வட அமெரிக்காவில் மனிதரைக் கொல்லும் அசுர வலுக்கொண்ட இடிப்புயல் சூறைக்காற்றுகள் (North America ‘s Killer Thunderstorm Tornadoes)

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா


வெட்டி அடிக்குது மின்னல்! கடல்

வீரத்திரை கொண்டு விண்ணை இடிக்குது!

கொட்டி இடிக்குது மேகம்!

கூக் கூவென்று விண்ணைக் குடையுது காற்று!

பாரதியார் … (மழை)

முன்னுரை: சூறைக்காற்று என்று எதைக் குறிப்பிடுகிறோம் ? ஒரு குட்டி ஹரிக்கேனை சூறைக்காற்று என்று சொல்லலாம்! ஆயிரக் கணக்கான சூறைப்புயல்கள் சேர்ந்து ஒரு ஹரிக்கேனை உருவாக்கலாம்! வலுவாகச் சுழலும் புயற்தூண் ஒன்று பூமியிலிருந்து திரண்டு நெளிந்து, புனலாக எழுந்து மின்னல் அடிக்கும் படர்ந்த முகிலின் பம்பரத் தலையுடன் இணைவதே சுழற்புயலாகக் காட்சி தருகிறது! மாபெரும் மின்னலிடிப் புயலிலிருந்து உண்டாவது சூறைக்காற்று. மின்னியல் கொடை ஆற்றலே சூறைப்புயலுக்குச் சக்தி அளிக்கிறது! ஒரு மணி நேரத்தை மிஞ்சாமல் குன்றிய ஆயுளுடைய சூறைக்காற்று போல் சிறிது காலத்தில் பெருஞ் சேதம் விளைவிக்கும் புயல் வேறெதும் பூமியில் இல்லை! இயற்கை விதி முறைகளில் தானாக உண்டாகும் ஹரிக்கேன், சைக்கிலோன், டைபூன் ஆகிய பூதச் சூறாவளிகளின் இனத்தைச் சேர்ந்த சூறைக்காற்று, ஒரு குட்டி ஹரிக்கேனாகக் கருதப்படுகிறது! சில சமயத்தில் நாட்டுப் புறங்களில் வல்லமை இழந்த ஹரிக்கேன் சிதறிப்போய் சிறியதாகிச் சூறைகாற்றாய் சேதம் விளைவிக்கிறது! எதிர்பாராமல் மக்களையும், அவர் உழைத்துச் சேர்த்த உடைமைச் சொத்துக்களையும் திடாரெனத் தாக்கிப் பெருஞ் சேதம் விளைவிக்கும் இயற்கை இன்னல்களில் கொடூரமானது சூறைப்புயல்!

வட அமெரிக்கா சூறைப்புயலின் தாக்குதலுக்கு வாய்ப்பான கண்டமாக அமைந்து விட்டது! ‘சூறைப்புயல் அரங்கம் ‘ [Tornado Alley] என்னும் அதன் மத்திய கீழ்ப் பகுதியின் சூழ்த்தள அமைப்பு, சூறைக்காற்று இடிப்புயல்கள் புகுந்து செல்ல ஏதுவாக இயற்கை வழி வகுத்துள்ளது! அமெரிக்காவை நோக்கி ஒவ்வொரு ஆண்டிலும் சராசரி 1000 சூறைக்காற்றுகள் வரை அடித்துள்ளதாக பதிவு செய்யப் பட்டுள்ளது! அவற்றில் ஒரு சில பேய்ச் சூறைக்காற்றுகள் மணிக்கு 250 மைல் வேகத்தில் அடித்து, 50 மைல் தூரம் நகர்ந்து பெருஞ் சேதமும், உயிரழிப்பும் செய்யும் உக்கிரம் படைத்தவை! அவற்றில் குறைந்தது 200 சூறைக்காற்றுகள், ஒவ்வொன்றும் 18 அல்லது அதற்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் கொன்றுள்ளன!

1950 முதல் 1999 வரை பதினெட்டு அன்றி அதற்கும் மேற்பட்ட மரணங்களை விளைவித்தவை, 50 சுழற்காற்றுகள். சூறைப்புயலால் வருடச் சராசரி மரணம்: 80 பேர், காயமடைந்தோர்: 1500 பேர். மக்கள் தொகை விரிந்து கொண்டே போனாலும், இப்போது முற்போக்கான துணைக்கோள் காலநிலைக் கண்காணிப்பு [Weather Watch Satellites], முன்னெச்சரிக்கும் உளவு முறைகள் [Detection Methods], முன்னறிவிப்புத் தொடர்புகள், மக்கள் காப்புணர்ச்சி விதிகள் [Public Safety Awareness] தீவிரமாக இயங்கி வருவதால், சூறைப்புயல் மரண எண்ணிக்கை சிறுத்துக் கொண்டே வருகிறது!

அசுர வலுச் சூறைப்புயல்களின் அரங்கப் புகுவீதி!

