வாயு (குறுநாவல் ) 1

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

இரா.முருகன்


1

குளோரியா அம்மாள் அறைக்குள் நுழைந்தபோது நீளமான மேசைக்குப் பின்னால் நாலு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அதில் மூன்று பேர் சூட் அணிந்த கனவான்கள். தலைக்கு பழுப்புச் சாயம் ஏற்றிக் கொண்ட, வயது மதிப்பிட முடியாத ஸ்தூல சரீரம் கொண்ட ஒரு பெண்ணும் உண்டு.

அந்தப் பெண்ணின் கோல்ட் ப்ரேம் மூக்குக் கண்ணாடியும், கழுத்தில் வைரப்பதக்கம் தொங்கும் மாலையும் குளோரியா அம்மாளை யோசிக்க வைத்தன.

சரியான இடத்துக்குத்தானா வந்திருக்கிறேன் ?

என்ன வேண்டும் ?

எதிர்பார்த்ததுபோல் அந்தப் பெண்தான் கேட்டாள்.

இவளிடம் சொல்வது சரியாகப் படுமா ? இடம் தவறி வந்திருந்தால் எசகேடாகி விடும். குளோரியா அம்மாளின் வயதும் தோற்றமும் அவளுக்குக் கொடுக்கக்கூடிய மதிப்பு இல்லாமல் போய்விட வாய்ப்பு உண்டு.

என்ன வேண்டும் ?

போலீஸ் போல் மொடமொடப்பான கோட் அணிந்த வயோதிகக் கனவான் கேட்டார்.

இவரிடம் சொல்வது இன்னும் கஷ்டம்.

ஒரு போட்டிக்கு வந்திருக்கிறேன்.

குளோரியா அம்மாள் தலையைக் குனிந்துகொண்டே சொன்னாள்.

தொலைக்காட்சிக் கம்பெனி நடத்தும் போட்டி. வயது வந்தவர்களுக்கான தொலைக்காட்சி வாய்க்கால் அது. அரசாங்கத்தின் பல மட்டங்களிலும், பத்திரிகைகளிலும் நிறைய விவாதிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

இளைய தலைமுறை கெட்டுப்போக வாய்ப்பு அதிகப்படும் என்றும் பொதுவான சமுதாயச் சீரழிவு வரும் என்றும் சொல்லப்பட்ட வாதங்கள் ஒரு அளவுக்கு மேலே போகவே எக்கேடும் யாரும் கெட்டுப் போகட்டும், அரசாங்கத்துக்கு வரி வந்தால் சரி என்று ஓய்ந்து போய் ஒரு வருடமாகி விட்டது.

இந்த விலாசம் தான். இன்றைக்கு ஒரு போட்டி ஒளிப்பதிவு செய்கிறார்கள். அதில் பங்கு பெறத்தான் குளோரியா அம்மாள் வந்திருக்கிறாள்.

கண்ணாடி போட்ட பெண் தொண்டையைக் கனைத்துக் கொண்டாள்.

என்ன போட்டி என்று கேட்கப் போகிறாள்.

அபானவாயு வெளிப்படுத்தும் போட்டி. சொன்ன மாத்திரத்தில் குசு விடவேண்டும்.

இதை இவளிடம் சொல்வதைவிட இறங்கிப் போய்விடலாம் என்று குளோரியா அம்மாளுக்குத் தோன்றியது.

அவள் திரும்புவதற்காகக் கதவுப் பக்கம் நகர ஆரம்பித்தபோது, கண்ணாடிக்காரி உள்ளே கையைக் காட்டி அங்கே போய் உட்காரும்படி குளோரியா அம்மாவைச் சொன்னாள்.

ஆக,இங்கேதான் போட்டி. சரியான இடத்துக்குத் தான் வந்திருக்கிறோம்.

குளோரியா அம்மாள் உள்ளே நடந்தபோது பின்னால் நாலு ஜோடி கண்கள் சிரித்தபடி பார்த்ததாகத் தோன்றியது.

இல்லையென்று சொல்வதுபோல் அவர்கள் குளோரியா அம்மாளுக்கு அப்புறம் வந்த யாரையோ விசாரிக்க ஆரம்பித்திருந்த சத்தம். தள்ளுகதவை நகர்த்தி உள்ளே போய்க் கொண்டிருந்தவளுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.

உள்ளே படப்பிடிப்புத் தளம். இதைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்பதால் குளோரியா அம்மாள் உடனடியாக அடையாளம் கண்டு கொண்டாள்.

