வாயு – அத்தியாயம் ஆறு (இறுதிப்பகுதி)

This entry is part [part not set] of 28 in the series 20030323_Issue

இரா முருகன்


அவர் இறந்துபோய் அரை மணி நேரமாகி விட்டது.

மருத்துவர் யாரிடமோ சொல்லியபடியே உள்ளேயிருந்து வந்தார்.

குளோரியா அம்மாளும் கறுப்பியும் வாசலுக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தார்கள். மருத்துவர் அவர்களைப் பார்த்தபடியே காரில் ஏறினார்.

மாரடைப்பு. உடனே போய்ச் சேர்ந்து விட்டார். கொடுத்து வைத்த கிழவர். என் வீட்டுக்காரனைப் போல் மாதக் கணக்கில் இழுத்துக் கொண்டு கிடந்து சாகவில்லை.

கறுப்பி குளோரியா அம்மாளிடம் சொன்னாள்.

குளோரியா அம்மாளுக்குத் தன் வீட்டுக்காரனின் கடைசி தினம் நினைவு வந்தது.

அவன் நடு வயது தொடங்கும்போதே போய்ச் சேர்ந்து விட்டான். சிறிய அரசாங்க அலுவலகத்தில் கோப்புகளை அங்கும் இங்கும் சுமந்து போகும் வேலையில் இருந்தான்.

விடுமுறை நாட்களில் வீட்டு முன்னறையில் உட்கார்ந்து வயலின் வாசித்துக் கொண்டிருப்பான். சவப்பெட்டி போல் செய்யப்பட்டிருந்த கருப்பு மரப்பெட்டியில் வைத்திருக்கும் அந்த வயலினை அவன் எப்போது எடுத்தபோதும் அவலமும் நாராசமுமாகச் சத்தம் வரும்.

அரசாங்கப் பங்கீட்டு உணவு வழங்கும் கடையில் சோயா மொச்சைகளை வாங்கி வியர்த்து விறுவிறுத்து குளோரியா வீட்டுக்குள் நுழைந்த ஒரு விடுமுறை நாள் பகல் பொழுதில் அவளைப் பையை வைத்து விட்டு உடனே படுக்கைக்கு வரும்படி அவன் அவசரப்படுத்தினான்.

சவப்பெட்டி போன்ற வயலின் பெட்டி சுவரில் குளோரியா அம்மாள் தலைக்குப் பக்கமாகச் சாய்ந்திருக்க அவளுடைய வியர்வை அடங்குவதற்கு முன்பே உடையைக் களைந்து உறவு கொள்ள ஆரம்பிக்கும்போது அவள் சத்தமாகக் குசு விட்டாள்.

நீ காதலிக்கவும், கூடவும், குழந்தை பெற்று குடும்பம் நடத்தவும் அறுகதை கொஞ்சம் கூட இல்லாதவள். புருஷனுக்குச் சுகம் கொடுக்காமல், படுக்கையில் கிடந்து வாயு வெளியேற்றும் ஒரு பெண்ணை இப்போது தான் பார்க்கிறேன். நான் கூடப் படுத்துச் சுகித்த அரைக் கிழட்டு வேசி கூட இப்படி என்னை அவமதித்ததில்லை.

அவன் சொல்லியபடியே இறங்கிப்போக, குளோரியா கொஞ்ச நேரம் அழுதாள். அப்புறம் அந்த வயலில் அடைத்த சவப்பெட்டியைத் தலைக்கு அணையாக வைத்தபடி தூங்கி விட்டாள். அரசாங்கப் பங்கீட்டுக் கடைக்கு இரண்டு மைல் போக வர நடந்து, வெய்யிலில் மூன்று மணி நேரம் காத்திருந்து சோயா மொச்சை வாங்கி வந்த களைப்பு அவளுக்கு.

அன்றைக்கு வெளியே போன குளோரியா அம்மாளின் கணவன் இரண்டு நாள் கழித்து இரண்டு பேர் கைப்பிடியாகப் பிடித்துக் கூட்டிவரத் தள்ளாடியபடி வீட்டுக்குள் நுழைந்தான்.

நாள் முழுக்கக் குடித்துக் கொண்டே இருந்தார். வாயு, படுக்கை என்று ஏதோ பிதற்றல் வேறு. மதுக்கடைக்காரன் இதற்கு மேல் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டான்.

கூட்டி வந்தவர்கள் சொல்லி விட்டுப் போன அரைமணி நேரத்தில் பெரிதாக ஒரு விக்கல் எடுத்து அவன் மரித்துப் போனான்.

