‘ராமய்யாவின் குடிசை ‘ – பாரதி கிருஷ்ணக்குமாரின் கீழ்வெண்மணி விவரணப்ப(ா)டம்

This entry is part [part not set] of 28 in the series 20051230_Issue

டிஜிகே


மனித இனத்தின் காட்டுமிராண்டிகள் மிச்சம் இருப்பது பற்றிக் கட்டியம் கூறிய நிகழ்வு கீழ்வெண்மணிச் சம்பவம்.

தமிழக வரலாறு புத்தகம் எதுவாயினும் அதில் இடம் பெற வேண்டிய வேதனைச் சம்பவம்.

அசோகர் நட்ட மரத்தை வேரோடு சாய்த்தாயினும் கருகிப் போன இந்த மனித தளிகர்கள் பற்றி பாடம் வைக்கப்பட வேண்டும் – தமிழ் நாட்டு பாட நூல்களில்.

இச் சம்பவம் பற்றி அறியாமல் உலக பொருளாதார தத்துவங்கள் பற்றி நாம் கற்பது விசித்திரமே…

டிசம்பர் 25, 1968 பழைய தஞ்சை மாவட்டத்தில் உள்ளடங்கிய -தற்போதைய நாகை மாவட்டம் – கீழ்வெண்மணி கிராமத்தில் அரை மரக்கா அளவிற்கு கூலி உயர்வு கேட்டதால், பெண்கள், சிறுவர்கள்,வயோதிகர்கள் என 44 தலித் பேதைகள் எரிக்கப்பட்டனர் — உயிரோடு.

நந்தன் கதைபடித்ததால் தங்கள்து அறித்துவத்தைக் காட்டினார்களோ மேட்டுக்குடியினர்.

வயிற்றிற்கு இருபருக்கை கேட்டதற்கு வாய்க்கரிசி இடக்கூட பிணமாக அன்றி சாம்பலாக்கினர்.

சிறுவயதில், மதுரை தெருக்களின் நீண்ட சுவர்களின், வீரவணக்கம் வீரவணக்கம் வெண்மணி தியாகிகளூக்கு வீரவணக்கம் என்று பெரிய பெரிய எழுத்துக்களில் பார்த்த நாள் முதல் நெஞ்சு அது பற்றி அறிந்து துடித்த விஷயம்.

அந்த அஸ்தி கலசம் பற்றி பாரதிராஜா சொன்னார், ஒவ்வொரு மனிதனும் தமிழ் மண்ணில் நடந்த இந்த விஷயத்தை தெரிவது அவசியம் என்று.

கமல் சொன்னார், இவை நெற்றியில் பூசவேண்டிய சைவர்களின் விபூதி அல்ல..

நெஞ்சத்தில் இட்டு நித்தம் நினைத்து வர்க்க பேதம் களைவதற்கு உறுதி பூணவேண்டிய விஷயம் என்று.

இரண்டும் சத்தியமான வார்த்தை என்பது இந்தப் படம் பார்க்கையில் தெரிந்தது.

இந்தப் படம் சரியான சமயத்தில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சம்பவத்தைப் பார்த்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், தினந்தந்தி நிருபராக களம் சென்று செய்தி சேகரித்தவர்கள், எரியூட்ட பிணங்களை எடுத்துச் சென்ற அதிகாரி, குற்றம்சாட்டப்பட்டவரின் அண்ணன் மகன், நீதிமன்றத்தில் தப்பித்த குற்றவாளியை வெட்டிச் சாய்த்த நபர் என பலரும் 60 மற்றும் 70 வயதுகளில்.

கதை முன்னோட்டமாக தாழ்த்தப்பட்டவர்கள் அந்தக்காலங்களில் வாழ்ந்த விவசாய கூலி வரலாறு. நடத்தப்பட்ட விதம்.

வளைந்து நடந்த இவர்களின் வாழ்வை நிமிர்த்த கர்நாடகாவில் இருந்து வரும் காவிரியாய் வந்த மேல்ஜாதி இந்து கர்னாடக ஐயர் பி. சீனிவாச ராவ்…. என விவரமாக படம் முற்சூழல் சொல்கிறது.

