ராட்டடூயி

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

சுப்புடு


“ஏய்…கண்ணு !!, இங்க வா, லைட்ட போடு. எலி மாதிரி தெரியுது”, லெதர் சோபாவின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டே சொன்னான் கார்த்தி.

“எலியா?….”, கேட்டுக் கொண்டே கையில் கரண்டியோடு வந்தவள், கார்த்தி லிவ்விங் ரூம் சோபாவின் பின்னால் எட்டிப் பார்ப்பதைப் பார்த்து பயந்து போய் நின்று விட்டாள் தாரிணி.

“ஆமாம்மா, லைட்ட போடேடடடன்….சத்தம் போட வக்கிறடி நீ. இன்னும் எலியான்னு கன்ஃபர்ம் பண்ணல. அதைப் போட்டுட்டு சோபாவை அந்த பக்கம் புடி.”

“ஒரு நிமிஷம்…ஸ்டவ்ல ரசம் வைச்சிருக்கேன். தோ..இறக்கி வெச்சுட்டு வரேன்”, லைட்டைப் போட்டுக் கொண்டே சொன்னாள்.

சமயோசிதமாக, அவன் பக்கத்தில் இருந்த பால்கனி(patio) கதவையும், அதன் பின் இருந்த வயர் கதவையும் திறந்து வைத்தான். குளிர்க் காற்று சுளீர் என்று உள்ளே நுழைந்தது. லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டான்.

“வரியா, இல்லயா”

“கிம்மி ய செகண்ட். ஐ’ம் கம்மிங். என்னடா எலி கிலின்னு பயமுறுத்துற, எனக்கு உதறுது” கையை ஏப்ரனில் துடைத்துக் கொண்டே வந்தாள்.

“பிடி. அந்தப் பக்கம் பிடி. நான் சொல்லும் போது சோஃபாவை அப்படியே முன்னாடி நகத்து.”

“ஐயோ..எனக்கு பயமா இருக்கு. நான் இப்படியே ஓரமா நிக்கறேனே”, என்றாள்.

கார்த்தி முணுமுணுத்துக் கொண்டே தன் பக்கமாய் சோஃபாவை இழுக்க, அதன் எதிர்ப்பக்கமாய், சரேலென்று ஒரு மூன்றடி உயரத்துக்கு எகிறி குதித்தது அந்த சின்ன எலி. எதிர்ப்பார்க்காமல் தன் பக்கம் அந்த ஜீவன் வந்ததால், பயந்து போய் தாரிணி அலற, ஒரே துள்ளலாய் அது கிச்சனுக்குள் ஓடிப்போனது.

“எங்க ஓடுச்சு அது”, என்று கிச்சனுக்குள் நுழைந்தான் கார்த்தி. “அடிப்பாவி, இந்த டைனிங் ரூம் கதவை திறந்து வச்சியிருந்தா, அது திரும்பியும் லிவிங் ரூமுக்கு வந்திருக்குமே. அப்பிடியே வெளியே துரத்தியிருக்கலாம், தப்பு பண்ணிட்ட போ.” என்றபடி ஸ்டவ்வின் கீழே குனிந்து பார்த்தான். இருட்டாய் தெரிந்தது.

“ஆமா, இங்க வா இத பிடின்னு எல்லாம் சொன்னா கையும் ஓடல காலும் ஓடல, எங்கேந்து ப்ரச்ன்ஸ் ஆப் மைண்ட் வரும்” கிச்சனுக்கு வெளியிருந்தபடியே பேயறைந்த மாதிரி பார்த்தாள் தாரிணி. முகம் வெளிறிப்போயிருந்தது.

