வாரபலன் – பிப் 26,2004-ஹரே ராமா ஹரே டெக்னாலஜி – சித்திர நாவல் – காய்ந்த நீர் காணாமல் போன மணல் – காலைக்கடன் கடவுள் கட்டளை

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

மத்தளராயன்


வார இறுதியில் பெங்களூர் வந்த மனைவி என்னைப் பார்க்கத் தான் வந்திருக்கிறாள் என்று ஆவலோடு ஸ்டேஷனுக்குப் போய் வரவேற்று அழைத்து வந்தால், ஹரே கிருஷ்ணா கோவிலைப் பார்க்கவாக்கும் வந்தேன் என்றாள்.

இண்டர்நேஷனல் சொசைட்டி ஓஃப் கிருஷ்ணா கான்சியன்ஸ் என்ற இஸ்க்கான் நடத்தும் இம்மாதிரியான ஒரு கோவிலை ஏழெட்டு வருடம் முன் மும்பையில், போய்ப் பார்த்தால்தான் ஆச்சு என்று நான் கம்ப்யூட்டர் நிறுவப் போயிருந்த எங்கள் வங்கி மேலாளர் அழைத்துப் போனார்.

நீங்க கம்ப்யூட்டர்லே கணக்கு மட்டும்தான் போடுவீங்க, அங்கே கோவில்லே தெரியுமா, டாண்ணு மதியம் நாலு மணிக்கு கம்ப்யூட்டரே ஸ்விட்சைப் போட்டு, வாசல் கதவைத் திறந்து, மணியை அடிச்சு, விளக்கை எல்லாம் ஏற்றி வச்சுடும். அதுவல்லவா அற்புதம்.

அவர் இஸ்க்கான் கோவில் யந்திரமயமானது குறித்துப் புளகாங்கிதமடைந்ததில் பத்தில் ஒரு பங்கு கூட கிருஷ்ண பரமாத்மா நேரடியாக பேங்க் கவுண்டருக்கு வந்து தரிசனம் கொடுத்திருந்தால் அனுபவித்திருக்க மாட்டார்.

நான் கதை எழுதுகிற சில்மிஷங்கள் பற்றியும், அப்போது தான் வெளிவந்திருந்த ‘கிடங்கு ‘ பற்றியும் அவரிடம் யாரோ எடுத்தோதியிருந்தார்கள்.

‘அதென்ன சார், பொடவையைத் தூக்கிப் பாக்கறதா ஒரு கதை, அதுவும் பொணத்தோடது.. ‘ என்று படிக்காமலேயே குற்றம் சாட்டி, திமலா போல எழுதணும், அதான் இனிமே தேவை என்று அறிவுரை எல்லாம் கொடுத்தார் அவர்.

பெங்களூர் இஸ்க்கான் கோவிலில் இயந்திர வேலைப்பாடுகள் எதுவும் இல்லை. அங்கே என்னைக் கூட்டிப் போன என் வீட்டுக்காரிக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாததால் நான் எழுதிய எதையும் படித்ததில்லை. எனவே விஷயம் எளுப்பமாகிப் போனது.

செருப்பை விடறதுக்கு எப்படி நேர்த்தியான ஏற்பாடு பாருங்க.