போனவாரம், தோட்டத் தெருவில் சீமாட்டி வீட்டுக்குப் போய் அந்தப் பெண்மணியும் அவளுடைய கணவரும் வீடு திரும்பக் காத்திருந்தபோது முன்னறையில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது நடையில் இருந்தே தெரிந்தது.

சீமாட்டியின் மகனோ மருமகனோ பார்த்துக் கொண்டிருந்தான். குளோரியா அம்மாளை உள்ளே அழைத்து உட்காரச் சொல்லவில்லை அவன்.

வெளியே சிறிய பூங்கா உண்டு. அங்கே சிமிட்டி பெஞ்ச் இரண்டு உண்டு. காற்றாட உட்காருங்களேன் என்று மட்டும் சொல்லிவிட்டு அவன் தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தான்.

குளோரியா அம்மாள் குடியிருந்த இடத்தில் தொலைக்காட்சி கிடையாது.

தொலைக்காட்சி என்று இல்லை. உட்கார நாற்காலி, படுக்கப் படுக்கை என்று கூட இல்லை.

மாதாமாதம் குளோரியா அம்மாள் வீட்டுக்காரரின் குடும்பப் பென்ஷனாக ஒரு சிறுதொகை அவளுக்கு வரும். அந்தப்பணத்தில் வாடகை கொடுத்து சாப்பிட்டு உயிர்வாழ வேறு எந்த இடமும் கிடைக்காதுதான்.

இடிந்து கொண்டிருக்கும் கட்டிடம். இன்னும் ஐந்து வருடங்களில் வாசலில் ‘அபாயமான புராதனக் கட்டிடம். நெருங்காதீர்கள் ‘ என்று பலகை வைத்து, ஜன்னல்களை எல்லாம் பலகை அடைத்து ஆணியடித்து மூடி விட்டுவிடுவார்கள். அப்புறம் ராட்சத வாகனம் ஒன்று அதை இடிக்க வரும்.

கட்டிடம் இல்லாமல் போவதற்குள் குளோரியா அம்மாள் இறந்து விடுவாள். அவளுக்குத் தெரியும்.

குளோரியா அம்மா நடையில் நின்றபடியே ஒரு நிமிடம் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் கவனித்தபோதுதான் அறிவிப்பு.

கை நிறையக் கணிசமான தொகை தருவார்கள். அடுத்தவாரம் நடக்க இருக்கும் போட்டி.

அபானவாயு வெளியேற்ற வேண்டும். அதுவும் சொன்ன மாத்திரத்தில்.

விலாசம் சொன்னார்கள். அவசர அவசரமாக உள்வாங்கி, வாசல் பூங்காவில் உட்கார்ந்து, கைப்பையில் காகிதம் தேடிக் குறித்துக் கொண்டிருந்தபோது கார் வந்து நின்றது.

அந்த சீமாட்டி, குளோரியா அம்மாளுக்கு முதியோர் உதவித் தொகை வாங்கித்தரவோ, அரசாங்க முதியோர் பராமரிப்பு இல்லத்தில் தங்க ஏற்பாடு செய்யவோ முடியாது என்று சொல்லி விட்டாள்.

நிர்க்கதியான முதியவர்களுக்காக அரசாங்கம் திறந்து வைத்திருக்கும் விடுதி அது.

போன அரசாங்கம் பதவியில் இருந்தபோது அதைத் தொடங்கினார்கள். ஒரு வருடம் போல் அங்கே குளோரியா அம்மாள் தங்கி இருந்தாள் அங்கே. தொலைக்காட்சிப் பெட்டி கூட முதல் சில நாள் இருந்தது. ஜனாதிபதி பேச்சையும், தேசபக்தி கானங்களையும், பழைய திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளையும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி அப்புறம் அது காணாமல் போனது.

அப்புறம் அரசாங்கம் மாறியபோது அங்கே இருந்த பலரோடு குளோரியா அம்மாளும் வெளியேற்றப்பட்டாள்.

அங்கே குளோரியா அம்மாள் திரும்ப ஏற்பாடு செய்யமுடியாது என்று சொன்ன சீமாட்டி எதிர்க்கட்சி என்று சொன்னார்கள். அதெல்லாம் குளோரியா அம்மாளுக்கு ஒன்றும் தெரியாது.

யார் யாரையோ கேட்டு பஸ்ஸைப் பிடித்து வந்து இங்கே சொன்ன நேரத்தில் சொன்னபடி அபானவாயு வெளியேற்றினால் பணம் கிடைக்கும். அதுமட்டும் தெரியும்.

(தொடரும்)

Series Navigation