‘சூறைப்புயல் எங்கெங்கும் பூமியில் தோன்றி அடிக்கலாம்! ஆண்டில் எப்போதேனும் வீசித் தாக்கலாம்! ‘ என்று அமெரிக்காவில் உள்ள தேசீய அசுரப்புயல் ஆய்வுக்கூடத்தின் பூகோளக் காலநிலைவாதி, டாக்டர் ஹெரால்டு புரூக்ஸ் [Dr. Harold Brooks, National Severe Storms Laboratory Research Meteorologist] கூறுகிறார். சூறைப்புயலின் பண்புகளைப் பற்றி ஆழ்ந்து அறிந்த நிபுணரில் டாக்டர் புரூக்ஸக்கு யாரும் ஈடு இணை கிடையாது. சூறைப்புயலின் புகுவீதி அல்லது அரங்கம் [Tornado Alley] எனக் கருதப்படும் டெக்ஸஸ், ஓக்லஹாமா, கான்ஸஸ், நெப்ராஸ்கா, கிழக்கு கொலராடோ, மேற்கு ஐயோவா ஆகிய மாநிலங்களில், சூறைக்காற்று அடிப்புகள் ஆண்டாண்டு தோறும் நிச்சயம் நிகழ்பவை! அவற்றின் வருடாந்தர எண்ணிக்கையும் அதிகம். அவரது கூறுப்படி முதலாவது, ஐக்கிய அமெரிக்க மாநிலங்களின் மத்தியப் பகுதியில், சூறைப்புயலின் புகுவீதி எனப்படும் இடங்களில் சூறைக்காற்றுகள் அடிக்கின்றன. இரண்டாவது மத்திய சமவெளிப் பிரதேசங்களில் வசந்த காலச் சமயத்தில் உச்ச எதிர்பார்ப்பில் நிச்சமாகி [Highest Probability] ஆண்டு தோறும் மீண்டு சூறைப்புயல் அடிப்பு எண்ணிக்கை [Repeatable Annual Tornado Cycle] திரும்புகிறது! மூன்றாவது, சூறைப்புயல் புகுவீதிக்கு அப்பால் உள்ள பகுதிகளில் சூறைக்காற்று அடிப்புகள் மிகவும் குறைந்தவை; அத்துடன் குறிப்பிட்ட காலநிலைச் சமயங்களில் தோன்றாதவை!

சூறைப்புயல் புகுவீதி அரங்கத்துக்கு மேற்கே ராக்கி மலைகள், தெற்கே மெக்ஸ்கோ வளைகுடா இருப்பது சூறைக்காற்றுகளுக்கு வாயிலாக அமைந்து விட்டன, என்று கூறிகிறார், ஹோவேர்டு புளுஸ்டைன் [Howard Bluestein]. ஓக்லஹோமா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் புளுஸ்டைன். அவர் ஓர் சூறைப்புயல் நிபுணர். வசந்த காலத்தில் வலுவான மேற்கத்தைய வரை போக்கு என்னும் ‘ஜெட் ஸ்டிரீம் ‘ [Jet Stream] அரங்கத்தின் மீது செல்கிறது. அப்போது அப்பகுதிகளில் கீழ்நிலை அழுத்தம் [Low Pressure] உண்டாகி, மெக்ஸிகோ வளைகுடாவிலிருந்து ஈரடிப்பு காற்றை [Moist Air] இழுக்கிறது. அச்சமயம் ‘வலுமிக்க பெரும் இடிப்புயல் ‘ [Supercells] ஏற்படும் நிலை காற்றுத் துண்டிப்பால் [Wind Shear] நிகழ்கிறது என்று கூறுகிறார், புளுஸ்டைன்.

டாக்டர் புரூக்ஸ் தனது புள்ளி விவர ஆராய்ச்சிகளுக்கு 1921 முதல் 1995 வரை நிகழ்ந்த சூறைக்காற்றுகளின் விளைவுகளையே கையாண்டார். அவற்றிலும் ஃபுஜிடா அளவுத் தரத்தில் F2, அதற்கு மேற்பட்ட சூறைக்காற்றுகளையே ஆராய்ந்தார். சூறைக்காற்றடிப்பில் 10% எண்ணிக்கைதான் குறிப்பிடத் தக்கதாய் இருந்தாலும், அவையே பெரும்பான்மை இறப்புகளுக்குக் காரணமானவை என்று அறியப்பட்டது. மொத்த மரணங்களில் 67% [மூன்றில் இரண்டு பாகம்] F4, F5 உச்சநிலை சூறைக்காற்றுகளால் விளைந்தவை என்றும் அறிந்து கொண்டார். அத்துடன் மில்லியன் கணக்கில் மாநிலங்களுக்குச் சேதாரம் விளைவித்ததையும் புள்ளி விவரத்தில் பதிவு செய்தார். அவரது புள்ளி விவரப்படி 25% தீவிரச் சூறைக்காற்றுகள், ஒவ்வொரு ஆண்டிலும் புகுவீதியில்தான் எப்போதும் தாக்கி வருகின்றன.