சரிதான். டோக்கன் கொடுத்த கையோடு, குட்டிச் சாக்குப் பையில் செருப்பைப் போடச் சொல்லி, மூட்டை கட்டி, நூறு நூறாக ஹாங்கர் மாட்டிய ஒரு தடுப்பில் தொங்க விடுவதில் தொடங்கி, ஸ்பெஷல் தரிசனத்துக்குத் தனிப்பாதை, அதிலும் மெம்பர்ஷிப் அனுமதிக் கார்டு, பிரசாதம் வாங்க வரச்சொல்லி அன்போடு கூப்பிட்டு, பின்னால் வரிசையாக மேசை போட்டு உட்கார்ந்து, விதம் விதமான தரிசன – அனுக்ரஹ ஓஃபர் பேக்கேஜ்களை மொபைல் தொலைபேசி சேவை போல் விற்கும் சுறுசுறுப்பான இளைஞர்களும் யுவதிகளும், மதம், தத்துவம் தொடர்பான கேள்விகளை இங்கே கேளுங்கள் என்ற போர்டு வைத்து பிளாஸ்டிக் நாற்காலி போட்டு, மேஜைப் பக்கம் உட்கார்ந்திருந்த சிவப்பு உடையணிந்த வெள்ளைக்கார சாது, பிரசாதமாக லட்டு முதல் சமோசா, கட்லட், பிட்ஸா, சாண்ட்விச், முட்டை சேர்க்காத சைவ கேக் வரை மினரல் வாட்டரோடு விற்கிற உணவுக் கூடங்கள் என்று பெங்களூர் ஹரே கிருஷ்ணா கோவில் ஒரு கார்ப்பரேட் ஆலயம்.

வேதிக் காப்பி (vedic coffee) என்று போர்ட் பார்த்து வாங்கினேன். குடித்தால் ஒரு சுக்கும் இல்லை அதில். காப்பியையும் வேதத்தையும் முடிச்சுப் போட்ட ‘ப்ரபஷனலிச ‘த்துக்குத்தான் நான் கொடுத்த பத்து ரூபாய்.

இவ்வளவு சுத்தமா, புரபஷனலா இன்னொரு கோவில் பார்த்திருக்கீங்களா ?

இல்லை என்றேன். எல்லாம் இருக்கிற, எல்லாம் விதிக்கப்பட்ட தோதில் சீராக இயங்கும் கோவில்.

அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அம்பலத்து அரையிருட்டில் கேட்கும் சிறுபறை ஒலியில் லயித்துக் கண் மூடி நிற்கும் வயோதிகனின் சுருக்கம் விழுந்த முகத்திலும், எடத்வா செயிண்ட் ஜியார்ஜ் சர்ச்சில் மதிய நேரத்தில் தனியாக மண்டியிட்டுத் தொழுது கொண்டிருந்த மத்திய வயது ஸ்திரியின் கண்களிலும் உலகம் முழுக்கப் பகிர்ந்து கொள்ளத் தயாராகத் தேங்கி இருந்த அமைதியில் நான் கண்ட கடவுளைத் தவிர மற்ற எல்லாமே பெங்களூர் ஹரே கிருஷ்ணா கோவிலில் உண்டு.

****

பிரபஞ்சனுக்கும் மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தனுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவரும் புதுவை மாநிலத்தை – யூனியன் பிரதேசம் – சேர்ந்தவர்கள். பிரஞ்சுக் காலனியாதிக்கத்தில் இருந்த புதுவை பிரபஞ்சனின் கதைக்களமாவது போல், அதே பிரஞ்சு ஆட்சியில் பட்ட கேரள மாநில மாஹே பிரதேசமான

மய்யழி நதி (மய்யழிப்புழ) தீரம் முகுந்தனின் கதைக்களம்.

பொன்னியம் சந்திரன் என்ற ஓவியர், நாற்பத்து மூன்றடி நீளமும் நாலடி அகலமும் உள்ள கான்வாஸில் முகுந்தனின் ‘மய்யழிப்புழயுடெ தீரங்ஙளில் ‘ நாவலை ஓவியமாகத் தீட்டி முடித்திருக்கிறார். முழு ராமாயணத்தையும் ஒரே ஓவியத்தில் வரைவது போல் சிரமமான வேலை இது. நாவலை இப்படி

ஓவியமாக ஊடக மாற்றம் செய்திருப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்.

