ராமச்சந்திர குஹாவின் “இந்திய வரலாறு காந்திக்கு பிறகு ”- விமர்சனம்

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue

சிற்றோடைகத்தி இன்றி ரத்தம் இன்றி பெற்ற சுதந்திரம் என்று அலங்காரமாக கூறிகொண்டாலும், உண்மையில் ரத்தம் சிந்தாமல் நமது இந்திய சுதந்திரம் கிடைத்துவிடவில்லை. அகிம்சை போராட்டத்தின் மூலம் கட்டுபட்டிருந்த வன்முறையும் ரத்தமும் இந்திய பிரிவினையின் போது கட்டுக்கு அடங்காமல் வெளியேறியது. சில ஆய்வுகள் கொல்லப்பட்ட மக்கள் தொகை பத்து லக்ஷம் என்றும், சில ஆய்வுகள் இருபது லக்ஷம் வரை இருக்கலாம் என்றும் கணக்கிட்டு இருந்தாலும் உண்மையில் சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. ரத்தம் பெருக்கெடுத்து ஓடிய வேளையில்தான் நாம் சுதந்திரம் பெற்றோம்.

இந்த பின்னணியுடன் தொடங்கும் ‘இந்திய வரலாறு – காந்திக்கு பிறகு’ (பாகம் ஒன்று) என்ற திரு. ராமச்சந்திர குஹாவின் புத்தகம் (Translation of ‘India after Gandhi; தமிழில்: ஆர். பி. சாரதி) , இந்திய வரலாற்றை அறுபதுகளின் மத்தியில் வரை சொல்கிறது. இந்த காலகட்டத்தை சுதந்திர இந்தியாவின் ‘eventful years’ என்று கூறினால் தவறாகாது. குறிப்பாக பிரிவினையும் அதன் பிறகு நடந்வைகளையும் சொல்லி செல்லும் விதம் அபாரமானது. பிரிவினை துயரங்களை இந்த புத்தகத்தின் மூலம் தெளிவாகவே உணர முடிகிறது.

இந்திய சுதந்திர போராட்டத்தின் கதாநாயகன் திரு காந்தி என்றால், நவீன இந்தியாவின் கதாநாயகன் திரு. ஜவஹர்லால் நேரு என்பதை நிலைநாட்ட முயலும் இந்த புத்தகம், இந்தியாவின் சோதனை மிகுந்த காலகட்டத்தை சுவையாக சொல்லிக்கொண்டு செல்கிறது.

இந்திய சுதந்திரம் பெற்ற காலகட்டங்களில் இந்தியா ஒரே நாடாக நீடிக்கும் என்று எந்த மேற்க்கத்திய நாடுகளும் கருதவில்லை. ஏனென்றால் இந்தியாவை போன்ற ஒரு தேசத்தை அவர்கள் அதற்கு முன் கண்டதே இல்லை. பல வகையான மதங்கள், மதங்களுக்குள் பல வகையான வேறுபாடுகள், தேசம் முழுமைக்குமான ஒரே மொழி இல்லாமை, கடுமையான வறுமை, அடிப்படை கல்வி கூட இல்லாத பெரும்பான்மையான ஜனத்தொகை என ஒரு நாட்டை உருவாக்கும் எந்த விதமான காரணிகளும் இல்லாத தேசம் இது. சுதந்திரம் அடைந்த போது இந்தியாவில் இருந்த சமஸ்தானங்களின் எண்ணிக்கை ஐநூறுக்கும் மேல். கிட்டத்தட்ட இன்றுள்ள பாராளுமன்ற இடங்களின் எண்ணிக்கை. (அவைகளுக்கு இந்த நாட்டுடன் சேருவதா இல்லை தனித்திருப்பதா என முடிவெடுக்கும் உரிமையை ஆங்கிலேயர்கள் சமஸ்தானங்களுக்கே விட்டு சென்றிருந்தனர்.) உண்மையில் இந்த நாட்டை பிரிவு படுத்தும் காரணங்களின் எண்ணிக்கை ஒன்று படுத்தும் காரணங்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமானது. மிக வலிமையானது.

