வாசிப்புக் கலாசாரம்

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

ஜெயந்தி சங்கர்


‘ஒருவன் தான் அறிந்திருப்பதை அறிந்திருப்பதும், தான் அறியாதவற்றைத் தான் அறியாதவை என்று அறிந்திருப்பதுமே உண்மையான அறிவு ‘, என்கிறார் சீனத் தத்துவஞானி கன்ஃப்யூ ?ிய ?. சிங்கப்பூரின் தேசிய நூலகத்தினுள் நுழைந்தால் இந்த ‘உண்மையான அறிவு ‘ நமக்குக் கிட்டுவது உறுதி. அறிவு யுகத்திற்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும் வகையில், ஐந்து நட்சத்திர விடுதிகளின் தரத்திற்கு மேலாக மிளிரும் சிங்கப்பூரில் நூலகங்கள் புத்தகத்தோடு முடிவடையாமல் ஒரு தனிப்பெரும் கலாசாரமாகவே வளர்த்தெடுக்கப் பட்டுவருகிறது.

சிங்கப்பூரின் தேசிய நூலகத்தின் வளர்ச்சி சுமார் 200 வருட வரலாற்றினைக் கொண்டது. இது 1845 ல் சிங்கப்பூர் நூலகம் என்றழைக்கப் பட்டது. அப்போது மொத்தமே ஒரு அலமாரி புத்தகம் மட்டும் தான் இருந்தது. 1867 ல் ஆங்கில ஆதிக்க ஆட்சியின் பொருளாதார வளர்ச்சி நகரின் பல்வேறு நவீன கட்டடங்களை உருவாக்குவதற்கு துணைபுரிந்தது. அப்போது உருவானது தான் கம்பீரமான ராஃபிள்ஸ் நூலகம் மற்றும் அருங்காட்சியகம்.

1942 ல் ஜப்பானியர்கள் சரணடைந்த பின் மலாயா நாட்டின் சுய ஆட்சி தழைக்கத் துவங்கிய போது நூலகமும் சேர்ந்தே வளர்ந்து வந்தது. பிறகு, அருங்காட்சியகத்திலிருந்து பிரிந்து ராஃபிள்ஸ் நூலகம் தனித்துவம் பெற்றது. 1960 ல் ஸ்டாம்போர்ட் ரோட்டிற்கு இடமாற்றம் கண்டபோதுதான், ‘சிங்கப்பூர் தேசிய நூலகம் ‘ என்ற பெயரினைப் பெற்றது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தான் நூலகம் மிகப்பெரிய மாற்றம் கண்டது. கணினி யுகத்திற்கேற்றவாறு புதுச்சவால்களை எதிர்நோக்கும் தொலைநோக்குடன் புத்தம்புதிய திட்டங்களையும் செயல்பாடுகளையும் நூலக வாரியம் நடைமுறைப் படுத்த துவங்கியது.

1995ல் ‘நாட்டின் கற்றலை விரிவு படுத்தல் ‘ என்னும் குறிக்கோளுடன் பிரமாண்ட வளர்ச்சியை எதிர்நோக்கிய நூலகத்துக்கு அடுத்து வந்த எட்டு வருடங்களுக்கு ஒரு பில்லியன் வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கியது. 2005க்குள் மத்திய நூலகம் தவிர 3 வட்டார நூலகக் கிளைகளும்,18 குழந்தைகளுக்கான சமூக நூலகக்கிளைகளும், 18 சமூக நூலகக் கிளைகளும் திறக்கப்பட்டிருந்தன. இதில் 9 சமூக நூலகக் கிளைகள் ஜாபிங்க் மால்களில் உள்ளன. இதனால் நூலகம் பயனர்களின் வாழ்வில் ஒரு பகுதியானது. எல்லாக்கிளைகளும் கணினிமயமாக்கப் பட்டன. இருபத்தியோராம் நூற்றாண்டின் இன்றைய நூலகம் ஆய்வுகளுக்கான மிகப் பெரிய களஞ்சியமாகவும், கிளைகள் பல கொண்டு, இணைய நூலகத்தையும், இணைய சேவைகையும் தன்னுள் கொண்டு ஆல்போல் தழைத்துள்ளது. மின் புத்தகங்கள் மட்டுமே 10000 இருக்கின்றன.