என் நண்பர் ஓவியர் புகழேந்தி குஜராத் பூகம்பம் பற்றி இப்படி பிரம்மாண்டமான ஒரே கான்வாஸில் தீட்டிய ஓவியம் நினைவுக்கு வருகிறது. முந்தாநால் தஞ்சையிலிருந்தோ, புதுக்கோட்டையிலிருந்தோ தொலைபேசி,

அவருடைய ஓவியக் கண்காட்சி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இவருடைய பெரியார் ஓவியங்களும் இரண்டு ஆண்டுகள் முன் சென்னையில் ஓவியக் கண்காட்சியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. போன மாதம் இவர் நடத்திய கண்காட்சியும் கூடத்தான்.

ஓவியத்தை ஆர்ட் கேலரிகளில் வைத்து மேல்தட்டு ரசனைக்கு மட்டும் தீனி போடுகிற கண்காட்சி நடத்தாமல், புகழேந்தி தன் கண்காட்சிகளுக்குத் தேர்ந்தெடுக்கும் இடங்களை மும்பையின் லட்சக் கணக்கில் பணம் புரளும் பிசினஸ் ஓவியர்கள் சப்பையாகிப் போன பிரஷ்ஷால் கூடச் சீண்ட மாட்டார்கள்.

தெருவிலும், பள்ளிகளிலுமாக மக்கள் புழக்கமுள்ள இடங்களில் மக்களைத் தேடிப் போய் நவீன ஓவியங்களைப் பகிர்ந்து கொண்டு புரிதலை வளர்க்கும் புகழேந்தியின் அடுத்த தொலைபேசி அழைப்பு வரும்போது கேட்க இருக்கும் கேள்வி – தமிழ் நாவல் ஒன்றை ஒரே கான்வாஸில் வரைவதாக இருந்தால்,

உங்கள் தேர்வு எதுவாக இருக்கும் ?

****

கதகளி ஆட்டத்தில் ஒரு சிறிய அரங்கை எவ்வளவு எளிதாக மிகப் பெரிதாகத் தோற்றமளிக்கச் செய்கிறார்கள் என்பது வியப்புக்குரியது. மேடையில் பின்னணியில் செண்டை, மத்தளம், தாளம் என்று

வாத்தியக்காரர்களும் பாட்டுக்காரர்களும் அணிவகுத்து நிற்க, கதாபாத்திரங்கள் நடமாடும் இடம் இன்னும் குறுகிப் போய்விடுகிறது. இருந்தாலும் பார்வையாளர்களின் கற்பனையில் நம்பிக்கை வைத்து சில அசாதாரணத் தோற்றங்களை உருவாக்க அந்தக் கலைஞர்களால் முடிகிறது.

எதையும் பட்டவர்த்தனமாகச் சொன்னால்தான் பார்வையாளனுக்குப் புரியும் என்பது நம்ம ஊர் மனநிலை. கோஷிஷ் என்ற இந்திப் படம் (இது கூட ஒரு ஜப்பானியப் படத்தின் பாதிப்புத்தான்) குல்சார் ( ?) உருவாக்கத்தில் இந்தியில் வெளிவந்தது. கணவனும் மனைவியுமாக இரண்டு பேருமே செவிட்டு ஊமைகள்.

இவர்களுக்குப் பிறந்த குழந்தை குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும் என்று ஆவலாக எதிர்பார்ப்பார்கள். குழந்தைக்கு முன் ஒரு கிலுகிலுப்பையை அசைக்க, குழந்தை சலனமற்றுப் பார்த்தபடி இருக்கும். முகத்தில் ஏமாற்றம் கவிய பெற்றோர், குழந்தையும் நம்மைப் போலத்தான் என்று தீர்மானிக்கும்போது கணவன் கிலுகிலுப்பையைப் பிரித்துப் பார்ப்பான். உள்ளே சிறிய கூழாங்கல்லோ, மணியோ எதுவும் இல்லாமல் வெறுமையாக இருக்கும் அது. ஒலி எழுப்பாத கிலுகிலுப்பை என்பதால் குழந்தை சத்தம் கேட்டுத் திரும்பவில்லை என்று அறிந்த மகிழ்ச்சியை எந்த வித வசனமும் இன்றி சஞ்சீவ் குமாரும் ஜெயாபாதுரியிம் அழகாக வெளிப்படுத்தி இருப்பார்கள். இதே படம் தமிழில் கமல், சுஜாதா ( ?) நடித்து வெளிவந்தபோது, கதாநாயகன் ஒரு அபிநயத்தை வெளிப்படுத்தினால், இன்னொரு கதாபாத்திரம் அது என்ன என்று உரக்க விளக்கி அப்படியா என்று கேட்பார்கள். பாதிப்படத்தில் பிய்த்துக்கொண்டு தியேட்டரில் இருந்து வந்து விட்டேன்.

