வாரபலன் அக்டோபர் 4, 2003 (காதழ(க)ர்கள்,

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

மத்தளராயன்


எங்கள் சிவகங்கைப் பக்கத்தில் முன்பெல்லாம் காது வளர்த்துக் கொள்வார்கள். அதாவது காதில் சிறிய துளை போட்டுத் தோடோ ஜிமிக்கியோ மாட்டி அழகு பார்ப்பதற்குப் பதிலாக, காது மடல் ஓரமாக வரிசையாகத் துளைகள் போட்டு, கீழ்ப் பகுதியில் பதினைந்து தோடுகளை ஒரே நேரத்தில் அணிய வசதியான பெருந்துளை இட்டு தண்டட்டி என்ற பரணத்தை செம்மண் பிரதேசக் கிராமப் பெண்கள் அணிந்து வலம் வருவதே தனி அழகுதான்.

இப்படி ஏகத்துக்கு மணியும், வளையமும் அணிந்த காது பாரம் மிகுந்து கொஞ்சம் துவளும். நாளாவட்டத்தில் கிட்டத்தட்ட முகவாய்க்கட்டைக்கு சரியான மட்டத்தில் காது முகத்துக்கு இரண்டு பக்கத்திலும் நீண்டு போய்த் தொங்கும். காதை அறுக்கிற களவாணிகளுக்கு வேலை சுலபம் என்பதால் அந்த வயதில் காதைத் திரும்பப் பழைய நிலைக்குக் கொண்டு வருவார்கள்.

பிளாஸ்டிக் சர்ஜரி முத்துப்பட்டிக்கும், புலியடிதம்மத்துக்கும் கீழக் கண்டனிக்கும் வராத, ஆனால் டூரிங்க் டாக்கீஸ்கள் பட்டிதொட்டியெல்லாம் முளைத்து இருந்த காலம் அது.

விட்டலாச்சாரியா பட இடைவேளை முடிந்து ஜெயமாலினி டான்ஸுக்கு விடலைகளான நாங்கள் மண்தரையில் காத்திருக்க, ‘காது வளர்க்க ஒட்ட வைக்கக் கூடும் ‘ என்ற நாட்டாஸ்பத்திரி விளம்பர ஆரஞ்சு கலர் ஸ்லைட் கொட்டகைக்குள்ளே முறுக்கும், வெளியே மூத்திரமும் வாடையடிக்க மூன்று நிமிடம் நிறுத்தி நிதானமாகக் காட்டப்பட்டு, எங்கள் கூட்ட விசிலுக்கு மரியாதை கொடுத்து அடுத்த பச்சைக் கலர் ‘நுட வைத்தியசாலை ‘ ஸ்லைடுக்கு மாறும். அதற்கப்புறம் ராட்சசன் குகையில் கொள்ளிவாய்ப் பிசாசும் கண்ணில் எலக்ட்ரிக் பல்ப் மின்னி அணையும் குறளிப் பிசாசும் தெலுங்கில் உருட்டி விழிக்கும் மந்திரவாதியாக ரேலங்கியும் பார்த்து ரசிக்க, ஜெயமாலினி ‘இந்தா இந்தா எடுத்துக்கோ ‘ என்று ஆட ஆரம்பிக்கும்போது அவனவன் அரக்கப் பரக்க வேலிக்காத்தான் புதர் மறைவிலிருந்து எழுந்து அவசரமாக நம் தொடை மீது மூத்திரக்காலால் சவட்டி மிதித்துக்கொண்டு ஓடிவந்து உட்காருவான்.

இது ஜெயமாலினி பற்றியதில்லை என்பதால் அவரை விட்டுவிடுவோம். காது வளர்த்தலைக் கவனிப்போம்.

