வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி ஜெயராமன் எழுதிய கடிதம்

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

பி.கே. சிவகுமார்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி ஜெயராமன் எழுதிய கடிதத்தைப் படித்தேன். வருவதை எல்லாம் அப்படியே பிரசுரித்துவிடுகிற வழக்கத்தில் ஜெயராமன் போன்றவர்களின் அபத்தங்களையும் பிரசுரிக்கிற வழக்கத்தை திண்ணை ஆசிரியர் குழு என்று நிறுத்தப் போகிறதோ, தெரியவில்லை. வாஸந்தி மட்டுமல்ல யாருடைய எழுத்தும் விமர்சனத்திற்கு உட்பட்டதுதான். ஆனால், எழுத்துலகில் அட்ரஸ் இல்லாத ஜெயராமன் போன்ற காளான்கள், தடம்பதித்த எழுத்தாளர்கள் மீது மலினமானத் தாக்குதல் நடத்துவதை திண்ணையைத் தவிர வேறெந்தப் பத்திரிகையும் அனுமதிப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால், விமர்சிப்பவர்களின் தராதரம் என்ன என்பதையும் அறிந்தபின்பு திண்ணை இப்படிப்பட்ட கடிதங்களைப் பிரசுரித்தால் நன்றாக இருக்கும். எந்தப் புகழ்பெற்ற எழுத்தாளரும் தனக்குரிய புகழையோ இடத்தையோ தன்னுடைய சாதனைகளாலேயே அடைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எழுத்தை விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், ஜெயராமன் போன்றவர்கள் எழுதியிருக்கிற அபத்தமான வரிகளைப் பிரசுரிப்பதற்கு முன்பு, இப்படிப்பட்ட லாஜிக்கில்லாத வெறுப்பின் அடிப்படையிலான தாக்குதலை வாஸந்தி போன்ற தடம் பதித்த எழுத்தாளர் மீது நடத்த திண்ணை இடம் கொடுக்கலாமா என்று எழுத்தாளரான திண்ணையின் ஆசிரியர் கோபால் ராஜாராம் யோசித்திருக்க வேண்டும். எனக்கு என்னவோ, மலர்மன்னன், ஜெயராமன் ஆகியோரின் எழுத்துகள் வாஸந்தி திண்ணையில் எழுதுவதை நிறுத்திவிட வேண்டும் என்கிற மறைமுகத் திட்டத்தைக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்குப் பலமாக இருக்கிறது. அதுதான் திண்ணையின் நோக்கமும் என்றால், பேஷ் பேஷ் நடக்கட்டும். வாழ்த்துகள்.

– பி.கே. சிவகுமார்


pksivakumar@yahoo.com

(பி கே சிவகுமார் குறிப்பிட்டிருக்கும் ஜயராமனின் கடிதத்தில் சில நீக்கங்கள் செய்ய்பபட்டிருந்தன. அது போன்றே பி கே சிவகுமார் கடிதத்திலும் சில நீக்கங்கள் உண்டு. விமர்சனத்திற்கு அஞ்சி நிச்சயமாய் எழுதுவதை எவரும் நிறுத்துவதில்லை.- திண்ணை குழு)

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்