கோஷிஷ் இருக்கட்டும், கதகளிக்குத் திரும்பலாம்.

கதகளி மேடையில் கவனித்துப் பார்த்தால் இரண்டு ஸ்டூல் இருக்கக் காணலாம். சும்மாக் கால் வலித்தால் கதாபாத்திரங்கள் உட்கார இல்லை அது. முனிவர்களோ, அரசர்களோ, தெய்வங்களோ ஆசி அருளும்போது அந்த ஸ்டூலில் உட்கார்ந்து மற்ற பாத்திரங்கள் அவர்களுக்கு முன்னால் தொழுது நிற்பார்கள்.

மகாபாரத யுத்தம் காட்சி என்றால், பீமன் ஜராசந்தனை வதைப்பதற்கு முன் நடக்கும் சண்டையில் ஸ்டூல் ஒரு ஆயுதமாகும். பின்னணியில் செண்டை உச்சத்தில் முழங்க, ஸ்டூலைத் தூக்கி அடிக்க வருவதாகப் பாவனை காட்டும்போது அந்த ஸ்டூல் மறைந்து பீமன் கதை தான் மனதில் வரும்.

அது மட்டுமில்லை. பாண்டவர்களுக்காகத் துரியோதனிடம் தூது போன கண்ணனோ, இலங்கையில் சீதாபிராட்டியைத் தேடிப் போன அனுமனோ, தக்க நேரத்தில் தங்கள் முழு வலிமையை – விச்வரூபம் போல்- காட்ட ஸ்டூலில் ஏறி நின்றால் போதும். முக முத்திரைகளும், கை அபிநயமும் மண்ணுக்கும் விண்ணுக்கும் வளர்ந்த ஸ்வரூபத்தை நம்மைக் கற்பனையில் காண வைத்து விடும்.

அதே போல், பிரகலாதனை மலையுச்சியிலிருந்து ஹிரண்யகசிபு உருட்டி விட உத்தரவு கொடுத்ததும், பிரகலாதன் ஏறுவது ஸ்டூலில்தான். பின்னால் நின்று இரண்டு சேவகர்கள் பிடித்துத் தள்ள அவர்கள் தான் விழுவார்கள். பிரகலாதன் புன்சிரித்தபடி நிற்பான்.

கதகளி பார்க்க வரும் மக்கள் கூட்டம் சாதாரணர்களிலிருந்து நடுத்தர வர்க்கம் வரையானது. இவர்களில் இலக்கியப் பரிச்சயம் உள்ளவர்கள் அதிகமாக இருக்க முடியாது. ஆனாலும், பார்வையாளர்களின் ஊகத்துக்குச் சிலவற்றை விட்ட காட்சியமைப்பு புத்திசாலித்தனமானது.

கதகளியில் ராமாயணக் கதை பார்க்கும்போது சின்னச் சின்னதாக மெருகேற்றியிருப்பதைப் பார்த்தேன். அசோகவனத்தில் சீதையைத் தரிசித்த அனுமன், பிராட்டி கொடுக்கும் கணையாழியைக் கையில் வாங்கும் முன், ஒரு துண்டுத் துணியால் தன் கைகளைத் துடைத்துத் தூய்மைப் படுத்திக் கொள்வது

இம்மாதிரி ஒன்று.