கார்த்தி கிச்சனெங்கும் தேடினான். எல்லா காபினெட்டுகளையும் திறந்து பார்த்தான். ப்ரிட்ஜை நகர்த்திப் பார்த்தான், ஒரே ஒட்டடையாக குப்பையாக இருந்தது. ட்ராஷ் கூடைக்கு அருகில் பார்த்தான், ஒன்றையும் காணோம். சோர்ந்து போய் சோபாவில் உட்கார்ந்தான். தாரிணி அவனுக்கு முன்னதாகவே சேரில் உட்கார்ந்து விட்டாள். கண்களை அகலமாக திறந்து இமைக்காமல் உட்கார்ந்திருந்தாள். பயம் தெரிந்தது.

கார்த்தி/தாரிணி அப்பார்ட்மெண்டின் ப்ளோர் ப்ளான் –

கார்த்தியும் தாரிணியும் இந்த அப்பார்ட்மெண்டுக்கு ஜாகை வந்து ஆறு மாதமாகிறது. இதற்கு முன்னால் டவுண்டவுனில் இருந்த காண்டோவில், ராத்திரியானால் குடிகாரர்களின் சத்தமாக இருந்ததால், பல அபார்ட்மெண்டுகளை தேடி இந்த ஆயிரம் டாலர், மண்டலின் அப்பார்ட்மெண்டை பிடித்திருந்தார்கள்.

மண்டலின் சிகாகோவின் வடமேற்க்கில் இருக்கும் ஒரு சின்ன டவுன். ஆயிரம் டாலர் வாடகை என்றாலும், தினமும் சிகாகோ டவுண்டவுன் போக வேண்டும் தான் என்றாலும், கார்த்திக்கு தன் புது மனைவி பத்திரமாக இருந்தால் சரி என்றிருந்தது. அவ்வப்போது வெள்ளிக்கிழமைகளில் மாடி வீட்டு இந்திய பாச்சுலர்கள், சாலா சாலா என்று சத்தமாய் பேசி பால்கனிகளில் தண்ணி தம் அடித்துக் கொண்டிருந்தாலும், பழைய வீட்டைப் போல பயம் இல்லாததால், கார்த்திக்கு இந்த வீடு பிடித்திருந்தது. தாரிணிக்கும் சில நண்பர்களின் மனைவிகளை அறிமுகம் செய்து வைத்தான். அவளும் மதிய வேளைகளில் அந்தப் பெண்களுடன் டென்னிஸ், நீச்சல், வீடியோ கேஸட் தமிழ்ப்படம் என்று பொழுது போக்கிக் கொண்டிருந்தாள்.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் தான், கார்த்தி முதன்முதலாக அந்த கருப்பு கலரில் அரை இஞ்ச் நீளமாக ஒரு அரை டஜனுக்கு ஏதோ தன் சோபாவின் மீது இருப்பதைக் கண்டான். தூக்கிப் போட்டு விட்டான். மீண்டும் அடுத்த நாள் காலையில் அதைப் பார்த்தான். இப்போது அது தன் சேரின் மீது இருப்பதைப் பார்த்து, தலையை தூக்கி மேலே பார்த்தான். தாரிணியிடம் ஏதோ, “ஸ்பைடர் முட்டை போல இருக்கு” என்று சொல்லி விட்டு தூக்கிப் போட்டு விட்டான்.

மூன்று நாட்களுக்கு முன்பு, “அது எப்படிடா, ஸ்பைடர் ராத்த்ரி ராத்திரி வந்து முட்டை போடும்” என்று படுத்துக்கொள்ளும் போது தலையை வருடிக் கொண்டே தாரிணி கேட்க, கார்த்திக்கு லைட் பல்ப் அடித்தது. காலையில் எழுந்து, அந்த சிறிய கருப்பு முட்டைகளை முகர்ந்து பார்த்தான், உடைத்துப் பார்த்தான். அது மெத்தென்று இருக்க, “சே ப்ரஷ் போல” என்று நினைத்துக் கொண்டு, கையை நன்றாக அலம்பிக் கொண்டபின், மீண்டும் கையை முகர்ந்து பார்த்தான்.