அமெரிக்காவின் சூறைப்புயல்களும், அவற்றின் வேகங்களும்

1989-1998 ஆண்டுகளில் எடுத்த கணக்கெடுப்பில் சராசரிச் சூறைக்காற்றுகள்: டெக்ஸஸ் 168, ஃபிளாரிடா 79, கான்ஸஸ் 75, கொலராடோ 58, நெப்ராஸ்கா 57, ஓக்லஹோமா 55. அனைத்தும் அமெரிக்காவின் மத்தியப் பிரதேசத்தை ஒட்டியவை! எல்லாவற்றிலும் உச்சமான சூறைக்காற்றுப் பயமுறுத்தல் ஓக்லஹோமா, டெக்ஸஸ் மாநிலப் பகுதிகளில் நிகழ்வதையே படம் சுட்டிக் காட்டுகிறது! ஒன்பது வருட சராசரி எடுத்துப் பார்த்ததில் அறிந்தது, ஆண்டுக்கு 125 சூறைக்காற்றுகள்! 1999 மே 3 ஆம் தேதி முன்னறிவிப்பு காட்டி, மக்கள் விழிப்பாக எதிர்நோக்கி இருந்தால், அடித்த சூறைப்புயலில் 40 பேர் உயிரிழந்து, 8000 வீட்டுக் கட்டமைப்புகள் சிதைக்கப் பட்டன என்று அறியப் படுகின்றது! அமெரிக்க மாநிலங்களில் 2003 ஆம் அடித்த சூறைக்காற்றுகளில் 105 பேர்களும், 1998 ஆம் ஆண்டில் அடித்த சூறைக்காற்றுகளில் 130 பேர்களும் மாண்டதாக அறியப்படுகிறது.

சூறைக்காற்று சுழற்றி அடிக்கும் போது, அதை அண்டி மின்னல் வெட்டுகள் நிகழ்ந்து, இடி முழக்கமும் செவில் படுகிறது. சில சுழற்காற்றுகள் மணிக்கு 300 மைல் வேகத்தில் அடிக்கும் புயலைக் கொண்டவை. பம்பரம் போல் சுழலும் அதன் சிரசின் அகலம் 300 அடி முதல் ஒரு மைல் வரை விரிந்திருக்கலாம். குன்றிய காலத்தில் மிஞ்சிய சிதைவுகளை உண்டாக்கும் வல்லமை யுடைய சூறைப்புயலின் காற்று வேகத்தைக் கண்டுபிடிப்பது அத்துணை எளிதன்று! காலநிலைக் காற்றுகளின் வேகத்தை அளப்பதில் நிபுணரான அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் எட்வெர்டு புரூக்ஸ், மிகை அழுத்த மின்சாரக் கம்பிகளைத் தாங்கும் கோபுரக் கம்பங்களைச் [High Tension Cable Towers] சாய்ப்பதற்குச் சுமார் மணிக்கு 300 மைல் வேகத்தைக் காற்று கொண்டிருக்க வேண்டும் என்று கணித்தார். மற்ற விஞ்ஞானிகள் மணிக்கு 500 முதல் 600 மைல் வரை இருக்கலாம் என்று அனுமானித்தனர். சிலர் ஒலிவேகத்தை மிஞ்சிய வேகம் என்றுகூடக் கூறினார். மித மிஞ்சிய புயல் வேகங்கள் [>300 mph] தர்க்கத்துக்கு உட்பட்டவை யானதால், சில விஞ்ஞானிகள் மணிக்கு 200 மைல் அடிக்கும் வேகத்தை உச்சமாக எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

கடல் மீது நகர்ந்து வரும் ‘கடற் சூறைப்புனல் ‘ [Waterspouts] ஒன்றின் பூத அளவை, அமெரிக்கக் காலநிலை அறிவிப்புப் பேராசிரியர் ஃபிராங்க் பிக்லோ [Frank Bigelow, U.S. Weather Bureau Meteorologist] என்பவர் கணித்திருக்கிறார். கடல் மட்டம் முதல் முகில் மட்டம் வரை ஓங்கிய அதன் சுழற்தூண் புனலில் நீர் சுற்றி வருகிறது! அவரது கூற்றின்படி கடல் மட்டத் தூணின் விட்டம்: 240 அடி. சுழற்தூண் புனல் மத்தியின் விட்டம்: 144 அடி. முகிலைத் தொடும் மட்டத்தில் புனலில் விட்டம்: 840 அடி. சுழற்தூண் புனலின் உயரம்: 3600 அடி. முகில் உச்சியின் உயரம்: 16,000 அடி. கடற் சூறையின் வேகம்: 1.1 mph.

சூறைக்காற்றின் போக்கை நேரில் கண்டோர் கூறியவை

மாபெரும் மின்னலிடிப் புயலிலிருந்து உண்டாவது சூறைக்காற்று. அது வருவதற்கு முன்பு, வெப்பான நீர்மை உப்பிய காற்றுடன் மப்பு மந்தாரமாக வானத்தில் [Hot, Humid Air under overcast Sky] முகில் இருட்டிக் கொண்டு போவது தெரிகிறது. மெதுவாகச் சுற்றிக் கொண்டிருக்கும் இரண்டு முகிற்கூட்டம் ஒன்றை நோக்கி ஒன்று நெருங்குவதைச் சிலர் பார்த்திருக்கிறார்கள். பார்த்தவர்களில் பலர் புனல் தரையில் சுற்றி நெருங்கிடும் சமயத்தில் மிகையாகும் பயங்கரச் சப்தத்தைக் குறிப்பாகச் சொல்லி யிருக்கிறார்கள். ஹரிக்கேன், சைக்கிலோன், டைஃபூன் ஓசையிடும் ஒலிக்கு வேறுபட்டு, சூறைக்காற்றின் ஒலி மில்லியன் தேனீக்கள் விடும் ‘ஹம்மிங் ‘ இரைச்சலை ஒத்திருத்திருப்பதாகச் சிலர் கூறி யிருக்கிறார்கள். அது அண்டித் தாக்கும் போது உண்டாக்கும் வெடி ஓசை, ஆயுதக் குண்டு வெடிப்பதுபோல் செவியில் கேட்கிறது. சூறைக்காற்று தாக்கி அகன்ற பின் தாக்கப்பட்ட தளத்தைப் பார்த்தால், வெடிகுண்டு போட்டாற் போல்தான் காட்சி தருகிறது!

காலநிலை அறிவிப்புகளில் ரேடியோ, டெலிவிஷன் நிலையங்கள் அடிக்கடி சூறாவளி, இடிமின்னல், பெருமழை வரப் போவதை முன்னறிப்பு எச்சரிக்கை செய்து வருகின்றன. சூறைக்காற்று வருகைதரும் பிரதேச மாந்தர் பின் கூறப்படும் வெளி அறிகுறிகளைக் கண்டால் பிறருக்கும் எடுத்துக் கூறி பாதுகாப்பு இடங்களில் ஒளிந்து கொள்ள வேண்டும்.

1. வான மண்டலத்தில் நொய்ந்த பச்சை அல்லது பச்சை கலந்த கருமை [Sickly Greenish or greenish Black] நிற முகில் கூட்டம் தோன்றுவது.

2. இடிமின்னல் வெட்டிய சிறிது நேரத்தில் மர்மான ஓர் அமைதி நிலவுவது.

3. கருமுகில் மந்தைகள் சுற்றிக் கொண்டு வேகமாய் நகருவது அல்லது வானத்தில் ஒரு புறத்தை நோக்கிக் குவிந்து புகுவது.

4. ஒரு சிறு நீர்வீழ்ச்சி பொழிவுபோல் ஓசை அல்லது உர்ரென்று சீறிக்கொண்டு எதிர்வரும் காற்றின் ஓலம், நெருங்க நெருங்க உறுமும் ஓசை மிகையாதல். சூறைக் காற்றின் சப்தம், சில சமயங்களில் தண்டவாளங்களில் ஓடும் ரயில் போலவும், ஜெட் விமானம் பறக்கும் ஓசை போலவும் கேட்பதுண்டு.

5. இடிப்புயல் சமயத்தில் உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற ஓசைபோல் வெடிப்பு எழுவது.

6. பம்பர வடிவில், புனல் உருவில் அல்லது காளான் போல் பிரம்மாண்டமான கருமுகில் சுழற்சி தோன்றுவது.

7. சூறைக்காற்று எச்சரிக்கை அறிவிப்பு இருக்குமாயின், பனிக்கட்டிப் புயல்மழை [Hail Storm] பெய்வதற்கு வாய்ப்புள்ளது. வலுவாக அடிக்கும் பனிக்கட்டிகள், துப்பாக்கிக் குண்டுகள் போல பாயும் வல்லமை பெற்றவை என்றும் தலையில் அடித்தால் மரணம் நேரும் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்! சில தளங்களில் பனிக்கட்டி மழைவீழ்ச்சி, சூறைக்காற்று அடிப்புக் காலநிலைகளில் பொதுவாக எல்லாப் பொழுதிலும் எதிர்பார்க்கலாம்!

ஜப்பானிய விஞ்ஞானி ஃபுஜிடா அமைத்த சூறைப்புயல் அளவுமுறை

இடி, மின்னல், மழை சூழ்ந்து அடித்தாலும், சூறைக்காற்றின் வேகப் புயலே [மணிக்கு 72-318 மைல் வேகம்] எதிர்ப்படும் மரங்கள், வீடுகள், மின்சாரக் கம்பங்கள், கம்பங்களின் ஊடே புகும் கம்பிகள் யாவற்றையும் தகர்த்துச் சூறையாடுகிறது! மரங்கள் வேரோடு பிடுங்கப் படுகின்றன! ஓய்வில் உள்ள வாகனங்கள், வீதியில் ஓடும் வாகனங்கள் யாவும் தூக்கி ஆயிரக் கணக்கான அடி தூரத்தில் வீசி எறியப்படுகின்றன! செங்கல் வீடுகளின் கூரைகள் வீசி எறியப்படலாம்! மரவீடுகள் தரை மட்டமாகின்றன! தரையில் கிடக்கும் சாதரணச் சாதனங்கள், மரத்துண்டுகள் யாவும் ஆயுதங்கள் போலப் பாய்ந்து செல்கின்றன! அல்லது துப்பாக்கி ரவைபோல் சுடப்படுகின்றன!

ஜப்பானிய விஞ்ஞானி தியோடோர் ஃபுஜிடா [Theodore Fujita] என்பவர் காற்றின் வேகத்தை ஒத்தச் சேத விளைவுகளை ஒப்பிட்டு ஒரு சூறைப்புயல் வல்லமை அளவு நிலையை [Fujita Tornado Scale] உண்டாக்கினார்.