அவரவர் உறுப்பினர் அட்டையை வைத்து ஆங்காங்கே பொருத்தியுள்ள பொறிகளில் கொடுக்கப் பட்டுள்ள செய்முறைப்படி நாம் இரவல் பெறலாம். குடிமக்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் உறுப்பினர் தொகையோ இரவல் பெறுவதற்கான கட்டணமோ கிடையாது. முற்றிலும் இலவசம். ஒரு அட்டைக்கு நான்கு புத்தங்கள் வீதம் இரவல் பெறலாம். மூன்று வாரங்கள் வைத்திருந்து படிக்கலாம். அதற்குப்பிற்கே நாள் கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது. அனைத்தும் கணினி மயமமாக்கப் பட்டிருப்பதால், ஏற்கனவே இரவல் பெற்ற நூல் திருப்பாதிருந்தால், கணித்திரை பளிச்சென்று சொல்லிவிடும். நூலகங்களில் குழந்தைகள் கூட தானே உறுப்பினர் அட்டைப் பயன்படுத்தி இரவல் எடுக்கும் அழகைக் காணும் போது எதிர்காலத்திலும் அடுத்த தலைமுறையிலும் மிகவும் அசைக்க முடியாத நம்பிக்கைப் பிறக்கிறது.

நூலின் தலைப்பு அல்லது ஆசிரியர் பெயரை வைத்து வாசகர் ‘தேட ‘ வும் முடியும் அங்கிருக்கும் கணினியில். எந்தக்கிளையில், எந்த வரிசையில் நூல் இருக்கிறது என்றறியலாம். எல்லாப் பிரதிகளும் இரவல் வாங்கப்பட்டிருந்தால், மிகக் குறைந்த கட்டணத்தில் முன் பதிவு செய்யும் சேவையும் உண்டு. இரவல் பெற்ற பிரதி திருப்பப்பட்டதும் நமக்கு தெரிவிப்பார்கள். நாம் போய் வாங்கி கொள்ளலாம். நூலக வாயிலில் இருக்கும் ‘book drop ‘ ல் இரவல் பெற்ற நூல்களை தபால்பெட்டியில் அஞ்சலைச் சேர்ப்பதைப் போல இட்டாலே போதும். அதில் பொருத்தப்பட்டுள்ள கருவியின் உதவியால் திருப்பப்பட்ட விவரம் பதிந்துவிடும். நூலகம் மூடியிருக்கும் நேரங்கள் மற்றும் பொதுவிடுமுறை நாட்களிலும் எல்லோரும் இதனைப் பயன்டுத்தக் கூடிய வகையில் வெளியிலேயே அமைக்கப்பட்டிருப்பது மிகவும் வசதி. வார இறுதியிலும் நுலகங்கள் இயங்கும். வீட்டிலிருந்தபடியே நமது உறுப்பினர் அட்டையின் எண்ணைக் கொடுத்து இணைத்தில், அபராதத் தொகை நிலவரம், இரவல் பெறப்பட்ட நிலவரம் அறிந்து கொள்ள முடியும்.

தேசிய நூலகக் கட்டடம் விக்டோரியா சாலையில் இருக்கிறது. இங்கிருக்கும் முதல் தளத்தில் மாதந்தோறும் விழாக்கோலம் தான். கலை, இலக்கியம் மட்டுமில்லாமல் இசைநிகழ்ச்சி தெருநாடக வகைகள் என்று திருவிழா போன்ற உணர்வைக் கொடுக்கும். படித்துக் களைத்த வயிற்றுக்கு சிற்றுண்டியா, தேநீரா, காபியா, அங்கேயே சிற்றுண்டிக் கடையுண்டு (cafeteria). நூலக ஊழியர்களின் தரமான அணுமுறையும் பணிவான சேவையும் மெச்சத்தக்கது.

தகதகவென வெள்ளை நிறத்தில் உயரமான சாளரங்களைக் கொண்ட இந்த 16 மாடிகள் கொண்ட கட்டடம், நவீன கட்டிடவியலாளர்களான டி. ஆர் ஹம்ஸா & யீங்க் ஆகியோரால் சுற்றுச்சூழலியலின் கோட்பாடுகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. மதிய வெயில் உள்ளே ஊடுருவிவிடாமல் மேற்கு நோக்கியுள்ள சாளரங்களின் கதவுகள் தாமாகவே மூடிக்கொள்ளும். சக்தி வீணாகாத வகையில் தொழில்நுட்பம் அமைக்கப் பட்டிருக்கிறது. இதற்கு ஒரு விருதும் கிடைத்துள்ளது.

அந்தந்தத் துறையிற்கான தகவல் களஞ்சியங்களில் எத்தனை வகையுண்டோ அத்தனையும் இங்கேயிருக்கும். தேசிய நூலகக் கட்டடத்தினை சுற்றிக்காட்டும் சேவை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், முதலில் பதிவு செய்யும் 15 பேருக்குக் கிடைக்கும். வெள்ளிக்கிழமையன்று மாலையிலும் சனியன்று முற்பகலிலும் சுற்றிக் காட்டுகிறார்கள். இங்கு மத்திய நூலகம் தவிர, நாடக அரங்கம் மல்டிமீ டியா சாதனங்கள், லீ கோங்க் சியான் குறிப்பெடுப்பதற்கான நூலகம் (reference), ஓவியம் மற்றும் அருங்காட்சியகம், மொட்டை மாடியின் திறந்தவெளிப் பூங்கா என்று ஏராளமான இடங்கள் உண்டு. 100 பேர் பங்கேற்கக் கூடிய அளவிலான இந்த மொட்டை மாடியின் திறந்தவெளிப் பூங்காவில் நூல் வெளியீடுகள், கவிதை வாசித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இங்கு ஒரு வரவேற்பறையும் உண்டு.