எங்கள் சிவகங்கைக் கிராமத்துக் கருப்பாயியும், சிவப்பியும், கண்ணாத்தாளும், பாண்டியம்மாளும் இப்படிக் காது வளர்த்தது கலைக்காக என்று ஒரு போதும் சொல்லிக் கேட்டதில்லை. சுருக்குப் பையிலிருந்து எடுத்து வெற்றிலை போடுவதுபோல், புதன்கிழமை வாரச் சந்தையில் கருவாடும் மாம்பழமும் வேப்பெண்ணெயும் வாங்கிக் கொண்டு ஊருணிக் கரையோரமாகத் தலையில் அவை எல்லாம் ஏற்றிய பனை ஓலைக் கடகத்துடன் திரும்புவதுபோல் இயல்பான சமாச்சாரம் அது.

ஆனால் தற்கால பிரிட்டாஷ் ஓவியர்களில் ஒருவர் காது வளர்க்கிறார். அதனால் செய்தியாகிறார். அல்லது செய்தி ஆவதற்காகவே காது வளர்க்கிறார்.

புத்தலை ஓவியர்களில் ஒரு சிறிய பகுதியினர் அதிர்ச்சியடையச் செய்வதின் மூலம் தங்கள் கலை வெளிப்பாடுகளையும் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்வது தொடர்ந்து நடக்கிற காரியம். இரண்டு மாதம் முன் ஒரு பிரஞ்சு ஓவியர் தன் இடது கை சுண்டு விரலை வெட்டி ஒரு அருங்காட்சியகத்துக்கு அன்போடு வழங்கினார் –

‘நான் வரஞ்ச படம் போல் இதையும் பார்வைக்கு வையுங்க ‘.

வைத்தார்களா என்று தெரியவில்லை.

‘Whereas when the artifact is gifted by its creator, the receipt of the same shall be duly registered in Form Number # in triplicate along with a declaration to the effect that it has been made on his / her free will and without any coercion or compulsion .. ‘ என்று நீளச் சாத்தியம் உள்ள அருங்காட்சியகங்களின் தினசரி நிர்வாகத்துக்கான அரசாங்கச் சட்ட திட்டங்களில் சுண்டுவிரல் கலைப்படைப்பாகுமா என்று தெளிவாகச் சொல்லப்படாமல் போயிருக்கலாம். அப்படியே சொல்லப்பட்டாலும், தானமாக வந்த விரலை இடமா, வலமா என்று பார்த்து இன்வெண்டரி லெட்ஜரில் எண்ட்ரி போடுவது, அதை யாராவது கிளப்பிக் கொண்டு போய்விடாமல் பத்திரமாகப் பாதுகாத்து, ஆடிட் நடக்கும்போது கணக்கு ஒப்பிப்பது போன்ற விஷயங்கள் அருங்காட்சி அலுவலகர்களை அயர்வடைய வைத்திருக்கலாம்.

இது சுண்டுவிரல் பற்றியது இல்லை என்பதால் இதையும் விடுத்துத் திரும்பக் காது வளர்ப்பதற்குத் திரும்புவோம். யார் காதை ? பிரிட்டாஷ் ஓவியர் காதை. என்னவாக்கும் இதில் விசேஷம் ?

இவர் காது வளர்ப்பது தன் தோளில் ஒட்ட வைத்துக் கொள்வதற்காக.

ஸ்டெல்லார்க் என்ற இந்த ஓவியர் பிறப்பால் ஆஸ்திரேலியர். இங்கிலாந்தில் நாட்டிங்ஹாம் டிரெண்ட் பல்கலைக் கழகத்தில் நிகழ்கலை எண்ணியல் ஆய்வுப் பகுதியில் (Performance Arts Digital Research Unit) பணியாற்றுகிறவர்.

இதுவரை தன் படைப்புக்களில் மனித உடலின் நீட்சியாக இயந்திர பாகங்கள் பொருத்தப்படுவதைக் காட்ட முனைந்தவர். ஆறு கால் ரோபொட் போல் மனித உருவங்களும், நட்டு போல்ட் திருப்புளி வகையறாக்களும் வரைந்து சலித்துப் போய் அப்புறம் தன் கண்காட்சியின் போது ஒரு நீளமான பி காம்ப்ளக்ஸ் குளிகை போன்ற காப்ஸ்யூலை உச்ச ஸ்தாயியில் இசை, பல நிறங்களில் பளிச்சிடும் வண்ண விளக்குகளின் ஒளி என்ற சங்கதிகளின் துணையோடு நேரடியாகத் தன் வயிற்றில் திணித்து அது குறித்துப் பரபரப்பாகப் பேசவைக்க முயன்றவர். இப்போது காது வளர்க்கப் போகிறார்.

