வாயு – அத்தியாயம் நான்கு

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

இரா முருகன்


ஆரம்பித்து விடவேண்டியதுதான்.

தாடிக்காரன் உள்ளே வந்தான். எதற்கென்று தெரியாமல் முன்வரிசைக் கிழவர் எழுந்து நின்றார். குளோரியா அம்மாளும்.

தாடிக்காரன் முடி மறைத்தது போக மிச்சமிருந்த முகத்திலும் முன் தலையிலும் பல வண்ணச் சாயங்களைப் பூசி இருந்தான். அவன் கண்களைச் சுற்றி கருப்புக் கண்ணாடி போட்டது போல் மசியாலோ வர்ணப் பொடியாலோ வரைந்து வைத்திருந்தது.

வரிசையாக மடிந்து இருந்த கால்களை விலக்கியபடிக்கு கறுப்பி திரும்பி தன் இடத்துக்கு வந்தாள்.

இடத்தைத் தக்க வைத்திருந்ததற்கு நன்றி.

அவள் குளோரியா அம்மாவிடம் சொன்னாள். கடைசியாக வாயில் இட்டு மென்ற மொச்சைகளை விழுங்கியபடி குளோரியா அம்மாள் அதனால் என்ன பரவாயில்லை என்று தலையசைத்தாள்.

கறுப்பி கழிவறைக்குப் போனபோது அவளுடைய கைப்பையில் இருந்து மொச்சைகளை எடுத்துச் சாப்பிட்டது பற்றி குளோரியா அம்மாளுக்குச் சங்கடமாக இருந்தது.

மாதவிலக்கு வேறு வந்து தொலைத்து விட்டது.

கறுப்பி குளோரியா அம்மாளிடம் திரும்ப ரகசியமாகச் சொன்னாள்.

துவாலை வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் சத்தம் வெளியே கேட்காமல் அது தடை செய்யலாம் என்று தோன்றவே அப்படியே வந்து விட்டேன்.அழுத்தமான உள்ளாடை. சமாளித்து விடலாம். இன்னும் ஒரு மணி நேரத்தில் எல்லோரும் குசு விட்டு முடித்து விடமாட்டார்களா என்ன ?

கறுப்பி வேறு வேலை எதுவும் பாக்கி இல்லை என்பது போல் இன்னொரு பிடி மொச்சையை எடுத்து மெல்ல ஆரம்பித்தாள்.

குளோரியா அம்மாள் அவளை தன் வாழ்நாளில் அனுபவப்பட்ட துக்கம் அனைத்தும் சேர்ந்து கவியப் பார்த்தாள்.

இரண்டு வாரம் முன்னால் இறந்து போன கணவன். சவப்பெட்டி மழையில் நனைந்து தரைக்கு மேலே பளுத்தூக்கியில் தொங்கிக் கொண்டிருக்கிறது. திரும்ப நல்லடக்கம் செய்யப் பணம் வாங்கிப் போக வேண்டும். அபானவாயு வெளியேற்ற இம்சை செகிறது போல் இவளுக்கு இப்போது மாதவிலக்கு வேறு.

கண்ணாடித் தடுப்புக்கு அப்புறம் இருந்து ஒலிவாங்கி மூலம் யாரோ எல்லோரையும் சுபாவமாக முன்னால் பார்த்தபடி கைதட்டச் சொன்னார்கள்.

பல் மருத்துவ மாணவர்கள் சீழ்க்கை ஒலி எழுப்ப மற்றவர்கள் பலமாகக் கைதட்டிக் கொண்டிருக்க, பளபள என்று உடையணிந்த அழகிய பெண் ஒருத்தி ஒயிலாக நடந்து வந்து தாடிக்கார ஹோவ்ஸ் பக்கம் நின்று சிரிப்பைச் சிந்தியபடி கையசைத்தாள்.

சிரிப்பு இன்னும் சில வினாடிகள் நீண்டால் நன்றாக இருக்கும்.

கண்ணாடித் தடுப்புக்குப் பின்னால் இருந்து கடவுள் மாதிரி யாரோ பேசினார்கள். திரும்பக் கைதட்ட எல்லோரும் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

அழகி வாசலுக்குப் போய்த் திரும்ப நடந்து வந்தாள். இந்தத் தடவை பல் மருத்துவ மாணவர்களும் சீழ்க்கை ஒலிக்காமல் கைதட்டினார்கள்.

அவள் தன்னைக் கடந்து போகும்போது கிழவர் மெல்லச் சீழ்க்கை ஒலிக்க அந்தப் பெண் சற்று நின்று அவர் கன்னத்தில் மெத்தென்று முத்தமிட்டாள். அவளுக்கு மரு முத்தம் தர கிழவர் எழுந்தபோது இரும ஆரம்பிக்க அவர் நெஞ்சைத் தடவிக் கொடுத்தாள் அவள்.

