வாலைச் சீண்டும் வானரம்

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

முன்னாள் முதல்வர் மு கருணாநிதி


விலை போகாப் புத்தகங்கள்
ஏழெட்டு எழுதிவிட்டு விற்பனையாகாமல்
ஈயோட்டிக் கொண்டிருக்கும்
வெத்துவேட்டு விருதா எழுத்தாளர் சிலபேர்
– நூலை வெளியிடுபவர் ஜெயகாந்தன் என்றால் –
அந்த ஒளியினாலே உலகிற்குத் தெரியமாட்டோமா என்று
விழா ஏற்பாடு செய்து
விளம்பரம் தேடுகின்றார்.
வாயை மூடிக்கொண்டு
அந்த வேலையைப் பார்க்காமல்
வம்புக்கு வருகின்றார் நம்மிடமே
தும்பறுந்த கன்றுகளாய்த் துள்ளிக் குதிக்கின்றார்.
துடுக்குமிகக் கொண்டு அள்ளி இறைக்கின்றார்
சகதியை அண்ணா மீதும் என் மீதும்
அறிஞர் வ.ரா. மீதும் அன்பு நண்பர் தென்னரசு மீதும்
அறியமாட்டோமாம் இலக்கியம் நாங்கள் –
இந்த நரியைக் குளிப்பாட்டி
நடு வீட்டிலே வைத்தால் இப்படி
நாலும் சொல்லித்தான்
நடுக்காட்டுக்கு ஓடி அய்யோ வாலும் போச்சே என்று
வாய்விட்டு ஊளையிடும்
அக்ரகாரத்து அதிசய மனிதர் எனப்பட்டம் சூட்டி
அண்ணாவின் பாராட்டைப் பெற்ற வ.ராவுக்கு,
இலக்கியத் திறமை கிடையாதாம் இளிக்கிறது
பித்தளை பொன்னைப் பார்த்து தென்னாட்டு பெர்னாட்ஷா என்று
பேராசிரியர் கல்கியே போற்றிப் புகழ்ந்த
காஞ்சித் தலைவன் எழுத்தில் இலக்கிய மணம் இல்லையாம்
– இவருக்குக் கற்பூர வாசனை தெரியாதது கற்பூரத்தின் குற்றமாம்
அ.ச.ஞாவும் அரும்பெரும் ஞானப் புலவர்களும்
அணிந்துரை வழங்கிய குறளோவியமும்,
சங்கத் தமிழும் தொல்காப்பியப் பூங்காவும் பூம்புகாரும்
வெறும் திராவிட எழுத்துக்களாம்
இந்தத் ‘ ‘தீராவிடம் ‘ ‘ சொல்லுகிறது –
தென்னரசின் ‘ ‘சேதுநாட்டுச் செல்லக்கிளி ‘ ‘
ஆனந்தவிகடனில் தொடராக வந்து
அனைவரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று
கருத்தைக் கவர்ந்ததைக்
கபோதிகள் அறியாரோ ?
வனவிலங்குச் சரணாலயம் காண வருவோர் எல்லாம்
வளைந்து நெளிந்த கொம்பு மான்களையும்
வலிமைமிகு யானைக்கூட்டத்தையும்
வட்டமிட்டு வட்டமிட்டுப் பார்ப்பது கண்டு
வானரம் ஒன்று வருத்தமும் பொறாமையும் கொண்டு
– யானையின் வாலைச் சீண்டி
அதில் தொங்கி வேடிக்கை காட்டியதாம்
வந்தவர்கள் தன்னையும் பார்ப்பார்களென்று
அந்தத் தந்திரம் செய்ததாம்
நல்லவேளை வாலைச்சீண்டியது
– யானையின் காலைச் சீண்டியிருந்தால் ?
நன்றி – (முரசொலி 14.10.2003)

Series Navigation

முன்னாள் முதல்வர் மு கருணாநிதி

முன்னாள் முதல்வர் மு கருணாநிதி