வன்முறையின் நிறம் (போராட்டம் -கன்னட நாவல் அறிமுகம்)

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

பாவண்ணன்


பாட்டி சுட்ட வடையை காக்கை திருடிச் சென்றதையும் மரக்கிளையில் அமர்ந்து அந்த வடையைத் தின்னும் காக்கையிடமிருந்து தந்திரமாக அபகரித்து நரி தின்னும் நாட்டுப்புறக்கதையை நிதானமாக அசைபோடும்போது நம்மால் சில கேள்விகளை உருவாக்கிக்கொள்ள முடியும். முதல் அபகரித்தலில் திருட்டும் இரண்டாம் அபகரித்தலில் தந்திரமும் பயன்படுத்தப்படுகிறது. இரண்டுமே வன்முறையின் வெவ்வேறு வடிவங்களே. தன்னிடம் இல்லாத ஒன்றைத் துய்க்கும் பேராசையே வன்முறையைத் துாண்டும் முதல் சக்தி. சாதாரணமான ஒரு சின்ன வடையைத் தின்னும் பேராசையே இந்த அளவுக்கு வன்முறையைத் துாண்டும் காரணியாக விளங்கும்போது , ஒரு பதவியைப் பெறுகிற பேராசை அல்லது ஒரு சொத்தை உடைமையாக்கிக்கொள்ளும் வேட்கை அல்லது செல்வாக்கு மிகுந்த அதிகாரத்தைக் கைப்பற்றும் வேகம் எத்தனை மடங்கு வன்முறையைத் துாண்டும் காரணியாக மாறக்கூடும் என்பதை நாமே கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். வன்முறையின் வீச்சுக்கும் சுயதிருப்திக்கும் உள்ள தொடர்பு அந்தரங்கமான ஒன்றாகும். அது காலம் காலமாக மனிதர்களின் ஆழ்மனத்தில் உறைந்திருக்கிறது.

தொழிற்சங்கங்களைப்பற்றி நம் மனம் உருவகித்து வைத்திருக்கும் சித்திரங்களுக்கும் வியாசராயர் காட்சிப்படுத்தும் சித்திரத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. தம் வளாகத்திலும் ஒரு சங்கமுண்டு என்று காட்டிக்கொள்வதற்காக முதலாளிமார்களாலேயே நிறுவப்பட்டு, கூலித்தலைவர்களால் நடத்தப்பட்டு, எந்தத் தொழிலாளியும் கட்டுமீறிச் சென்றுவிடாதபடி கண்காணித்தபடி இயங்கும் தொழிற்சங்கங்களை ஒருவகையாகச் சொல்லலாம். தொழிலாளர்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளை உண்மையிலேயே ஒற்றுமையின் பலத்தால் போராடி பெற்றுத்தரும் தொழிற்சங்கங்கள் மற்றொருவகை. தொழிற்சங்கத்தின் பலத்தையே தன் பலமாக மாற்றிக்கொண்டு அதை ஒவ்வொரு கணத்திலும் உறுதிப்படுத்திக்கொள்ள எந்தவிதமான வன்முறைகளிலும் தயக்கமின்றி ஈடுபட்டு வெற்றிகொள்ளும் தலைவர்களின் தலைமையில் அப்பாவிக் கூட்டமாக இயங்கும் தொழிலாளர்களைக் கொண்ட சங்கங்கள் வேறொரு வகை. இவை தவிர தொழிலாளர்களுக்கான நலன்களைப் பெற்றுத் தருவதில் முன்னணியில் நிற்பதாக அறிவித்தபடி சாதிசார்ந்தும் கட்சி அமைப்புகள் சார்ந்தும் இயங்கும் தொழிற்சங்கங்கள் பிறிதொருவகை. வகைவகையான தொழிற்சங்கங்கள் நம் சூழலில் பெருகிக்கொண்டே போவதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு. முதலாவதாக அது ஒரு வலிமையான அதிகார மையம். கூடுதலான எண்ணிக்கையில் தொழிற்சங்கங்களைக் கைவசம் வைத்துள்ளவனுடைய அதிகாரம் பலமடங்கு கூடுதலாக இருக்கிறது. அந்த அதிகாரத்தைக் காட்டி முதலாளிகளை எந்தப் பேரத்துக்கும் பணியவைக்க முடியும். மறுமுனையில் அறிவிக்கப்படக்கூடிய ஒவ்வொரு ரூபாய் சம்பள உயர்வும் தன்னால்தான் வாங்கித் தரப்பட்டது என்கிற நன்றியுணர்ச்சியை தொழிலாளிகளின் மனத்தில் எந்த நேரமும் ஊற்றெடுத்தபடி இருக்கச் செய்யவும் முடியும். அதிகாரத்தின் மூலம் ஒருபுறத்தில் தலைவனுடைய பதவி மேலும்மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. மறுபுறத்தில் செல்வத்தையும் கேளிக்கைகளையும் ஈட்டித்தரும் சக்தியாகவும் இருக்கிறது. தொடர்ந்து இதை தக்கவைப்பதற்கு வன்முறை ஏதோ ஒரு புள்ளியில் இவர்களுடன் இரண்டறக் கலந்துவிடுகிறது.