சதுர வில்லைகள் கொண்ட அவனுடைய மூக்குக் கண்ணாடி இல்லாமலே தான் அவனைப் புதைத்தார்கள். அதை அவன் மதுக்கடையிலேயே தவற விட்டு விட்டு வந்துவிட்டான் என்று குளோரியா அம்மாளுக்குத் தோன்றியது.

இந்தக் கிழவரின் மூக்குக் கண்ணாடி என்ன ஆனது ? இவர் கீழே விழுந்தபோது உடைந்து நொறுங்கி இருக்குமோ ?

அவள் யோசித்தபடி உள்ளே பார்த்தாள்.

அங்கே வெள்ளைத் துணி போட்டுக் கிழவரின் உடலை மூடி மேடையிலேயே வைத்திருந்தார்கள்.

தாடிக்காரனும் அவன் கூட நிகழ்ச்சி நடத்த வந்திருந்த குளிர்பானப் பெண்ணும் போன இடம் தெரியவில்லை. வாசலில் உட்கார்ந்து இருந்த கனவான்களும், தலைக்குச் சாயம் தோய்த்த பெண்ணும் கைக்கடக்கமான தொலைபேசிகளில் பேசியபடியே அங்கேயும் இங்கேயும் அவசரமாக நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

மொட்டைத் தலையன் தன் சிநேகிதியோடு குளோரியா அம்மாள் நின்றிருந்த இடத்துக்கு வந்தான்.

இன்றைக்கு இதற்கு மேல் நிகழ்ச்சி நடக்குமா என்று தெரியவில்லை. நாங்கள் கிளம்புகிறோம். உங்களை எங்காவது இறக்கி விட வேண்டுமா சொல்லுங்கள். என் காரில் கூட்டிப் போய் இறக்கி விட்டுப் போகிறேன்.

குளோரியா அம்மாளிடம் அவன் மரியாதையாக விசாரித்தான்.

இல்லை. உங்களுக்கு சிரமம் வேண்டாம். நான் போய்க் கொள்கிறேன்.

குளோரியா அம்மாள் மெல்லச் சொன்னாள்.

அவளுக்கு அவர்களுடன் காரில் போக விருப்பமில்லை. சின்னஞ் சிறிசுகள். காரில் முத்தம் கொடுப்பதற்கும் மேல் இன்னும் நெருக்கமாக நடந்து கொள்வார்கள். குளோரியா அம்மாள் கூட இருந்தால் எல்லோருக்கும் சங்கடம். அவள் இங்கிதம் இல்லாமல் வாயு வெளியேற்றி விடவும் கூடும்.

மேலும், இங்கேயே இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் அடுத்த நிகழ்ச்சி எப்போது என்று அறிவிக்க வாய்ப்பு உண்டு. இன்றில்லாவிட்டால் இன்னொரு நாள் குளோரியா அம்மாள் ஜெயிக்கக் கூடும்.

கிழவர் கூட இப்போது போட்டியில் இல்லை. குளோரியா அம்மாளுக்கே முதல் பரிசு கிடைக்கலாம்.

மொச்சைகள். இன்னொரு தடவை சாப்பிட வேண்டியிருக்கும். பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் அதை வாங்கப் பணம் கிடைக்குமோ ?

பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சத்தம் போடாமல் கூட்டமாக வந்து வாசலில் நிறுத்தி இருந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டிருந்தபோது குளிர்பானப் பெண் அவசரமாக வெளியே வந்தாள். கூடவே வாசல் கனவான்களில் ஒருவரும்.

கொஞ்சம் எல்லோரும் கவனியுங்கள்.

அவள் முக்கியமான அறிவிப்பைச் சொல்கிறவளாக மேஜைக்கு அருகே நின்றபோது குளோரியா அம்மாளும் கறுப்பியும் அவளுக்கு நெருக்கமாகப் போய் நின்றார்கள்.

கிழவரின் சவத்தை இரும்புப் படுக்கையில் வைத்து உள்ளே இருந்து எடுத்து வந்து வாசலில் ஆம்புலன்ஸில் ஏற்றிப் போகிறவரை குளிர்பானப் பெண் அமைதியாக இருந்தாள்.

சத்தமாக அகவிக் கொண்டு ஆம்புலன்ஸ் புறப்பட்டுப் போக, அவள் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்.

இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாமல் போனதற்காக உலகின் எல்லா நாடுகளிலும் இந்த நொடியில் முப்பது லட்சம் மக்கள் குடித்துக் கொண்டிருக்கும் குளிர்பானத்தின் தயாரிப்பாளர்களான எங்கள் கம்பெனி சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை வெறும்கையுடன் திரும்பச் செய்யக்கூடாது என்று எங்கள் நிறுவனத் தலைவர் எனக்கு இப்போது தொலைபேசினார்.

நிகழ்ச்சிக்கு முதலில் வந்த இரண்டு பேருக்கு ஆளுக்கு இருபத்தைந்து பெரிய நாணயங்களும் மற்றவர்களுக்கு ஆளுக்கு ஐந்து நாணயங்களும் தரச் சொல்லி இருக்கிறார். கூடவே உலகின் எண்பது நாடுகளில் விற்பனையில் முதலிடம் வகிக்கும் எங்கள் குளிர்பானத்தை எழுபது சதவிகிதம் தள்ளுபடியில் வாங்கச் சலுகைக் கூப்பன்களும் வழங்கப்படும்.

அவள் சொல்லி நிறுத்தியபொழுது கைதட்டலை எதிர்பார்ப்பது போல் தெரிந்தாள் குளோரியா அம்மாளுக்கு.

குளோரியா அம்மாள் முன்னால் வந்திருக்கவில்லைதான். ஆனால் மொட்டைத் தலையனும் அவன் சிநேகிதியும் திரும்பிப் போய்விட்டதாலும், கண்ணாடிக் கிழவர் இறந்து போனதாலும், கறுப்பியும் குளோரியா அம்மாளும்தான் முதலில் வந்தவர்களாகக் கணக்கிடப்பட வேண்டும்.

வாசல் கனவான் இதைக் குளிர்பானப் பெண்ணிடம் சொல்வார் என்று அவள் எதிர்பாக்க, அவரோ இங்கே இன்றைக்கு முதலில் வந்தது யார் என்று உயிரே இல்லாத குரலில் விசாரித்தார்.

நானும் இந்த அம்மாளும்தான்.

கறுப்பி திடமான குரலில் சொல்லியபடி குளோரியா அம்மாளைச் சுட்டிக் காட்டும்போது பர்ர்ர் என்று பெருஞ்சத்தத்தோடு வாயு வெளியேற்றினாள்.

யாரும் சிரிக்கவோ, கறுப்பி சொன்னதை மறுக்கவோ இல்லை.

அப்படியானால் நீங்கள் இருவரும் இங்கே வந்து நில்லுங்கள். மற்றவர்கள் அந்தப் பக்கமாக வர முடியுமா ?

குளிர்பானப் பெண் வினயமாகக் கேட்டபடி குளோரியா அம்மாளையும், கறுப்பியையும் மேஜைக்கு முன்னால் நிறுத்தி வைத்து, இழுப்பறையிலிருந்து காகிதங்களை எடுத்தாள்.

இரண்டு காகிதங்களில் வரிவரியாக எழுதியிருந்ததற்குக் கீழே எச்சில் நனைத்து ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிக் குளோரியா அம்மாளிடமும் கறுப்பியிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டாள்.

ஒரு முறைக்கு இருமுறையாக எண்ணி ஆளுக்கு இருபத்தைந்து பெரிய நாணயங்களை வாசல் கனவான் அளித்தார்.

தலையில் சாயம் தோய்த்த பெண்மணி நிறையச் சிறு துண்டுச் சீட்டுக்களோடு வந்து, கைத் தொலைபேசியில் பேசியபடியே குளிர்பானப் பெண்ணிடம் நீட்டினாள்.

இந்தாருங்கள். உங்களுக்கு எண்பது சதவிகிதத் தள்ளுபடிக் கூப்பன்கள் ஆளுக்குப் பத்து. நான்கு உன்னதமான சுவை கொண்ட எங்கள் குளிர்பானத்தை நாள் முழுக்கப் பருகி மகிழ உங்களுக்கு வாழ்த்துக்கள்.

குளோரியா அம்மாள் நாணயங்களைக் கைப்பையில் வைத்துக் கொண்டாள். குளிர்பானக் கூப்பன்களையும் பத்திரமாக உள்ளே வைத்தபடி எல்லோரையும் பொதுவாகப் பார்த்து நன்றி சொன்னாள்.

முதல்வரிசைக் கிழவருக்குப் போக வேண்டியதில் ஒரு பகுதி இந்தப் பணம் என்று தோன்றியது அவளுக்கு. ஆப்பிரிக்காவில் மர நாய்களின் இனம் அழியாமல் தடுக்கப் பயன்பட வேண்டியதைத் தான் தட்டிப் பறித்தது சரியில்லை என்று பட்டது.