குசேலோபாக்கியானத்தில் கண்ணபிரானைச் சந்திக்கத் துவாரகை வரும் குசேலர், பார்வையாளர்கள் ஊடாக நடந்து, ஆடியபடி மேடைக்கு வருவார். காடு மலையெல்லாம் கடந்து நீண்ட ஒரு நடைப் பயணத்தை, தளர்ச்சியை, களைப்பை எல்லாம் அந்த மூன்று நிமிட நடையிலும் நடனத்திலும் நம்மை அனுபவிக்க வைத்து விடுவார்.

பாட்டுகள் மூலம் ஆட்டக்கதையை நகர்த்தி முன்னேறும்போது, அங்கங்கே, செண்டை மட்டும் பின்னணியில் ஒலிக்க, கர, முக முத்திரைகளால் பாத்திரங்கள் உரையாடுகிறார்கள்.

ஏஷியாநெட் நியூஸ் சானலில் இப்படியான சந்தர்ப்பங்களில் அவ்வப்போது ஒரு வரி எழுதிக்காட்டி அந்த அபிநயம் என்ன என்று சொல்கிறார்கள். இது பழகிய பிறகு முத்திரைகள் எளிதில் புரியும்.

ஏஷியாநெட் நியூஸ் கதகளிக்குச் செய்வதை சன் நியூஸ் தெருக்கூத்துக்கும், பாகவதமேளாவுக்கும், அரையர் சேவைக்கும் செய்யலாமா என்று நண்பர் மாலனை விசாரிக்க வேண்டும்.

****

தேர்தலுக்கு வெகு முன்பாகவே மத்திய அரசு கோலா கம்பெனிகளுக்கு நற்சான்றிதழ் கொடுத்து இனி உங்க பாடு, பொதுமக்கள் பாடு என்று கையசைத்து விட்ட நிலையில், கேரள முதல்வர் ஏ.கே.ஆன்றணி இது தொடர்பாக எடுத்திருக்கும் நடவடிக்கை பாராட்டுக்குரியது.

பாலக்காட்டை அடுத்த பிளாச்சிமட என்ற கிராமப் பகுதியில் கோகோ கோலா கம்பெனி தொழிற்சாலை தொடங்கி, நிலத்தடி நீரை கோலா தயாரிக்கப் பயன்படுத்திப் பாழாக்குவதாகக் குற்றச்சாட்டு. போனமாதம் பிளாச்சிமடையில் உலகத் தண்ணீர் வள மாநாடு நடத்தி (வந்தனா சிவா போன்ற சுற்றுச்சூழல், சமூகவியலாளர்கள் கலந்து கொண்டார்கள்), தண்ணீர் என்ற இயற்கை வளத்தைப் பெறுவது மனித உரிமை சார்ந்ததென்று பிரகடனப்படுத்தினார்கள். இந்த வளத்தைப் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை கொண்டு போக அதிகாரமில்லை என்று ஒருமித்து முழங்கினார்கள்.

இரண்டு நாள் முன் ஆன்றணி அரசு, பிளாச்சிமடையில் நிலத்தடி நீரைப் பயன்படுத்திக் கோலா தயாரிக்க மூன்று மாதம் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மக்கள் ஆதரவைப் பெற ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கை என்று சிலர் சொன்னாலும், மக்கள் மத்தியில் ஆன்றணியின் இந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா இது பற்றிச் சற்றே வித்தியாசமாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். பன்னாட்டு நிறுவனம் இயற்கை வளத்தைப் பாழாக்குவது பற்றி நாம் கவலைப் படுவது போலவும், எதிர்த்துக் குரல் கொடுப்பது போலவும் நம்மவர்களே இதே போன்ற செயல்களில் ஈடுபடும்போது செயல்படுகிறோமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் சக்கரியா.