இப்போது தொழிலாளிகள் என்ன செய்யவேண்டும் என்பதை முக்கியமான கேள்வியாகக்கொண்டு யோசித்தல் அவசியம். தமக்கு கிடைத்திருக்கக்கூடிய பயன் அறவழி சார்ந்து கிடைத்ததல்ல, வன்முறையின் வழியாக பெறப்பட்டது என்று எந்தத் தொழிலாளியாவது அந்தப் பயனைத் துறப்பது சாத்தியமா ? துறந்துவிட்டபிறகு சங்கத்துக்குள்ளும் அல்லது சங்கத்துக்கு வெளியேயும் சுதந்தரமாகத் தொடர்ந்து இயங்குவது சாத்தியமா ? இந்த இரண்டு கேள்விகளுக்கும் நம் பதில் ‘இல்லை ‘ என்று இருக்குமேயானால் புரைதீர்ந்த நன்மையாக ஒரு பயனை முன்னிறுத்தி வன்முறையைத் துளியளவாவது அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் மனம் மனிதர்களிடையே காலம்காலமாக ஊறிப்போய்விட்டது என்பதே அதற்கான காரணமாகும்.

வன்முறை என்னும் கருத்தாக்கமே போராட்டம் நாவலின் மைய உலகம் . மனித மனத்தில் வன்முறைக்கு இருக்கக்கூடிய பங்கை ஒவ்வொரு சந்தர்ப்பம் சார்ந்தும் சித்தரித்தபடி நகர்கிறது நாவல். தொழிற்சங்கப் போராட்டங்களும் முதலாளிகளின் மிரட்டல்களும் மலிந்த ஒரு நகரில் வன்முறைகள் தாராளமாகப் புழங்குவதை அதிர்ச்சியோடு சுட்டிக் காட்டுகிறார் வியாசராய பல்லாளர். அஹிம்சையைப்பற்றியும் அன்பைப்பபற்றியும் பல லட்சம் பக்கங்கள் எழுதப்பட்டும் படிக்கப்பட்டும் வந்துள்ள இந்த மண்ணில் இன்றைய தேதியில் களைய இயலாத முள்மரமாக ஒவ்வொருவருடைய மனஆழத்திலும் வன்முறை வேர்விட்டுத் துளிர்த்திருப்பதைக் கண்டுபிடித்து முன்னிலைப்படுத்துகிறது நாவல்.