7ஆம் மாடியிலிருந்து 13 வது மாடிவரை பரந்துபட்டிருக்கும் லீ கோங்க் சியான் குறிப்பெடுப்பதற்கான பிரிவில் நூல்களை இரவல் பெற முடியாது. அங்கேயே வேண்டுமானால் மணிக்கணக்கில் குறிப்பெடுக்கலாம். பக்கங்களையோ பகுதிகளையோ நகலெடுக்கும் ஜெராக்ஸ் வசதிகள் கிட்டத்தட்ட எல்லாக் கிளைகளிலுமே உண்டு. இந்தக் கட்டணத்திற்கும் இரவல் வாங்கிய நூல்கள் மூன்று வாரங்களுக்கு மேல் வைத்திருப்போர் கட்ட வேண்டிய அபராதம் கட்டவும் எளிதில் பாவிக்கக்கூடிய வகையில் ‘பண அட்டை ‘ (cash card) இருக்கிறது.

அரியவை இருப்பது 13வது மாடி, சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்காசியா பற்றிய நூல்கள் 11,12 மாடிகளில். ஆசிய குழந்தைகளின் மற்றும் கொடையாளர்களின் பகுதி 10வது தளத்தில், 9 வது மாடியில் சீன, மாலாய் மற்றும் தமிழ் நூல்கள். வணிகம் மற்றும் கலை 8 வது தளத்தில், சமூகவியல், விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம் 7 வது மாடியில் என்று பிரித்துள்ளார்கள். மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது மாடிகளைக் கொண்டு ஒரு அழகிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ; இந்த அரங்கம் 615 சொகுசு இறுக்கைகளுடன் அனைத்து நவீன ஒலிஒளி தொழில் நுட்பத்துடன் அமைந்துள்ளது. 5வது தளத்தில் ஒரு நிரந்தர அருங்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நான்கு மொழிகளிலும் இலக்கியத்தில் தடம் பதித்த முன்னோடிகளைப் பற்றியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அப்படைப்பாளிகளின் நூல்கள், புகைப்படங்கள், ஓவியங்கள், பேனாக்கள், தட்டச்சு இயந்திரங்கள், குறிப்பேடுகள், கையெழுத்துப் பிரதிகள், விருதுகள், கோப்பைகள் எல்லாம் இதில் அடக்கும். இந்த நூலக அருங்காட்சியகம் கற்றலில் புத்தம்புதிய அணுகு முறையினைக் கொணர்கிறது. நூலக வரலாற்றினை எல்லோரும் அறிய முழு விவரமும் கிடைக்கும். நூலக வாரியத்தின் வளர்ச்சிக்குப் பாங்காற்றியவர்கள் பற்றியும் அறியலாம். உள்நாட்டு வெளிநாட்டுப் படைப்பாளிகளின் லட்சக்கணக்கான நூல்கள் இரவலுக்குக் கிடைக்கும்.

நடந்து நடந்து உங்களின் கால்கள் களைத்து விட்டனவா ? பத்தாவது மாடியில் இருக்கும் மூலிகைத் தோட்டத்துக்குப்போய், மல்லிகை மற்றும் பல மூலிகை வாசத்துக்கிடையில் பாதங்களை ‘மசாஜ் ‘ செய்துகொண்டு புத்துணர்ச்சி பெறுங்கள். இல்லாவிட்டால் ஆங்காகே அமரவென்று ஏற்படுத்தப்பட்ட இருக்கைகளில் ஒரு புத்தகத்தையும் வைத்துக் கொண்டு வாசிக்கத் தொடங்கிவிடுங்கள். இரவு ஒன்பது மணிக்குத் தான் நூலகம் மூடப்படும். அன்றாட செய்தித் தாள்களையே நூலகத்தில் படித்துவிடும் வாசகர்கள் நிறையபேருண்டு. பொழுது போகாவிட்டால் நூலகத்திற்குள் நுழைந்து பின்னர் பொழுதே போதவில்லையே என்று தனக்குள் அங்கலாய்க்கும் வாசக ர்களும் ஏராளம்.