அறை முழுக்க சிரிப்பு. கிழவர் எல்லாப் பெருமைக்கும் உரியவராக உற்சாகமாகக் கைதட்டினார்.

இந்த வயசன் இன்று முதல் பரிசோடு நடக்கப் போகிறார்.

குளோரியா அம்மாள் அசூசையோடு அவரைப் பார்த்தாள்.

இந்தத் தடவை அவள் முகத்தில் அழுத்த ஒட்டி வைத்த சிரிப்போடு இரண்டு கைகளையும் அகல விரித்து அசைத்தபடி நிற்க, முடி இல்லாத அவளுடைய கையிடுக்குகள் குளோரியா அம்மாள் பார்வையில் பட்டன.

பரிசுத்தமான யுவதி. குளோரியா அம்மாளுடைய கணவன் இருந்தால் அவளை ஆராதித்திருப்பான். குளோரியா அம்மாள் யுவதியான குளோரியாவாக அவனோடு முதல்முதலாகப் படுக்கைக்குப் போனபோது அவள் கையிடுக்குகளைப் பார்த்து அவன் முகத்தைச் சுளித்தபடி விளக்கை அணைத்தது நினைவு வந்தது.

ஒரு ரேசர் வாங்க உங்கள் வீட்டில் பணம் இல்லையா ?

கோழி இறைச்சி சாப்பிட்ட வாடையோடு அவன் கேட்டபடி குளோரியாவுக்கு முத்தம் கொடுத்தபோது அவள் வாயைத் திறந்து பதில் சொல்லவோ திரும்ப அவனை முத்தமிடவோ பயந்தாள். அப்போது பல் தேய்த்திருக்கவில்லை அவள். அவள் அந்தரங்க சுத்தி பற்றி அவன் குறைப்பட்டுக் கொண்ட அவமானம் வேறு அப்போது.

ஹோவ்ஸ் ஒலிவாங்கியை அந்தப் பெண்ணிடம் விளையாட்டாகத் தூக்கிப்போட அது அவள் மார்புக் குவட்டில் போய் விழுந்தது. அவன் அதை எதிர்பார்த்திருந்தான் என்று குளோரியா அம்மாளுக்குப் பட்டது.

அந்தப் பெண் பொய்க் கோபத்தோடு ஹோவ்ஸைப் பார்த்துவிட்டு ஒலிவாங்கியை எடுத்துப் பிடித்துக் கொண்டு புணரப் போ என்று சொன்னாள்.

இந்தப் போட்டியை நடத்தி முடித்ததும் அதையே தான் செய்யப் போகிறேன்.

தாடிக்காரன் கூட்டத்தைச் சுற்றிப் பார்வையை ஓட்டியபடி சொன்னான்.

எதற்கோ எல்லோரும் கைதட்டினார்கள். குளோரியா அம்மாளும்.

உலகத்தின் எண்பது நாடுகளில் ஒரு நாளைக்கு எழுபது கோடி போத்தல் குடித்துத் தீர்க்கப்படும் குளிர்பானக் கம்பெனி சார்பில் ஹோவ்ஸ் நேரம் நிகழ்ச்சியின் அறுபத்துநான்காவது நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறேன்.

இன்னும் பலமான கைதட்டு. தாடிக்காரனும் அதில் கலந்து கொண்டான்.

இன்றைக்கு என்ன போட்டி ?

அந்த அழகி அப்பாவியாக ஹோவ்ஸைக் கேட்க, அவன் திருதிரு என்று விழித்துத் தெரியாதே என்றான்.

இவர்களுக்குத் தெரிந்திருக்கும். கேட்கலாம்.

அவன் உரக்கக் கூவியபடி கூட்டத்தைப் பார்க்கக் குளோரியா அம்மாளுக்கு நடுக்கமாக இருந்தது. அவன் அவளைக் கேட்கக் கூடும்.

தாடிக்காரன் கடைசி வரிசைப் பெண்ணைப் பார்த்துக் கையசைத்து அருகில் வரச் சொல்லிக் கூப்பிட்டான்.

அவள் பக்கத்தில் இருந்த மொட்டைத்தலை நண்பன் அவளை இனியெப்போதும் சந்திக்க முடியாதபடி ஒரேயடியாகப் பிரிவது போல் பார்த்து கடைசி முறையாக அவசர முத்தமிட்டு வழியனுப்பி வைத்தான்.

அருகில் வந்த அவளை குளிர்பான அழகி கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றாள்.

அவன் உன் முதல்முதலான சிநேகிதனா ?

ஹோவ்ஸ் மொட்டைத் தலையனைச் சுட்டிக் காட்டியபடி கேட்டான்.