நதிக்கரை மணலை எடுத்து விற்றுப் பெரும் பணம் சம்பாதிக்கும் தனியார் நிறுவனங்களை அவர் சாடுகிறார். கோலா தயாரித்து நீரைப் பாழாக்குவது குற்றம் என்றால், மணலை வாரி எடுத்து எடுத்து வெளியேற்றி அதனால் ஆற்றுப் படுகைகளும், சூழலில் இயற்கை வளமும் பாதிக்கப்படச் செய்வது அதற்கு எந்த விதத்திலும் குறைந்ததா எனக் கேட்கிறார் சக்கரியா.

சக்கரியாவோடு எனக்கு உடன்பாடு உண்டு.

****

பெரியவர்கள் கோபிக்கக் கூடாது. யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரவர்களின் ‘சைவ சமய வினாவிடை ‘ படித்துக் கொண்டிருக்கிறேன். (அதுக்காகக் கோபிக்க மாட்டார்கள் யாரும்).

நிறையப் புது விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

உதாரணம் :

கேள்வி : ‘மாகேசுவர பூசைக்கு விலக்கப்பட்ட பதார்த்தங்கள் யாவை ?

பதில் : உள்ளி, வெள்ளுள்ளி, உருண்டைச் சுரைக்காய், கொம்மடிக்காய், செம்முருங்கைக்காய், தேற்றங்காய், அத்திக்காய், வெண் கத்தரிக்காய், பசலை, வள்ளி, கொவ்வை என்பவைகளாம். ‘

சரி. இன்னொரு உதாரணம்.

‘வினா : (காலைக் கடன் கழித்த பிறகு) செளசம் (சுத்திகரிப்பு) எப்படிச் செய்தல் வேண்டும் ?

விடை : மண்ணுஞ் சலமுங் கொண்டு இடக் கையினாலே குறியில் ஒரு தரமும், குதத்தில் ஐந்து தரத்துக்கு மேலும், இடக்கையை இடையிடையே ஒவ்வொரு தரமும், பின்னும் இடக்கையைப் பத்துத் தரமும், இரண்டு கையுஞ் சேர்த்து ஏழு தரமுஞ் சுத்தி செய்து சகனத்தைத் துடைத்து, கால்களை முழங்கால் வரையும், கைகளை முழங்கை வரையும் ஒவ்வொரு தரம் கழுவல் வேண்டும். ‘

விவிலியத்தின் அடிப்படையில் ‘நித்ய அனுசந்தானம் ‘ என்ற பழைய நூல் ஒன்று படிக்கக் கிடைத்தது. அதிலும் கிட்டத்தட்ட இதே விஷயத்தைக் கொஞ்சம் வேறு மாதிரிச் சொல்லியிருந்தார்கள். இஸ்லாம், பெளத்தம் போன்ற மற்ற மதக் கிரந்தங்களிலும் இது போல் இருக்கலாம்.

என் கேள்வி இதுதான் – மிகச் சாதாராண காரியமான ‘கால் கழுவுவது ‘ எப்படி என்று கூடக் ‘கரதலாமலகமாக ‘க் கற்றுக் கொடுக்க வேண்டிய நிலையிலா நம் முன்னோர்கள் இருந்தார்கள் ?

****

இத்தனை வாரம் மாய்ந்து மாய்ந்து எழுதி, எழுதிய நானும், சக எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவும் மட்டும்தான் படித்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தது பொய்யாக, ஒருவழியாக மற்றவர்களும் வாரபலன் படிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று சென்ற வாரம் வந்த இரண்டு எதிர்வினைகள் மூலம் அறிய மகிழ்ச்சி. அதுவும், அரவிந்தனின் ஸ்பெஷல் அர்ச்சனை ஒரிஜினல் கடா மார்க் இலக்கியவாதிகளுக்கானது. அதை மத்தளராயன் போன்ற டெவில் ஓஃப் ஸ்மால் திங்க்ஸ் மேல் என்னத்துக்கு வீணாக்கணும் என்று விசனம்.

மத்தளராயன்

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்