சம்பவம் நடப்பு தொடர்ந்து நாகப்பட்டினத்தில் பொறுப்பு வகிக்க அனுப்பப்பட்ட திரு.வால்டர் தேவாரம், வந்து நேரிடையாகப் பார்த்த திரு.கருணாநிதி, என விவரமான பல பதிவுகள் உள்ளன.

காக்க வேண்டிய அரசாங்கம் மிராசுதார்களுக்கு பயந்து திருக்குவளை மாற்றிடம் தரும் யோசனை என பல பல விஷயங்கள்….

சம்பவம் நடந்த அந்த இரவு நடந்த சம்பவங்கள் அதைக் கண்டவர்களே சொல்லும் போது நெஞ்சம் பதறுது.

எரிந்து போன சடலங்களின் புகைப்படங்கள், வழக்கு ஆவண பகுதிகள் பத்திரிக்கை செய்திகள் என மனதைப் புரட்டி அடிக்கிறது.

அதிலும் 68-ல் நடந்த குற்றத்திற்கு 80-ல் விடுதலை கிடைக்கும் போது, அக்குற்றவாளி நந்தன் என்ற தலித் முன்னின்று வெட்டிச் சாய்க்கையில், நந்தன் கதை நினைவில் வந்து போகுது.

நெஞ்சு குளமாக விசிஆர் அணைக்காமல் சற்றே அப்படியே ஓடும் எழுத்துக்களை பார்க்கிறேன்.

முக்கியமாக, இந்தச் சம்பவத்தில் சுற்றம் இழந்த, தான் பாதிக்கப்பட்டவர் அழுத்தம் திருத்தமாக சொல்கிறார், ‘இது எந்த சாதி, மத சம்பந்தபட்ட விஷயமல்ல. இது வர்க்க பேதத்தால் நடந்து கொடிய சம்பவம் என்று… ‘

ஆம், துவண்ட தலித்துகள் எழ ஓடி வந்த கர்நாடக ஐயர், சம்பவ இடம் தங்கி தற்போது சேவை செய்யும் பிற ஜாதி தம்பதி, வேறு வேறு ஜாதிகள் சேர்ந்தவர்கள் என பலரும் இந்தத் துயர் துடைக்க கைகள் நீட்டியுள்ளார்கள்.

ஆனால், கடைசியில் சம்பவத்தில் தன் மகனை இழந்தவர், மனைவி , மருமகள் இழந்தவர், 11உறவினரை இழந்தவர், குண்டு உள்ளிருக்க வாழ்பவர் அனைவரும் விலா எலும்பு தெரிய கறுத்த சொங்கிகளாய் அப்புராணிகளாய் பேசும் போது நாம் அவர்களைத் தொடர்ந்து எரித்துக் கொண்டிருக்கிறோமா என்ற குற்ற உணர்வு சுடுகிறது.

எங்கோ எவனோ வைத்த நெருப்பு

உலக மனிதர்கள் அனைவரின் இதயத்தையும் வெப்பமாக்கும் இந்தப் படத்தை அனைத்து மனித குலமும் பார்க்க வேண்டும்.

உலக தமிழ் மன்றங்கள இவரை தமது பகுதிக்கு அனைந்து கீழ்வெண்மணி பற்றி அறிவது கட்டாய கடமை…

படத்தின் இசை மிக மிக குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

இயக்குனர் பாரதி கிருஷ்ணக்குமார், இயக்குனர் பாரதிராஜாவிடம் தாஜ்மகால் , கடல்பூக்கள் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய முன்னாள் வங்கி அலுவலர்.

ஆவணப்படம் வாங்க விரும்புவர்கள்

தொடர்புக்கு

பாரதி கிருஷணக்குமார்

4/17 நாவலர் தெரு

தேவராஜன் நகர், தசரதபுரம், சாலிக்கிராமம் (அஞ்சல்) சென்னை 600 093

ஃபோன்: 94442 – 99656

வயிற்றுக்காய் எரிந்த உயிர்களுக்கு

வந்தனம் செய்வோம்

— டிஜிகே-

tgkgovindarajan@gmail.com

Series Navigation