பிளாஸ்டிக் சர்ஜரியில் திறமை கொண்ட மருத்துவர்கள் இவருடைய உடல் திசுக்களை அங்கங்கே கிள்ளியெடுத்துத் திரட்டி தங்கள் சோதனைச் சாலையில் இந்தக் காதை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தோல்க் காது தோள்க் காது வதற்கு இன்னும் சில மாதங்களாவது பிடிக்கலாம் என்ற தகவல். தோற்காது தோற்காது தோற்காதாகும் என நுவலலாம் இஃதை.

ஓவியர் இந்த உபரிக்காதைத் தன் கன்னத்தில் தான் முதலில் பொருத்திக் கொள்ள உத்தேசித்திருந்தாராம். ஆனால் கன்னத்து நரம்புகளைப் பாதிக்கும் என்பதால் அதைச் செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்ல, காது தோளுக்குக் குடிமாற்றம்.

காது முழுமையாக வளர்ந்து முடிந்ததும், அதை ஒரு சிறிய அறுவைசிகிச்சை மூலம் ஓவியரின் தோளில் பொருத்துவார்கள். பின்னர், அந்த மூன்றாம் காதுக்கு ரத்த ஓட்டம் ஏற்பட வழிவகை செய்யப்படும்.

தோளில் முளைத்த காதில் சென்சர்களைப் பொருத்தி, பக்கத்தில் யாரேனும் நெருங்கும்போது ஒலியெழுப்பவோ, தானியங்கி வரவேற்புச் செய்தியைச் சொல்லவோ ஓவியர் உத்தேசித்திருக்கிறாராம்.

புத்தலை ஓவியர்களில் ஒரு பகுதியினர் இந்த மாதிரியான அதிர்ச்சி நடவடிக்கைகள் கலையாக மாட்டாவென்று உறுதியாகச் சொல்கின்றனர்.

இன்றைக்கு இவர் தோளில் காது வளர்த்தால், நாளைக்கு இன்னொருத்தர் உச்சந்தலையில் இடது கால் பெருவிரலை வளர்ப்பார். அப்புறம் அடுத்த மாதம் ஒருவர் நெற்றியில் கண் . சரி வேண்டாம்.

மரபான புத்தலை ஓவியத்துக்கு (traditional modern art) திரும்புவோம் என்று இவர்கள் ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுக்க அதை எந்தக் காதிலும் வாங்காமல் நம்முடைய ஓவியர் சொல்கிறார் –

மனித உடலில் புது இணைப்புகளை (interfaces) இசைய வைப்பதின் மூலம் புதியதாகப் பெறக்கூடிய கலைப்பூர்வமான வெளிப்பாட்டின் சாத்தியங்கள் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நான் காது குளிரக் கேட்க அதைப் பற்றிக் கட்டாயம் பேசுவார்கள். விவாதிப்பார்கள்.

அவ்வளவுதான் விஷயம். என்னமோ சும்மா உங்க காதில் இதைப் போடவேணும் என்று தோன்றியது. போட்டாகி விட்டது.

**

ருஷியாவிலே ராஜாங்கப் புரட்சி

ருஷிய – ஜப்பானிய யுத்தத்தின் ஆரம்ப முதலாகவே ருஷியாவில் உள்நாட்டுக் குழப்பங்கள் தொடங்கி விட்டன. அது முதல் ராஜாங்கப் புரட்சிக் கட்சியாருக்கு நாள்தோறும் பலமதிகரித்துக் கொண்டு வருகிறது.

