நிற ஹவாய் செருப்பு போட்டு வரும் முருகன் அன்று கட் ஷூ போட்டு வந்தான். முகத்துக்கு பவுடர் அடித்திருந்தான். விசாலாட்சி தோட்டத்திலிருந்து சைக்கிள் மிதித்து எல்டாம்ஸ் ரோடு வரை வந்திருந்ததால் வியர்வையில் பவுடர் திட்டு திட்டாக ஆகி ஏற்கனவே கொடூரமாக இருந்த அவன் முகத்தை இன்னமும் கோரமாக்கி காட்டியது.
“இன்னா மூஞ்சி இல்லாதவனே? மேக்கப்பு எல்லாம் தூள் பறக்குது?” என்றேன். அவனை மூஞ்சி இல்லாதவன் என்று தான் கூப்பிடுவேன். இன்னொரு அலுவலக நண்பனுக்கு நெற்றியில் இருந்து டைரக்டாகவே வடிவம் இல்லாமல் மூக்கு அமைந்திருந்ததால் அவன் மூக்கில்லாதவன்.
“எங்க பிளாக்குக்கு பக்கத்து பிளாக்குக்கு புதுசா ஒரு பட்லி வந்துருக்குது கிச்சா. லவ் பண்ண ஆரம்பிச்சேட்டேன்” என்றான். அதிர்ச்சியாக இருந்தது. இதென்ன கொடுமை? ஒரு பட்லியை பார்த்ததும் காதலா? இவனுக்கெல்லாம் காதல் கத்தரிக்காய் மாதிரி ஆயிடிச்சி.
“மச்சான் உன் மூஞ்சிய கண்ணாடில்லே பார்த்ததே இல்லியாடா? உனக்கெதுக்குடா இந்த கருமம் எல்லாம்?”
“டேய் பல்லி! உன் லெவலுக்கே பிகருங்க மாட்டுறப்போ, எனக்கு மாட்டாதா?” என்றான். உண்மையிலேயே என் உடல்வாகு அப்போது பல்லி போல தான் இருந்தது. ஆனாலும் கொஞ்சம் கலராகவும், டீசண்டாகவும் இருந்ததால் பிகர்களை கொஞ்சம் ஈஸியாக டீல் செய்ய முடிந்தது. அந்த அலுவலகத்திலேயே அரைகுறையாகவாவது ஆங்கிலம் பேசுபவன் நான் மட்டுமே என்பதால் பாசிட்டிவ் போடவரும் ஸ்க்ரீன் பிரிண்டிங் பிகர்கள் மத்தியில் நான் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருந்தேன்.
ஓனர் வரும் நேரமாகி விட்டதால் நான் கம்ப்யூட்டரை பூட் செய்துவிட்டு சபீனா கவர் போலவே சலீனாவுக்கு டூப்ளிகேட் டிசைன் செய்ய ஆரம்பித்தேன். முருகன் டார்க்ரூமுக்குள் தஞ்சமடைந்தான்.
மாலை 6 மணிக்கு கம்ப்யூட்டர் ரூமுக்குள் (எஸ்டிடி பூத் மாதிரி இருக்கும்) வந்த முருகன் பீர் அடிக்க கூப்பிட்டான் அவனுடைய செலவில். பொதுவாக சம்பளம் வாங்கிய முதல்வாரம் மட்டும் தினசரி பீர் அடிப்போம். மற்ற நாட்களில் நல்ல பிள்ளையாக கிளம்பி விடுவோம்.
நான், சுரேஷ், சேகர், பிரபு முருகனோடு வேலுமிலிட்டரி ஒயின்ஸுக்கு போனோம். பிரபு சைட் டிஷ் மட்டுமே சாப்பிடுவான். சுரேஷும், சேகரும் குவார்ட்டர் ரம் வாங்கி ஷேர் செய்து சாப்பிடுவார்கள். நானும், முருகனும் ஆளுக்கு ஒரு ஹேவார்ட்ஸ் 5000.
பாதி குடித்ததுமே முருகனுக்கு போதை ஏறத்தொடங்கி விட்டது. கண்கள் அவனுக்கு எப்போதுமே சிவந்திருக்கும். “ஊர்லே இருந்து வந்துருக்கா மஞ்சு. சின்ன வயசுலே பார்த்தது. பத்து வருஷம் கழிச்சி பாக்குறேன்” என்றான்.