வன்முறை இயங்காத மனமோ, வன்முறையில் ஈடுபடாத மனிதர்களோ இல்லையென்னும் உண்மையை நோக்கி நகரும் இந்த நாவல் வன்முறையின் சாரத்தை அறியும் முயற்சியில் இயங்கவில்லை. நாவலில் இரண்டு முக்கிய தொழிற்சங்கப் பாத்திரங்களாக இயங்குபவர்கள் ராஜீவும் தேஷ்பாண்டேயும். அறப்பாதையில் தொழிலாளர்களை வழிநடத்தி போராட்டங்களில் ஈடுபடுகிறவர்களைத் துவளவிடாமல் ஊக்கப்படுத்தி படிப்படியாக முன்னகரத் துாண்டி வெற்றியை நோக்கி அழைத்துச் செல்பவன் ராஜீவ். சத்தியமே அவனுடைய வலிமை. ஆழ்ந்த தோழைமையே அவனுடைய கவசம். இதற்கு நேர்மாறாக, வன்முறையையே தன் வழிமுறையாகக்கொண்டு ஒரே நேரத்தில் தொழிலாளர்களையும் முதலாளிகளையும் மிரட்டிப் பயன்நுகர்ந்து மிகப்பெரிய சக்தியாக மாறுபவனாக விளங்குபவன் தேஷ்பாண்டே. மறைமுகமாக எல்லா இடங்களிலும் எதிர்பாதைகளையும் எதிர்நிலைபாடுகளையும் எதிர்உபதேசங்களையும் ஊட்டியவண்ணம் இருக்கிற இந்தத் தேஷ்பாண்டேயின் ஈடுபாடுகளை நாவலில் எந்த இடத்திலும் உடைத்துப்பார்க்கும் முயற்சி செய்யப்படவே இல்லை. முழுக்கமுழுக்க அடுத்தவர்களின் உரையாடல்கள் வழியாக மட்டுமே இடம்பெற்று பீதியை நிரப்பும் நிழல் பாத்திரமாக மட்டுமே வந்துபோகிறான் தேஷ்பாண்டே. அவன் மனக்கதவுகளைத் திறப்பதன்மூலம் வன்முறையின் சாரத்தை எளிதில் கண்டடைந்திருக்கக்கூடிய வாய்ப்பு நாவலில் தவறிப்போகிறது. தொடக்கத்தில் வன்முறை ஒருசில லாபங்களுக்காக நிகழ்த்தப்படுகிற ஒன்றாக இருந்தாலும் போகப்போக வன்முறை வெறும் சாகச இன்பத்துக்காக நிகழ்த்தப்படுகிற ஒன்றாகவே இறுதியில் உருமாறுவதைக் கண்டடைந்திருக்கக்கூடும்.

நான்கு தளங்களில் நிகழ்வதைப்போன்ற தோற்றத்தை நாவலின் அமைப்பு கொண்டிருந்தாலும் ஒன்றுடன் மற்றொன்றை கலைத்தன்மையோடு மோதவிட்டிருப்பதன்மூலம் அடிப்படையான ஓர் இலக்கை நோக்கியே நாவல் நகர்கிறது. நாகேஷ் சர்மா, சதீஷ், லட்சுமி, நயனி என வெவ்வேறு குணங்களைக் கொண்ட கல்யாணி கெமிக்கல்ஸ் நிறுவனத்தாரின் குடும்பம் என்பது ஒரு தளம். தொழிலாளர்களின் ஒற்றுமையே மிகப்பெரிய சக்தி என்பதை வலியுறுத்தி நகரின் லட்சக்கணக்கான நம்பிக்கைக்குந்த தலைவனாக மலர்கிற ராஜீவின் உலகம் மற்றொரு தளம். வடமொழி நாடகங்களின் நடிக்கிற பிராமணப் பெண்ணான யாமினியின் உலகம் இன் னொரு தளம். வன்முறைகளை அச்சுறுத்தும் ஆயுதங்களாக முன்வைத்து ஒரே சமயத்தில் தொழிலாளர்களிடையேயும் முதலாளிகளிடையேயும் தன் வலிமையைப் பெருக்கிக்கொண்டு குறுகிய காலத்தில் ராட்சசனாக வளர்ந்து நிற்கிற தேஷ்பாண்டேயின் உலகம் மற்றொரு தளம். ஒரு வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பையொட்டி மோதிக்கொள்ளும் இந்த நான்கு தளங்களின் வழியாக வெளிப்படும் உண்மைகள் நாவலில் தொகுக்கப்பட்டுள்ளன.