அப்பால், மேற்படி யுத்தத்திலே ருஷியா தோற்றுப் போய்விட்ட பிறகு ருஷிய ராஜ விரோதிகள் துணிவு மிகுந்தவர்களாகி, வெட்ட வெளியாகக் கலகம் செய்யத் தொடங்கி விட்டார்கள். இதுவரை பெருங் கலகங்களும், சிறு குழப்பங்களுமாக எத்தனையோ நடந்தன. அதிலெல்லாம் ராஜாங்கத்தாரே வெற்றியடைந்து வந்திருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு தடவைக்கப்பாலும் ராஜ விரோதிகளுக்கு வல்லமை மிகுதி உண்டாய் வருகிறது.

இப்போது மறுபடியும் பெருங் கலகம் தொடங்கிவிட்டது. ருஷிய சக்கரவர்த்தியின் சிங்காதனம் இதுவரை எந்தக் காலத்திலும் ஆடாதவாறு அத்தனை பலமாக இருக்க, இப்போது ஆடத் தொடங்கிவிட்டது. பிரதம மந்திரியின் வீட்டு விருந்தின்போது வெடிகுண்டெறியப்பட்டது, சைநியத் தலைவர்கள் கொலையுண்டாவதும், ராஜ விரோதிகள் பகிரங்கமாக விளம்பரங்கள் பிரசுரிப்பதும், எங்கே பார்த்தாலும் தொழில்கள் நிறுத்தப்படுவதும், துருப்புகளுக்கும், ஜனங்களுக்கும் சண்டை நடப்பதும், துருப்புகளிலே ராஜாங்கத்துக்கு விரோதமாகக் கலகமெழுப்புவதும், நாள்தோறும் யிரக்கணக்கான உயிர்கள் மாய்வதும் ஆகிய கொடூர விஷயங்களைப் பற்றித் தந்திகள் வந்தவண்ணமாகவே யிருக்கின்றன.

ராய்டர் தந்திகள் மொழிபெயர்ப்பை மற்றொரு பக்கத்திலே பதிப்பித்திருக்கிறோம். அதிலே விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். சுயாதீனத்தின் பொருட்டும், கொடுங்கோன்மை நாசத்தின் பொருட்டும், நமது ருஷியத் தோழர்கள் செய்து வரும் உத்தமமான முயற்சிகளின்மீது ஈசன் பேரருள் செலுத்துவாராக!

( ‘இந்தியா ‘ – 1.9.1906 – சுப்பிரமணிய பாரதியார்)

மத்தளராயன் தொடர்வது

—–

1) காம்ரேட் என்பதற்கு ஒப்பான தமிழ்ச் சொல்லான ‘தோழர் ‘ என்பதை முதலில் பயன்படுத்தியவர் தோழர் பாரதியாக இருக்கலாம். ருஷ்யப் புரட்சியை யுகப்புரட்சியாகக் கண்ட அவர் கதைகளிலும் விளாதிமிர் இலியிச் லெனின் கடந்து வருவதைக் காணலாம்.

2) கடந்து போன நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிநாட்டுச் செய்திகள் ராய்ட்டர் செய்தி நிறுவனம் அனுப்பும் தந்திகள் மூலமே பெரும்பாலும் இந்தியப் பத்திரிகைகளை வந்தடைந்திருக்கின்றன. தந்தி என்பதால் சுருக்கமாகவே இருக்கும் என்பதால், பத்திரிகை ஆசிரியர்களும் துணை ஆசிரியர்களும் தாங்களாகவே வளர்த்துக் கொண்ட கடந்த, நிகழ்கால வரலாறு, புவியியல், அரசியல் அறிவு சார்ந்தே அச் செய்திகளை விரித்து எழுத வேண்டிய கட்டாயம்.

எல்லாவற்ற்கும் மேல் ‘நியூஸ் சென்ஸ் ‘ என்ற, முக்கியத்துவம் வாய்ந்த செய்தியைத் தகவல் குப்பையிலிருந்து பிரித்தறிந்து வெளியிட வேண்டிய அவசியமும் இப்போது போலவே அன்றும் உண்டு. பாரதி என்ற மகாகவிஞன், எப்படி ஒரு தலை சிறந்த பத்திரிகையாளனாகவும் இருந்தான் என்பதை என்பதை இங்கே நாம் தினமும் படித்து வரும் செய்திகளே சொல்லும்.

