வாரபலன் – 3 பழைய பத்திரிக்கை வாசிப்பு

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

மத்தளராயன்


ஐம்பதுகளில் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கிய பெயர் இது. இந்தியாவின் முதல் கம்யூனிஸ்டுகளில் (காங்கிரஸ் சோஷலிஸ்டு) ஒருவரான வீராங்கனை கல்பனா தத் தமிழகப் பொதுவுடமைவாதிகளை வெகுவாகப் பாதித்தவர். எந்தத் தோழர் வீட்டில் முதல் பெண்குழந்தை பிறந்தாலும் இடப்பட்ட பெயர் அது.

ஜெயகாந்தனும், அறந்தை நாராயணனும் எண்பதுகளில் ‘கல்பனா ‘ என்ற மாத இதழைக் கொண்டு வந்தார்கள். மூத்த பத்திரிகையாளர் அ,மா.சாமி தினத்தந்தி நிறுவனத்துக்காகத் தொடங்கிய ராணிமுத்து மாத நாவல் இதழ் வெளிவந்து பிரபலமாகவே, புற்றீசல் போல் மற்ற மாத நாவல்கள் முளைக்கத் தொடங்கிய நேரம் அது.

கல்பனா வித்தியாசமான மாத நாவல் இதழாக வந்தது. வியாபார நோக்கில் இல்லாமல், தமிழ் இலக்கியத்தில் சுவடு பதித்த எழுத்தாளர்களின் படைப்புகள் குறைந்த விலையில் வாசகரை அடைய வேண்டும் என்ற இலக்கு அதற்கு இருந்தது. ஜெயகாந்தனின் ‘ஊருக்கு நூறு பேர் ‘, அசோகமித்திரனின் ‘ஒற்றன் ‘ போன்றவை அதில் வெளியானவை.

இந்தோ சோவியத் நட்புறவு, இஸ்கஸ் (இந்தோ சோவியத் கல்ச்சுரல் சொசைட்டி) செயல்பாடு மூலம் இந்திய – சோவியத் கலை, எழுத்துப் பரிமாற்றம் என்று நேர்த்தியாக விரிந்த காலமும் அதுதான்.

இஸ்கஸ் இப்போது இல்லை. சோவியத் யூனியனும் கூட இல்லை. ஆனாலும் ‘கல்பனா ‘ என்ற மாதப் பத்திரிகை என் விலாசத்துக்கு மாதம் தவறாமல் வந்து கொண்டிருக்கிறது.

சேர்ந்து போயிருந்த பனிரெண்டு மாத இதழ்களைப் புரட்டிப் பார்க்க, தா.பாண்டியன் கட்டுரை, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்தநாள் விழா, பத்மா சுப்ரமணியத்தின் தந்தையார் டைரக்டர் சுப்பிரமணியம் தமிழகத்திலிருந்து கலைக் குழுவை சோவியத் யூனியன் அழைத்துப் போனது என்று நிறைய நோஸ்டால்ஜிக்கான விஷயங்கள்.

திருக்கருகாவூர் பிச்சை என்ற தொண்ணூறு வயது இளைஞர் (கணையாழி, தீபம் வாசகர்களுக்கு இவரைத் தெரியும்) இன்னும் விடாமல் அசுர சாதனையாகப் பிற மொழிச் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார் கல்பனா பத்திரிகையில்.

பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் ரஷ்ய மொழி சொல்லிக் கொடுக்கிறார்கள்.

அது இப்படி –

பின்வரும் வாக்கியங்களை ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கவும்.

இன்று உங்கள் சகோதரன் என்ன செய்கிறான் ?

நேற்று உங்கள் சகோதரி என்ன செய்தாள் ?

அவள் ரஷ்யாவில் வேலை செய்தாள்.

என் சகோதரன் அமெரிக்காவில் வேலை செய்கிறன். அவன் மனைவி லண்டனில் வேலை செய்கிறாள். அவர்கள் குழந்தைகள் டெல்லியில் வசிக்கிறார்கள்.

என் மனைவி புதன்கிழமை மாஸ்கோவில் இருந்தாள்.

நான் திங்கள்கிழமைகளில் வேலை செய்வதில்லை.

***

இதைப் படிக்கும்போது ஏதோ போஸ்ட் மார்டனிச நாவலிலிருந்து உருவிய மாதிரித் தொன்றியது.

அமெரிக்காவில் சகோதரனும், லண்டனில் அவன் மனைவியும், அவர்கள் குழந்தைகள் தனியே தில்லியிலும் வசிக்க என்ன காரணம் ? எழுதியவரின் மனைவிதான் மாஸ்கோ போயிருக்கிறாளே. அவருந்தான் திங்கள்கிழமை வேலை செய்வதில்லையே. வார இறுதியில் தில்லி போய் சகோதரன் குழந்தைகளோடு இருக்கலாமே….

***

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்