வாரபலன் ஜூலை 4, 2003 (ஆயிஷா, கநாசு, மலையாள இலக்கிய உலகு, வரம்புகளுக்கு அப்பால்)

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

மத்தளராயன்


நண்பர் ராம்ஜி ‘கணையாழி ‘ ஆசிரியராக இருந்த ஒரு குறுகிய காலத்தில் வருடாந்திரக் குறுநாவல் போட்டிக்காக சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி இவர்களோடு கலந்துரையாடிப் படைப்புகளைத் தேர்ந்தெடுக்க அடியேனுக்கும் வாய்ப்புக் கிட்டியது. முதல் வாசிப்பிலேயே எல்லோரையும் கவர்ந்த குறுநாவல் இரா.நடராசன் எழுதிய ‘ஆயிஷா ‘.

இரண்டு நூற்றாண்டாக இன்னும் மாறாத ‘குமாஸ்தா கல்வி முறையும் ‘, அதைப் போதிக்கும் ஆசிரியர்களின் பொறுப்பின்மையும், தவறான வழிமுறைகளும் ஒன்று சேர்ந்து அறிவுப் பசியும், துறுதுறுப்பும் ஆர்வமும் மிக்க ஓர் ஏழைச் சிறுமியை எப்படிப் பலி கொள்கின்றன என்று அற்புதமாகச் சித்தரித்த, இரா.நடராசன் எழுதியிருந்த அந்தக் குறுநாவல் கணையாழி வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றது. இரா.நடராசன் ஆசிரியப் பணியில் இருப்பதால் கூடும் அனுபவச் செறிவின் பின்புலத்தில் எழுந்த நல்ல படைப்பு ‘ஆயிஷா ‘.

அறிவொளி இயக்கம் சார்பில் சிறு புத்தகமாகப் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் விநியோகிக்கப்பட்ட ‘ஆயிஷா ‘ இன்னும் பல பதிப்புகள் கண்டு எல்லா வாசகர்களையும் எட்டுவது, தமிழ்நாட்டில் கல்விக் கூடங்களின் செயல்பாடு, கல்வி போதனை முறை போன்றவை தீவிர மறு ஆய்வுக்கு உள்ளாகி இருக்கும் தற்போது அவசியமாகிறது.

இரா.நடராசனின் ‘ஆயிஷா ‘ குறும் படமாகவும் வெளிவந்து இந்தியாவிலும், உலக அரங்கிலும் பரிசுகளை வென்றது.

‘ஆயிஷா ‘ குறும்படத் தயாரிப்பாளரான ஆர்.புவனாவின் பேட்டி, நேற்றைய இந்து இதழின் மாநகரப் பதிப்பில் (துணையேடு) வெளியாகியுள்ளது. ( ‘The Hindu – Friday Review supplement – 27th June 2003)

எழுத்தாளர், பத்திரிகையாளர், ஒப்பனைக்கலை நிபுணராகத் தொடங்கி, திரைப்படத் துறையில் காலடி பதித்த புவனாவுக்கு நம் வாழ்த்துகள்.

‘ஆயிஷா ‘வின் வெற்றிக்கு புவனாவே முழு முதல் காரணம் என்ற தொனி இந்துப் பத்திரிகைக் கட்டுரை முழுக்கத் தெறிக்கிறது. ஆயிஷாவை எழுதியது புவனாதான் என்று அந்தப் படைப்பை எழுத்தாகப் படிக்காதவர்கள் நினைக்க வாய்ப்பு இருக்கிறது. படத்தில் நடித்த அர்ச்சனா, இயக்கிவர் பற்றி எல்லாம் சொன்ன புவனா ஆயிஷா கதையை எழுதிய நடராசனைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை என்பது ஆச்சரியம்.

ஆனானப்பட்ட ஸ்டாவன் ஸ்பில்பெர்க் எடுத்தாலும் ‘மைனாரிட்டி ரிப்போர்ட் ‘ கதை யார் எழுதியது, எப்போது வெளிவந்தது என்று குறிப்பிட மறக்காத இந்துப் பத்திரிகையின் செய்தியாளர்கள் தமிழ்ப் படைப்புகள் பற்றி எழுதும் போது அந்த அளவு ஹோம் ஒர்க் செய்யாத காரணம் என்னவாக இருக்கும் ?

