வளைகுடா போரும் கம்யூனிஸ்டுகளும்

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அமெரிக்காவை அதிகமாக விமர்சனம் செய்பவர்கள் அன்றைய இன்றைய கம்யூனிஸ்டுகள்தான். அமைதி விரும்பிகள் என்ற போர்வையில் அமெரிக்காவை விமர்சனம் செய்ய வளைகுடா போர் மீண்டும் அவர்களுக்கோர் வாய்ப்பினைக் கொடுத்திருக்கிறது. ‘கம்யூனிஸ சுரைக்காய் கறிக்கு உதவாது ‘ என்பதனை அனுபவத்தால் உணர்ந்தபின்னும் அமெரிக்காவின் மீதான வயிற்றெறிச்சல் இவர்களுக்குக் குறைந்தபாடில்லை. உலகில் அமெரிக்கா மட்டுமே சுயநலம் கொண்ட நாடாகவும், மற்றவர்களெல்லாம் பரோபாகாரிகளாவும் காட்டுவது அபத்தம். விமர்சிப்பதற்கு முன்னர் சற்று மனசாட்சியோடு எழுதுவது நல்லது. தனிமனிதனாயினும் சரி, அவன் சார்ந்த நாடாயினும் சரி அனைவருமே சுயநலவாதிகள்தான். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் சுயநலத்தால் அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள் அவர்களது மக்கள் வளர்ந்திருக்கிறார்கள். உங்கள் நினைப்புப்படி தங்களுக்கு மிஞ்சியதையே தருமம் செய்திருக்கிறார்கள். மற்ற நாடுகளின் கதையென்ன. ஆள்கின்றவர்கள் மட்டுமே வாழ்ந்தார்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் கம்யூனிஸ்டுகளும் அடக்கம். வர்க்க பேதமற்ற சமுதாயம், பொதுவுடமை, சகோதரத்துவம் என முழங்கியவர்கள் என்ன செய்தார்கள் ? அப்பாவி காம்ரேட்டுகள் தண்ணீருக்குத் தவித்தபோது, ஆட்சியிலிருந்த காம்ரேட் பூர்ஷ்வாக்கள் மேற்கத்திய நாடுகளிலிருந்து கள்ளத்தனமாக ஒயினை வரவழைத்துக் குடித்து சுகம் கண்டார்கள். தேசிய வளத்தையெல்லாம் ராணுவத்திற்கும், ஆள்கின்றவர்களின் ஆடம்பரங்களுக்குமாக உறிஞ்சிக் கொள்ள, எல்லா வளமிருந்தும் சோவியத் யூனியனில் வறுமை. ‘இம் ‘ மென்றால் சைபீரியா. ‘ஏனென்றால் ‘ தூக்கு. இவர்களிடமிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் தஞ்சம் புகுந்தது என்னவோ நீங்கள் குற்றம் சாட்டும் அமெரிக்காவில் தான், மேற்கத்திய நாடுகளில்தான். ஹிட்லருக்குச் சமமாக இரத்தகறை படிந்தவர்கள் கம்யூனிஸ வரலாற்றில் நிறையவே உண்டு.

கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் சோவியத் யூனியனில்1985ல் பிரஸ்னேவ் இறப்பிற்குப் பிறகு பதவிக்குவந்த மிக்கேல் கொர்பச்சேவ் சோவியத் யூனியனின் இக்கட்டான நிலைமையை மறைக்க விரும்பவில்லை ‘மறு கட்டமைப்பு ‘ (Perestrika), ‘வெளிப்படை ‘(Glasnost) என்ற கொள்கைகளின் அடிப்படையில் சோவியத் யூனியனுக்கு மறுவாழ்வுதர நினைத்தார். 1989 -1990 ஆண்டுகள் கம்யூனிச வரலாற்றில் மிகப்பெரிய இடி. கண்முன்னே மேற்கத்திய நாடுகள் வளர்ந்திருக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கம்யூனிஸ மாயையில் தேய்ந்திருப்பதை உணர்ந்தவுடன் மிகப் பெரிய மாற்றம். கம்யூனிஸ்டுகள் நிர்வாகத்தை ஆட்டம் காணவைத்ததில் தொழிலாளர் தரப்பிலிருந்து வந்த போலந்து நாட்டைச் சேர்ந்த ‘லே வலேசா ‘(Lech Walesa), அறிவு ஜீவிகள் தரப்பிலிருந்து வந்த செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த ‘வக்லாவ் ஹவல் (Vaclav Havel), ருமேனியா புரட்சி, பெர்லின் சுவர் என அனைவருக்கும் பங்குண்டு. இப்போது கம்யூனிசத்தைக் கட்டி அழுவதென்னவோ