மரநாய்கள் அழியாமல் இருந்திருக்கலாம். குளோரியா அம்மாளுக்கு மூன்றாம் பரிசு கிடைத்து மூன்று மாத உணவுத் தட்டுப்பாடு இல்லாமல் இருந்திருக்கும். கறுப்பியின் கணவன் சுக்காக உலர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டிருப்பான்.

கிழவர் உ;யிரை விட்டதற்குப் பதில் கிரமமாகக் குசு விட்டிருக்கலாம். மற்றவர்களும் அடுத்தடுத்து வாயு வெளியேற்றி இன்று நாள் சாதாரணமாகப் போயிருக்கலாம்.

அவள் கிளம்பும்போது கறுப்பியிடம் சொல்லிக் கொண்டாள்.

உங்கள் வீட்டுக்காரரை நல்லடக்கம் செய்து அவருக்கு நற்கதி கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.

அவள் சொன்னபோது கறுப்பி பர்ர்ர்ர் என்றாள்.

அவனுக்கு அவ்வளவாக அதிர்ஷ்டம் இல்லை என்று நினைக்கிறேன். இருபத்தைந்து நாணயங்களில் இருபதுக்கு சாதாரண மரப்பெட்டியில் வைத்து அவனைப் பொதுக் கல்லறையில் புதைத்து விட்டு நான் சாப்பிடப் போகிறேன். இந்தச் சனியன் பிடித்த மொச்சைகளை இல்லை. கோழி மாமிசமும் ரொட்டியும்.

குளோரியா அம்மாளுக்கும் பசி உச்சத்தில் இருந்தது. மொச்சை கிடைத்தால் கூடச் சரிதான்.

கையில் இருபத்தைந்து நாணயங்கள் உண்டு. ஒரு மாத உணவு வாங்க அவை போதும்.

அவள் நடந்தபோது வெய்யில் குறைந்து மேக மூட்டம் போட்டிருந்தது. எந்த நிமிடமும் மழை வரக்கூடும். மழைக்கு முன் வீடு போய்ச் சேர வேண்டும்.

பேரங்காடி கண்ணில் பட்டது.

குண்டூசியில் இருந்து தொலைக்காட்சிப் பெட்டி வரை விற்கிற கடை. இங்கே நல்லதாக இரண்டு கேக்குகள் வாங்கலாமா ?

பேரங்காடியில் நுழையும்போதே திரும்பிய இடத்தில் எல்லாம் குளிர்பான விளம்பரம் கண்ணில் பட்டது. உலகத்திலேயே அந்தக் குளிர்பானம் தவிர வேறெல்லாம் அஸ்மதித்துப் போய் விட்டிருக்கிறது.

அவளுக்குக் கைப்பையில் வைத்திருந்த குளிர்பான விலைத் தள்ளுபடி கூப்பன்கள் நினைவு வந்தன.

அவற்றில் ஒன்றை வெளியே எடுத்து, விற்பனை செய்ய நின்றவனிடம் நீட்டினாள்.

எந்தச் சுவையில் உங்களுக்குக் குளிர்பானம் வேண்டும் ? அடேயப்பா, எண்பது சதவிகிதம் தள்ளுபடியா ? கொடுத்து வைத்தவர்தான் நீங்கள்.

அவ்ன் குளோரியா அம்மாளை மரியாதையோடு பார்த்தபடி சொன்னான்.

எனக்குக் குளிர்பானம் வேண்டாம். அந்தத் தள்ளுபடித் தொகைக்கு ஈடான ரொட்டியோ சோயா மொச்சையோ கிடைக்குமானால் நன்றாக இருக்கும்.

குளோரியா அம்மாள் மெல்லச் சொன்னாள். கேக்குகளையும் சேர்த்துச் சொல்லத் தயக்கமாக இருந்தது.

மன்னிக்க வேண்டும். குளிர்பானம் தவிர வேறு எதுவும் வாங்கவோ, மாற்றவோ இந்த அதிர்ஷ்ட்டக் கூப்பன்களை உபயோகிக்க முடியாது.

அவன் கண்டிப்பாகச் சொன்னபடி கூப்பனைத் திருப்பிக் கொடுத்தான்.

பசி என்றது வயிறு திரும்பவும்.

சும்மாக் கிட கொஞ்ச நேரம். ரொட்டி வாங்கி இங்கேயே ஒரு ஓரமாக உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதான்.