“என்னடா உளர்றே? தலையும் புரியல, வாலும் புரியல”
“நாந்தான் காலைல சொன்னனேடா. ஒரு பிகரை லவ் பண்றேன்னு”
“ம்ம்ம்… சொல்லித்தொலை. உம்மூஞ்சிக்கு லவ்வு ஒரு கேடு!”
“மச்சான். உங்க ஹெல்ப்புல்லாம் வேணுண்டா. அவளை எப்படியாவது கல்யாணம் கட்டிக்கணும்”
தண்ணி வாங்கிக் கொடுத்து ஹெல்ப் கேட்கிறான். வேறுவழியில்லை. ஹெல்ப்புகிறோம் என்று சொல்லி முருகனை சாந்தப் படுத்தினோம். இன்று எல்டாம்ஸ் ரோட்டில் மியூசிக் டுடே இருக்கும் இடத்துக்கு எதிராக அப்போதெல்லாம் நடைவண்டியில் சுண்டல் விற்கும். எல்லோருக்கும் தாராளமாக செலவு செய்து முட்டை பஜ்ஜி, சுண்டல் வாங்கிக் கொடுத்து திருப்தியாக அனுப்பி வைத்தான் முருகன்.
அதன்பின் தினமும் மஞ்சு புராணம் தான் முருகனுக்கு.
“45Bயிலே கிண்டிக்கு எக்ஸ்போர்ட் வேலைக்கு போறா”
“இன்னைக்கு மஞ்சப்புடவை கட்டிக்கிட்டு சூப்பரா இருந்தா”
“முண்டகண்ணியம்மன் கோயிலுக்கு வாராவாரம் வெள்ளிக்கிழமை போறா”
“பயமாயிருக்குடா அவளுக்கு ரெண்டு அண்ணனுங்கோ. ஏற்கனவே மயிலாப்பூர் ஸ்டேஷன்லே அவனுங்க மேலே கேசிருக்கு”
“எங்க ஊட்டாண்ட இருந்து லஸ் வரைக்கும் மஞ்சுவை பாலோ பண்ணிக்கினே போனேன்”
முருகன் சொல்வது அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளப்படாமல் காமெடியாகவே இருந்தது எங்களுக்கு. முருகன் சொல்வதை வைத்து பார்த்தால் மஞ்சு கொஞ்சம் சிகப்பாக இருந்திருக்க வேண்டும். கருப்பு நிற காம்ப்ளக்ஸில் அவதிப் பட்டுக் கொண்டிருந்த முருகனுக்கு மஞ்சுவின் சிகப்பு மையலை தந்திருக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். எந்த விஷயமாக இருந்தாலும் தடாலடியாக பேசும் முருகனுக்கு காதலை சொல்வதில் மட்டும் இருந்த தயக்கம் எதற்கு என்று புரியவில்லை.
எப்படியோ சில நாட்களாக முருகனுக்கு தைரியம் கொடுத்து தயார் செய்து வைத்திருந்தோம். மயிலாப்பூர் அறுபத்தி மூவர் திருவிழாவுக்கு தோழிகளோடு வரப்போகும் மஞ்சுவிடம் நம்ம ஹீரோ பல்லாயிரம் பேருக்கு நடுவில் காதலை சொல்லிவிட வேண்டும் என்பது எங்கள் ஏற்பாடு. அதே சமயம் மஞ்சுவின் அண்ணன்களின் கழுகுப்பார்வையில் இருந்து தப்பித்து அவளை அருகில் நெருங்க முருகனுக்கு கிடைக்கும் அரிய சந்தர்ப்பம் அதுதான்.
நாள் நெருங்க நெருங்க முருகனுக்கு டென்ஷனாக இருந்ததோ என்னவோ, எங்களுக்கு கொஞ்சம் டென்ஷனாகவே இருந்தது. திருவிழாக் கூட்டத்தில் பொன்னம்பலம், கனல்கண்ணன் ரேஞ்சுக்கு சில பேர் அரிவாளோடு எங்களை துரத்திக் கொண்டு வருவது போன்ற தீக்கனவுகள் எனக்கு வர ஆரம்பித்தது. எப்படியாவது இந்த லவ் மேட்டர் நல்லபடியாக முடிந்தால் சரி என்று நினைத்துக் கொண்டேன்.