சீனா, வட கொரியா மற்றும் கியூபாதான். இதில் சீனாவும் ஏதோ ஒரு வகையில் சந்தைமுறை பொருளாரத்தில் நுழைந்தாயிற்று. வட கொரியாவிலும், கியூபாவிலும் வழக்கம்போல சர்வாதிகாரிகளும் அவர்களைச் சார்ந்தவர்மட்டுமே சுகத்திலிருக்கின்றார்கள் மக்கள் அல்ல.

திபெத்தை விழுங்கிவிட்டு, தினன்மென்னை மறந்து விட்டு அமெரிக்காவைக் கண்டிக்க சீனாவுக்கு எந்த யோக்கியதையும் இல்லை. ஆப்கானிஸ்தானை ஆக்ரமித்து, தலிபான்களிடம் மூக்கறுபட்டு இன்றைக்கும் நாளைக்கு ஆயிரம் செச்சின் மக்களைக் கொன்று குவிக்கும் ரஷ்யாவும் தன் முதுகைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவை விமர்சிக்கும் உரிமை மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமே உண்டு. அமெரிக்காவிடம் உள்ள சுயநலம் அமெரிக்காவை விமர்சிக்கும் பிரான்சுக்கும் உண்டு. ஈராக்கிய மக்களுக்கு எதிராக விதிக்கப்பட்டத் தடையில் பிரான்சுக்கும் பங்கு உண்டு, அவ்வாறே முதல் வளைகுடா போருக்குப் பிறகு ஈராக்குடனான உறவால் லாபமடைந்த மேற்கத்திய நாடு பிரான்சு.