F அளவு காற்று வேகம் (mph) சிதைவுத் தீவிரம்

F-0 <74 mph வரை மிகச் சொற்பச் சேதம் [புகைபோக்கி, மரங்கள், கம்பம்]

F-1 >75-112 mph சிறிதளவு சேதம் [கூரைகள் கிழிதல், வாகனங்கள் எறியப்படல்]

F-2 >113-175 mph கணிசமான சேதம் [கூரைகள் நீங்குதல், தற்காலிக இல்லம் தகர்தல், பெரிய மரங்கள் சாய்தல், கார்கள் பறப்பு, கன வாகனங்கள் கவிழ்ப்பு]

F-3 >158-206 mph தீவிரச் சேதம் [ரயில்கள் வீழ்தல், வீடுகள் முறிவு, பெரு வாகனம் வீசப்படல், அனைத்து மரங்களும் சாய்தல்]

F-4 >207-260 mph பேரளவுச் சேதம் [செங்கல் வீடுகள் தரைமட்டமாதல்]

F-5 >261 mph மேல் மதிப்பீடுக்கு அடங்காச் சேதம் [பிரளய விளைவுகள்]

சூறைக்காற்றுக்கு சுழற்சி எவ்விதம் ஏற்படுகிறது ?

சுழற்சி எப்படி சூறைக்காற்றுக்கு உண்டாகிறது ? சைக்கிலோன் சுழற் காற்றுகளின் பரம்பரையைச் சேர்ந்தது, சூறைக்காற்று. சாதாரணச் சுற்றும் தூசி முதல், பாதிக் கண்டம் பரவும் பிரம்மாண்டமான குளிர்காலப் புயல் வரை [Winter Storm] யாவும் அந்த வர்க்கத்தைச் சார்ந்தவை. எல்லாவற்றில் சிறிய சூறைக்காற்றுத் தீவிர இடிப்புயலாகத் [Severe Thunderstorm] தோன்றுகிறது. அதிர்ஷ்டவசமாக ஆயிரத்தில் ஒன்றுதான் சூறைக்காற்றாக அசுர வலுப் பெறுகிறது!

புனல் வடிவத் தூண் சுருளாகக் கடைந்து எழுவதற்கு முன்பு, முதலில் முகிற்பந்தல் அடிப்பீடத்திலே சுழற்சி தென்படுகிறது. எழுகின்ற காற்றே சூறைப்புயலை உருவாக்குகிறது. சுழற்சியின் வேகமும், வடிவமும் மிகையாகும் போது, சில சமயம் சுற்றும் புனல்தூண் முகில்தலையை அற்றுக் கொண்டு, யானைக்கால் போல் தரைநோக்கி இறங்குகிறது. சில சமயம் சுழலும் யானைக்கால் முகிற்பந்தலில் புகுந்து கொள்கிறது. அத்தகைய சூறைப்புயல்கள் பறக்கும் விமானங்களைத் தாக்கிக் கவிழ்த்துகின்றன!

பூமத்திய ரேகைக்கு இருபுறமும் உள்ள வேனில் அரங்குச் சூழ்வெளியில் [Tropical Zones] பெருத்த அளவு உஷ்ண முரண்பாடு இருத்தலால், தட்ப வெப்பக் காற்று முகில்கள் கலக்கும் போது மின்னலிடிப் புயல்கள் [Thunderstorms] ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வட அமெரிக்காவின் நடுப்புற மாநிலங்கள் உலகத்திலே மிக்கச் சூறைப்புயல்கள் தாக்கும் தளங்களாகக் கருதப்படுகின்றன. பொதுவாக வசந்த காலத்தில் அவற்றின் உற்பத்தி உச்சமானது. மெக்ஸிகோ வளைகுடாவில் பிப்ரவரி முதல் சூறைக்காற்றுக் காலம் துவங்கி வசந்த, வேனிற் காலங்களில் வடக்கு நோக்கிச் செல்கிறது.

பெரும்பான்மையான சூறைப்புயல்கள் பகல் நேரம் தாண்டி வெப்பம் உச்சமாகும் சமயத்தில் உருவாகின்றன. விந்தையாக அவை இரவு நேரங்களிலும் உண்டாகலாம்! எந்த நேரத்தில் உதயமானாலும் புனலும் புயலுடன் இணைந்த தலை பெருத்த முகிலும் ஒன்றாக, ஒரே வேகத்தில் மெதுவாக மணிக்கு 4 மைல் முதல் வேகமாக 70 மைல் வரைச் சுழன்று கொண்டே செல்கின்றன! சேதம் விளைவிக்கும் காலம் கண்ணிமைப் பொழுது அல்லது ஒரு நிமிடம் கூட ஆகலாம்!

சூறைப்புயலுக்கு உகந்தது உஷ்ண முரண்பாடு: கீழ்மட்டச் சூழ்நிலையில் நிலவும் நீர்மை உப்பிய வெப்பக் காற்று, மேல்மட்ட நிலையில் உலவும் வரண்ட தட்பக் காற்று. கடல் மட்டத்தில் நீர் ஆவியாகி மேலே செல்லும் போது, சூரிய வெப்பம் ‘ஆவித் தேக்கசக்தியாக ‘ [Latent Heat of Vaporization] எடுத்துச் செல்லப்படுகிறது. இவ்விரண்டு தட்ப வெப்ப நிலைகளின் வேறுபாடு மிகுதியாக மிகுதியாக சூறைக்காற்று வலுவாக வசதியாகிறது. திணிவு [Density] குன்றிய வெப்ப நீர்மைக் காற்று மேலே ஏறிக் குளிர்ந்த பகுதியில் நீர்ச்சுமையை இறக்கி பனித் தேக்கசக்தியை [Latent Heat of Ice or Condensation] வெளியேற்றிச் சுழற்சி உண்டாக்குகிறது. இந்த வெப்பச் சுற்றியக்கம் [Heat Convection] கீழும் மேலும் தொடர்ந்து, புனலின் சுழற்சி வேகம் அதிகரிக்கிறது!