ஆங்காங்கே குறிப்பெடுப்பது, எழுதுவது, படிப்பது என்று தூய்மையும் குளுமையும் நிறைந்த சூழலை அனுபவித்தபடி தேர்வு நேரங்களில் மாணவர்கள் குழுக்களாகவும் தனியாகவும் படிப்பார்கள். இணைய வசதிகளும் இருப்பதால், சேர்ந்து ஆய்வுதிட்டம் (project) தயாரிக்க மாணவர்களுக்கு மிகவும் வசதி. ஒரு வயதுக் குழந்தை முதல் முதியோர் வரை அனைவரையும் கவரும் நூல்களும் சேவைகளும் உண்டு. கதை சொல்லும் நிகழ்ச்சிகள் நான்கு மொழிகளிலும் அவ்வப்போது குழந்தைகளுக்கு நடத்தப்படும். இந்நிகழ்ச்சி உள்ளரங்கிலோ வளாகத்தில் இருக்கும் புல்வெளியிலோ நடக்கும்.

‘ கதையும் காட்சியும் ‘ என்று சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் மாதம் ஒரு முறை நடத்தப்படும் நிகழ்ச்சி இலக்கியப் படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் அச்சிலிருந்து திரைக்குப் போன படைப்புக்களையும் படைப்பாளியையும் பற்றி அலசும். வட்டார நூலகக்கிளைகளில் இது நடக்கும். திரைப்படம் சில நிமிடங்களுக்கு மட்டுமே திரையிடப்பட்டு ஆய்வுரையும், கலந்துரையாடலும் நடக்கும். இது தவிர, வாசகர் வட்டம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடக்கும். தேசிய கலைகள் மன்றத்துடன் இணைந்து நடத்தும் எழுத்தாளர் வாரம் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். நூல் வெளியீட்டு விழாக்கள், நூலாய்வுரைகள் போன்ற நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடக்கும். பெரும்பாலும் அனுமதி இலவசம்.

வாசிக்கும் கலாசாரத்தினை மேலும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் ‘வாசிப்போம் சிங்கப்பூர் ‘ என்ற இயக் கம் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஏற்பாட்டில் ஆண்டு தோறும் நடத்தப் படுகிறது. இதற்காக நான்கு மொழிகளிலும் 12 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்துரையாடல், நூலாய்வுரைகள் என்று விதவிதமான நிகழ்வுகள் நடத்தப் படுகின்றன. எல்லா வயதினரையும் கவரும் நல்ல படைப்புகள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. 2005 ஆம் ஆண்டில் ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள் ‘, சிவசங்கரியின் ‘ 47 நாட்கள் ‘ மற்றும் உள்ளூர் படைப்பாளியான அமரர் நா. கோவிந்தசாமியின் ‘தீவு ‘ ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டன. விரைவில் துவங்கவிருக்கும் இவ்வாண்டின் (2006) ‘வாசிப்போம் சிங்கப்பூர் ‘ நிகழ்விற்கு அசோகமித்ரனின் ‘ஒற்றன் ‘, திலகவதியின் ‘கல் மரம் ‘ மற்றும் புதுமை தாசனின் ‘உதிரிகள் ‘ ஆகிய மூன்று நூல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இத்தேர்வு ‘தங்களையும் யதார்த்த உண்மை நிலையையும் புரிந்துகொள்ளத் தூண்டும் வாழ்வனுபவங்கள் ‘ என்ற அடிப்படையில் நடந்துள்ளது. வாசிப்பு அனுபவத்தின் வழியாகவும் அனுபவப் பகிர்தலின் மூலமாகவும் வாசித்தலில் அதிக ஈடுபாட்டினை வளர்ப்பதே குறிக்கோள். வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்துவதும் தான்.

சுற்றுலாத் தளங்களை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பிச் சென்று விடாமல் சிங்கப்பூர் வரும் சுற்றுப்பயணிகள் நிச்சயம் சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்கும் போகவேண்டும். மேலைநாடுகளில் எங்குமே இல்லாத மிக மிக முக்கியமான ஒன்று சிங்கப்பூர் தேசிய நூலகங்களில் உண்டு. ஒவ்வொரு பகுதியிலும் தமிழுக்கும் இடமிருப்பது தமிழர்களாக ிய நாம் பேருவகைப் படக்கூடிய சிறப்பு. நூலகத்தின் தமிழ்த் துறைக்கென்று தொகை ஒதுக்கப் பட்டு வருகிறது. திரைப்படவட்டுகள், நாளிதழ்கள், சஞ்சிகைகள் முதல் புத்தகங்கள் வரை ஒவ்வொரு பகுதியிலும் ஆங்கில, சீன மற்றும் மலாய் மொழிகளுடன் தமிழும் இருக்கும்.

( முற்றும் )

தமிழோசை 26-03-06

jeyanthisankar@gmail.com

Series Navigation