தமிழ் எழுத்தாளர்கள் ‘மற்றும் பலர் ‘ என்று கடைசி டைட்டில் கார்டில் போடப்பட வேண்டிய ஜாதி என்று இந்துப் பத்திரிகை நினைக்கிறதா ?


காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ள க.நா.சு. – 90 தொகுப்பு படிக்க எடுத்திருக்கிறேன்.

சிறுகதையாளர், நாவலாசிரியர், புதுக்கவிதையாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் (தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு, ஆங்கிலம் மற்றும் ஜெர்மனில் இருந்து தமிழுக்கு), இலக்கிய விமர்சகர் என்று பன்முக ஆளுமை கொண்டவரான அபூர்வ மனிதர் க.நா.சுவை இந்த இலக்கிய வகை எல்லாவற்றிலும் அவர் ஆற்றிய பணிக்காக நன்றியோடு நினைவு கூரலாம். முக்கியமாக இலக்கிய விமர்சனப் பணிக்கு.

அறிவியல் பூர்வமான. தர்க்கம் சார்ந்து எடுத்துச் செல்லப்படும் இலக்கிய ஆய்வைத் தமிழில் முதன்முதலாக முன் வைத்துக் கல்லெறி வாங்கியவர் அறிஞர் வையாபுரிப் பிள்ளை என்றால் (இவரைப் பற்றிப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறேன்), நவீனத் தமிழ் இலக்கியம் பற்றிய தன் மதிப்பீடுகளுக்காக வாழ்க்கை முழுக்கக் கல்லடி பட்டவர் க.நா.சு.

தமிழ்ப் படைப்பாளர்கள், விமர்சகர்கள் கூட்டத்தில், க.நா.சுவின் இலக்கிய நேர்மையைப் புரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே – குறிப்பாக சா.கந்தசாமி, அசோகமித்திரன், (மறைந்த) என் இனிய நண்பர் தஞ்சை பிரகாஷ், தமிழவன் ..

‘இலக்கியத்தில் உள்ள மற்றத் துறைகளைப் போலவே இலக்கிய விமர்சனத்தையும் ஓர் அளவுக்குக் கலையாகவும், ஓர் அளவுக்கு சாஸ்திரமாகவும் காண்கிறேன் நான். இலக்கிய விமர்சனத்தை விஞ்ஞானமாக, ஒரு சாஸ்திரமாகப் பயில்வது சுலபமாகவே எல்லோருக்கும் கை வந்து விடும். ஆனால் இலக்கிய விமர்சனத்தைக் கலையாகப் பயில்வது சுலபத்தில் கைகூடி வந்து விடுகிற காரியம் அல்ல. அதைக் கலையாகப் பயில்கிற காரியத்தை இப்போதுதான் தமிழாசிரியர்கள் சிலர் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தில் வளம் தொடர்ந்து ஏற்படும் என்பது இந்த இலக்கிய விமர்சனக் கலை வளர்ந்து மேஜராவதைப் பொறுத்தே இருக்கிறது என்றும் எனக்குத் தோன்றுகிறது ‘ என்கிறார் க.நா.சு.

க.நா.சுவின் அலையகலத்தைக் காட்டும் தேர்ந்தெடுத்த படைப்புகள் (உதாரணம் புதுமைப்பித்தன், பாரதிதாசன் படைப்புகள், காப்ஃகா அறிமுகம், இந்திய நாவல் தோன்றிய கதை, தமிழ்ச் சிறுகதைகளில் வெற்றி கண்டவர்கள் பற்றிக் க.நா.சு எழுதிய கட்டுரைகள், அவர் எழுதிய புதுக்கவிதைகள், க.நா.சு மொழிபெயர்த்த ஆல்பர்ட் காம்யுவின் ‘விருந்தாளி ‘ கதை, க.நா.சு பற்றி அசோகமித்திரன், ச.கந்தசாமி, தஞ்சை பிரகாஷ் எழுதிய கட்டுரைகள் என்று விஷய கனம் மிகுந்த புத்தகம் இது. சா.கந்தசாமி பார்த்துப் பார்த்து எடுத்துத் தொகுத்திருக்கிறார். .

பின் அட்டையில் க.நா.சு சொல்வது இது –

‘எனது கருத்துக்களை அப்படியே யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் வற்புறுத்தவில்லை. அவற்றை அடிப்படையாகக் கொண்டு அவற்றிற்கு ஒட்டிய மாதிரியும், எதிர்க்கிற மாதிரியும் வாசகர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று தான் நான் கேட்டுக் கொள்கிறேன் ‘.