பெயருக்கென்று பொம்மையாக ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கி அதற்குத் தன் நம்பிக்கைக்குகந்த ஒருவனையே தலைவனாக்கி வைத்திருக்கிறது கல்யாணி கெமிக்கல்ஸ். எதிர்பாராத விதமாக அந்தப் பொம்மைத் தலைவன் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதவர்களால் கொலைசெய்யப்படுகிறான். தன் தொழிற்சாலைகளுக்குள் ஊடுருவி சங்கத் தொழிலாளர்களை வசப்படுத்த தேஷ்பாண்டே எடுத்திருக்கும் முயற்சிகளில் ஒன்றாக இதைக் காண்கிறார்கள் முதலாளிகள். மாற்று வன் முறையில் ஈடுபடத் துடிக்கும் மகனை அமைதிப்படுத்துகிறார் தந்தை. ஆனாலும் இரண்டுமாத கால வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து ஆலை நெருப்புக்கு இரையாகிறது. லேபர் ஆபீஸர் கொல்லப்படுகிறார். எல்லாரையும் போலிகள் என்று கிண்டல் செய்யும் நயனி காணாமல் போகிறாள். நாகேஷ் சர்மா மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். கூலித் தொழிலாளியான தந்தையின் வாழ்க்கையையும் தொழிற்சாலைகளைக் கட்டியெழுப்பி நடத்துகிற திறமைசாலியான மகனுடைய வளர்ச்சியையும் அருகருகே வைத்துக் காட்டும்பொழுது அதில் வன்முறையின் பங்கு எவ்வளவு இருக்கும் என்று யோசிக்காமல் இருக்கமுடியாது. பக்ருதின் மறைவுக்குப் பிறகு, அவருடைய கடையை வசப்படுத்துவது முதல் எரிந்துபோன ஆலையொன்றை அடிமாட்டு விலைக்கு வாங்கிச் சொத்து சேர்க்கும் சாமர்த்தியம் வரை, அனைவருடைய மனங்களையும் அமைதியாகத் துாண் டிக்கொண்டே இருக்கிறது வன்முறை. ஆனால் இந்த வன்முறைப் பயணம் அவர்களை அழைத்துச் சென்றது எங்கே ? இதே நோக்கத்துடனும் இதே வேகத்துடனும் இதே அறங்களுடனும் வேறொரு திசையிலிருந்து பயணத்தைச் செலுத்திவரும் வன்முறையோடு மோதி உடைந்து சிதறுகிறது. வன்முறையின் இறுதியில் எஞ்சுவது எதுவுமில்லை என்று உணர்த்துகிறது நாவல்.

தொழிலாளர்களுக்காக புதிய உலகைச் சமைப்பதில் ஆர்வம் காட்டுகிற ராஜீவின் பாத்திரம் மிகவும் முக்கியமான ஒன்று. பல சிக்கலான போராட்டங்களுக்குத் தலைமை வகித்து தொழிலாளர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தவன் அவன். முறையான வழிகளியேயே சோர்வின்றி நடந்து வெற்றிக்கான பாதையைச் சமைத்தவன் அவன். அவனுடைய மிகப்பெரிய பலம் இது. வன்முறையின் வழியாக தொழிலாளர்கள் பெறக்கூடிய பயன்களைத் தவறு என்று சுட்டிக்காட்ட அவனால் முடியவில்லை. போராட்டத்தின் அறமல்ல, வெற்றிகளே போராட்டத்தின் வலிமையைத் தீர்மானிப்பவை என்பதில் அவனுக்கு உள்ளூர உடன்பாடு இல்லையென்றாலும் அவ்வெற்றிகளின் பயன்கள் தொழிலாளர்களை அடைகின்றன என்பதால் அமைதியுடன் ஏற்றுக்கொள்கிறான். இது அவனுடைய பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது. இந்தப் பலத்துக்கும் பலவீனத்துக்கும் இடையே ஊடாடுகிற ராஜீவ் தொழிலாளர் தளத்தைச் சட்டென உதறிவிட்டு துப்பாக்கிக் குண்டிலிருந்து சக்தியைப் பீறிடவைக்கும் பயணத்தை மேற்கொள்ளச் செல்கிறான்.

ராஜீவுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் தொகுத்து வாசகர்கள் விவாதிக்க முடியும். அவனுடைய வாழ்வில் ஆந்திரக் காடுகளில் ராஜசேகர சோமயாஜூலுவாகத் துப்பாக்கி ஏந்தி அலைந்தது ஒரு கட்டம். ராஜீவாக உருமாறி மும்பைப்பகுதியில் மக்களுடைய நம்பிக்கையைப் பெற்ற தொழிற்சங்கத் தலைவனாக இருப்பது மற்றொரு கட்டம். யாமினியை விரும்பி உறவுகொண்டாடி மகிழ்ந்து தன் ஒவ்வொரு அலுவலிலும் ஆழ்ந்த பயிற்சியை அவளுக்கு அளிப்பது இன்னொரு கட்டம். தற்காலிகமாகக் கிட்டக்கூடிய சில பயன்களை மட்டுமே பெரிதாக எண்ணக்கூடிய தொழிலாளர்களிடையே புதிய உலகத்துக்கான கனவை விதைப்பதில் பொதிந்திருக்கும் கடுமையான சவாலைப் புரிந்துகொண்டு வன்முறைகள் மலிந்த தடத்தில் பயணத்தைத் தொடர்வது மற்றொரு கட்டம். இப்படி எல்லாப் பக்கங்களிலும் விரவி பெருக்கெடுத்தோடுகிறது நாவல்.