அந்த நாளும் வந்தது. காலையில் வழக்கம்போல முருகன் ஆபிஸுக்கு வந்திருந்தான். அவன் தெளிவாகத்தான் இருந்தான். நாங்கள் தான் கொஞ்சம் டல்லாக இருந்தோம். அறுபத்து மூவர் திருவிழா ஸ்பெஷலாக எங்கள் அலுவலகத்தில் மாலை ரெண்டு மணி நேரம் பர்மிஷன் எப்போதும் கிடைக்கும்.
என் வண்டியை எதிரிலிருந்த முருகர் கோயிலுக்குள் விட்டு விட்டு கால்நடையாகவே முருகன் கோஷ்டியோடு கிளம்பினேன். வழியெல்லாம் மோர், ரஸ்னா இலவசமாக லட்சத்தில் ஒருவன் ரஜினி ரசிகர்மன்றம், நாட்டாமை சரத்குமார் ரசிகர் மன்றம் போன்றவர்களால் வழங்கப்பட்டு கொண்டிருந்தது. அதிமுக, திமுகவும் தலா ஒரு பூத் போட்டு பொங்கல், சுண்டல் வழங்கிக் கொண்டிருந்தார்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் கபாலீஸ்வரர் கோயிலை நோக்கி தேனீக்கள் போல மொய்க்கத் தொடங்கியிருந்தார்கள்.
தெற்கு மற்றும் மேற்கு மாடவீதிகள் இணையும் ஜங்ஷனில் ஒரு கடைவாசலில் இருந்த திண்ணைப் போன்ற ஒரு அமைப்பின் மீது ஏறி நின்றுக் கொண்டோம். டென்ஷனாக இருந்ததால் பெரிய மாணிக்சந்த் ஒரு பாக்கெட்டை அப்படியே வாயில் கொட்டிக் கொண்டு அவ்வப்போது புளிச், புளிச்சென்று துப்பிக் கொண்டிருந்தேன். முருகனோ எந்த சலனமும் இல்லாமல் கூட்டத்தை கவனிக்க ஆரம்பித்தான்.
சுமார் ஏழரை மணியளவில் முருகனின் தேவதை வந்துகொண்டிருந்தாள். பதினெட்டு, பத்தொன்பது வயதிருக்கலாம். கூட நான்கைந்து எக்ஸ்போர்ட் பிகர்ஸ். முருகன் வர்ணித்த அளவுக்கெல்லாம் சூப்பராக இல்லாவிட்டாலும் முருகனுக்கு அவள் கிடைத்தால் பம்பர் ப்ரைஸ் தான் என்று நினைத்துக் கொண்டேன். முருகன் அவளை நோக்கி கூட்டத்தில் முன்னேற ஆரம்பித்தான். கொஞ்சம் இடைவெளி விட்டு திசைக்கொருவராய் நாங்கள் நான்கு பேரும் முருகனுக்கு பாடிகார்டாக அவனோடவே நகர்ந்தோம்.
மஞ்சுவை முருகன் நெருங்க, நெருங்க திக்.. திக்..
மஞ்சுவை மிக அருகில் பார்த்த முருகன்,
“ஹே மஞ்சு எப்படியிருக்க?” காதலை சொல்லச் சென்றவன் மாதிரியாக இல்லாமல் மிக இயல்பாக பேசினான்.
“நான் நல்லா இருக்கன். நீ கூடத்தான் இப்போ ஸ்டைலா இருக்க”
“அப்போன்னா நாம கல்யாணம் கட்டிக்கலாமா?”
“ம்.. கட்டிக்கலாம்!”
முருகனின் காதலை சொல்லும்போது “லாலல்ல்லா, லாலல்ல்லா” என்று எஸ்.ஏ. ராஜ்குமார் மியூசிக் மாதிரி கோரஸ் கேட்கும். பாரதிராஜாவின் வெள்ளுடை தேவதைகள் சுற்றி வந்து நாட்டியம் ஆடுவார்கள். மஞ்சுவின் அண்ணன்கள் எங்களை துரத்தி துரத்தி அடிப்பார்கள் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். இவ்வளவு நாள் பில்டப் கொடுக்கப்பட்ட ஒரு சம்பவம் நல்லவிதமாக முடிந்தாலும் “சப்”பென்று 25 நொடிகளில் முடிந்துவிட்டதே என்று நொந்துபோய் விட்டேன். “ஐ லவ் யூ” கூட சொல்லாமல் பையன் டைரக்டா மேட்டரை முடிச்சிட்டானே என்று எனக்கு வருத்தம் + அதிர்ச்சி.