3) ராய்ட்டர் நிறுவனம் 1851-ல் லண்டனுக்கும் பாரீஸுக்கும் இடையே பங்குச் சந்தை விலை விவரங்களைத் தந்தி மூலம் செய்தியாக அனுப்புவதற்காகத் தொடங்கப்பட்டது. அதற்கு இரண்டு வருடம் முன்னாலேயே அது பங்குச் சந்தை விலைவிவரங்களைச் செய்திகளாக அனுப்பத் தொடங்கியிருந்தது – புறாக்காலில் கட்டி!

விவரங்களுக்கு : ராய்ட்டர் நிறுவனத்தின் இணையத் தளம்

http://about.reuters.com/aboutus/history/

4) இந்தியாவில் முதல் இந்திய விடுதலைப் போராட்டம் நிகழ்ந்த காலத்தை (1857) அடுத்துப் புகைவண்டியும், தந்தியும் வந்ததாக வரலாறு சொல்கிறது. தந்தி தமிழகத்தில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை.

ரயில் தமிழகத்தில் இன்னும் இருபது வருடம் கழித்தே வந்தது என்று தெரிகிறது –

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் ‘என் சரித்திரம் ‘ நூலில் தான் 1878ம் ஆண்டு மேற்கொண்ட ஒரு புகைவண்டிப் பயணம் பற்றிக் குறிப்பிடுவது :

‘பகல் பனிரெண்டு மணிக்கு (திருவாவடுதுறையில் இருந்து சிதம்பரத்துக்கு) ரெயில் வண்டியிலேறிச் சென்றோம். ரெயில் வண்டி புதிதாக வந்த காலமாதலின் அதில் ஏறிச் செல்வது விநோதமாக இருந்தது. அதிகக் கூட்டமே இராது. வண்டிக்கு இரண்டு பேர்களுக்கு மேல் இருப்பது அருமை. நாங்கள் சிறிது நேரம் எங்கள் இஷ்டம் போல் தனித்தனி வண்டிகளில் ஏறிச் சிரம பரிகாரம் செய்துகொண்டோம்.

பிறகு ஒன்றாகக் கூடி ஓரிடத்தில் இருந்து பேசிக் கொண்டிருந்தோம். யாவரும் ஒன்றாகப் படித்தவர்களாதலால் வேடிக்கையாகப் பல விஷயங்களைப் பற்றிப் பேசினோம். ரெயில் வண்டியில் பிரயாணம் செய்வதைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடல் செய்ய வேண்டுமென்று செய்யத் தொடங்கினோம். எல்லோரும் செய்யுள் இயற்றத் தெரிந்தவர்கள். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் அபிப்பிராயத்தை வைத்துப் பாடல் இயற்றிச் சொன்னார்கள். ஒரே பொருளைப் பற்றிப் பலவகையான கருத்துக்களமைந்த பாடல்களாதனின் அவை ரஸமாக இருந்தன. நான் இரண்டு மூன்று செய்யுட்களை இயற்றிச் சொன்னேன். அவற்றில் ஒரு வெண்பாவின் முற்பகுதி மாத்திரம் இப்போது ஞாபகத்தில் இருக்கிறது.

‘உண்ணலாம் தூசும் உடுக்கலாம் நித்திரையும்

பண்ணலாம் நூல்கள் படிக்கலாம்…. ‘

***

தந்தி வந்ததும் என்ன செய்யணும் ?

வாங்கித் தடவிக் கொடுக்கணும். அதை அடிச்சிருக்காங்க இல்லே, பாவம். பழைய ஆனந்த விகடன் ஜோக் இது. தந்தி வராத இப்போது, வாசலில் இந்துப் பத்திரிகை காலையில் வந்து விழுந்ததும் நாலு மூலையையும் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு உதறுவது என் வழக்கம்.