என்றாலும், பல சோதனைகளுக்கு இடையிலும் இந்த தேசம் ஒற்றுமையாக இருக்க காரணம் என்ன? முக்கியமான காரணங்களில், இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டங்களில், இந்த தேசத்திற்கு ஸ்திரமான ஒரு அரசை அளித்த நேருவின் பங்களிப்பு சற்றும் குறைத்து மதிப்பிட முடியாது. ஸ்திரமான அரசு இல்லாத அண்டை நாடு இன்றளவும் படும் கஷ்டங்களை காண நோக்கினால் இது நன்றாகவே விளங்கும். குறிப்பாக வரலாற்றின் மாபெரும் சூதாட்டம் என முதல் இந்திய தேர்தல்களை பற்றி குஹா விளக்கும்போது நாம் எப்படிபட்ட அக்னி பரிக்ஷைகளை தாண்டி வந்து இருக்கிறோம் என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது.

ஐம்பதுகளில் இந்தியா முழுவதும் ஏற்று கொள்ளப்பட்ட ஒரே தலைவர் நேரு மட்டுமே. அவரே ஒன்று பட்ட நாட்டின் அரசியல் முகமாக இருந்தார். அவர் போன்ற அனைவராலும் எற்றுக்கொள்ளபடாத தலைவர் இல்லையெனில், நாட்டின் எந்த ஒரு அரசியல் அடிப்படை அமைப்பையும் ஏற்படுத்த முடியாமல் போகியிருக்ககூடும். அதன் விளைவுகளை சொல்ல தேவையே இல்லை.

இந்த நாட்டின் அரசியல் பாதை அவரே அமைத்து கொடுத்தார். சரியான வழியோ தவறான வழியோ, இந்த நாட்டின் பொருளாதார பாதையையும் அவரே அமைத்தார். இந்த நாட்டின் சுபிக்ஷத்திற்கான திட்டங்களை தீட்டினார். அவைகள் மூலம் ஒரு மாபெரும் ராஜ்ஜியத்துக்கான அடிப்படையை அமைத்தார்.

இந்த விவரங்கள் ராமச்சந்திர குஹாவின் புத்தகத்தில் சிறப்பாகவே வெளிபடுகிறது. குறிப்பாக இந்தியா அரசியல் சட்ட உருவாக்கத்தின்போது நேரு காட்டிய உறுதியை கூறலாம். அதிலும் குறிப்பாக இந்து சட்ட மசோதாவை கூறலாம். நேரு போன்ற பெரும்பாலும் அனைவராலும் மதிக்கப்பட்ட ஒருவர் இல்லையெனில் இவை நிகழ்ந்தே இருக்காது.

பொதுவாக வரலாற்றை இரு முறைகளில் எழுதலாம். நடந்ததை நடந்தபடியே கூறிவிட்டு முடிவெடுக்கும் பொறுப்பை வாசகனிடம் விட்டு விடுவது ஒரு முறை. அல்லது எதாவது ஒரு தரப்பின் வழியே வரலாற்றை விளக்குவது. இந்த புத்தகம் எந்த வகையை சார்ந்தது?

காந்தி இல்லாத இந்தியாவில் நேரு ஒரு மாபெரும் மக்கள் தலைவராக இருந்தாலும் அது அவருக்கு போதவில்லை. அவர் தன்னை உலக தலைவராக கருதி கொண்டார். உலக தலைவர் எப்படி ஒரு நாட்டிற்க்கு மட்டுமாக சிந்திப்பார்? உதாரணமாக நாட்டின் ஒரு பகுதியில் பிரச்சனை வந்தால் அதை தான் சார்ந்த நாட்டிற்க்கு மட்டும் ஆதரவாக பார்த்தால் உலக பார்வை என்ன ஆவது?

