ராஜீவின் கனவு

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

ஜோதிர்லதா கிரிஜா


இந்தியாவை இணையற்ற நாடாக்கும் இன்கனவு கண்டு வந்த இளைஞனே!
சிந்தியாமல், சிற்றிரக்கம் கூட இன்றி உனைச் சிதைத்திட்ட தொரு கூட்டம்.

பதவி விட்டு நீ இறங்க நேர்ந்தபோது பதைத்துவே பலர் நெஞ்சம்
உதவி செய்ய இந்தியர்க்கு உற்றவர் இனி யாரென்று பலருக்கும் பெரும்வாட்டம்.

ஏனெனில் இந்த நாட்டை நேசிப்பதாய் இன்று பலர் சொன்னபோதும்
காணவில்லை நேருவின் வாரிசுகளுக் கிணையோரை இப்போதும்.

நேருவின் ஆட்சிமுதல் ராஜீவின் ஆட்சிவரை நம் நாட்டில்
நேரிட்ட தவறுகளைக் கோடிட்டு அடுக்காதீர்! – ஏனேனில்

இவர்களது ஆட்சியிலே இனியவையே நிறைய!
கேடுகள் குறைவு – அதனால்தான் இன்றளவும்
கவர்கிறது நம் உள்ளம் நேருவின் குடும்பம் – எனவேதான் அடிக்
கோடு இட வேண்டாம் தீங்குகளின் பட்டியலில்!

தொழிற்கூடமாய் இந்தியாவை மாற்றினார் ஜவாஹரென்றால்,
எழில்மிகு பசுமைப் புரட்சியினை ஏற்படுத்தினார் உன் அன்னை!

கணிப்பொாறித்துறைதனிலே கணப்பொழுதில் இந்தியாவை மக்கள் நாம்
களிப்புறவே மாற்றியமைத்தவன் நீயன்றோ! துளியளவும் இதில் ஐயமுண்டோ ?

ஆகமொத்தம் முத்தான முத்துறையில் இந்தியாவை
முன்னேற்றியதுன் குடும்பம் – ஆனால், ஐயகோ! இன்றுனைச்
சாகக்கொடுத்துவிட்டுச் சோகத்தில் உழல்கின்றோம்;
என்னே துயரமிது! எள்ளளவும் குறையவில்லை.

உயிருடன் நீ அன்று உலவியபோதெல்லாம்
உதட்டையும் அசைக்காத உலுத்தர் சிலர் – உன்
பெயர் கெடப் பீரங்கி ஊழலிலே உனை இணத்து உவக்கின்றார்
பதறிப் போய்ப் பதிலளிக்க நீ இலை இன்று என்பதாலே.
விளக்கம்தான் அளிப்பதற்கு உயிர்த்தெழுந்து வந்திடுவாய் எனும்
கலக்கம் அக்கசடருக்கு இல்லாதும் போனதாலே!

ஆனாலும், உன் கள்ளமற்ற நிலையை நீ மெய்ப்பிக்க இயலாது
போனாலும் நம்புகிறோம் நாங்களுனை; எங்களன்பு அகலாது.

இருபத்து ஓராம் நூற்றாண்டில் நம் நாடு
இணையற்ற நாடாக இவ்வுலகில்
உருப்பெறும் உன் கனவு போகாது உன்னோடு – அது
நனவாகும் நன்னாளோ மிக அருகில்!

ஆனால், இக்குறியை இலக்காக வைத்தன்று
செயல்பட்ட நீயோ உயிரோடு இல்லை இன்று
வீணாய் மடிந்துபோனாய் எமைக் கலக்க,
அயல்நாட்டுத் தமிழன் உன் உயிர் பறிக்க.

திட்டப்பணிச் செலவுகளில் பத்து விழுக்காடு மட்டும் – கீழ்
மட்ட மனிதர்களை அடைவதாகத்
திட்டவட்டமாகவே அறிவித்த முதல் ஆள் நீ!
மற்றபலர், உனக்கு முன்னோர், கண்டிதனைச் சொல்லவில்லை!

வெண்டைக்காய் வழ வழப்பில் வசவசப்பாய்ப் பேசாமல்
கண்டிப்பாய் உனது நிலை அறிவிக்கும் வீரன் நீ! – அதனால்தான் அன்று
அமெரிக்கப் போர்விமானம் பெற்றோல் இட இந்தியாவில் தரையிறங்க மறுதலித்தாய்;
அமரிக்கையாகவும் அதிகாரமாகவும் அறுதியிட்டுப் பதிலிறுத்தாய்!

மாறாக, இன்றுள்ள ஆட்சியரோ அமெரிக்க அதிபர்தம்
அடிவருடிபோலவர்தம் கருத்தையே ரீங்கரிப்பார்!
ஈராக் நாட்டுக்கு நம் வீரர் தமையனுப்பி அவரங்கே
அடிபட்டுச் சாவதையும் அங்கீகரிப்பார்!

இன்று நீ இருந்திருப்பின் ஊழல், வறுமை
மற்றும் பல தீமையெல்லாம்
வென்று மீளும் பாதையிலே இந்த நாடு
வெற்றிநடை போட்டிருக்கும்.

ஆட்சியாளனாய் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவனாயும்
சேகரித்த அனுபவத்தின் வாயிலாக – எங்களது
மீட்சிக்கு அடிகோலிவிட்டிருப்பாய்!
ஆதரித்திருந்திருப்போம் உனை நாங்கள் அளவற்ற ஆர்வத்துடன்!

‘அய்யோ! இந்த நாடு கொடுப்பினையற்றதுவோ ‘ என்று
குய்யோ முறையோ வென நாங்கள் குமுறுவதை நீ ஏற்க மாட்டாய்.

எனவே நீ விட்டுச் சென்ற பணியனைத்தும் முடித்திடவும் – உன்
கனவுகள் நனாவாகி நம் மக்கள் களிப்புறவும் உழைத்திடுவோம் – இது உறுதி, இது உறுதி!

jothigirija@vsnl.net

Series Navigation