பிட்ஸா கடை, செட்டிநாடு மெஸ், டியூட்டோரியல் காலேஜ், டாட் நெட் பயிற்சி, லாண்ட்ரெட், தோசை மாவு, போளிக்கடை என்று சென்னையில் நடக்கும் சகலமான வியாபாரத்துக்குமான விளம்பர நோட்டாசுகள் பொலபொலவென்று உள்ளே இருந்து உதிரும். அதை எல்லாம் கழித்து பேப்பர் பாதி கனத்துக்கு இளைக்க, அப்புறம் நிம்மதியாகப் படிக்கலாம்.

இப்படி முன்னேற்பாடோடு செயல்பட்டாலும், சில நோட்டாசுகள் பத்திரிகைக்குள்ளேயே தங்கிவிடும். இன்று காலை இப்படி ஒன்று – தி.நகரில் ப்யூட்டி பார்லர் திறக்கிறார்கள்.

பத்தோடு பதினொண்ணு என்று கசக்கிப் போடும் முன்னால்தான் கவனித்தேன் – இது ஆண்களுக்கு மட்டுமான ப்யூட்டி பார்லர்.

வழக்கமான மலபார் சலூன் ஸ்டைல் ஷேவிங்க், ஹேர் கட்டிங்க், டையிங், தாடி ட்ரிம்மிங்கில் தொடங்கி கை நகம் வெட்டுவது, கால் நகம் வெட்டுவது, கண் இமை முடி சரியாக்குவது, மீசை திருத்துவது என்று நுணுகி ஆராய்ந்து அளிக்கப்படும் பல்துறை சேவைகள்.

இதெல்லாம் பரிச்சயமான சமாச்சாரம் தான். பாங்காக்கிலே அம்மணிகளே எல்லாமுமாகப் பம்பரமாகச் சுழன்று நடத்தும் முடிதிருத்து நிலையங்களில் தலையைக் கொடுத்து விட்டு, முடி வெட்டிக் கொள்ள வந்தேனா புது தினுசு முஜ்ராவுக்கு வந்தேனா என்று சந்தோஷமாகக் குழம்பிய தருணங்கள் உண்டு.

ஆனால் திநகர் ண்கள் ப்யூட்டி பார்லரில் முகத்துக்கு அழகு படுத்த ஃபேஷியல் உபரி சேவை. அதுவும் எல்லாப் பழத்தையும் பிழிந்து கலவையாக்கி அதை முகத்தில் தடவும் ஃப்ரூட்ஸ் ஃபேஷியல்.

சீசனுக்கு சீசன் வரும் பழம் எல்லாம் விற்கிற விலையில் அவனவன் படத்தைப் பார்த்து (இது சினிமாப் படம் இல்லை – பழத்தை வரைந்து வைத்த படம்) மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. பழனி முருகனுக்குப் பஞ்சாமிர்த அபிஷேகம் போல் இங்கே வந்தவன் போனவனுக்கு பழ அபிஷேகமாம்.

ஆண்கள் ஒப்பனை நிலையத்தில் இன்னொரு சேவையும் அளிக்கப்படுகிறதாகத் தெரிகிறது – ப்ரைட்க்ரூம் மேக்கப். மாப்பிள்ளை ஒப்பனை. (சென்னை விமான நிலையத்தில் டாய்லெட் என்று ங்கிலத்திலும் கீழே ஒப்பனை என்று தமிழிலும் எழுதி வைத்திருப்பது சம்பந்தமில்லாமல் நினைவு வருகிறது. ஒண்ணுக்குப் போறதெல்லாம் ஒப்பனையிலே சேர்த்தி என்று நான் நம்பத் தயாராக இல்லை.)