காஷ்மீர் பிரச்சனை வந்த போது நேருவின் பார்வை இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவர் காஷ்மீர் பிரச்சனை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்து சென்று இருக்க வேண்டும்.

காஷ்மீர் பிரச்சனையை ஐ. நா. சபைக்கு எடுத்து சென்றது நேரு என்று ஒரு சிறு குழந்தை கூட அறியும். ஆனா குஹா இந்த காரியம் அப்போது இருந்த கவர்னர் ஜெனரராலும் (மௌன்பேட்டன்) பிரிட்டிஷ் தளபதியினாலும் செய்யப்பட்டதாக ஒரு சித்திரத்தை அளிக்கிறார். மேலும் இந்த முடிவில் நேருவின் பங்கு பற்றி குஹா பேசவே இல்லை. இது மிகவும் அதிர்ச்சி அளிப்பது. ஆனால் இந்த இடத்தில் தொடங்கும் அதிர்ச்சி வேறு பல இடங்களிலும் தொடர்கிறது. (பிறகு ஒரு இடத்தில் காஷ்மீருக்கு இந்தியா சுதந்திரம் அளித்திருக்க வேண்டும் என்ற கருத்தை ஆதரித்து குஹா எழுதுகிறார்).

அமெரிக்காவிற்கும் முன்னாள் சோவியத் யூனியனிற்கும் பனி போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், சுதந்திர இந்தியாவிற்கு தனது பாதையை வகுத்து கொள்ளும் கட்டாயம் இருந்தது. இந்து மஹா சபா மற்றும் ஜன சங்கம் போன்ற இயக்கங்கள் வலது சாரி பாதையை ஆதிரிக்க, கம்யூனிஸ்ட் இடது சாரி சோவியத்தை ஆதரித்தனர். நேரு இரண்டையும் சாராமல், அணி சேரா நாடாக இந்தியாவை முன்னிறுத்தினார். ஆனால் சோ ராமஸ்வாமி கூறியதை போல நடை முறையில் இந்த அணி சோவியத்தை ஆதரிப்பதாகவே இருந்தது.

எகிப்து சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கியபோது அதை எதிர்த்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் நாடுகள் எகிப்து மேல் போர் தொடுத்தன. (இது ‘Suez Crisis’ என அழைக்கப்படுகிறது.) இந்த படையெடுப்பை நேரு கடுமையாக கண்டித்தார்.

இது நடந்த சில காலத்திலேயே சோவியத் யூனியன் ஹங்கேரி நாட்டின் மேல் படை எடுத்தது. (ஹங்கேரியில் கம்யுனிச ஆட்சி கவிழ்ந்ததை ஒட்டி இந்த படை எடுப்பை சோவியத் நிகழ்த்தியது. ). இதை எதிர்த்து ஐ.நா. சபையில் வோட்டெடுப்பு நிகழ்ந்தபோது இந்திய பிரதிநிதி வி. கே. கிருஷ்ண மேனன் வாக்களிக்காமல் நடு நிலை வகித்தார். இது உலக அளவில் நேருவின் இரட்டை நிலையை வெளிச்சமாகியது. மேலை நாடுகளில் இந்தியாவின் மீது ஆழமான கசப்பை ஏற்படுத்தியது.

இந்த விஷயத்தை குஹா எப்படி விளக்குகிறார்? கிருஷ்ண மேனன் வாக்களிக்காமல் இருந்ததாகவும், நேரு அதை ஆதரிக்க மட்டுமே செய்ததாகவும் குறிப்பிடும் குஹா, நேரு சோவியத்தின் செயலின் மூலம் வருந்தமடைந்தார் எனவும் குறிப்பிட தவறவில்லை. இவ்வளவு முக்கியமான முடிவை நேருவின் அனுமதியின்றியா கிருஷ்ண மேனன் எடுத்திருப்பார்?