இப்படியே இரண்டு வாரம் ஓடிப் போக, இன்று தான் அது எலி என்று தெரிய வந்தது. தான் கையால் அந்த கருப்பு எலிப்புழுக்கையை உடைத்தது, முகர்ந்து பார்த்தெல்லாம் ஞாபகம் வர, குமட்டிக் கொண்டு வந்தது. ஏனோ திரும்பிக் போய் கையை அலம்பிக் கொண்டான்.

கார்த்தி சென்னைக்காரன் தான். எம்பிஏ படித்து பின்பு மார்கன் ஸ்டான்லியில் வேலை செய்யும் அனலிஸ்ட். தாரிணி சென்னை அபார்ட்மெண்டுகளில் வளர்ந்த மெட்ரோ சிட்டிசன். சுகவாசி. காலையில் எழுந்து பூஸ்ட் குடித்துக் கொண்டே க்ராஸ்வோர்ட் போட்டுக் கொண்டு, ராத்திரி எல்லாம் சிநேகிதிகளுடன் போனில் அரட்டை அடித்துக் கொண்டு, வாரக்கடைசியில் இஸ்ப்ஹானியில் குட்டியாக ஹாண்ட்பாக்கை மாட்டிக்கொண்டு லீ லிவைஸ் என்று பெரிய எழுத்து காதிக பைகளில் ஏதோ ஷப்பிங் செய்யும், மாடர்ன் டே தமிழ் யுவதி.

திடீரென்று பதினைந்து நாள் லீவில் அமெரிக்காவில் இருந்து வந்து, பெண் பார்க்கும் போது “யூ லுக் ஆஸ்ஸம்” என்று உருட்டி உருட்டி இங்கிலீஷ் பேசி, ஐ-பாட் பரிசளித்து, மணந்து கவர்ந்து கொண்டு சிகாகோ வந்து விட்டான் கார்த்தி. மார்கன் ஸ்டான்லி என்ற வார்த்தையே அவள் அப்போது தான் கேள்விப்பட்டாள். ஏதோ பினான்ஷியல் அனலிஸ்ட் என்று சொன்னான் கார்த்தி. மகேந்திர தோனியே மங்கையின் பாக்கியம் என்று கிரிக்கெட் பார்க்க ஆளாய் பறந்தவள், ஓட்ட வெட்டிய தலையுடனும் ஓல்ட் ஸ்பைஸ் வாசனையுடன் கார்த்தியை பார்த்தவுடன், பிடித்திருக்கா இல்லையா என்று எண்ணம் தோன்றும் முன், ஏவிஎம் ஹாலில் ரிசப்ஷன் முடிந்திருந்தது.

சிகாகோ வந்த பின் தான் தாரிணி சமையல் கற்றுக் கொண்டால். லாப்டாப்பை கிச்சனில் வைத்துக் கொண்டு விடியோ சாட்டில் அம்மாவுடன் பேசிப் பேசி கொஞ்சமாய் சமைத்தாள். என்ன போட்டாலும், “கலக்கிட்ட டா தாரு” என்று கொஞ்சிப் பேசி சாப்பிட்டுப் போய் விடுவான் கார்த்தி.இப்போது தான் கோபி மன்சூரியன் செய்ய கற்றுக் கொண்டு வருகிறாள்.

தாரிணி இன்னமும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். கார்த்திக்கு கவலையாய் இருந்தது, கொஞ்சம் சிரிப்பும் வந்தது.

“ஹே !! என்ன டென்ஷன் ஆயிட்டியா நீ. இதெல்லாம் ஒண்ணும் இல்ல, நான் மாதவரத்துல இருந்தப்ப, எங்க வீட்டல வராத எலியா. நானும் எங்கப்பாவும் ராத்திரி ரெண்டு மணிக்கு லைட்ட போட்டு எலி வேட்டை உடுவோம் பாரு..மவன துண்ட காணும் துணிய காணும்ணு எலி ஓடிடும்” என்று ரீல் விட்டான்.