கடல் மட்டத்துக்கு மேல் வெவ்வேறு உயரத்தில், காற்று பலவித நீர்மைத் திணிப்பு [Humidity], உஷ்ணம் ஆகியவற்றோடு கலக்கும் போது மழை, மின்னல், காற்றுச் சுழற்சி, சுழற்புனல் தூணை வலுப்படுத்தல் [Strengthening of the Rotating Shaft] போன்றவை ஏற்படுகின்றன. சுழற்புனல் தூண் வலுப்படுத்துவதை, ஆங்கிலத்தில் ‘மீஸோ சைக்கிலோன் ‘ [Mesocyclone] என்று குறிப்பிடுகிறார்கள். கடல் மட்டக் கீழ் பரப்புகளில் அடிக்கும் காற்று, எப்போதும் வடகோளப் பகுதிகளில் எதிர்க்கடிகாரத் [Anti-clockwise] திசை நோக்கியே சுற்ற உதவுகிறது.

மீஸோ சைக்கிலோனுக்குக் கீழே ஒரு சூறைப்புயல் உருவாகலாம். சுழலும் காற்றுத்தூண் குறுகும் போது, அதன் வேகம் மிகையாகி, தூண் நீட்சியாகி முகில் சிகரத்தின் உள்ளே நுழைகிறது. பலபடி உயரங்களில் நேரும் வேறுபட்ட காற்றின் வேகங்களே முதலில் புயல் சுழற்சியைத் தூண்டி விடுகிறது. களிமண்ணைப் பிசைந்து கட்டியாகக் கைகளில் திரட்டும் போது முடிவில் அது ஒரு தூணாகத் திரள்வது போல், பல அடுக்குகளில் நிகழும் காற்றுச் சுழற்சிகள் ஒருங்கிணைந்து, புனலாக எழுந்து சுற்றும் புயலாக மாறுகிறது. உதாரணமாக 1000 அடி உயரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 5 மைல் அடித்தால், 5000 அடி உயரத்தில் காற்று மணிக்கு 25 மைல் வேகத்தில் அடிக்கலாம். இவ்வேறுபாடே ‘காற்று துண்டிப்பை ‘ [Wind Shear] உண்டு பண்ணி, சுழலும் செங்குத்தான புயல்தூணை உருவாக்குகிறது.

மின்னழுத்த கொடைமின் இயக்கி உருவாக்கும் சூறைப்புயல்கள்

1830 இல் அமெரிக்க விஞ்ஞானி ராபர்ட் ஹாரே [Robert Hare] என்பவர் காற்றின் ஊடே புகுந்து செல்லும் ஒரு மின்சார ஓட்டத்தால் சூறைப்புயல் உண்டாகிறது என்னும் ஒரு கோட்பாடைக் கூறினார். பூமி மட்டக் காற்றிலுள்ள வெப்பமான மின்னியல் கொடைகளுக்கும் [Electrical Charges], மேல் மட்டத்தில் உள்ள தட்ப நிலை காற்றின் மின் கொடைகளுக்கும் உள்ள மின்னழுத்த வேறுபாடு மின்னலாய் ஒளிவெட்டிப் பின் இடியாய் வெடிக்கிறது. ஏறக்குறைய அதே சமயத்தில் பிரென்ச் பெளதிக விஞ்ஞானி ஜே.சி. பெல்டியர் [J.C. Peltier] சூறைக்காற்றின் மின்னியல் பண்புகளை விளக்கி ஒரு நூல் எழுதினார். 1887 இல் அமெரிக்க இராணுவ அதிகாரி கர்னல் ஜே.பி. ஃபின்ட்லே [J.P. Findlay] சூறைப்புயல் உதயம் மின்னியல் தொடர்பைச் சற்றும் சார்ந்திருக்க வில்லை என்று 149 காரணங்கள் காட்டியிருந்தார்.

‘சூறைக்காற்றின் உள்ளே ‘ என்னும் விஞ்ஞான நூல் எழுதிய பெர்னார்டு வொன்னிகட் [Inside the Tornado By: Bernard Vonnegut] என்பவர் வொர்செஸ்டர், மாஸ்ஸசுஸெட்ஸில் இருந்த போது நிகழ்ந்த தன் சொந்த அனுபவத்தைக் கூறுகிறார். ‘ நண்பர் ஒருவர் அறிவிக்க அட்லாண்டிக் கடல் தென்கிழக்குப் பகுதியில் நிகழ்ந்த மாபெரும் ஓர் அபூர்வ, அற்புத மின்னல் வீச்சுக் காட்சியைத் தான் கண்டதாகக் கூறினார். ஆறு மணி நேரத்துக்கு முன்பு அடித்த வொர்செஸ்டர் சூறைக்காற்றை உருவாக்கிய அதே புயலிலிருந்து மின்னல் வீச்சுகள் விநாடிக்கு 20 வெட்டு வீதம் மின்னுவதைக் கண்டார். சுமார் நூறு மைல்களுக்கு அப்பாலிருந்து வெட்டும் அந்த மின்னல் வீச்சுகளைப் படமெடுத்து, அவர் கடல் மட்டத்திலிருந்து 12 அல்லது 13 மைல் உயரத்தில் ஏற்படும் இடிமுகிலில் உண்டாகும் மின்னல் வெட்டுகளைக் கணிக்க முடிந்தது. அந்தக் கணிப்புகளை வைத்துக் கொண்டு, அவற்றை வெளியிட எத்துணை அளவு மின்னாற்றல் [Electric Power] தேவை என்று அறிந்தார்! கணக்கிட்ட மின்னாற்றல் 100 மில்லியன் கிலோ வாட் [kilowatts] என்று கணக்கிட்டார். 1950-1960 ஆண்டுகளில் அனைத்து அமெரிக்காவிலும் உற்பத்தியான மின்சக்தியில் மொத்த அளவை ஒத்தது, கணக்கிட்ட அந்த எண்ணிக்கை.