நீங்கள் தற்போது காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த குளறுபடிகளை கண்டு கொதிப்பவரா? உங்கள் ரத்த அழுத்தம் அதிகமாகுகிறதா? அப்படியெனில் சீனா இந்தியாவின் மேல் நடத்திய படையெடுப்பை பற்றி படிக்காமல் இருப்பதே நல்லது. இதய அடைப்பே வந்துவிடும்.

ஐம்பதுகளின் மத்தியிலேயே இந்திய சீன பிரச்சனை தொடங்கி விட்டது. சீனா போருக்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்க தொடங்கி விட்டுருந்தது. குறிப்பாக 1959 -ல் சில இடங்களில் துப்பாக்கி சூடும் நடத்தியது. சீனா எப்போது வேண்டுமானாலும் போரை தொடங்கலாம் என்ற நிலையே இருந்தது. இந்திய பகுதிகளை ஆக்கிரமித்தும் இருந்தனர்.

இந்திய தரப்பு என்ன செய்து கொண்டு இருந்தது? நேரு சீன பிரதமர் சௌ என் லாய் -க்கு கடிதம் எழுதினார். பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். இந்திய படை தலைவர் மேஜர் திம்மையா அப்பொழுது ராணுவ மந்திரியாக இருந்த கிருஷ்ண மேனனுக்கு இந்திய படையை வலிமை படுத்தும் அவசியத்தை எடுத்து கூறியும் ஒரு பிரயோஜனமுமில்லை. இந்தியா போருக்கு தேவையான ஆயத்தமும் இன்றி இருந்தது.

இந்த நிலையை கடுமையாக எதிர்த்தவர்கள் க்ருபாளினியும் வலது சாரி கட்சிகளும் மட்டுமே. ஆனாலும் நேரு உறுதியாக கிருஷ்ண மேனன் பக்கம் நின்றார். (1961 தேர்தலில் கிருஷ்ண மேனன் போட்டியிடும் முன்பு கோவாவில் போர்த்துகீசிய அரசை எதிர்த்து இந்திய படை வெற்றி பெற்றது. இந்த போர் கிருஷ்ண மேனன் பம்பாய் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக தேர்தலுக்கு சில காலம் முன்பு நடை பெற்றது. போரின் தாக்கத்தால் இந்த தேர்தலில் மேனனை எதிர்த்த கிருபாளினி தோல்வியுற்றார்.) .

சீன பிரதமர் இந்தியா வந்தபோது அப்போது இருந்த ஒரு ஜோக் நிலைமையை தெளிவாக காட்டுகிறது. (“சீனாவுடனான பேச்சு வார்த்தை இந்திய குழுவில் கிருஷ்ண மேனன் ஏன் இல்லை? ஏனென்றால் அவர் சீன குழுவில் இருக்கிறார்”.). இதில் இன்னுமொரு அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயம், நேருவின் அணுகுமுறை. சீன ஆக்கிரமிப்பு குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் வந்தபோது நேரு (சீனா கோரிய) அக்சாய் சென் பகுதி புல் பூண்டு கூட வளராத வறண்ட நிலம் அது என்று பதிலுரைத்தார்.

எதிர்பார்த்தபடி 1962 -ல் போர் தொடங்கிய போது, சீனா பெரும் வெற்றி பெற்றது. பெரும்பாலும் பிரிட்டிஷார் விட்டு சென்றிருந்த ஆயதங்களை வைத்து போராடிய இந்திய துருப்புகள் வெகு எளிதில் தோல்வியுற்றது.