தாரிணி சேரில் இருந்து எழுந்து பெட்ரூம் கதவை மூடி விட்டு வந்து கட்டிக் கொண்டாள்.

“பயமா இருக்குடா. என்னடா இந்த அப்பார்ட்மெண்ட் நல்லா இருக்கும்னு சொன்ன ? எலியெல்லாம் வரது. சனியன் எங்கயாவது போய்த் தொலையாது”

ராத்திரி தூங்கப் போகும் முன் கிச்சனில் வெளியே வைத்திருந்த சாமான்கள் அத்தனையும் அலமாரிகளில் அடைத்து வைத்தார்கள். வாழைப்பழத்தை ப்ளாஸ்டிக் பைகளில் அடைத்தார்கள். நெய் பாட்டிலை முழுவதாக மூடி வைத்தார்கள். கிச்சன் சுத்தமானது.

“அந்த சனியன் போற வரைக்கும் இந்த பெட்ரூம் கதவு மூடியே இருக்கட்டும்” என்றாள். தூக்க கலக்கத்தில் தலையை ஆட்டினான் கார்த்தி. இரவில் அந்த எலி ராட்சத சைஸாகி அவன் குடும்பம் முழுவதையும் க்ராண்ட் கான்யனில் துரத்துவது போல கனவு வந்தது. ஓட வழியில்லாமல் எல்லோரும் மலையிலிருந்து கீழே உருண்டார்கள். திடிரென்று அவனே எலி போல ஆவதாக கனவு வர, திடுக்கிட்டு எழுந்தான். கண் முழித்த போது, இருக்கமாய் கட்டிக் கொண்டு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள் தாரிணி.

“என்னம்மா…தூங்கலயா செல்லம்?”

“எப்டிப்பா…தூக்கம் வருதா என்ன. எனக்கு ஒரே பயமா இருக்கு. இவ்வளவு நாளா நம்மளுக்கு தெரியாம யாரோ வீட்டில ஒளிஞ்சு பார்த்த மாதிரி இருக்கு. இந்த ரூமுக்குள்ளயும் ஓடி வந்துருமோன்னு பயமா இருக்கு”

“சீ.. இதுக்குப் போய் இப்படியா. அஃப்டர்ஆல் ஒரு சின்ன எலி” என்று சொன்னாலும் கார்த்திக்கு அவன் மனைவியின் பயம் புரிந்தது.

ஆபிஸில் இண்டர்நெட்டில் உலாவினான். எலியின் புழுக்கை கையில் பட்டால் என்ன் ஆகும் என்று ப்ரவுசினான். ஏகப்பட்ட வியாதிகளை போட்டிருந்தார்கள். உடம்பு வலியிருந்தால், கொஞ்சம் வாந்தி எடுத்தால், எலியால் இருக்கலாம் என்று போட்டிருந்தது. முதுகு வலித்தது, வாந்தி வருகிறாற் போல் இருந்தது. அப்போது தான் எலியைப் பற்றி முழுவதுமாக படித்தான். தன் வீட்டுக்கு விஜயம் செய்தது நார்வே எலியா அல்லது ஹவுஸ் மவுஸா என்று குழம்பினான். ஒரு எட்டணா அளவு ஓட்டையில் கூட எலி புகுந்து வரலாம் என்று படித்தவுடன் பயந்தான். ஒரு சின்ன நூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது என்ற வாசகம் ஏனோ நினைவுக்கு வந்தது.

அப்பார்ட்மெண்ட் ஆபிஸுக்கு மெயில் அனுப்பினான். இது என்ன அப்பார்ட்மெண்ட், இப்படி எலியெல்லாம் வருகிறது. இந்த எலியை இன்றுக்குள் பிடிக்காவிட்டால் காலி செய்ய நேரிடும், இந்த மாத வாடகையயும் திருப்பித் தர வேண்டும் என்றெல்லாம் எழுதினான்.