அறையில் குளிர் அதிகமாக இருந்தது போல் குளோரியா அம்மாளுக்குப் பட்டது. மேல்சட்டையின் கழுத்துப் பக்கப் பொத்தானை இழுத்து அணிந்து கொண்டாள் அவள். இந்தக் குளிரில் அடுத்துச் சிறுநீர் கழிக்க உபாதை ஏற்படலாம் என்று கவலை வேறு. அதைப் பற்றி நினைத்தால் உடனே கழிவறைக்குப் போகச் சொல்லி உடம்பு உபத்திரவப்படுத்தும் என்பதால் பிடிவாதமாக அதை மனதில் இருந்து அகற்றிவிட்டு த்ாடிக்காரனின் கண்ணைச் சுற்றி முகமூடி போல் வரையப்பட்ட கருப்புப் பட்டைகளைக் கவனமாகப் பார்க்க ஆரம்பித்த்தாள் அவள்.

இந்த மொட்டையன் என் முதல் சிநேகிதன் இல்லை. இரண்டாவது. என் முதல் சிநேகிதன் ஒரு கோடாசுவரத் தொழிலதிபரின் மகன். இவன் மதுக்கடையில் வேலை பார்க்கிறான்.

அந்தப் பெண் சொன்னாள்.

முதல் சிநேகிதனை ஏன் தலைமுழுகினாய் ?

ஹோவ்ஸ் கேட்டான்.

அந்தப் பெண் ஒலிவாங்கியால் கழுத்திலிருந்து இடுப்பு வரை கோடுபோல் இழுத்தபடி இப்படியும் அப்படியும் அசைந்தாள்.

அவன் ஒரு சந்தேகப்பிராணி.

நீ பெண்ணா என்பதில் சந்தேகமா அவனுக்கு ?

தாடிக்காரன் கேட்டபோது சிரிக்க வேண்டிய நேரம் என்று உணர்ந்ததுபோல் எல்லோரும் சிரித்தார்கள். குளோரியா அம்மாள் கழிவறைக்குப் போக எழுந்தால் யாராவது ஏதாவது சொல்வார்களோ என்று புரியாமல் பார்த்தாள்.

அந்தப் பெண் கூர்மையான முனை கொண்ட உயரச் செருப்பு அணிந்த காலை ஹோவ்ஸை நோக்கி உதைத்துக் காட்டினாள்.

அவனை நான் ஏற்கனவே புணரப் போகச் சொல்லி விட்டேன். காலுக்கு நடுவில் உதைத்து அவனைக் காயடித்து விடாதே.

குளிர்பான அழகி ஆதரவாகச் சொன்னாள்.

அழகாகத் தலைமுடியை ஒதுக்கியபடி கடைசி வரிசைப் பெண் ஒலிவாங்கியை நேராகப் பிடித்தாள்.

என் முதல் சிநேகிதன் உறவு முடிந்த பிறகு ஆணுறையைக் கவனமாக அகற்றிப் பாக்கெட்டில் போட்டுக் கொள்வான்.

ஏன் அப்படி ?

ஹோவ்ஸ் நம்ப முடியாத செய்தியைக் கேட்டது போல் முகத்தை வைத்துக் கொண்டு விசாரித்தான்.

அதுவா ? நான் அதைக் கிளப்பிக் கொண்டுபோய் வழித்துப் பூசிக் கருவுற்றுப் பிரச்சனை உண்டாக்கக் கூடும் என்ற சந்தேகம்தான்.

ஆண்கள் எல்லாம் பன்றிகள்.

குளிர்பானப் பெண் சொன்னாள். காயடிக்கப்பட வேண்டிய பன்றிகள் எல்லோரும்.

கூட்டம் திரும்பக் கைதட்டியது.

இந்த மொட்டையன் எப்படி ?

ஹோவ்ஸ் விசாரித்தான்.

என்னிடம் ஆணுறை வாங்கப் போதிய பணம் இல்லை.

கடைசி வரிசையில் இருந்து மொட்டையன் கத்தினான்.

உன் சிநேகிதி சம்பாதிக்கிறாளா பார்ப்போம்.

ஹோவ்ஸ் சொல்லியபடி அவளைப் பார்த்து இன்று என்ன போட்டி என்று கேட்டான்.

பல் மருத்துவ மாணவர்கள் ஒரே குரலில் வாயால் ஒலி எழுப்பிக் காட்டினார்கள்.

அதேதான். தொடங்கலாமா ?

ஹோவ்ஸ் கடைசி வரிசைப் பெண்ணை விசாரித்தான்.

ஒன்று இரண்டு சொல்வேன். ஐந்து சொல்லும்போது நீ வெளியேற்ற வேண்டும்.

தாடிக்காரன் எண்ண ஆரம்பித்தான்.

குளோரியா அம்மாளுக்கு உடனே நீர் பிரிய எழுந்திருக்க வேண்டும் என்று உடம்பு தொல்லை கொடுக்கத் தொடங்கியது.

(தொடரும்)

Series Navigation