இதில் ஒரு எதிர்பாராத திருப்பம் இந்திய சீன போர் குறித்த சோவியத்தின் நிலைப்பாடு. இந்தியா சோவியத்திற்கு மிக நெருக்கமாக இருந்தாலும், சோவியத் யூனியன் இந்த போரில் நடுநிலை வகித்தது. ஆனால் அதுவரை நேரு வெறுத்த அமெரிக்கா இந்தியாவிற்கு உதவ முன்வந்தது. பிரிட்டனும் அமெரிக்காவும் இந்தியாவிற்கு நவீன ஆயுதங்களை வழங்கினர். இந்தியாவிற்கு உதவ அமெரிக்க துருப்புகளும் வந்தன. (கிட்டத்தட்ட இதே போன்ற நிலைமை சமிபத்தில் பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டது. சமிபத்திய வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு அமெரிக்காவும் இந்தியாவும் உதவின. பாகிஸ்தான் தனது நட்பு நாடு என நினைக்கும் சீனாவோ, பிற முகமதிய தேசங்களோ பெயரளவுக்கு மட்டும் உதவிகளை அனுப்பி விட்டு ஒதுங்கி கொண்டன. இதை குறிப்பிடும் வகையில் ஒரு அமெரிக்க அதிகாரி பாகிஸ்தானை நோக்கி ‘where is your friends’ என கேட்டார். )

சோவியத் கைவிட்டும், அமெரிக்கா உதவியும் கூட, இந்தியா சோவியத் ஆதரவை விட்டு வெளிவரவே இல்லை. (தற்காலத்தில், அமெரிக்கா இந்தியாவை விட பாகிஸ்தானை நம்புவதற்கு தேவையான காரணங்கள் அமெரிக்காவிற்கு உள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.)

குஹா சறுக்கியிருக்கும் இன்னொரு இடம் இந்துத்துவ அமைப்புகளின் மேல் அவர் காட்டியிருக்கும் அப்பட்டமான வெறுப்பு . காஷ்மீர் பிரச்சனையில் போராடிய திரு ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் நோக்கத்தையே சந்தேகிக்கும் குஹா, சீனா இந்தியாவின் மீது படை எடுத்தபோது அதிர்ச்சியூட்டும் வகையில் சீனாவை ஆதிரிக்கும் வகையில் இந்திய இடது சாரியினரில் ஒரு பிரிவினர் நடந்து கொண்டதை பற்றி குறிப்பிடவே இல்லை. ( அவர்கள் இந்த போரை முதலாளிதுவத்திர்க்கும் பொதுவுடமைக்கும் இடையிலான போராக வர்ணித்தனர் . ஆனால் இந்த விவரங்கள் எதுவும் இந்த புத்தகத்தில் இல்லை.). அவ்வளவு ஏன், இந்திய சீன பிரச்சனைகள் தீராததற்கு ஜனசங்க அமைப்பையே ஒரு இடத்தில் குறை கூறுகிறார். (சீன பிரச்சனை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென வாஜ்பாய் தலைமையில் ஜனசங்கம் கோரியது. வெள்ளை அறிக்கையும் தாக்கல் செய்ய பட்டது, இதை பற்றி குறிப்பிடும்போது “வெள்ளை அறிக்கை வெளியிட்டது நேருவின் கைகளை கட்டிபோட்டு விட்டது என்றார் ஸ்டீபன் ஹாப்மன். எல்லை பிரச்சனை ரகசியமானதாக இருந்திருந்தால் பிரதமர் அமைதியான ராஜதந்திர வழியில் சமாதானத்தை நாடியிருப்பார்……வெள்ளை அறிக்கைகள், விட்டு கொடுக்கும் மனோபவத்தை விடுத்து தேசிய உணர்வுகளை கொழுந்துவிட்டு ஏறிய செய்தன ” என குஹா எழுதுகிறார்.).

அடிப்படையில் நேருவை வைத்து இந்திய வரலாற்றை விளக்க முயன்றிருக்கிறது இந்த புத்தகம். காந்திக்கு பிறகு கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் இந்திய வரலாற்றை பெரும்பாலும் நேருவை தவிர்த்து எழுதவே முடியாது. ஆனால் அந்த வரலாற்றையும் நடுநிலைமையோடு எழுதி இருந்தால் புத்தகத்தை முடிக்கும்போது நேருவின் சார்பாக மட்டுமே குஹா எழுதி இருக்கிறாரோ என்று எழும் என்ணத்தை தவிர்த்து இருக்கலாம்.

– சிற்றோடை.

Series Navigation

சிற்றோடை

சிற்றோடை