அதைவிட பெரிய அதிர்ச்சி அடுத்தவாரமே கிடைத்தது. முருகன் மஞ்சுவோடு எங்கேயோ ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டான். மஞ்சுவின் அண்ணன்கள் முருகனை மட்டுமில்லாமல் முருகனின் நண்பர்களையும் வெட்டுவதற்கு தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றொரு செய்தி கிடைத்தது. தாவு தீர்ந்துப் போய் நான்கைந்து நாளைக்கு நாங்கள் யாருமே ஆபிஸ் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.
சிலமாதங்களுக்கு பின் மஞ்சுவின் குடும்பம் முருகனோடு எப்படியோ ராசியாகிவிட்டது. முருகனுக்கு இப்போது இரண்டு குழந்தைகள். பல்வேறு காரணங்களால் நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மயிலாப்பூர் பக்கம் போகும்போது தான் முருகனின் நினைவு வரும். ஒருமுறை அவன் வீட்டுக்கு சென்று விசாரித்தபோது மஞ்சுவும், குழந்தைகளும் மட்டும் இருந்தார்கள். முருகன் இப்போது சொந்த பிஸினஸ் செய்கிறானாம். பணத்துக்கு பிரச்சினை இல்லையாம். என்ன தினமும் குடி. அதுமட்டும் தான் பிரச்சினை என்றார் மஞ்சு.
எங்க ஆளுங்க இப்படித்தான், டவுசர் அவிழ்க்கும் வேகத்தில் காதலை சொல்லிவிடுவார்கள். அதே டவுசரை திரும்ப மாட்டும் வேகத்துக்குள் கல்யாணம் பண்ணி, பிள்ளையும் பெற்றுவிடுவார்கள்.
luckylook32@gmail.com
- மும்பைத் தமிழர்களின் அரசியல்…
- படித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த
- வெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்)
- உயிர்த்தலம் – ஆபிதீன் – சிறுகதைகள் தொகுப்பு
- பாவண்ணன் எழுதிய “நதியின் கரையில்”
- வாஸந்தி கட்டுரைகள்
- மொழி
- அவளுக்கான பூக்கள்/அவை கால்தடங்கள் மட்டுமன்று
- கனவு வெளியேறும் தருணம்
- தைவான் நாடோடிக் கதைகள் (3)
- பெண்களின் பாடல் ஆக்கத்திறனையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒப்பாரிப்பாடல்கள்
- கணையாழி விழா 2007 (18.11.2007)
- இன்றும் ஜீவித்திருக்கும் அந்த நாற்பதுக்கள்
- கதை சொல்லுதல் என்னும் உத்தி
- அடையாளங்களை விட்டுச்செல்லுதல்
- ‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 2 -தி.ஜானகிராமன்
- ஆழியாளின் “துவிதம்” – மதிப்பீடு
- பூ ஒன்று (இரண்டு) புயலானது – இரண்டு
- நேற்றிருந்தோம்
- தமிழ் – தமிழர் – தேசப்பற்று: சில எண்ணங்கள்:
- ஒரு ஊர் குருவி சிறைப்பறவை ஆகிறது
- ஒட்டுப் பீடியில் எரியும் உலகம்
- பஞ்ச் டயலாக்
- கடிதம்
- இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் முப்பத்தொன்பதாம் கருத்தரங்கம்
- லா.ச.ரா.
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes) (கட்டுரை: 6)
- பாரதி
- அக்கினிப் பூக்கள் … !-3
- தாகூரின் கீதங்கள் – 6 உனக்கது வேடிக்கை !
- தாய் மண்
- அடுத்த முதல்வர்? பதற்றத்தில் ஸ்டாலின்
- மிஸ்கா, என்னைத்தொடர்ந்து வரும்
- ஜெகத் ஜால ஜப்பான் – 3. கொன்னிச்சிவா
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 10 – புரையோடிப் போன காஷ்மீரம்
- ரசூலை மீட்க இனியொரு விதி உண்டோ…?
- விசாலாட்சி தோட்டம் முருகனின் காதல் கதை!
- கடமை
- அது ஒரு விழாக்காலம்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 1
- மாத்தா ஹரி அத்தியாயம் -39