ப்ரைட்க்ரூம் மேக்கப்புக்கு வருவோம். இத்தனை நாள் ப்ரைடல் மேக்கப் தான் இருந்தது. காலையில் அம்மி மிதித்து அப்போதே அவசர அவசரமாக உச்சி வெய்யிலில் புரோகிதர் உத்தேசமாகக் காட்ட அருந்ததி பார்த்து, சீதை மாதிரி ஹோமப் புகைக்கு நடுவே உட்கார்ந்து தாலி கட்டிக்கொண்ட பெண்ணை மத்தியானச் சாப்பாட்டுக்கு அப்புறம் ப்யூட்டி பார்லருக்கு அனுப்பி மேக்கப் என்று எதையோ குழைத்துப் பூசி தாடகை போலத் திருப்பியனுப்பும் சேவைக்கு எசப்பாட்டு போல, இந்த மாப்பிள்ளை மேக்கப்.

மாப்பிள்ளைக்கு அப்படி என்னதான் மாஞ்சு மாஞ்சு மேக்கப் போட்டாலும் அசட்டுக் களையைப் போக்க முடியுமா ? ஒரு ஷேவிங்க். அப்புறம் மீசை (இருந்தால்) சரி செய்தல். தலைக்கு ஷாம்பு. படிய வாரி விடுவது. முகத்துக்கு வேணுமானால் பஞ்சாமிர்த அபிஷேகம் – முதலிரவில் சித்தெறும்பு கடிக்கட்டும்.

இதெல்லாம் போதாது. நம்ம யோசனை :

மாப்பிள்ளைக்கு தீமேட்டிக் மேக்கப் போடலாம். அதாவது சேது விக்ரம் போல், ஆளவந்தான் கமல் போல், அப்புறம் பழைய படத்தில் உரிமைக்குரல் எம்.ஜி.ஆர் போல், நவராத்திரி சிவாஜி போல் (அரை மணிக்கூறுக்கு ஒண்ணு). அப்புறம் கட்டபொம்மன் சிவாஜி, அதே படத்தில் பானர்மேன் ஜாவர் சீத்தாராமன் டைப் மேக்கப் (அந்த மனுஷருக்கு விநோதமான விக் ஒன்றை மாட்டி, உதட்டில் ஏகத்துக்கு லிப்ஸ்டிக் பூசி விட்டிருப்பார்கள். வாயைத் திறந்து பேச ஆரம்பித்தாலே உதடு ஒட்டிக்கொள்ளும் நிலமையில் அவர் எப்படி சக்தி கிருஷ்ணசாமி வசனத்தை எல்லாம் வரி விடாமல் பேசியிருப்பாரோ – சரி அது வேறே கதை).

ராஜராஜ சோழன் கெட்டப்பில் மாப்பிள்ளையும், பக்கத்தில் ஜப்பானிய கிமானோவில் பெண்ணுமாக இருக்க, உச்சத்தில் மன்மத ராசாவே என்று ஒரு சோனியான பெண்ணும், டை கட்டின நாலு இளைஞர்களும் பக்கத்து மேடையில் மைக்கில் கத்திக் கொண்டிருக்க, பிசிபேளாபாத்தில் முந்திரிப்பருப்பைத் தேடிக் கொண்டு மொய் எழுதிய எழுதாத இருநூறு பேரும், ஒவ்வொரு நாற்காலிக்குப் பின்னும் நின்று இலையில் – எப்படா முடிச்சுட்டு ஒழிவான் என்று – ஒரு கண்ணும், மன்மத ராசாவுக்கு ஒரு காதும் கொடுத்து இன்னொரு இருநூறு பேரும் காத்திருக்க, சீக்கிரமே திருமண வரவேற்புகள் கூடுதல் போஷாக்கான கோலாகலங்களோடு நடக்கலாம்.

******

போன வாரபலனில் சில தவறுகள் :

பி.ஏ.கிருஷ்ணன் குறிப்பிட்ட பத்திரிகை ‘இந்தியன் ரிவ்யு’ (இந்தியன் மாகசின் இல்லை). அவர் வையார் பாடலோடு ஒத்த கருத்துடையதாக மேற்கோள்காட்டிய கவிதை பாலி மொழியில் அமைந்தது.

சுட்டிக் காட்டிய பி.ஏ.கே-க்கு நன்றி.

*******

eramurukan@yahoo.com

Series Navigation