தாரிணி தன் தோழிகளிடம் இதைப் பற்றி சொல்லி, அவர்கள் எல்லோரும் மியூஸியத்துக்கு வருவது போல், அந்த கிச்சனை வந்து பார்வையிட்டார்கள், தேடிப்பார்த்தார்கள். அப்போது தான் ஸ்டவ்விற்கு கிழே ஒரு முப்பது நாற்பது எலிப்புழுக்கைகள் இருப்பது தெரிய வந்தது.

“இப்போ வீட்டுக்கு வரீங்களா, இல்லயா. எனக்கு தலையே சுத்தறது” என்று போனில் தாரிணி கத்த, பக்கத்தில் இவனைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த மானேஜரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

வீட்டுக்கு சென்ற போது லைட்டெல்லாம் அணைத்து விட்டு, பெட்ரூமில் காலைக் கட்டிக் கொண்டு பெட்டின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தாள் தாரிணி.

“என்ன ஆச்சுப்பா ?”

“இதோ இங்க பாருங்க அந்த லூசு பண்ண வேலைய” என்று ஸ்டவ்வின் பின்னிருந்த எலிப் புழுக்கைகளை காட்டினாள்.

இந்த முறை பத்திரமாக கையில் ப்ளாஸ்டிக் க்ளவுசுடன் அந்த புழுக்கைகளை எடுத்துப் போட்டான்.

“நீ இன்னமும் கார்த்தாலேந்து குளிக்கலையா என்ன ?”

“இல்லை. ஒரு மாதிரி அருவருப்பா இருக்குடா” என்றாள் தாரிணி.

அவளின் மேல் கொஞ்சம் கோபம் வந்தது. அதே நேரம் பாவமாய் இருந்தது. இதுக்கு ஒரே வழி தான் இருக்கு என்று எண்ணிக் கொண்டு, அலுமினிய ஃபாயிலை வைத்து, கிச்சனில் அலமாரிக்கு இடையில் இருந்த எல்லா இடங்களிலும் ஒட்டினான். அன்றிரவு தாரிணி கொஞ்சம் தூங்கினாள்.

காலையில் எழுந்து ஹாலில் சென்று பார்த்த பொழுது, மூன்று நாலு புழுக்கைகள் சோபாவின் மேல் இருந்தன. கார்த்திக்கு வெறுப்பாய் வந்தது. Working from home என்று மானேஜருக்கு மெயில் அனுப்பி விட்டு, அப்பார்ட்மெண்ட் ஆபிஸுக்கு போனான். அவர்களுடன் கொஞ்சம் சத்தமாய்ப் பேச, அவர்கள் உடனே சர்வீஸ்மேனை அனுப்புவதாய் சொன்னார்கள்.

ஆரை மணி கழித்து இரண்டு மெக்ஸிக இளைஞர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவன் Snap Trap என்று மரக்கட்டையினால் ஆன ராட்-ட்ராப் செட் செய்ய வேண்டும் என்றான். எடுத்து வந்த ஆறேழு ட்ராப்புக்ளை கிச்சனில், சோபாவின் அடியில் என்று பீனட் பட்டர் தடவி வைத்தார்கள். அதை ஒருவன் செட் செய்யும் போது, மற்றவன், “careful careful, it can cut your hand” என்று சொல்லிக் கொண்டிருந்தான். கண்டிப்பாய் இன்றிரவுக்குள் எலி அகப்பட்டுவிடும் என்று சொல்லிவிட்டு போனார்கள்.

மறு நாளும் எலிப் புழுக்கைகள் சோஃபா/சேரின் மேல் இறைந்து கிடந்தன. பீனட் பட்டர் தடவிய ட்ராப்புகளும் அப்படியே கிடந்தன. தாரிணி அழ ஆரம்பித்தாள். கார்த்தி யெல்லோ பேஜஸை துழாவினான். போனை சுழற்றினான்.