100 மில்லியன் கிலோவாட் மின்சக்தி எந்த ஒரு விதத்திலோ இடிப்புயலில் உருவாகும் சூறைக்காற்றுடன் சம்பந்தப்பட்டது என்று யூகித்தறிந்தார். இத்துணை அளவு பூத மின்சக்தி சூறைப்புயலில் காற்றைச் சுழற்றிச் செலுத்தப் போதுமானது என்று கண்டறிந்தார். அப்போது அவருக்கு இரண்டு வினாக்கள் எழுந்தன. ஒன்று சூறைப்புயலில் அடிக்கடி பொதுவாக அல்லது அபூர்வமாக மின்னல் அடிப்பு நிகழுமா ? அடுத்தது சூறைப்புயலை நேராகப் பார்த்தவர், அபூர்வமாக வேறு வித மின்னியல் விளைவுகளைக் கவனித்துள்ளார்களா ? இரண்டு வினாக்களுக்கும் பதில் ‘உடன்பாடு ‘ என்று முடிவில் அவர் அறிந்தார்.

விமானப் போக்குக் காலநிலைவாதி [Airlines Meteorologist] ஒருவர், ‘வலுவுற்ற சில குறிப்பான சூறைப்புயல்கள் எப்போதும் மின்னலுடன் இணைந்தே அடிப்பவை ‘ என்று கூறுகிறார். ‘உஸ்ஸென்ற ஓசை, ரயில் ஓடுவது போன்ற அரவம், நேரடியாகச் சூறைப்புயல் புனலின் முடிவில் கேட்கிறது. புனலில் மையத்தில் 50-100 அடி விட்டத்தில், வட்ட வடிவில் அரை மைல் உயரத்துக்குத் துளைபோன்ற குழல் இருப்பது தெரிந்தது. மையத் துளையைச் சுற்றிச் சுழலும் முகிலும், துளைக்குள்ளே ஒளிமயத்தில் தாவிப் பாயும் நிரந்தர மின்னல் வெட்டுகளும் காணப்பட்டன ‘ என்றும் சொல்கிறார்.

அறுபது வயது கிழவர் ஒருவர் தான் எட்டு வயதுச் சிறுவனாக இருந்த போது கண்ட காட்சியைக் கூறுகிறார். சூறைப்புயல் ஒன்று வீசும் போது, வீட்டில் அனைவரும் ஒளிந்து கொண்ட போது, எட்டு வயதான சிறுவன், சமையல் அறைப் பலகணி வழியாக, மகத்தானதோர் காட்சியைக் கண்டான். மாபெரும் மின்னொளிக் கோளம் ஒன்று, சூறைக்காற்றின் முன்பாக ஓடியது! சுழல்வேகப் புனல் பக்கத்து வைக்கோல் பந்தலைத் தாக்கப் போகும் முன்பு அதைக் காண அஞ்சி, சிறுவன் இறங்கிப் படுக்கைக் கீழ் ஒளிந்து கொண்டான். புயல்சுரங்கத்தில் [Storm Cellars] ஒளிந்து கொண்டவர்கள், மின்னியல் கொடை வீச்சுகள் [Electrical Discharges] காற்றைத் தாக்கி உண்டாக்கும் ஓஸோன், நைடிரஜன் ஆக்ஸைடு [Ozone, Oxides of Nitrogen] என்னும் பச்சை நிற வாயுக்களால் மூச்சடைத்துத் திணறியதைக் கூறி யிருக்கிறார்கள்.

துல்ஸா, ஓக்லஹோமாவில் [Tulsa Oklahoma] உள்ள பூதளப் பெளதிக நோக்ககம் [Geophysical Observatory] ஒன்றில் பதிவான நிகழ்ச்சி இது. ஆறு மைல் தூரத்தில் சென்ற சூறைப்புயல் ஒன்று நோக்ககக் கருவிகளில் மின்காந்த மாற்றங்களைப் பதிவு செய்துள்ளது! சில நிமிடங்கள் கருவிகள் பூமியின் காந்தப் பதிவை மாற்றியதோடு, பூமிக்குள் போகும் மின்னோட்டத்திலும் ஏற்ற இறக்கங்களைக் காட்டி யுள்ளன! நியூ மெக்ஸிகோ சுரங்க பொறிநுணுக்கக் கூடத்தின் பேராசிரியர் மாக்ஸ் புரூக் [Professor Max Brook, New Mexico Institute of Mining & Technology] அப்பதிவுகளைச் சேகரித்துக் கணக்கிட்டதில், சூறைப்புயல் குறுக்கிட்ட போது, 100 ஆம்பியருக்கும் [100 ampere] மேற்பட்ட மின்னோட்டம், பத்து நிமிடங்கள் பூமிக்குள்ளே சென்றிருப்பதாகக் குறிப்பிட்டார்.