ஜல்லியடிக்க எடுத்தது போக ஏகத்துக்கு மீந்த, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துப் பாறாங்கல்லும், வசவுச் செங்கலும் தமிழ் கூறும் நல்லுலகத்தில் இன்னும் நிறையவே இருக்கிற விஷயம் க.நா.சுவுக்குத் தெரிந்திருந்தது.


மலையாளப் புத்தகம் வாங்குவதற்காக டி.சி.புக்ஸ் இணையத் தளத்துக்குப் போயிருந்த போது அவர்களின் ‘Best Sellers List ‘ கண்ணில் பட்டது.

உன்னதமான படைப்புகளாகிய முகுந்தனின் ‘மய்யழிப் புழயுடெ தீரங்ஙளில் ‘, மலயாற்றூர் ராமகிருஷ்ணனில் ‘வேருகள் ‘, ஒ.வி.விஜயனின் ‘கசாக்கின்றெ இதிகாசம் ‘, எம்.டியின் ‘அசுரவித்து ‘ போன்றவற்றை முந்திக் கொண்டு விற்பனையில் முதல் இடத்தில் இருப்பது வாதசாயனரின் ‘காமசூத்ரம் ‘ மொழிபெயர்ப்பு.

அண்மைக் காலங்களில் மட்டறுத்தப்படாத கருத்துப் பரிமாற்றத்துக்கு யார் எங்கே இணையத் தளம் ஏற்படுத்தினாலும் மலையாளி இளைஞர்களுக்கு -இவர்களில் பலரும் வெளிநாடுகளில் கவுரவமான உத்தியோகத்தில் இருப்பவர்கள் – தெரிந்து படை பட்டாளமாக வந்து இறங்கி விடுகிறார்கள். மிக்க மகிழ்ச்சி.

ஆனால் இந்த இணையத் தளங்களில் அவர்கள் எழுதுவது எல்லாம் மலையாளத் திரைப்பட நடிகைகளின் உடம்பைப் பற்றித் தான். புதுசு புதுசாக வரும் நட்சத்திரங்களிலிருந்து, கொஞ்ச நாள் முன்னால் காணாமல் போன ஷோபனா, அம்மா வேடத்துக்குப் பதவி உயர்வு கிட்டிய ஸ்ரீவித்யா வரை இவர்கள் யாரையும் விட்டு வைப்பதில்லை. ஷோபனாவின் தொப்புள் பற்றி இன்னும் மாய்ந்து மாய்ந்து விவாதம் நடக்கிறது அங்கங்கே.

அந்த நடிகையின் முற்றும் துறந்த படம் வேண்டும், இந்த நடிகையின் முழு உடம்பு தெரியும் படம் வேண்டும் என்று கையில் கண்ட இடத்தில் எல்லாம் எழுதுவதும் இவர்களே.

திரைப்படமான எம்.டி.வாசுதேவன் நாயரின் நாவல்கள் பற்றி ஓர் இலக்கிய, திரைப்பட ரசனையுள்ள மலையாளி விவாத இழை தொடங்கினாலும் இடையிலே புகுந்து, ‘ந்யூட் பிக்சர் கிட்டுமோ சாரே ? ‘ என்று விசாரிக்கும் இந்தப் போக்கு பற்றி

மலையாள எழுத்தாளர்களும் சமூகவியலாரும் சிந்திக்கிறார்களா என்று தெரியவில்லை.


உடல் சார்ந்தும், மனம் சார்ந்தும் நிர்ணயிக்கப்பட்ட சமூக நியதிகளை மீறிய குற்றத்துக்காக அலிகளும், ஒரு பால் புணர்ச்சியாளர்களும் தமிழ் இலக்கிய உலகின் வரம்புகளுக்கு அப்பால் நிறுத்தப்படுகிறார்கள். அந்த மீறல் வேண்டுமென்றே நிகழ்ந்ததல்ல என்ற பிரக்ஞை இருந்தாலும், சமூகப் பாதுகாப்பு குறித்த பொதுவான எதிர்வினையாகவே இது பெரும்பாலும் அமைகிறது.

‘பெண்களைப் போல் உடையணிந்து பெண்மையை அவமதித்துத் தருக்கித் திரியும் அலிகள் ‘ என்று ஜெயகாந்தன் ஒரு முறை குறிப்பிட்டது நினைவு வருகிறது.