குளோரியா அம்மாள் யாருக்கோ சொல்வது போல் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

ஏதாவது சொன்னீர்களா ?

விற்பனைக்கார இளைஞன் மரியாதை விலகாமல் கேட்டான்.

குளோரியா அம்மாள் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டுத் திரும்ப உத்தேசித்தபோது பேரங்காடியின் மறுகோடியில் துணிகள் விற்பனைக் கடையில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

அங்கே நடந்தபோது தெரிந்தது – எல்லாத் துணிகளும் எழுபது சதவிகிதம் தள்ளுபடியில் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கின்றன.

நைந்து கொண்டிருக்கும் தன் அங்கி நினைவுக்கு வந்தது குளோரியா அம்மாளுக்கு.

அங்கி வேண்டும். என் அளவுக்கு அங்கி இருக்கிறதா ?

கூட்டத்தைக் கடந்து விற்பனைப் பிரிவில் நிற்கும் இளைஞனின் காதில் விழும்படி பிரயத்தனத்தோடு சத்தம் எழுப்பிக் கேட்டாள்.

இருக்கிறதே. பதினேழே நாணயங்கள். கொள்ளை மலிவு.

அவன் சிரித்தபடி சொல்லியபடி ஓரமாகக் குவித்து வைத்திருந்த பல வண்ண அங்கிகளைச் சுட்டிக் காட்டினான்.

பதினேழு நாணயங்கள் அங்கிக்குப் போக மீதம் இருக்கும் எட்டு நாணயங்களில் வாங்கும் உணவு இன்னும் ஒரு வாரம் பத்து நாள் வரும். அது தீரும்போது குடும்ப பென்ஷன் வந்து விடலாம். கொஞ்சம் தாமதித்து வருமானால், எட்டு நாணயத்தில் நாலுக்கு மொச்சை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியதுதான். மூன்று வேளையுய் சாப்பிட்டாலும் அது இன்னொரு வாரம் தள்ள வைக்கும்.

குளோரியா அம்மாள் ஆரஞ்சு நிறத்தில் ஒரு அங்கியைக் குவியலில் இருந்து எடுத்தாள்.

பெரியம்மா. அந்தப் பக்கம் உடை அணிந்து பார்க்கத் தனியறை உண்டு. அங்கே போய் அணிந்து பாருங்கள்.

விற்பனை இளைஞன் ஆதரவாகச் சொன்னான்.

குளோரியா அம்மாள் கையில் அங்கியோடு அந்த அறைப்பக்கம் நகர்ந்தாள்.

பேரங்காடி முழுக்கத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் குளிர்பான விளம்பரம் ஒளிபரப்பாகியபடி இருந்தது. அவற்றில் அடிக்கடி தட்டுப்பட்டுக் குலுங்கிச் சிரித்து வாங்கு வாங்கு என்று வலியுறுத்திய பெண் தாடிக்காரன் கூட நின்றவளின் சாயலில் இருந்தாள் என்று குளோரியா அம்மாளுக்குப் பட்டபோது அவளுக்கு ஒரு வினாடி கிழவரின் நினைவு வந்தது.

உடை அணிந்து பார்க்கும் அறை பல பேரின் வியர்வை வாடையும் உடம்பு சுவரில் பதித்து நின்று அணிய வேண்டிய அளவு குறுகலாக இருந்ததால் பல உடல்களின் குழப்பமான வாடையுமாக இருந்தது.

குளோரியா அம்மாளின் கணவன் அவளோடு கூடிவிட்டு சிகரெட்டைப் பற்ற வைத்தபடி சவப்பெட்டி வடிவிலான பெட்டியிலிருந்து வயலினை எடுத்து வாசிக்கும்போதும் இதே வாடைதான் வரும்.

குளோரியா அம்மாள் அறைக் கதவைச் சார்த்தினாள். உடையைக் களைந்து விட்டு ஆரஞ்சு நிற அங்கியைத் தலை வழியாக மாட்டிக் கொண்டாள்.

உலகின் எண்பது நாடுகளில் எழுபது கோடிப் பேரின் தாகத்தைத் தினம் தணிக்கும் ஒரே குளிர்பானம். நான்கு அற்புதமான சுவைகளில் கிடைப்பது.

ஒலிபெருக்கி உரக்க அறிவித்தது.

பர்ர்ர்.

நிறுத்தாமல் குளோரியா அம்மாள் குசு விட ஆரம்பித்தாள்.

(முற்றும்)

***

eramurug@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்