Northside Exterminators என்ற பெயரிட்ட வேன் வாசலில் வந்து நின்றது. உள்ளிருந்து நான்கு பேர் வந்து கார்த்தியுடன் உரையாடினார்கள். ஷூ போட்டுக் கொண்டே வீட்டை சுற்றிப் பார்த்தார்கள். கார்த்தியையும் தாரிணியையும் வெளியே போகச் சொன்னார்கள். உடம்பு முழுவதும் astronaut போல உடையணிந்து இரண்டு பேர் ஏதோ மிஷினையெல்லாம் தூக்கிக் கொண்டு அப்பார்ட்மெண்டுக்குள் சென்று எதோ செய்தார்கள். இரண்டு மணி நேரத்திற்குப் பின் அவர்கள் வெளியே வந்து, எலி காலி, ஒரு நாள் முழுவதும் யாரும் உள்ளே போகக் கூடாது என்று சொல்லி விட்டு நூத்தி இருபது டாலர்கள் வாங்கிக் கொண்டு போனார்கள். அன்றிரவு கார்த்தியும் தாரிணியும் நண்பர்கள் வீட்டில் தங்கினார்கள்.

மறுநாள் வீட்டுக்கு திரும்பி வந்த போது, exterminators போட்டு விட்டு போன பர்ப்ஃயூம் வாசனை வந்தது. சோபாவில் புழுக்கைகள் இல்லை. கார்த்திக்கு சந்தோஷமாக இருந்தது. பெருமையாக மனைவியைப் பார்த்தான். தாரிணி கொஞ்சம் சிரித்தாள். கார்த்தியும் சிரித்தான். உடனே போன் போட்டு அவள் அப்பாவிடம், exterminators பற்றி சொன்னாள். கார்த்திக்கு உயிர் போய் வந்த மாதிரி இருந்தது. எலியை விட தன் மனைவி பயந்து போனது தான் அவன் கவலையாய் இருந்தது.

மதியம், ஆபிஸிலிருந்து போன் செய்தான்.

“இன்னிக்கு சாயங்காலம் Bite of India போலாம். ஓகேவா” என்றான்.

டின்னருக்கு வெளியே போய் வர லேட்டாகி விட்டது. வீட்டுக்கு வந்தவுடன், லைட்டை போட்டு தாரிணி தேடிப்பார்த்தாள். எலியைக் காணோம். எலிப் புழுக்கையையும் காணோம்.

“உனக்கு இன்னமும் பயம் போகலியா” என்று கார்த்தி சொல்ல.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா. ஒரு ஜாக்கிரதை தான்” என்றாள்.

“சரி, இன்னிக்கு ராத்திரி பெட்ரூம் கதவை திறக்கலாமில்லயா”

“ஷ்யர்”

“ஆனா அதுக்கு முன்னாடி படம் பார்க்கலாமா”

“போடேன். எந்த பிராணியும் இல்லாத படமா போடு” என்று சொல்லிக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.

Fireplaceக்கு பக்கத்தில் இருந்த முக்கில் டிவியிருக்க, ரிமோட்டை எடுக்கப் போனவனுக்கு அது கண்ணில் தென்பட்டது. அந்த எலி மெதுவாக கேபிள் டிவி வயரின் தூவாரத்தில் நுழைந்து கொண்டிருந்தது.

தன்னையறியாமல், “ஏய்…கண்ணு !!, இங்க வா, லைட்ட போடு. எதோ தெரியுது” என்றான்.

“என்னது திருப்பியுமா எலி” என்று அலறி தாரிணி ஓடிவர, கார்த்தி திரும்பி அவள் வெளிறிய முகத்தைப் பார்த்தான். அவனைப் பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் தாரிணி.

“ஹா ஹா !! என்னடா செல்லம் ஏமாந்துட்டியா, பயந்தாங்கோலி. எங்க டிவிடி, படத்தைப் போடலாம்” என்றான்.

– சுப்புடு [subbudu@kirukkal.com]

Series Navigation

சுப்புடு

சுப்புடு