சமுதாயம் குறித்த அக்கறையும், தனிமனித சுதந்திரம், அத்துகள் பற்றிய தெளிவும் கொண்ட ஜெ.கே தருக்கித் திரிகிறவர்களாக வெறுத்து ஒதுக்கிய அலிகளையும் பரிவோடு பார்த்து அவர்களைக் கைபிடித்து இலக்கியத்துக்குள் கூட்டி வர ஒரு சு.சமுத்திரம் தேவையாக இருந்தார். சமுத்திரத்தின் எழுத்துகளின் மேல் சுமத்தப்படும் எல்லா விமர்சனங்களும் அவருடைய ‘வாடாமல்லி ‘ என்ற ஒரு படைப்பால் மங்கிப் போகின்றன.

அலிகள் பற்றிய இந்தப் பரிவுணர்வு கூட ஓரினப் புணர்ச்சியாளர்களைப் பற்றி இங்கே இல்லை. விவிலியத்தில் நரகத்துக்குப் போகிறவர்களின் பட்டியலில் இடம் பெற்ற அவர்கள் பழந்தமிழ் சமுதாயத்தில் மூச்சு விட்டுக் கொண்டிருந்திருக்கலாம்; இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் பழந்தமிழ் இலக்கியத்தில் ஜாக்கிரதையாகத் தவிர்க்கப்பட்டார்கள். (அகத்துறையில் இலக்கண விதிப்படுத்தப்பட்ட பெருந்திணையாளர்கள் கூட இதே ரகம் தான்).

‘பாலியல் உறவு ‘ என்பது இனப் பெருக்கத்துக்காக இயற்கை ஏற்படுத்திய வழி என்று சமூகவியல் நோக்கில் பேசுகிறவர்கள் அது தனி மனிதன் தொடர்பானதும் கூட என்பதை மறந்து போகிறது எங்கும் நிகழ்கிறது.

ஆனால், ஓரினப் புணர்ச்சியாளர்கள் பற்றிய புரிதலோடு பேசுகிறவர்களே அப்படியானவர்கள் என்று அதிரடியாக முடிவு கட்டப்படுவது இங்கே வழக்கமாகி விட்டது.

பாலியல் குறித்த ஆரோக்கியமான சிந்தனைகள் நிலவுவதாக நான் கருதும் இங்கிலாந்து மத்தியதர வர்க்கத்திலேயே ஹோமோசெக்ஷுவாலிட்டியும் லெஸ்பியனிஸமும் அவ்வப்போது கிசுகிசு பாணியில் தகவல்களாகப் பகிர்ந்து கொள்ளப்படுவதைப் பார்த்திருக்கிறேன். சனிக்கிழமை மாலை ஏதாவது பார்ட்டி என்று காரணம் சொல்லிக் கொண்டு பார் ஸ்டூலில் உட்கார்ந்து பக்கார்டியை உதட்டுக்கு உயர்த்தியதும், ‘அவனா, கண்ணுக்கு மை எல்லாம் லேசா தடவிட்டு வருவானே .. சுத்த கே ‘ என்று அங்கே இல்லாத அலுவலக சகபாடியைப் பற்றிச் சொலும்போது பொதுவாக ஒரு சிரிப்பு எழுந்து வளைய வந்து அடுத்த ரவுண்ட் டெக்வில்லாவின் போது அடங்கிப் போகும்.

இந்தியாவிலோ, மும்பையில் பிரபல ஓவியர் பூபேன் கக்கர் தன்னை ஹோமோசெக்ஷுவல் என்று அறிவித்துக் கொண்டபோது அது அசாதாரணமாக எதிர்கொள்ளப்படவில்லை. ஆனால் இங்கே தமிழகத்தில் ஒரு கலை விமர்சகர் அப்படித் தன்னை வெளிப்படுத்திக் கொண்டபோது எள்ளல் எழுந்தது.

இருபது ஆண்டுகள் முன்னால், இந்துமதி ஆசிரியராக இருந்த ‘அஸ்வினி ‘ மாத இதழில் கமல்ஹாசன் ஓரினப் புணர்ச்சியாளன் பற்றி எழுதிய சிறுகதைக்காக உயர்ந்த புருவங்கள் இன்னும் கீழே இறங்கவே இல்லை.

நவீனத் தமிழ் இலக்கியம் இன்னும் குழூஉக்குறியாகத் தான், நாயாகப் பேயாக அலைந்து கொண்டிருக்கிறது.


eramurug@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்