ஹர்னிமல் சர்க்கிள் தோட்டத்தில் நிழலில் உறங்கும் தொழிலாளியைத் துரத்திவிட்டு இன்னொருவன் வந்து படுத்துறங்கும் காட்சி நாவலின் எல்லாத் தளங்களிலும் ஏற்படும் மாற்றங்களுக்கும் பொருத்தமான படிமப் புள்ளியாக தொடக்கத்திலேயே உருவாக்கப்பட்டுவிடுகிறது. வலிமையற்றதை அகற்றி வன்முறையின் மூலம் ஆக்கிரமத்துக்கொள்கிறது வலிமையுள்ள ஒன்று. தொழிற்சங்கங்கள் கைமாறும்போதும் தொழிற்சாலைகள் கைமாறும்போதும் வாசகர்களின் கண்முன் விரிவது ஒன்றை அகற்றி இன்னொன்று ஆக்கிரத்துக்கொள்ளும் சித்திரம்தான். அதிகாரத்தின் ஆவலாலும் அகந்தையின் துாண்டுதலாலும் நிகழ்ந்துவிடும் இந்த ஆக்கிரமிப்பைக் கண்டு நடுங்கிப் போகிறது நம் மனம். இங்கு எழும் கேள்வி இந்த ஆக்கிரமிப்பு ஏன் நிகழ்கிறது என்பதல்ல. வாழ்வு என்பதே ஆக்கிரமிப்புதானா என்பதாகும். இந்தப் புள்ளியை நோக்கி வெளிச்சம் பாய்ச்சப்பட்டிருப்பதை நாவலின் வெற்றி என்றே சொல்லவேண்டும். இந்த ஆக்கிரமிப்பை ராமாயணப்போர் முதல் உள்நாட்டுப் பாளையக்காரர்கள் கலகங்கள் வரையும் உலகப்போர்கள் முதல் கார்கில் போர்வரையும் உள்ள ஏராளமான எடுத்துக்காட்டுகளைக்கொண்ட வரலாற்றுப் பின்னணியில் வைத்து நாவல் அணுகவில்லை. மாறாக, இரண்டுமாத காலகட்டத்தில் மும்பைப் பெருநகரில் நிகழக்கூடிய தொழிற்சங்கத் தந்திரங்களையும் முதலாளிகளின் தந்திரங்களையும் கொண்ட பின்னணியை மட்டுமே முன்வைத்து அணுகப்பட்டிருக்கிறது. இதையே இந்த நாவலின் பலவீனம் என்று சொல்லலாம்.

சிறப்பான முறையில் இந்த நாவலை வெளியிட்டிருக்கும் சாகித்த அக்காதெமி பாராட்டுக்குரியது. இயல்பான நடையில் மொழிபெயர்த்திருக்கும் இறையடியான் மொழிபெயர்ப்புத் துறையில் நல்ல அனுபவமள்ளவர். ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணற்ற படைப்புகளைத் தமிழாக்கம் செய்திருப்பவர். பணியம்மா, சலங்கைச்சடங்கு போன்ற நாவல்களின் மொழிபெயர்ப்புகளை முக்கியமான சில முயற்சிகளாகச் சொல்லலாம். வியாசராய பல்லாளரைத் தமிழுலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ள இறையடியான் என்றும் தமிழிலக்கிய வாசகர்களின் பாராட்டுக்கு உரியவர்.

(போராட்டம். கன்னட மூலம்: வியாசராய பல்லாள தமிழில்: இறையடியான். வெளியீடு: சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், தேனாம்பேட்டை, சென்னை. விலை ரூ180. பக்கங்கள் 378)

Series Navigation