1965 ஏப்ரல் 11 இல் ஜேம்ஸ் வேயர் [James Weyer] என்பவர் டொலிடோ, ஓஹையோவில் சென்ற இடிப்புயல் ஒன்றில் பல படமெடுத்துள்ளார். போவது சூறைப்புயல் என்று புரிந்து கொள்ளாமல், மின்னல் அடித்துச் செல்லும் திசைநோக்கிக் காமிராவைக் கொண்டு சென்று படமெடுத்ததில், படம் ஒன்றில் புனல்தூண் நடுவே நெளிந்து நடமிடும் இரட்டை மின்னல் வீச்சுகளைக் காண முடிந்தது! மின்னொளியின் இணைப்புகள் இருப்பதைப் படம் மூலமும், கருவிகளின் பதிவு மூலமும் நிரூபித்தாலும், இன்னும் பல வினாக்கள் எழுகின்றன! மின்வெட்டுகள் சூறைப்புயலை என்ன செய்கின்றன ? புனல்தூணைச் சுழலும்படி செய்கிறதா ? அல்லது நகரும்படி செய்கிறதா ? அப்படியானால் அவற்றை எவ்விதம் மின் வீச்சுகள் உண்டாக்குகின்றன என்பது பொறிநுணுக்க முறைகளில் விளக்கப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டும்!

சூறைக்காற்றின் தாக்குதலிலிருந்து தப்புவது எப்படி ?

சூறைக்காற்றை எதிர்பார்க்கும் காலங்களில், தேசீயக் காலநிலை அறிவிப்புப் [National Weather Service] பணியாளர் அடிக்கடி தெரிவிக்கும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கவனித்து வருவது அவசியம். புனல் முகில் வரும் திக்கையும், வேகத்தையும் அறிவிக்கும் ரேடியோ, டெலிவிஷன் செய்திகளைக் கேட்பது முக்கியமானது. தற்காலியப் பொக்கு வீடுகளில் [Mobile Homes] வசிப்போர், முன்னதாகவே வேறு பாதுகாப்பான உறுதிக் கட்டிடங்களை அண்டி ஒளிந்து கொள்வது அடுத்து செய்யும் காரியம். வீடுகளில் கீழறை இருந்தால், அங்கு குடும்பத்தினர் யாவரும் மறைந்து கொள்வது சாலச் சிறந்தது. கீழறைகள் இல்லாத வீட்டார் படுக்க அறைக்கட்டில், மேஜை, ஒடுக்க அறை [Closet], கண்ணாடிப் பலகணி இல்லாத குளியலறை, சிற்றறைகளில் பதுங்கிக் கொள்வது பாதுகாப்பானது. சிரசையும், கழுத்தையும் பாதுகாத்துக் கொள்வது முக்கியமானது. தடித்த மெத்தை, போர்வைகளை உடம்பு மீது பல சுற்றுகள் சுற்றிக் கை, கால், உடம்பைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

ஆண்டு தோறும் சூறைப்புயல் விஜயம் செய்து விளையாடும் டெக்ஸஸ், பிளாரிடா, கான்சஸ், கொலராடோ, ஓக்லஹோமா, நெப்ராஸ்கா போன்ற ‘சூறைப்புயல் அரங்கு ‘ மாநிலங்களில் வாழ்பவர்கள், புதிய இல்லங்கள் கட்டினால், ஜன்னல்கள் அற்ற, காங்கிரீட் அல்லது இரும்பாலான ‘பாதுகாப்பு அரண் ‘ [Tornado Room] ஒன்றைச் சிறப்பாக அமைத்துக் கொள்வது அறிவுடைமையாகும். அந்த அரணைக் கட்ட அதிகச் செலவானாலும், சூறைப்புயல் அடிக்கும் அபாய காலங்களில் விலை மதிப்பற்ற அனைவரது உயிரையும், அரண் பிழைக்க வைக்கும் என்பதை மறக்கலாகாது.

தகவல்கள்:

1. Reader ‘s Digest Marvels & Mysteries of the World Around Us [Fourth Prining (1977)]

2. Recent Tornadoes US Killer Tornadoes of 2003 [www.tornadoproject.com/recent/recentts.htm]

3. Top Ten Tornado Lists [www.tornadoproject.com/toptens/topten1.htm]

4. Tornado Safety [www.tornadoproject.com/safey/safety.htm]

5. Weather Central -Tornadoes [http://home.comcast.net/]

6. When & Where Do Tornadoes Occur ? By Keli Trap [www.nssl.noaa.gov/]

[Oct 8, 2001]

7. Spinnng like a Dynamo, The Size of a Twister

8. Protecting your Home from Twisters

9. Japanese Scientist Fujita – Tornado Damage Scale

10 Cyclones & Tornadoes By Mark Rose & Mike Davis [Nov 3, 2002]

11 Thunderstorms, Lightning, Tornadoes [www.nssl.noaa.gov/hazard]

****

jayabar@bmts.com

Series Navigation