சதாம் உசேன் விடயத்திற்கு வருவோம். பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளைப் போலவே சுதந்திரமென்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கின்ற நாடு ஈராக். 1932ல் சுதந்திரம் பெற்று 1958ல் குடியரசு என்று அறிவிக்கபட்டு ஆண்டதென்னவோ ராணுவம். இப்போது சதாம் உசேன். ஈராக்கின் மக்களதிபர், (தாராளமாகச் சொல்லலாம் – அதிபர் தேர்தலில் அவர் மட்டுமே வேட்பாளர். 100 சதவீதம் வாக்குகள் அவருக்கு மட்டுமே விழும் அதிசயம்.) ஈராக்கின் பிரதமர், ஈராக் முப்படைகளின் தளபதி, ஈராக்கின் மூத்த விஞ்ஞானி, ஈராக்கின் மூத்த அறிவு ஜீவி, ஈராக்கின் ஆபத்பாந்தவன் அநாதை ரட்ஷகன். இப்படி எல்லாமே சதாம் உசேன் தான். எம்பெருமான் 1979ல் பதவிக்கு வந்தார் என்பதைவிட பிடித்தார் எனக் கொள்ளலாம். குறைவாக எண்ணெய்வளம் கொண்ட பக்கத்து நாடுகள் செழிப்பில் இருக்கும் போது ஈராக்கியர்களின் இந்த நிலைக்குக் யார் காரணம் ? ஆட்சியைக் காப்பாற்றிகொள்ள அரசியல் எதிரிகளை ஈவிரக்கமின்றி கொல்வதும், சிறைவைப்பதையும் தொழிலாகக் கொண்டு, 1980லிருந்து 1988 வரை எட்டாண்டுகள் ஈரானுடன் போர் புரிந்து, சும்மா யிராமல் மீண்டும்1990ல் குவைத் மீதான ஆக்ரமிப்பை நடத்தி, ஷியாக்களையும், குர்தின மக்களையும் விஷவாயு மூலம் ஈவிரக்கமின்றி கொன்று … வேண்டாம் சதாம் உசேனை ஹீரோவாக்காதீர்கள். கொமேனிகளுக்கு எதிராக சதாம் உசேனைத் வளர்த்ததில் அமெரிக்கா மட்டுமல்ல இன்று சமாதானக் காவலர்களாய் அறியப் படுகின்ற பிரான்சுக்கும் பங்குண்டு. எனினும் ஈராக்கிய மக்களை இந்த நிலமைக்குத் தள்ளியதில் 99 சதவீதம் சதாம் உசேனின் பங்கிருக்கிறது.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை குறை கூறுவதிருக்கட்டும். இராக் மக்கள் மீது உண்மையிலேயே அக்கறையிருந்திருந்தால், சதாம் உசேனும் சரி, சமாதானக் காவலர்களும் சரி போரைத் தவிர்த்திருக்கலாம். ஐக்கிய நாட்டு சபையின் தீர்மான எண் 1441ஐ எந்த அளவிற்குத் சதாம் உசேன் மதித்தார் என்பது உலகம் அறிந்தது. திரும்பத் திரும்பக் கெடு விதிப்பதும் ஆய்வாளர்கள் சென்று வருவதும் வாடிக்கையாயிற்று. மக்கள் மருந்துக்கும், சோற்றுக்கும் அல்லாடும் பொழுது ஒன்றல்ல இரண்டல்ல ஐம்பதுக்கும் மேலாக அரண்மனைகளை அமைத்துக்கொண்டு அதில் சோதனையிட ஆய்வாளர்கள் மறுக்கபடும்போது, ஐக்கிய நாடுகள் சபைக்கு ஈராக்கில் என்ன வேலை. கொசோவா பிரச்சினையில் ஐக்கிய நாட்டு சபையின் தீர்மானத்தை மதிக்காத யுகோஸ்லாவியா மீதான தாக்குதல் நியாயம் என்றால் இதுவும் நியாயம்தான்.

முன்னதாகவே கம்யூனிஸ பணத்தில் கம்யூனிஸ அரசுகளால் திட்டமிடப்பட்ட, ஓழுங்கு செய்யபட்ட இடங்களை மட்டும் பார்வையிட்டுவிட்டு வந்து சோவியத் யூனியன் சொர்க்க பூமி, செஞ்சீனா சீர்மையுடைத்து என எழுதிவிட்டு, தங்கள் பிள்ளைகளையும் உறவுகளையும் அமெரிக்காவுக்கு அனுப்ப அலையும் கம்யூனிஸ்டுகள் உலகில் நிறையவே உண்டு. மேற்கத்திய நாடுகளுக்கு விஜயம் செய்யும் கம்யூனிஸ்டுகள் துடைப்பத்தைக் கூட இங்கிருந்து வாங்கிச் செல்வதைக் கண்டிருக்கிறேன். அமெரிக்காவிற்கு எதிராக மாற்ற நாடுகளில், என்ன அமெரிக்காவிலேயே, வெள்ளை மாளிகைக்கு எதிராகவே கொடி பிடிக்கலாம், கோஷம் போடலாம். புஷ் கொலைகாரன் எனகுற்றம் சாட்ட முடியும். அதுதான் அமெரிக்கா. இந்த அமைதிவிரும்பிகள் கொஞ்சம் திபெத்துக்காகவும், செச்சினுக்காவும், வட கொரிய, கியூபா மக்களுக்கும், ஆப்ரிக்கா மற்றும் அராபியநாடுகளின் சனநாயகத்திற்கும் வீதியில் இறங்கட்டும்.குரல் கொடுக்கட்டும்.

***

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா